Ad Space Available here

மோடி வருகிறார் பராக் பராக் பராக்... ( ஒரு சுவாரஸ்ய பார்வை)


- ஸபர் அஹ்மட் -

பாரத பிரதமர் மோடி இன்று இலங்கை வருகிறார்.முழு விமானநிலையமும் அலர்டாக இருக்கிறது..சர்வதேச வெசாக் உற்சவத்தைக் கண்டுகளித்து ,வீதியெங்கும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் தோரணங்கள், இலவச தன்ஸல் சாப்பாடுகளை தரிசித்துவிட்டு செல்லவே மோடி வருகிறார் என்று அரசாங்கம் சூடம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக அலறிக் கொண்டு இருக்கிறது..ஆனால் சிங்கள ஃபேஸ்புக் பக்கங்கள், சில இணையத்தளங்கள், இந்த விஜயத்தில் நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்தக் கூடிய  சில சர்ச்சைக்குரிய ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் கைச்சாத்தாக இருப்பதாக கூறுகின்றன..

பிரதமரான நாளில் இருந்து தனது வாழ்க்கையில் பாதி நாட்களை தரையிலும் மீதியை விமானப் பயணங்களிலும் செலவழித்து இருக்கும் மோடி ,..பயணங்களின் காதலர் என்பதால் இதை திருவிழாவைக் காண வரும் குழந்தையின் உற்சாகம் போல எடுத்துக் கொள்ளலாம்.மற்றபடி பெளத்தம் உட்பட மதங்களை நேசிப்பது, கலாசாரம் , கருவாடு எல்லாம் சும்மா பம்மாத்து.2002 இல் குஜராத் மாநிலத்தில் முதல்வராய் இருந்த போது  முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேறிய படுகொலைகளை அவரும், அவரது பொலிஸ் இலாகாவும், சட்டமும் எந்தளவுக்கு கைகட்டி வாய் பொத்தி நேசித்தன என்பது உலகறிந்த உண்மை..இந்த சம்பவங்களை விளக்கிச் சொல்லத் தேவை இல்லை..எல்லோருக்கும் தெரிந்த கரும்புள்ளி சரித்திரம்..

மோடியை நோக்கி ஆயிரம் விமர்சனங்கள் அணிவகுத்து நின்றாலும் இன்றைய தேதியில் அவர் இல்லாவிட்டால் அவரது பாரதீய ஜனதாக் கட்சிக்கு வேறு நாதியில்லை.ஒரு ட்ரேட் மார்க் அவர்..வியாபாரப் பண்டம் போல...அவரது விலையுயர்ந்த ஆடைகள் எல்லாம் ரொம்பப் பிரபலம்..சரி..இருக்கட்டும்..மோடி ஏன் வருகிறார் ?..கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போலவோ, வேறு ஒரு உள்நோக்கமோ சரியாய் தெரியாது.அந்நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனா தான் பங்கு கொண்ட அத்தனை கூட்டங்களிலும் மோடி ஸ்டைல் ஆடைகளையே அணிந்து காணப்பட்டார்..

ஜனாதிபதியானதற்குப் பிறகு இந்த ஆடைகள் மறைந்து போயின.ஒரு வேளை இந்த ஆடைகள் மோடியினுடைய ஆடைகளாய் இருக்க கூடும்..கல்யாண வீடுகளுக்கு செல்வதற்கு நண்பர்களுக்கு எமது ஆடைகளை கொடுத்து உதவுவது போன்ற மேட்டரோ யார் கண்டார் ?..மோடி போன் பண்ணி ' ஏம்பா ட்ரஸ் எல்லாம் தந்து இரண்டரை வருசம் ஆகுது..எப்ப ரிட்டன் பண்ணுவே? ' என்று கேட்டு இருப்பார்.அந்த ஆடைகளை எல்லாம் மைத்ரி கழுவி,அயர்ன் செய்து மடிப்பு கலையாமல் வைத்து இருப்பார்..மோடி அவைகளை எடுத்துச் செல்ல வரக் கூடும்....
மோடி வருகிறார் பராக் பராக் பராக்... ( ஒரு சுவாரஸ்ய பார்வை) மோடி வருகிறார் பராக் பராக் பராக்...  ( ஒரு சுவாரஸ்ய பார்வை) Reviewed by Madawala News on 5/11/2017 11:55:00 AM Rating: 5