Kidny

Kidny

உலகமயமாக்கலின் பின்னனியில் 'எட்கா'


-றிகாஸ் முஹம்மத்-

தொன்னூறுகளின் ஆரம்பத்தில் உலககொடுக்கல் வாங்கல்களில் சூப்பர்ஸ்டார் இன்ரடக்ஷன் போல உலகமயமாதல் என்ற எண்ணக்கரு உலக நாடுகளால் விசிலடித்து வரவேற்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு எக்ஸ்பியாரி டேட் போன விஜயகாந்த் போலதான் வளர்ந்த நாடுகளால் பார்க்கப்படுகிறது.

பொதுவாக இந்த உலகமயமாக்கல் கோட்பாடானது மேலோட்டமாக பார்ப்பதற்கு பல நன்மைகளை வாரிவழங்கும் பாரிவள்ளல் போலதான் என்றாலும் வளர்ந்து வரும் நாடுகள் உலகமயமாதலை பார்த்து நீங்க நல்லவரா கெட்டவரா என்றுதான் கேட்க வேண்டும்.

இந்த எண்ணக்கருவினது தோற்றமானது மேற்குலக கார்பரேட்டுக்களின் வியாபார நோக்கத்தின் தந்திரமே தவிர வேறில்லை. இதனால் வளர்ந்த நாடுகள் மேலும் வளர்ந்தன, இதனுடைய பலன்கள் ஒரு கட்டத்துக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்திய போது வளர்ந்து வரும் நாடுகளால் இதில் இருந்து விடுபடமுடியவில்லை, ஆனால் இன்று வளர்ந்த பணக்கார நாடுகள் தங்களது பெட்டி படுக்கைகளை கட்டி  நன்மைகளை மட்டும் நுகர்ந்துகொண்டு உலகமயமாதலில் இருந்து சிட்டாக பறந்து கொண்டிருக்கின்றன. ஆள் அரவமற்ற காட்டில் விடப்பட்டது போலதான் சிறிய நாடுகளின் பரிதாப நிலை.

இன்றைக்கு ஒரு வளர்ந்த நாடு இன்னொரு நாட்டில் மூக்கை நுழைத்துக்கொண்டிருக்க விரும்பவில்லை, இதுவே மாறிவரும் பொருளாதார நிலையில் தன்னை நிலைத்திருக்க அந்த நாடுகள் பயன்படுத்தும் தற்காப்பு. தனது பொருளாதாரத்தை மற்றைய நாடுகளுடனோ அமைப்புக்களுடனோ பங்கிட்டுக்கொள்ள அவை விரும்பவில்லை என்பதுதான் யதார்த்தம். இதன் பிரதிபலிப்புதான் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப்பின் வரவு. "அமெரிக்காவும் அமெரிக்கரும்" இதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம். இதைத்தான் மக்களும் விரும்பினார்கள். இன்னும் அவருடைய எடக்கு முடக்கான கொள்கைகளும் பெருமளவில் அமெரிக்கரிடத்தே ஆதரவு பெருகிறது. இங்குதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும் ஏன் ஒட்டுமொத்த உலகமும் விரும்பாத ஒருவர் அமெரிக்கரால் ஆதரிக்கப்படுகிறார் என்பதை.

அடுத்து 'பிரக்ஷிட்'  என்கின்ற ஐரோப்பிய யூனியனுடனான பிரித்தானியாவின் விவாகரத்து. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தனது 17% வருமானத்தை இழக்கிறது.

எல்லா நாடுகளுக்கும் இது பாதிப்பாக இருந்தாலும் கீழைத்தேயத்தின் வல்லரசாக காட்டிக்கொள்ளும் இந்தியாவுக்கு இது பாரிய சவாலான தருணம் தான்.

உதாரணமாக ஐரோப்பாவில் முதலீடு செய்யப்படிருக்கும் கிட்டத்தட்ட 800 இந்திய கம்பனிகள், மற்றும் பிரிட்டனில் வேலைசெய்யும் ஒரு லட்சம் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாக்கப்படுகிறது.
இதேவேளை அமெரிக்காவில் H1B வீசாக்களுக்கான குறைந்த ஊதிய எல்லை நிர்ணயிக்கப்பட்டதன் மூலம் அமெரிக்க கம்பனிகளால் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யக்கூடிய இந்தியர்களை பணிக்கமர்த்த முடியாத நிலை ஏற்படும்.

