Ad Space Available here

மறிச்சிக்கட்டிப் போராட்டம் கைவிடப்பட்டது ஏன்?
எஸ்.றிபான் -
அரசாங்கத்தினதும், அரசியல்வாதிகளினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் சந்தர்ப்பவாத வாக்குறுதிகளுக்கு தொடர்ந்து ஏமாறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகமே முஸ்லிம்கள்.  நல்லாட்சி அரசாங்கம் கரையோர மாவட்டம், முஸ்லிம்களின் காணி பிரச்சினைகள், மத ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எனப் பலவற்றை தீர்த்துத் தருவதாக தேர்தல் காலத்தில் உறுதியளித்தது. இவற்றில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 

இந்நிலையில் மாவில்லு வர்த்தகமானி பத்திரிகை பிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது வழி ஏற்பட்டுள்ளது. இதற்கான உத்தரவாதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தந்துள்ளாரென முஸ்லிம் கவுன்சில், அமைச்சர்கள் றிசாட் பதியுதீன், பைசர் முஸ்தபா ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதனால், 44 நாட்களாக தமது காணியை மீட்டுக் கொள்வதற்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை இடை நிறுத்தியுள்ளார்கள். 

கடந்த அரசாங்கத்தினால் 2012ஆம் ஆண்டும், இன்றைய அரசாங்கத்தினால் 2017ஆம் ஆண்டும் வெளியிடப்பட்ட வர்த்தமானி பத்திரிகை அறிவித்தலில் முசலி; பிரதேச செயலகத்திற்குட்பட்ட மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் 80 வீதமான காணிகள் கபளிகரம் செய்யப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாவில்லு பேணற் வனபிரதேசமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைவாக பிரகடனப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக தங்களின் காணியை அரசாங்கம் இலக்கு வைத்து அநீயாயம் செய்து கொண்டிருப்பதனை பொறுத்துக் கொண்டிருக்க முடியாதென்று கருதிய பாதிக்கப்பட்டவர்கள் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 

இதே வேளை நாளை 13ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் மறிச்சிக்கட்டி முஸ்லிம்களின் காணி பிரச்சினை பற்றிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், அமைச்சர்கள் மறிச்சிக்கட்டி முஸ்லிம்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். வெறுமனமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவிட்டு இன்னுமொரு தினத்தில் கலந்துரையாட திகதி குறிக்க முடியாது. ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இதுபோன்ற கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அவற்றில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தவறான நடவடிக்கைகள்
மறிச்சிக்கட்டி முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் வனப்பிரதேசத்திற்கு பறிக்கப்பட்டுள்ளமையானது சட்ட விதிகளுக்கு மாற்றமாகவே செய்யப்பட்டுள்ளன. ஒரு பிரதேசத்தை வனப் பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு முன்னர் அங்கு வாழுகின்ற மக்களுடன் கலந்துரையாடல்களை செய்திருக்க வேண்டும். பிரகடனப்படுத்தப்படவுள்ள வனப் பிரதேசத்திற்குள் வரும் காணி உரிமையாளர்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த மக்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். பிரதேச செயலாளர், மக்கள் பிரதிநிதிகள், மீள்குடியேற்ற அமைச்சு, மீள்குடியேறவுள்ளவர்கள் ஆகியோர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமலேயே மறிச்சிக்கட்டி, மாவில்லு, வெப்பல், கரடிக்குழி, விலத்திக்குளம், பெரிய முறிப்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள 40030.525 ஹெக்டெயர் விஸ்தீரணம் கொண்ட பிரதேசம் 'மாவில்லு பேணற்காடு' என ஜனாதபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆகவே மேற்படிநடைமுறைகள் பின்பற்றப்படாமை தவறான நடவடிக்கை என்பதனை விடவும், வேண்டுமென்று முஸ்லிம்களுக்கு எதிராக செய்யப்பட்ட அநீயாயம் என்று கூறலாம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களுடன் கடந்த திங்கட்கிழமை மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது வனப்பரிபாலன திணைக்களத்திற்குரிய காணிகளை வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென்று தாம் விடுத்த பணிப்புரை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், மக்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் செய்யுமாறு பணிக்கவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

வனப்பிரதேசமொன்றினை பிரகடனம் செய்வதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் தவறுகள் இடம்பெற்றிருக்காது. முஸ்லிம்களின் காணிகள் குறிவைக்கப்பட்டமையால்தான் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. 

மேலும், மக்கள் வாழும் பிரதேசங்களை உள்ளடக்கி வர்த்தமான பிரகடனம் செய்யுமாறு உத்தரவு பிறக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை உண்மையாயின் 2017ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்துவிட்டு, மக்களின் வாழ்விடங்களை தவிர்த்து புதிய வர்த்தமானி அறிவித்தலை செய்ய வேண்டும். இதனைச் செய்யாது காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பது எதற்காக என்று கேட்கின்றோம். மேலும், சுமார் 44 நாட்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுப்பட்டுக் கொண்ட போதிலும் அரசாங்கம் அதனை கருத்திற் கொள்ளவில்லை. அம்மக்களை திருப்திப்படுத்தும் செய்திகளை கூறவில்லை. 

