Kidny

Kidny

மாற வேண்டியது யார்? எது ?


-ஆதம்பாவா வாக்கிர் ஹுசைன்-

கடந்த ஆட்சி மாற்றத்துக்கு பெரும் பங்காளிகளாக சிறுபான்மை மக்கள் அதிலும் முஸ்லீம் மக்கள் இருந்தது என்பது நீடித்து இருக்கும் வரலாறு ஆனால் அம்மாற்றத்தின் விளைவை நாம் அறுவடை செய்த போது, விளைந்தது எல்லாமே முற்றிய நஞ்சும், வெளிப்படையான இனவாதம் மற்றும் அவமானமுமே அன்றி வேறில்லை என்றபோது இனியும் நாம் இலங்கை அரசியலில் யாரைத்தான் நம்புவது எல்லாம் வல்ல இறைவனைத்தவிர. 

தற்போது இலங்கையில் தோன்றியுள்ள ஒரு அசாதாரண நிலையை பார்க்கும் போது நாம் கைசேதப்பட்டுவிட்டோம் என்பதை தவிர வேறொன்றுமில்லை ஆனால் இந்நிலையின் போது நாம் யாரை பழிதீர்ப்பது , யாரை குற்றம்சாட்டுவது, யாரை நொந்துகொள்வது என்ற மிகப்பெரும் கேள்வி தாமாகவே எழுவதை இங்கு தவிர்க்க முடியாமல் இருப்பது நிஜம். 

என்னைப்பொறுத்த வரையில் இங்கு நாம் கேள்வி கேட்கவேண்டிய , குற்றம்சாட்டவேண்டிய , பழிதீர்க்கவேண்டிய எல்லாமே எமது வாக்குகளைப்பெற்று சுகபோகம் அனுபவிக்கும் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் அன்றி, புத்தபெருமானின் போதனைகளை அறியாத, மனித மாண்புகளை புரியாத , ஒழுக்கம் என்றால் என்னவென்று தெரியாத, பண்பாடு பற்றி படித்திடாத ஜானசாராவோ அல்லது அவன் சார்ந்த இனவாத கழிசடைகளிடமோ அல்ல. 

எமக்குள் இங்கு ஆயிரம் பித்தனாக்கள், எமக்குள் இங்கு ஆயிரம் ஓட்டைகள், எமக்குள் இங்கு எண்ணிலடங்கா கொள்கைகள். இங்கு ஒரு கட்சியின் தலைமைக்கு தனது கட்சியின் செயலாளர் விடையத்தை தீர்த்து வைக்க வக்கில்லை, ஒரு தேசிய பட்டியலை பகிர்ந்தளிக்க முடியவில்லை, கட்சியின் கட்டடத்தை கூட காப்பாற்ற தெரியவில்லை இதற்குள் இவர்கள் தம்மைத்தாமே இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த குரல் என்ற தம்பட்டம் வேறு. இன்னொரு பக்கம் கடந்த முப்பது வருடங்களாக தம் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்யும் கட்சியினர். இவர்களை நம்பிய எமது சமூகம் இவர்களில் யார் பெரியவர், யார் சிறந்தவர் என்று பொதுவெளிகளில் தம் ஆடைகள் கூட விலகியதை கூட அறியாமல் மல்லுக்கட்டும் நிலையில் நமது உரிமைகளை பெற்றுத்தரும் என்பது எவ்வளவு நகைச்சுவை. 

ஒரு பொதுப்பிரச்சனை ஒன்றிற்காக ஒரே மேசையில் அமர்ந்து வலியுறுத்த திராணியற்ற, வக்கற்ற, முற்போக்கு சிந்தனையற்ற எம்மவர்களை வைத்து வெறும் கட்டடங்களும், கக்கூசுகளும், பாலர் பாடசாலை நிகழ்வுகளில் பரிசில்களை மட்டுமே வழங்க முடியும். இவர்கள் அனைவரும் உண்மையில் இலங்கை முஸ்லீம் அரசியலிலும் சமூகத்திலும் அக்கறை கொண்டால் எமக்கெதிரான இனவாதம் என்னும் பேயை ஓட்ட ஒன்றுபட வேண்டும். தங்களுக்கிடையே உள்ள அரசியல் காழ்ப்புணர்வுகளை மறந்து ஒரே குரலில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து சில்லறை விடையங்களுக்காக சண்டையிட்டு நாமளித்த வாக்குகளை கேலிக்குள்ளாக்குவதை தவிர்க்க வேண்டும். 

வெறும் கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும், முகநூலிலும் அறிக்கைகள் விடுவதை தவிர்த்து பாராளுமன்றிலும், சர்வதேச முஸ்லீம் நாடுகளின் அரசுகளிடமும் முறையிட வேண்டும். 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தாம் வாக்களித்த காரணத்தை மக்கள் உணர்ந்து வெறுமனே காட்சிகளாக பிரிந்து கதையளப்பதை விட்டுவிட்டு இவர்களுக்கு தீவிர அழுத்தம் கொடுக்க மக்கள் முன்வரவேண்டும். நாமோ ஒற்றுமைப்படாமல் ஒருநாளும் ஜனாஸார போன்ற இனவாதிகளின் வீட்டு வேலைக்காரனைக்கூட ஒன்றும் செய்துவிட முடியாது. 

இவ்வளவு கெஞ்சியும் எம்மவர்கள் வழமை போன்று ஊமையர்களாகவும் செவிடர்களாகவும் சுரனையற்றவர்களாகவும் இருப்பின், எதிர்வரும் தேர்தல்களில் வாக்குகளுக்கு பதிலாக சேலைகளை இவர்களுக்கு வழங்குங்கள். ஆனால் சேலைகளை வழங்கி பெண்களை அவமானப்படுத்துவதை விட அடுத்த தேர்தல்களில் எம் பெண்களை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க முடியும், அவர்களால் சில நேரம் இப்போதுள்ளவர்களை சிறப்பாக குரலெழுப்ப கூடுமல்லவா..
மாற வேண்டியது யார்? எது ? மாற வேண்டியது யார்? எது ? Reviewed by Madawala News on 5/17/2017 07:00:00 PM Rating: 5