Ad Space Available here

கல்வியியலாளர் எஸ்.எம்.ஆர். சூதீன்: ஆரம்ப கல்வித் துறையின் தீபம்!


அம்பாந்தோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனாப் எஸ்.எம்.ஆர். சூதீன் தனது ஆரம்பக் கல்வியை அம்பாந்தோட்டை தர்ம கபீர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் (தற்போது அது அம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலை) கற்றார். ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியில் இரண்டு வருட கல்வியை பூர்த்திசெய்த நிலையில் 1977ஆம் ஆண்டு கல்வித் துறைக்குள் ஆசிரியராக காலடி எடுத்து வைத்தார். 

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆரம்ப பிரிவு ஆசிரியர் பயிற்சியைப் பெற்ற அவர், பின்னர் கல்விமாணி கற்கைநெறியை பூர்த்தி செய்தார்.

மள்வானை அல்முபாரக் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய அவர், கொழும்பு ஹமீத் அல்ஹுஸைனி பாடசாலையில் நீண்ட காலமாக ஆசிரியராக பணியாற்றினார். அதன் ஆரம்ப பிரிவின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்புச் செய்தார். அங்கு ஆசிரியராக பணியாற்றுகின்றபோது பாடவிதான அபிவிருத்தி நிலையத்தோடு (தேசிய கல்வி நிறுவகம் உருவாக்கப்படுவதற்கு முன்) தொடர்புகளை வைத்திருந்தார் இணைந்து பணியாற்றினார். தேசிய கல்வி நிறுவகம் உருவாக்கப்பட்டதன் பின்னர் அதன் ஆரம்ப பிரிவுக்கான உதவிச் செயற்திட்ட அதிகாரியாக இணைந்தார். பின்னர் செயற்திட்ட அதிகாரி, பிரதம செயற்றிட்ட அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். தேசிய கல்வி நிறுவகத்தில் இணைந்தது முதல் அவர் முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி துறைக்கு மகத்தான பங்களிப்புச் செய்து வந்தார். அங்கு பணியாற்றுகின்றபோது பங்களாதேஷுக்குச் சென்று அங்குள்ள ஆரம்ப கல்வித் துறையை அவதானித்து துறைசார் அனுபவத்தைப் பெற்று பங்களிப்புச் செய்தார்.

தேசிய கல்வி நிறுவகத்தில் பணியாற்றும்போது சமாதானக் கல்வி என்ற ஒரு பகுதி இருந்தது. அதிலும் அவர் தனது ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தினார். தேசிய கல்வி நிறுவகத்தில் ஆரம்ப பிரிவுக்கான பிரதம செயற்றிட்ட அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த அதேநேரம் இஸ்லாம் பாடத்திற்கான ஒருங்கிணைப்பாளர் வெற்றிடம் நிலவியது. அந்த வெற்றிடம் நிரப்பப்படும் வரை அந்தப் பொறுப்புகளும் இவரிடமே ஒப்படைக்கப்பட்டன. அதனையும் மிகச் சிறப்பாக மேற்கொண்டார். அவர் அதனைப் பொறுப்பேற்ற பின்னர் இஸ்லாம் பாடத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிழ்ந்தன. அவர் இஸ்லாம் பாடத்தில், ஷரீஆ துறையில் புலமை பெற்றிருக்கா விட்டாலும் இஸ்லாத்தில், ஷரீஆ துறையில் ஆழ்ந்த புலமை பெற்றவர்களை, ஆலிம்களை இனங்கண்டார். அவர்களை வீடு தேடிச் சென்று சந்தித்தார். இதன் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தினார். 

இஸ்லாம் பாட கலைத் திட்டம், ஆசிரியர் வழிகாட்டி கையேடு என்பவற்றைத் தயாரிப்பதில் அவர்களது பங்களிப்பைப் பெற்று தனது பொறுப்புக்களை கச்சிதமாக செய்து முடிக்க வேண்டுமென்பதில் குறியாக இருந்தார். அதற்காக இரவு பகலாக உழைத்தார். கொள்கை ரீதியில் எவ்வித பாகுபாடும் காட்டாமல் சகல தரப்பினரையும் இணைத்து ஆரவாரமின்றி தனது பணிகளை மேற்கொண்டார்.