இந்நிலையில்தான் அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டள்ளது. 

ஏமாற்றக் கூடாது
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினாலும், பௌத்த கடும்போக்குவாதிகளினாலும், ஆயுதக் குழுக்களினாலும் அநீயாயங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றிக்கு தீர்வுகளைப் பெற்றுத் தருவோம் என்று பல முறை தெரிவிக்கப்பட்டன. ஆனால், நியாயம் கிடைக்கவில்லை.
மாயக்கல்லிமலையில்; புத்தர் சிலை வைக்கப்பட்ட போது முஸ்லிம் அரசியல்வாதிகள் கண்டன அறிக்கைகளை விடுத்தார்கள். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு வாரத்தில் சிலை அகற்றப்படும். அதற்கான உத்தரவாதத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தந்துள்ளார் என்று தெரிவித்தார். ஆனால், பிரதம மந்திரி நேரடியாக இதனை அறிவிக்கவில்லை. 

மாயக்கல்லிமலையடிவாரத்தில் முஸ்லிம்களின் காணியில் விகாரை அமைப்பதற்கு பௌத்த கடும்போக்குவாதிகள் முற்பட்ட போது அது தடுக்கப்பட்டது. இதன் பின்னர் குறிப்பிட்ட இடத்தில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்படாதென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஆனால், ஜனாதிபதி நேரடியாக அறிவிக்கவில்லை. புதிய கட்டடம் அமையாது என்பது நிரந்தரத் தீர்வல்ல. புத்தர் சிலை உள்ள வரை பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். இப்போது சிலை அகற்றப்படாது என்பது தெளிவாகியுள்ளது.

இத்தகையதொரு நடைமுறையே மறிச்சிக்கட்டி பிரதேச முஸ்லிம்களின் காணி விவகாரங்களிலும் அவதானிக்க முடிகின்றது. மாவில்லு வனப் பேணற்காடு பிரதேசத்திற்கு எல்லையிடும் நடவடிக்கைகளில் தவறுகள் நடைபெற்றுள்ளதென்று ஜனாதிபதியே ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் மூலம் அதிகாரிகள் தவறுகள் செய்துள்ளார்கள் என்பது தெளிவாகும். ஆனால், வர்த்தமானி அறிவித்தல் மாத்திரம் இரத்துச் செய்யப்படவில்லை. கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் யாவும் ஏமாற்றப்படுவதற்காகவே முன் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களும் துணையாக இருந்துள்ளார்கள். இது போலவே மறிச்சிக்கட்டி விடயத்திலும் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கு வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

கடந்த காலங்களில் முஸ்லிம்கள் வாக்குறுதிகள் மூலமாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது முஸ்லிம் சிவில் அமைப்புக்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்கு தெரியும். இருந்தும் மறிச்சிக்கட்டி முஸ்லிம்களின் கவனயீர்ப்புப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு கேட்டுக் கொண்டமை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்க வேண்டியுள்ளது. முஸ்லிம்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடர்ந்திருக்க வேண்டும். கோப்பாபுலவு மக்கள் தங்களின் காணியை மீட்டுக் கொள்வதற்காக 70 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் போராட்டங்களை நிறுத்துமாறு கேட்கப்படவில்லை. அவர்களின் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை. தமிழர்களை முஸ்லிம்களை ஏமாற்றுவதனைப் போன்று ஏமாற்ற முடியாது. ஆதலால், முஸ்லிம்கள் தங்களின்; அரசியல்வாதிகளை முழுமையாக நம்புவதனை தவிர்க்க வேண்டும். 

மறிச்சிக்கட்டி முஸ்லிம்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எக்கருத்தையும் தெரிவிக்கவில்லை. முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற கட்சியாக தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸ் இருக்க வேண்டுமென்பதற்காகவும், அந்த இடத்தினை அமைச்சர் றிசாட் பெற்றுக் கொள்ளக் கூடாதென்பதற்காகவும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் அரசியல் இலாபம் தேடிக் கொள்வதற்காக மௌனமாக உள்ளார். முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை அரசாங்கம் அறிவிக்கும் வரை போராட்டங்களை செய்ய வேண்டுமென்று தெரிவிக்கவில்லை. 

தமிழ் அரசியல் தலைமைகள் மக்களின் போராட்டங்களின் பின்னணியில் இருந்து கொண்டு உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மக்களின் போராட்டங்களின் மூலமாக தாங்கள் அரசியல் இலாபம் அடைந்து கொள்வதற்கு கூட்டல், கழித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். ஆனால், மக்களுக்கு நன்மை வந்து சேராது. இதனை மாயக்கல்லிமலை சிலை வைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் காணக் கூடியதாக இருந்தது.
ஆகவே, முஸ்லிம்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சொல்லுகின்றார்கள் என்று எதனையும் ஆராய்ந்து பார்க்காது நம்பக் கூடாது. முஸ்லிம் அரசியல்வாதிகளே அதிகம் உள்ளார்கள். முஸ்லிம் தலைவர்கள் எவருமில்லை. இந்த உண்மையை முஸ்லிம்கள் மறக்கக் கூடாது. 

