tg travels

தொடர்கிறது அந்த நெருப்பு.... பயத்தைத் தான் செய்திகள் தந்தனவே தவிர இதற்கான தீர்வு என்ன?


இலங்கை முஸ்லிம்களே...
அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ.

வென்னப்புவ பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் (Last Chance) எரிந்து விட்டதென செய்திகளை அறிந்தோம்.

இலங்கை எங்கே செல்கிறது?
எம் சமூகத்தின் நிலை என்னவாகும்?
எமக்கு எதிர்காலம் இருக்குமா?
இப்படியாக பலருக்கும் 'பயத்தைத் தான்' இச்செய்திகள் தந்தனவே தவிர, இதற்கான தீர்வை நாம் சிந்தித்தோமா?

இன்ஷா அள்ளாஹ் இந்த இனவாதத்தை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தேவைப்படுவதெல்லாம்...
அள்ளாஹ்வின் மீதான நம்பிக்கையும்,
சுயநலமற்ற சில நல்ல மனிதர்களும்,
கொஞ்சம் தியாகமும் தான்.

மாறாக, "குனூத் ஓதுங்க மக்களே" என A/C ரூமிலிருந்து வரும் என்ற பயம் கலந்த அறிக்கைகளோ,
தொப்பியோடு போஸ் கொடுத்து நடத்தும் இஸ்லாமிய! ஹலால்! தன்சல்களோ,
'மனதை வெல்கிறோம்' என அவித்துக்கொடுக்கும் வட்டிலாப்ப சட்டிகளோ இதற்கு தீர்வாவதில்லை.

இன்னும் சிலர், "அங்க அப்படி நடந்துச்சாமே, இங்க இப்படி நடந்துச்சாமே" என பிரச்சனைகளை மட்டுமே பேசுவர். அதனால் அந்த வட்ட மேசை மீதுள்ள போத்தல் தண்ணீரைத் தான் குடித்துத் தீர்க்கலாமே தவிர இந்த பிரச்சனைகளை ஒருபோதும் தீராது.

இதற்கு நீண்டகால திட்டம், அவசரகால திட்டம் என இரண்டு வகைகளில் திட்டமிட வேண்டும்.

இந்த நீண்டகால திட்டம் பற்றி நாம் வேறொரு பதிவில் பேசலாம் இன் ஷா அள்ளாஹ். இப்போது அவசரகால திட்டங்களை ஆராய்வோம்.
_____________

முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு நாசம் விளைவிப்பது தான் இன்று இனவாதிகள் கையாளும் முக்கியமான சதிவேலை.

பாணந்துறை - நோலிமிட்
பெபிலியான - பெஷன்பக்
அளுத்கமை - மல்லிகாஸ்
வென்னப்புவ - லாஸ்ட் சான்ஸ்
என தொடர்கிறது அந்த நெருப்பு.

'இதற்கு மின் ஒழுக்கே காரணம்' என்ற செய்தி மறுநாள் காலையில் வரும்....
யாரும் கைதாகுவதில்லை...
விசாரணை என்ற பெயரில் ஏதோ நடக்கும்...
சில நாட்களில் இன்னொரு கட்டடம் எரியும்...
அது தலைப்புச் செய்தியாக வரும்...
பின்னையவை பின் கதவால் சென்று மறைந்துவிடும்...
இது தானே இன்று நடக்கிறது?
நாட்டில் வரும் மின்னொழுக்குகளெல்லாம் முஸ்லிம் நிறுவனங்களில் மட்டும் தான் ஏற்படுகின்றனவோ என்னவோ!!!

சரி விஷயத்துக்கு வரலாம்...

01: எந்தவொரு கட்டடமும் ஒருசில நிமிடங்களில் எரிந்துவிடுவதில்லை. பல மணி நேரங்கள் எடுப்பதால் அதற்குள் தீயை அணைத்துவிடும் அனைத்து வாய்ப்புகளும் நம்மால் சாத்தியமே. எனவே ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களிலும் தமக்கென தனியாக தீயணைப்புக் கருவிகளை வாங்கி வைத்தலும், சில இளைஞர்களை உசார் நிலையில் வைத்திருப்பதும் அவசியம். இதை அங்குள்ள வர்த்தக சங்கமோ, அல்லது இஸ்லாமிய இயக்கங்களோ முன்னின்று நடத்தலாம்.

02: கடைகளும், வீடுகளும் தமக்கென மட்டும் தனியாக CCTV கேமராக்களை பொருத்தும் அதேவேளை, கூட்டாக இணைந்து ஒவ்வொரு தெருவின் முக்கிய இடங்களில், பொருத்தமான கட்டடங்களில் அவற்றை பொருத்துவது பலமான பாதுகாப்பாகும். அசம்பாவிதங்கள் நிகழுமிடத்து அந்த ஏரியாவில் நடமாடியோரை அவதானிக்க இது வழியமைக்கும்.

03: இன்னும் சில நாட்களில் ரமழான் வருகிறது. இரவுநேர நடமாட்டங்கள் ஆபத்து மிகுந்தவை. எனவே, இரவுத் தொழுகைகளை (விசேடமாக பெண்களுக்கு) நேரகாலத்தோடு முடித்துக்கொள்வது பற்றியும்,
ஊரிலுள்ள ஆண்கள் அனைவரும் ஒரே பள்ளிவாசலில் இரவுத் தொழுகைக்கென நீண்டநேரம் தரித்து நிற்கும் நிலையை உருவாக்காதிருப்பது பற்றியும்,
வீதிகளில் சுற்றித் திரியும் இளைஞர்கள் பற்றியும் ஒவ்வொரு ஊர் பள்ளிவாசல் நிர்வாகங்களும் கவனமெடுப்பதன் மூலம், பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கலாம். இன் ஷா அள்ளாஹ்.

இப்பதிவில் நாம் எடுக்க வேண்டிய அவசரகால திட்டங்கள் பற்றி பார்த்தோம்.
இன் ஷா அள்ளாஹ் எமது நீண்டகால திட்டங்கள் பற்றி இன்னுமொரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஆக்கம்:- இன்ஷாப், மடவளை பஸார்.
18/05/2017
தொடர்கிறது அந்த நெருப்பு.... பயத்தைத் தான் செய்திகள் தந்தனவே தவிர இதற்கான தீர்வு என்ன? தொடர்கிறது அந்த நெருப்பு....  பயத்தைத் தான் செய்திகள் தந்தனவே தவிர இதற்கான தீர்வு என்ன? Reviewed by Madawala News on 5/18/2017 09:40:00 PM Rating: 5