மேலும் மத்தியகிழக்கிலும் கெடுபிடிகள் அதிகரிக்க ஆரம்பித்ததன் மூலம் பாரியளவு வேலையில்லாத் திண்டாட்டத்தை இந்தியா முகம்கொடுக்கவேண்டிய இக்கட்டான காலகட்டத்துக்கு தள்ளப்படுகிறது. ஆக இந்தியாவுக்கு இதன் அழுத்தங்களை தாங்குவதற்கு புதிய உலகளாவிய ஒத்துழைப்புகள் தேவைப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவைச் சூழ நடந்து கொண்டிருக்கும் திட்டங்களும் மோடி அரசை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம். இதற்கெல்லாம் இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டே எதிரிகள் பாகிஸ்தானும் சீனாவும்தான் காரணம் என்பதாக படுகிறது.

சார்க் வலயத்தில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைத்திருக்கவேண்டி படாத பாடு படுகிறது என்றால் மோடி 'சப்பாஹ்.. என்ன காட்டு காட்டுறாய்ங்க' மைன்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசிவிடுவார். பாவம் மோடி ஜி..

சார்க் அமைப்பில் எப்படியாவது இணைந்து கொள்ள வேண்டும் என்பது சீனாவின் பல நாள் கனவு, இதற்கு இந்தியா மட்டுமே தடையாக இருக்கமுடியும். மற்றைய எல்லா நாடுகளும் ஆமாஞ்சாமிகள்தான். தனது அதிகாரத்தை பறிகொடுக்க இந்தியா எப்போதும் தயாராக இல்லை.

இந்தியாவின் அதீத ஆதிக்கம் பாகிஸ்தானால் ஏற்க முடியாத நிலையில் சார்க் அமைப்பில் பாகிஸ்தானின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதோடு பாகிஸ்தான் ஈரான், சீனா என்பவற்றை இணைத்து சக்திவாய்ந்த பொருளாதார அமைப்பை உருவாக்க திட்டமிடுகிறது.

இவற்றையெல்லாம் சமாளிப்பதற்கு இந்தியா சார்க் அமைப்பின் மற்றய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தவேண்டிய நிலையில் தனது பட்ஜட்டில் மற்றைய நாடுகளுக்கான நிதியுதவிகளை கட்டாயமாக திணிக்கவேண்டியுள்ளது.

இதன் பின்னணியில்தான் இலங்கை இந்தியா பரந்த பொருளாதார உடன்படிக்கை (CEPA) க்கான அடிக்கல் நட்டப்பட்டபோது நல்லாட்சிக்கெதிராக குரல்கள் ஓங்கத்தொடங்கியது. சுதாகரித்துக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அது CEPA அல்ல ETCAஎன்ற வர்தக தொழிநுட்ப உடன்படிக்கையை இலங்கை இந்தியாவிற்கிடையில் கைச்சாத்திடபடவுள்ளது என்று பிளேட்டை மாற்றினார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் கூறுவது போல பல நன்மைகள் இதன் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமிருக்காது. வரையறுக்கப்பட்ட இலங்கையின் சந்தை வாய்ப்புக்கு இந்திய சந்தையின் பங்களிப்பு சாதகமானதாவே இருக்கும். ஆனாலும் இது இலங்கையை பொறுத்தமட்டில் ஓவர்டோஸ் மாத்திரை என்பதை நல்லாட்சி அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

ETCA மூலம் இலங்கைக்கு இந்தியாவின் தொழிநுட்ப உதவிகள் கிடைக்கும், தொழில்வாய்ப்பு அதிகரிக்கும் என்பது உண்மைதான் ஆனால் இதன் ஒட்டுமொத்த பலனையும் இலங்கை நுகரும் என்று சொல்லிவிடமுடியாது.  எதிர்காலத்தில் இதன் பக்கவிளைவுகள் இலங்கையின் தனித்துவமான அடையாளத்தை இழக்க செய்யும் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். இந்தியாவை தாண்டி இலங்கையின் பொருளாதாரத்தை சிந்திக்கமுடியாத ஒரு நிலைகூட ஏற்படலாம் என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.

உள்நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்கின்ற நல்லாட்சி அரசு இப்படியான ஒப்பந்தங்கள் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை திசைதிருப்புவதுதான் நகைப்புக்குரியதாக இருக்கிறது.

ஆக 'எட்கா' காலத்துக்கு அவசியமற்றது என்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
உலகமயமாக்கலின் பின்னனியில் 'எட்கா' உலகமயமாக்கலின் பின்னனியில் 'எட்கா' Reviewed by Madawala News on 5/15/2017 06:00:00 AM Rating: 5