மோடியும், மறிச்சிக்கட்டியும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தினை முன்னிட்டு மறிச்சிக்கட்டி முஸ்லிம்களின் கவனயீர்ப்புப் போராட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் கவனயீர்ப்புப் போராட்டம் அரசாங்கத்திற்கு நல்ல பெயரை பெற்;றுத் தராது. ஆதலால், மறிச்சிக்கட்டி முஸ்லிம்களின் கவனயீர்ப்புப் போராட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்று மேலிடத்தினால் விடுக்கப்பட்ட கண்டிப்பான உத்தரவின் பேரிலே போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

அரசாங்கத்தைப் பொறுத்த வரை முஸ்லிம்களின் பிரச்சினைகளை கவனத்திற் கொள்வதில்லை. அரசாங்கம் முஸ்லிம்களை தமது செல்வாக்கை சர்வதேசத்தில் பாதுகாத்துக் கொள்வதற்குரியதொரு கருவியாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. தமிழர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. இதனை மூடிமறைக்க முடியாது. ஆனால், தமிழர்களைப் போல் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன என்று காட்டுவதனை அரசாங்கம் விரும்பவில்லை. இதனால்தான், வெளிநாட்டுத் தலைவர்கள் வரும் போதெல்லாம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை. சில வேளை நேரம் ஒதுக்கப்பட்டாலும் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகளில்லை. முஸ்லிம்களுக்குரிய அனைத்தையும் அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது என்று தெரிவிக்க வேண்டும். இதனையே முஸ்லிம் அரசியல் தலைமைகள் செய்து கொண்டிருக்கின்றன. 

இந்தியப் பிரதமர் மோடியின் வருகையையிட்டு மலையகத்தில் உள்ள குளவிக் கூடுகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது அவரது பாதுகாப்பிற்காக நடக்கின்றது. அரசாங்கத்தின் பாதுகாப்புக்காக முஸ்லிம்களின் போராட்டம் நிறுத்தப்படுகின்றது. 

நிரந்தரத் தீர்வு
முஸ்லிம்களுக்கு தமிழர்களைப் போன்று பிரச்சினைகள் உள்ளன. முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இதனைச் செய்ய வேண்டியவாகள் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுமாவார்கள். ஆனால், முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் காலத்தில் மாத்திரம் முஸ்லிம்களின் உரிமைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களும் தேர்தல் கால பசப்புவார்த்தைகளை நம்பி வாக்களித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

தேர்தல் காலங்களில் முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் மக்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் இது வரைக்கும் நிறைவேற்றப்படவில்லை. முஸ்லிம்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்பதுமில்லை. காலத்திற்கு காலம் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் இனியும் ஏமாற்றாது பார்த்துக் கொள்வது சமூகத்தின் கடமையாகும். முஸ்லிம் அரசியல் தலைமைகளும், கட்சிகளும் எம்மை ஏமாற்றுவதற்கு நாம்தான் காரணமென்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் ஏமாற்றல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாமையால்தான் நாம் தொடர்ந்து இழப்புக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுக்கு நிறையவே அரசியல்வாதிகள் உள்ளார்கள். எல்லாக் கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை விற்று சம்பாதிக்கும் எத்தர்கள் உள்ளார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கு சரியான அரசியல் தலைவரில்லை. இலங்கையை பொறுத்த வரை முஸ்லிம்களுக்கு சரியான அரசியல் தலைவர் வேண்டும். சமூகத்திற்காக சிந்திக்கக் கூடிய தலைவரினால்தான் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தர முடியும். குறைந்தபட்சம் தொடர்ச்சியாக அநீதிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதையாவது தடுக்க முடியும். ஆனால், இன்று முஸ்லிம்கள் மத்தியில் பல அரசியல் தலைவர்கள் உள்ளார்கள். ஆயினும், முஸ்லிம்களுக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கின்றன. அத்தனை அடிகளுக்கும் மத்தியில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்போர் அதிகாரம் கொண்ட அமைச்சர் பதவிகளையும், அரசாங்கத்தின் பங்காளிகள் என்ற அந்தஸ்தையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். சமூகத்தின் வேதனையில் வேதனம் பெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களை மாற்றாத வரையில் முஸ்லிம் சமூகம் விமோசனம் அடையாது.
நன்றி - விடிவெள்ளி 12.05.2017
மறிச்சிக்கட்டிப் போராட்டம் கைவிடப்பட்டது ஏன்? மறிச்சிக்கட்டிப் போராட்டம் கைவிடப்பட்டது ஏன்? Reviewed by Madawala News on 5/13/2017 12:07:00 AM Rating: 5