இன்று இஸ்லாம் பாட கலைத் திட்டம், ஆசிரியர் வழிகாட்டி நூல் என்பன தரம்வாய்ந்ததாக அமைந்திருப்பதற்கு அத்திபாரமிட்டவர்களுள் சூதீன் ஆசிரியர் பிரதானமானவர் என்றால் அதில் மிகையிருக்காது.

நடைமுறையிலுள்ள அஹதிய்யா பாடத் திட்டத்தை வடிவமைப்பதில் கணிசமான பங்களிப்புகளை நல்கியவர் அவர். மட்டுமன்றி, அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கி வந்தார். பிராந்திய ரீதியில் நடத்தப்படுகின்ற அஹதிய்யா ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகளில் முக்கிய வளவாளராக இருந்து கல்விப் பணி செய்தார். ஆசிரியர் பயிற்சி நுட்பங்களை நுணுக்கமாக தெரிந்து வைத்திருந்தவர் அவர். சகோதர இனத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்கள்கூட இவரைப் பயன்படுத்தும் அளவுக்கு அதில் தேர்ச்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு மாத்திரமல்ல, பொதுவாக நாட்டின் ஆரம்ப கல்விப் பிரிவின் வளர்ச்சிக்கும் மகத்தான பங்களிப்பை வழங்கினார். நாட்டில் ஆரம்ப கல்விப் பிரிவின் முக்கிய வளவாளர்களுள் ஒருவராக இருந்து நாட்டினதும் முஸ்லிம் சமூகத்தினதும் கல்வி வளர்ச்சிக்கு உரமூட்டினார்.

யுத்த காலத்தில்கூட யுத்த பிரதேசங்களில் நடைபெறும் ஆசிரியர் பயிற்சிக் கருத்தரங்குகளில் பயிற்றுவிப்பாளராக பங்கேற்றிருந்தமை அவரது பரந்த சேவைக்கு தகுந்த சான்று.

எல்லோருடனும் மிகவும் அன்பாக பழகும் அவர், பிறருக்கு உதவுவதில் முன்நிற்பவர். அவரிடம் யாராவது உதவி கோரினால் அவரால் முடியுமென்றால் அதனைச் செய்வார். இல்லாவிட்டால் வேறு யாரிடமாவது உதவி பெற்று அதனைச் செய்து கொடுக்கும் பண்பாளராக திகழ்ந்தார். எந்தவொரு விடயத்தையும் கனகச்சிதமாக செய்ய வேண்டுமென எப்போதும் வலியுறுத்துவார். அவ்வாறே அதனைச் செய்தும் முடிப்பார். பல்வேறு கற்றல் நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்த அவர், கற்பிக்கின்றபோது புரிந்து கொள்ள சிரமப்படுகின்ற மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி புரிய வைப்பதில் வல்லவர்.

கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் ஆரம்ப பிரிவு ஆசிரிய பயிற்றுவிப்பாளராக இணைந்து அங்கும் காத்திரமான பங்களிப்பை வழங்கினார். கல்வித் தகைமையுள்ள ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் தொழிற்தகைமையை விருத்தி செய்வதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்தார்ளூ ஆசிரியர்களை பயிற்றுவித்தார். ஸாஹிரா கல்லூரியில் அவரது காலப் பிரிவில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வீதமும் கணிசமானளவு அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

சூதீன் ஆசிரியர் இன்ஸைட் நிறுவனத்தின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறியின் கலைத் திட்டத்தை தயாரிப்பதில் பிரதான பங்கெடுத்தவர். வாஹித் ஆசிரியரும் அவரும் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வித் துறையை, அதன் கலைத்திட்டத்தைப் பார்வையிட்டு அவர்களது அனுபவத்தையும் பெற்று இன்ஸைட் நிறுவனத்தின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறியின் கலைத் திட்டத்தை வடிவமைத்தமை குறிப்பிடத்தக்கது.இன்ஸைட் நிறுவனத்தின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறியின் முதல் நான்கு தொகுதியினருக்கும் சூதீன் ஆசிரியர் அவர்களே பிரதான வளவாளராக செயற்பட்டார்.

