Ad Space Available here

இலங்கை முஸ்லிம் வர்த்தக சமூகம் இதனை செய்யுமா?


இலங்கை முஸ்லிங்கள் வணிகத் துறையில் கொடி கட்டிப் பறக்கும் ஒரு வணிக சமூகம் என்ற போலியான பிரமையை முஸ்லிங்கள் மத்தியிலிருந்தும், முஸ்லிமல்லாத சமூகங்களில் இருந்தும் தகர்த்தெறிய வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது. 

வெறுமனே வாங்கி விற்கும் மொத்த, சில்லறை வியாபாரிகளாகவும், ஒரு சில பெரும் புள்ளிகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்களாகவும் மட்டுமே முஸ்லிங்கள் இருக்கின்றனர். உற்பத்தித் துறையில் முஸ்லிங்களின் பங்களிப்பு 10% மும் இல்லை. சிங்கள சமூகம் உற்பத்தி செய்யும் பொருட்களை சன நெறிசல் மிக்க நகர்ப்புறப் பகுதிகளில் அலங்காரக் காட்சிப் படுத்தல்களுடன் வர்த்தகம் செய்யும் சமூகமாகவே எமது சமூகம் விளங்குகின்றது. 

அதிலும் நோலிமிட், பெசன் பேக் போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய வர்த்தகங்களைத் தவிர மற்ற முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள் இன்னுமே எந்தவித புதிய சந்தைப்படுத்தல் நுட்பங்கள் மற்றும் எண்ணக் கருக்கள் இன்றி பாரம்பரிய முறையில் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உற்பத்தித் துறை மாத்திரமின்றி வர்த்தகத் துறையிலும் இன்று சிங்களவர்களின் வர்த்தக நிலையங்களே நகர்ப்புறங்களில் உயர்ந்து கொண்டு செல்கின்றன.

மறுபக்கம், பங்குச் சந்தையில் பட்டியற்படுத்தப்பட்ட 286 பொதுக் கம்பனிகளில் வெறும் 6 கம்பனிகளே முஸ்லிங்களுக்குச் சொந்தமானவை. அமானா முதலீட்டு வங்கி, அமானா தகாபுல், பைரஹா பாம், ஹேமாஸ் போன்றவையே முஸ்லிங்களுக்குச் சொந்தமானவை. 

அதிலும், அமானா வங்கி மற்றும் அமானா தகாபுல் போன்றவற்றை ஏனைய வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இன்னுமே தவழ்ந்து கொண்டிருக்கின்றன. பைரஹா பாம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை சீனாவைச் சேர்ந்த ஒரு கம்பனி வாங்கிவிட்டதாகவும் அறிந்தேன். ஹேமாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் ஷீஆக்களே அதிகம் உள்ளதாகக் கேள்விப்பட்டேன்.(தகவல் உறுதியில்லை). 

மற்ற 280 பொதுக் கம்பனிகளும் முஸ்லிமல்லாத ஏனைய சமூகங்களுக்குச் சொந்தமானவை. இப்படியிருக்க, நாம் தான் வணிக சமூகம் என்று மார் தட்டிக் கொள்ள எமக்கு என்ன அருகதை இருக்கின்றது? முஸ்லிங்களின் வர்த்தக ஆதிக்கத்?? தினை முறியடிக்க வேண்டும் என்று சின்னச் சின்ன கடைகளுக்கு தீ வைப்பது எப்படிப்பட்ட ஒரு பேரநியாயம். ?

சரியாகப் பார்த்தால் முஸ்லிம் சமூகத்தினைப் பார்த்து சிங்கள சமூகம் பரிதாபப் பட வேண்டும். அவர்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து கொடுப்பதற்காக இரவு 12 மணி வரைக்கும் கடைகளைத் திறந்து கொண்டு வியாபாரத்திற்காக ஏங்கிக் கிடக்கின்றார்கள். 

பெருநாள் நாளைக்கு மறுநாளே கடைகளைத் திறக்கின்றார்கள். சிங்களவர்களின் புத்தாண்டு விடுமுறை நாட்களில் வியாபாரம் இல்லை என்பதற்காக ஊழியர்களுக்கு லீவு கொடுத்து ஊழியர்களை சுற்றுலா அனுப்புகின்றார்கள். முஸ்லிம் சமூகத்தில் பெரியளவு அரச ஊழியர்களோ, அரச பதவி நிலை உத்தியோகத்தர்களோ இல்லை. அவற்றை பெற பெரியளவு முயற்சிகள்செய்வதுமில்லை.

 (கிழக்கு மாகாணம் விதிவிலக்கு). பல்கலைக்கழகம் வரை இலவசமாகப் படித்து விட்டு "எமக்கு வேலையையும் தா" என்று ஆர்ப்பாட்டங்கள் செய்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பதும் இல்லை. இலாபமும் வரலாம், நட்டமும் வரலாம் என்ற Risk ஆன நிலையில் கையிலுள்ள சிறு மூலதனத்தினை இட்டு சிறிய வியாபாரங்களை ஆரம்பிக்கின்றார்கள். 

அங்கு விற்பனை செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் சிங்களவர்களுடையது. நகர்ப்புறங்களில் முஸ்லிங்கள் வியாபாரங்களின் கட்டடங்கள் கூட பெரும்பாலானவை சிங்களவர்களுக்குறியது. 

வாடகை அடிப்படையில் அவை பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இப்படியிருக்க, அந்தச் சிறிய கடைக்கும் இரவில் போய் தீமூட்டுவது எப்படிப்பட்ட கேவலமான செயல். 

இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியுதீன் ஆவார். அவருடைய அமைச்சின் கீழ் சுமார் 36 அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச கம்பனிகள் உள்ளன. இனவாத நடவடிக்கைளால் பாதிக்கப்படும் கடைகளுக்கு, ஏற்பட்ட பாதிப்பினை விட அதிகமான நட்டஈட்டினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சட்டத்தினை உருவாக்க அவர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

கடைகளுக்குத் தீமூட்டுவதால் கடைசித் தீமை குறித்த வியாபாரிக்கு அன்றி நாட்டுக்கே என்ற உண்மையை அதன் மூலம் இந்த கேடுகெட்ட இனவாதிகளுக்கு உணர்த்த வேண்டும். 

அல்லாஹ் எமது இருக்கின்ற சொச்ச வியாபாரங்களையும் பாதுகாப்பானாக.

- றஸ்மி - ( Rasmy Galle)
இலங்கை முஸ்லிம் வர்த்தக சமூகம் இதனை செய்யுமா? இலங்கை முஸ்லிம் வர்த்தக சமூகம் இதனை செய்யுமா? Reviewed by Madawala News on 5/23/2017 09:57:00 AM Rating: 5