Ad Space avaiable

கல்குடாவும் கணக்கறிஞரும் - சில வெங்காயங்களும்!


எம்.ரீ.எம்.பாரிஸ்,எழுத்து- அஸ்ரப்சிஹாப்தீன்.
கல்குடாவின் முஸ்லிம் அரசியல் களத்தின் பேசு பொருள் இவ்வளவு சீக்கிரம் மாறி விடும் என்று நான் நினைத்திருக்கவில்லை, அதுவும் வெங்காயமாக!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் ஸ்ரீ.மு.கா. சார்பில் களமிறக்கப்பட்ட கணக்காளர் சகோதரர் ரியாழ் அவர்களை ஒரு வெங்காயம் என வர்ணித்து முதலமைச்சர் மற்றும் சகோதரர் ஷிப்லி பாருக் போன்றோர் கலந்து கொண்ட ஸ்ரீ.மு.கா. வின் கூட்டம் ஒன்றில் மற்றொரு மு.கா. போராளியான சகோதரர் சாட்டோ மன்ஸூர் பேசியிருந்த வீடியோக் காட்சியை நேற்றுப் பார்க்க நேர்ந்தது.

இந்த வர்ணிப்பை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

01. ஸ்ரீ.மு.கா. போராளிகள் என்று கருதப்படுவோர் எதிர் அரசியல்வாதிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தமிழ் மொழியில் உள்ள அனைத்துக் கெட்ட வார்த்தைகளையும் - தகாத சொற்களையும் பொதுவெளியில் பிரயோகித்துத் திட்டி வருகின்றனர். அந்த வகையில் பார்த்தால் இது ஒரு மேட்டரே கிடையாது.

02. கல்குடா மு.கா. வின் ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்களை விட சகோதரர் ரியாழ் ஒப்பீட்டளவில் நல்லவர் மட்டுமல்ல படித்தவரும் கூட. கூடவே இருந்து அரசியல் செய்து விட்டு அன்றோ இன்றோ வெங்காயம் என்று சொல்வது முறையானது அல்ல, காரணம் அவர் புதிதாக அரசியலுக்குள் நுழைந்தவர்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், சகோதரர் ரியாழின் போதாமையை உணர்ந்து தான் முதலமைச்சரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்ததாக சகோதரர் மன்ஸூர் கூறியிருக்கிறார். அவ்வேளையிலேயே அவரை ஒரு வெங்காயம் என்று உணர்ந்திருந்தும் தானும் கூடவே இழுபட்ட காரணத்தால் சகோதரர் மன்ஸூரும் ஒரு வெங்காயம்தானே! சகோதரர் மன்ஸூர் மட்டுமன்றி சகோதரர் ரியாழுடன் இணைந்திருந்த அனைவரும் வெங்காயங்கள்தாம் என்பதையும் சகோதரர் மன்ஸூர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நமது முஸ்லிம் அரசியலில் ஒருவரைத் தூக்கிப் பிடிக்க வேண்டுமெனில் அதி உச்சத்துக்குத் தூக்கிப் பிடிப்பார்கள். கைவிடத் தீர்மானித்தால் தொப்பென்று கீழே விட்டு விடுவார்கள். இது ஸ்ரீ.மு.கா. அரசியலில் அதிகம். அதுதான் சகோதரர் ரியாழுக்கும் தற்போது நடந்துள்ளது.

ஸ்ரீ.மு.காவின் அரசியலுக்கு ஒருவர் வந்து விட்டால் அவரைப் போன்ற அதியுச்சத் தகுதி கொண்டவர் கிடையாது என்று புகழ்வார்கள். சகோதரர் ரியாழ் ஒரு கணக்காளர். நாட்டில் உள்ள பல்லாயிரம் கணக்காளர்களில் ஒருவர். அரசியலுக்குள் சகோதரர் ரியாழ் வந்தவுடன் அவரை கணக்கறிஞர் என்றனர். இன்று வரை அவரது ஆதரவாளர்களும் அப்படியேதான் அழைத்து வருகின்றனர். எனக்குத் தெரிந்த அளவில் சகுந்தலாதேவி என்று ஒருவரையும் ராமானுஜம் என்று ஒருவரையும்தான் கணக்கறிஞர் என்று உலகம் அழைத்து வந்திருக்கிறது. (ராமானுஜம் சரியா என்று சந்தேகம் உண்டு.)

கணக்கறிஞர் என்று புகழப்பட்டவர் அதிருப்தி கண்டதுடன் வெங்காயம் என்று வர்ணிக்கத் தொடங்கி விட்டனர். கணக்கறிஞர் என்று தன்னை வர்ணிப்பதை உணர்ந்தவுடனே அவர் ஜாக்கிரதையாகியிருக்க வேண்டும். எனது கணிப்பில் அவர் பல விடயங்களை அரசியலில் கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன். கூட இருந்தவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? என்னென்ன நோக்கம் ஒவ்வொருவருக்கும் இருந்தது என்பதையெல்லாம் அவர் தௌ;ளத் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டார் என்று நான் யூகிக்கிறேன்.

அவரது அடுத்த கட்ட நகர்வு என்னவென்று சொல்ல முடியவில்லை.

இந்த விடயத்தை சகோதரர் ரியாழ் பெரிது படுத்தத் தேவையில்லை. சட்டை கிழியத்தான் செய்யும் என்று தெரிந்து கொண்டுதான் சண்டையில் இறங்க வேண்டும். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

கல்குடாவும் கணக்கறிஞரும் - சில வெங்காயங்களும்! கல்குடாவும் கணக்கறிஞரும் - சில வெங்காயங்களும்! Reviewed by Madawala News on 5/14/2017 03:51:00 PM Rating: 5