tg travels

கிழக்கு முதலமைச்சரின் பணிப்புரைக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் ஆளுநரால் இடைநிறுத்தம்


எம்.ஜே.எம்.சஜீத்
கிழக்கு மாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்கள் அனைத்தையும் உடனடியாக இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்டுவரும் முறையற்ற ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் நேற்று (15) கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து முறையிட்ட போது ஆளுநர் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது அரசியல் அதிகாரத்தினைப் பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு இடமாற்றங்களை வழங்கி வருகின்றார். இதனால் பின்தங்கிய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.

எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது கிழக்கு மாகாணம் கல்வித்துறையில் 9ஆவது இடத்தினை வகிப்பதாகவும், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 34ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதனையும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்கள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு என்னிடம் வலியுறுத்தினார். 

இவ்விடயத்தினைக் கவனத்திற்கொண்டு அண்மையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலம்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கோரக்கல்லிமடு ஸ்ரீரமண மகரிஷி வித்தியாலயத்திற்கும், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயம், ஏறாவூர் ஹிஸ்புல்லா மற்றும் அப்துல் காதர் வித்தியாலயங்களுக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டேன்.

அப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த போது ஆசிரியர்கள் பற்றாக்குறை சம்மந்தமாகவே என்னிடம் முறையிட்டனர். குறிப்பாக காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தில் விஞ்ஞானப் பாடம் கற்பித்த ஆசிரியர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் எந்தவித பதிலீடுகளும் இன்றி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் பனிப்புரைக்கமையவே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் பல அசௌகரியங்ளை எதிர்நோக்குவதாகவும் அப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் என்னிடம் தெரிவித்தனர்.

அதேபோன்று கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலம்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்குச் சென்று அப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த போது அப்பாடசாலையிலும் தரம் 6,7,8,9 ஆகியவற்றுக்கு விஞ்ஞானப் பாடம் கற்பித்த ஆசிரியர் எந்தவித பதிலீடுகளுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அம்மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

மேற்குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று (15) கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து முறையிட்டேன் அதனை கருத்திற்கொண்ட ஆளுநர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளரை அழைத்து இவ்வாறு செய்யப்பட்ட இடமாற்றங்களை உடனடியாக இரத்துச்செய்யுமாறும், அதே போன்று தற்காலிக மற்றும் பதிலீடுகளின்றி மேற்கொள்ளும் இடமாற்றங்களை நிறுத்துமாறும் அத்துடன் வலயங்களிலுள்ள உயர் பதவிகளுக்கு உரிய முறையில் விண்ணப்பங்களை கோரி தகுதியுள்ளவர்களை இணைத்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு முதலமைச்சரின் பணிப்புரைக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் ஆளுநரால் இடைநிறுத்தம் கிழக்கு முதலமைச்சரின் பணிப்புரைக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் ஆளுநரால் இடைநிறுத்தம் Reviewed by Madawala News on 5/17/2017 02:16:00 PM Rating: 5