சிறந்த ஆசிரியர், முன்பள்ளி, ஆரம்பக் கல்வி கலைத்திட்ட வடிவமைப்பாளர், யுனிசெப், சர்வோதய, முதலான அமைப்புக்களில் ஆய்வு மற்றும் பயிற்சிகளுக்கான வளவாளர், இஸ்லாம், இஸ்லாமிய நாகரிக பாடப் பொறுப்பாளர், பாடத்திட்டம், ஆசிரியர் வழிகாட்டி வளவாளர், ஆசிரிய பயிற்றுவிப்பாளர்... என்று அவரது கல்வித் துறைசார்ந்த பங்களிப்புகள் விரிந்தவைளூ கனதியானவைளூ காத்திரமானவைளூ காலத்தால் அழியாதவை.

ஆரவாரமின்றி மிக அமைதியாக இருந்து கல்வித் துறைக்கு மகத்தான பங்களிப்புச் செய்த சூதீன் ஆசிரியர் போன்று இன்னும் பலர் உருவாக வேண்டும்ளூ உருவாக்க வேண்டும். அவரிடம் கற்ற மாணவர்கள், முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வித் துறை ஈடுபாடுள்ளவர்கள் அது தொடர்பில் சிந்திக்க வேண்டும். சமூக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் கல்வித் துறைசார் ஆளுமைகளை உருவாக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

2002ஆம் ஆண்டில் சஊதி மன்னரின் அழைப்பில் இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு சென்ற 20 விருந்தினர்களில் ஒருவராக இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் பாக்கியம் பெற்ற அவர், சுகயீனத்தையும் பொருட்படுத்தாமல் மே முதல் வாரம் தனது குடும்பத்தாருடன் உம்ராவை நிறைவேற்றுவதற்கு மக்கா சொல்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார். ஆனாலும் இறைவன் அதற்கு முன்னர் அவரை தன்பக்கம் அழைத்துக் கொண்டான், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எஸ்.எம்.ஆர். சூதீன் ஆசிரியர் சில மாதங்களாக புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் கடந்த 27.04.2017 அன்று பகல்பொழுதில் உலகிலிருந்து விடைபெற்றார். அப்போது அவருக்கு வயது 65.

மரணிப்பதற்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்தவாறு நாளிர் ஆசிரியரோடு இணைந்து இஸ்லாம் பாடநூல், ஆசிரியர் வழிகாட்டி நூல் தொடர்பான பணியில் ஈடுபட்டமை கடைசி வரை அவர் சமூகப் பணியில் ஈடுபட்டிருந்தமைக்கு சான்று.
மூன்று பிள்ளைகளின் தந்தை அவர். மூவரும் கல்வியை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். மூத்த மகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கிறார். அவரது மனைவி கொழும்பு- 12 வாழைத்தோட்டம் அல்ஹிக்மா கல்லலூரியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.

இறைவா! அன்னாரது அத்தனை நற்பணிகளையும் கல்விப் பணிகளையும் ஏற்று அங்கீகரிப்பாயாக! அன்னாருக்கு புனித உம்ரா கிரியை நிறைவேற்றிய கூலியை வழங்குவாயாக! உயர்ந்த சுவனத்தில் நுழைவிப்பாயாக! அன்னாரது குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்குவாயாக!
 
நன்றி: எங்கள் தேசம் (இதழ் 140 மே 1- 15, 2017)
கல்வியியலாளர் எஸ்.எம்.ஆர். சூதீன்: ஆரம்ப கல்வித் துறையின் தீபம்! கல்வியியலாளர் எஸ்.எம்.ஆர். சூதீன்: ஆரம்ப கல்வித் துறையின் தீபம்! Reviewed by Madawala News on 5/09/2017 08:11:00 PM Rating: 5