tg travels

ரமழான் மாதத்தில் நாட்டின் சட்டம் ஒழுங்குகளைப் பேணி கண்ணியத்துடன் நடப்போம்

( ஐ. ஏ. காதிர் கான் )
கண்ணியமும் புண்ணியமும் மிக்க புனித ரமழான் மாதம்,  நம் மத்தியில் இன்னும் ஒரு சில தினங்களில் ஆரம்பமாகவுள்ளது. தற்போதைய சூழ் நிலையில் முஸ்லிம்கள் இம் மாதத்தில்  மிகவும் நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும்,  பொறுப்புடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ளவேண்டும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, சகல முஸ்லிம்களிடமும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 

ரமழான் மாதத்தை முன்னிட்டு, அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ;

புனித ரமழான், கூடுதலான அமல்களைச் செய்து, நன்மைகளை இயன்றளவு பெற்றுக்கொள்ள வேண்டிய மாதம். இம் மாதத்தில், இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், முஸ்லிம் இளைஞர்கள் பள்ளி வாசல்களிலிருந்து வீடுகளுக்கு அமைதியாகச் செல்ல வேண்டும். 

தராவீஹ் தொழுகை, ஹிஸ்பு மஜ்லிஸ் மற்றும் இதர வணக்க வழிபாடுகள் முடிவடைந்த பின்னர், வீதிகளிலும் சந்திகளிலும் கூடி வீணாக நேரத்தைக் கழிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் பிற மத சகோதரர்களுக்கு இடையூறுகள் ஏற்படாதவாறும்,அவர்களின் நித்திரைக்கு இடைஞ்சல்கள் உண்டாகாத முறையிலும்  நடந்து கொள்ளவேண்டும். 

இன்று சில வாலிபர்களும் சிறு பிள்ளைகளும்    இரவு வேளைகளில் வீதிகளில் இறங்கி விளையாடி வருவதைக் காண்கின்றோம். இதனால், சில நேரம் வீண் பிரச்சினைகள் எழுவதற்கு வழி ஏற்படுகின்றது. 

பொலிஸாருக்கும் தமது கடமைகளைப் புரிவதற்கு தடங்கள் ஏற்பட இடமுண்டு. எனவே, இவ்வாறானவர்கள் நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து, தவறான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து நடந்து, ரமழானின் புனிதத் தன்மையைப் பேணிக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

"முஸ்லிம்கள் என்றால் யார் ?" என்பதை, ஏனைய மதத்தவர்களுக்கு, இப்புனித ரமழான் மாதத்தில் புரியவைத்து, அவர்களுக்கு சிறந்த  முன்மாதிரியாக நடந்து கொள்ள ஒவ்வொருவரும்  முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
ரமழான் மாதத்தில் நாட்டின் சட்டம் ஒழுங்குகளைப் பேணி கண்ணியத்துடன் நடப்போம் ரமழான் மாதத்தில் நாட்டின் சட்டம் ஒழுங்குகளைப் பேணி  கண்ணியத்துடன் நடப்போம் Reviewed by Madawala News on 5/24/2017 04:53:00 PM Rating: 5