Ad Space Available here

ஒப்புக்குச் சப்பாணி கொட்டுகின்ற எமது தலைமைத்துவம் ஓய்வெடுக்கட்டும்!


எஸ். ஹமீத்

சமூகத்தின் மீதான அடங்காப் பற்றும் ஆர்வமும் அன்பும் தரமான தலைமைத்துவங்களிடம் தானாகவே உருவாகும். அதுவன்றி, வெறும் கடமைக்காக, வெற்றுப் பசப்புக்காகத் தலைமைத்துவங்கள் வீணே நடித்துக் காட்டுவதென்பது நரித் தந்திரமும் நயவஞ்சகத்தனமானதுமாகும். அத்தகைய தலைமைகள் நரர்களில் நரம்புகளறுந்த நபும்சகர்களாகவே இருக்க வேண்டும்.

கடந்த அரசாங்கத்தில் தனது சமூகத்திற்கு இன்னல் விளைவிக்கப்படுகிறது என்றவுடன் உயிரையும் துச்சமென மதித்து, மாற்று அணியுடன் கைகோர்த்து, மதர்த்த நெஞ்சமும் மாசறு எண்ணமுமாய் இயங்கினான் ஒரு தலைவன். இன்னொரு தலைவனோ, அஞ்சல் வாக்களிப்பு முடிந்தும் கூட அப்பால் பாய்வதா, இப்பால் குதிப்பதாவென யோசிக்கும் அசன் காக்கா வீட்டு மதிற் பூனையாய் மதி தடுமாறி, மயக்கம் கொண்டவனைப் போலிருந்தான்.

இன்றும் கூட அதே நிலைமைதான். ''எனது சமூகத்தைக் காவுகொள்ளத் துடிக்கும் கட்டாக்காலிகளைக் கைது செய்து காவலில் வை... !''என்று ஆட்சியின்  அதிமேதகு ஜனாதிபதியையும் அதியுயர் பிரதம மந்திரியையும் அசகாய சூரப் பொலிஸ் மா அதிபரையும் அஞ்சா நெஞ்சினனாய், வெஞ்சினம் கொண்ட வேங்கையதாய் ஒரு தலைவன் உரத்த தொனியில் கேட்டு நிற்க, மற்றொரு தலைவனோ, மணிக்கணக்கில், நாட்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் இல்லாத தலை மயிரை இருப்பதாகத் தடவி யோசிக்கின்றான். கேட்டால், அதுதான் சாணக்கியம் என்று சாட்டு வேறு கூறுகிறான்.

இரண்டரை வருடங்களாக யாருக்குத் தேசியப் பட்டியல் எம்.பி. பதவியைக் கொடுப்பதென யோசித்து முடிக்காத சாணக்கியத் தலைமையையல்ல நம் சமூகம் வேண்டி நிற்பது. மாறாக,சமூகத்தின் மீது பகிரங்கப் போர் தொடுத்துள்ள ஞானசாரப் புலிகளைச் பிடித்துச் சிறைக் கூண்டுக்குள் பூட்டி வைக்கும் சிங்கத் தலைமையைத்தான் நம்மினம் நாடி நிற்கிறது.

ஒட்டுமொத்த முஸ்லிம்களும் என் எதிரியென ஓங்கரிக்கும் ஞானசார, ஒரேயொரு முஸ்லிமுக்கு மட்டும் நல்லவன் என நற்சான்றிதழ் தருகிறார் என்றால், அந்த ஒரேயொரு முஸ்லிமை நாம் எந்தக் கண் கொண்டு ஏறெடுத்து நோக்குவது...? இமைகள் மூடி இரண்டு நிமிடங்கள் சிந்தித்தால் இதற்குள்ளிருக்கும் சூட்சுமத்தை இலகுவாகக் கண்டு கொள்ளலாம். இப்பொழுதாவது நாம் நமது தலைமையின் இலட்சணத்தைப் பற்றி யோசிக்க வேண்டாமா...?

பௌத்த தீவிரவாதத்தை, சிங்களக் கடும்போக்கு முஸ்லிம் விரோதத்தை, எல்லாம் வல்ல ஏகனாகிய அல்லாஹ்வைக் கொச்சைப்படுத்துகின்ற அக்கிரமத்தை, எம் பெருமானாரைப் பழிக்கின்ற அராஜகத்தை, எமது பெண்களின் பர்தாவைக் கேவலமாகப் பேசுகின்ற கொடுமையை, எமது  நிலங்களைக் கபடத்தனமாகக் கையகப்படுத்துகின்ற காடைத்தனத்தை, எமது புனித பள்ளிகளைத் தாக்குகின்ற காட்டுமிராண்டித்தனத்தை, எமது சொத்துக்களைச் சூறையாடுகின்ற அநியாயத்தை 'எல்லோரும் சப்பாணி கொட்டுகிறார்கள்...நாமும் கொட்டுவோம்!'  என்ற ரீதியில் ஒப்புக்கு எதிர்த்து உருப்படியில்லாமல் நாலு வார்த்தைகள் பேசுகின்ற ஒரு தலைமைத்துவமல்ல இன்று நமக்குத் தேவைப்படுவது; 'என் உயிரைக் கவர்ந்தாலும் சரியே, எனது சமூகத்திற்கு இடையறாத இன்னல் செய்வோரை இறுதிவரை-இறுதி மூச்சு வரை- எதிர்த்து நிற்பேன்!' என்று ஆணையிட்டுஎழுந்து வருகின்ற அடலேறு நிகர்த்த தலைவனே நமக்குத் தேவை.


லௌகீக வாழ்க்கையின் மீதான ஆசைகளும் இதுவரையிலான அனுபவங்களின் மீதான சுவைகளும் இன்னமும் தேடித் தேடிச் சுகிக்க ஏங்குகின்ற இதயமும் பகட்டான வாழ்வின் படாடோப வேட்கைகளும் கொண்ட எவனும் இஸ்லாமியத் தலைமைத்துவத்துக்கு உரியவனல்லன். அத்தகையவன் ஒய்வு கொள்ளட்டும்; விழிகள் மூடி உறக்கம் கொள்ளட்டும்.
ஒப்புக்குச் சப்பாணி கொட்டுகின்ற எமது தலைமைத்துவம் ஓய்வெடுக்கட்டும்! ஒப்புக்குச் சப்பாணி கொட்டுகின்ற எமது  தலைமைத்துவம் ஓய்வெடுக்கட்டும்! Reviewed by Madawala News on 5/24/2017 12:36:00 PM Rating: 5