Ad Space Available here

PMGG ஆனது NFGG ஆகிப்போன கதை !
PMGG இன் நிதானித்த நகர்வுகளும் வெற்றியும்
இலங்கையில் சிறுபான்மையினரின் அரசியல் கவலைக்கிடமாகப் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் ஆரோக்கியமான அரசியல் எண்ணக்கருக்களைத் தன்னகத்தே சுமந்தவாறு, இஸ்லாம் என்றோ முஸ்லிம் என்றோ தங்களை இனத்துவ அடையாளங்களோடு அறிமுகம் செய்யாது, தங்களால் முடியுமான வரைக்கும் இஸ்லாமியக் கோட்பாட்டு வரம்புகளுக்குட்பட்டு கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தைத் தளமாகக் கொண்டு உதித்த ஒரு அரசியல் இயக்கம் என்றே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை நான் அறிந்துகொண்டேன். இலங்கை அரசியலில் 'நல்லாட்சி' என்ற பதத்தைக்  கொண்டு ஆரம்பித்த முதலாவது அமைப்பு இதுதான் என்பதும் அதனையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்துடனும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தவர்கள் நல்லாட்சி இயக்கத்தின் சகோதரர்களே என்பது எனதறிவிற்குட்பட்ட அளவில் நான் அறிந்துகொண்ட விடயங்களாகும்.
 
சகோதரர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுடன் சகோதரர் பிர்தௌஸ் நளீமி உட்பட இன்னும் சில அவர்களது சகாக்களுமே இந்த இயக்கத்தின் இதயபூர்வமான உறுப்பினர்கள். இவர்களனைவரும் சேர்ந்து சிறுகச் சிறுக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை சிறப்புற வழிநடாத்திச் சென்றனர். இதன் விளைவாக காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிட்டு அதன் எதிர்க்கட்சித் தலைமையை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தன்வசப்படுத்திக்கொண்டமை அவ்வியக்கத்தின் முதலாவது அரசியல் அடைவாகும். சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வின் கோட்டை என வெளிப்பிரதேச மக்களால் அடையாளங்காணப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வின் அரசியலில் மாபெரும் சிம்மசொப்பணமாகத் திகழத்துவங்கியது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் போக்கும் அரசியல் அணுகுமுறையும் ஆரம்பத்தில் சிந்தனாவிசாலம் கொண்டோரால் பெரிதும் வரவேற்கப்பட்டதுடன் காலப்போக்கில் காத்தான்குடிப் பிரதேசவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறத்தொடங்கியது.
 
கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் போட்டியிட்ட போதிலும் அதில் வெற்றிபெற முடியவில்லை. இருப்பினும் பரம்பரை அரசியல்வாதிகளுக்கு இது மாபெரும் சவாலாகவே மாறியது. இதுவும் இவ்வியக்கத்தின் எதிர்கால வெற்றிக்கான சாதகமான சமிக்ஞையாகவே தென்பட்டது. ஏனெனில் அத்தேர்தலில் போட்டியிட்ட சகோதரர் அப்துர் ரஹ்மான் கனிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார். இவையனைத்தையும் தாண்டி மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வூட்டுவதற்காக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தம்மை அர்ப்பணித்து செயற்பட்டது. அத்தோடு தமது சக்திக்குட்பட்டு தமது சொந்தச் செலவில் பல்வேறு சமூக நல மற்றும் அபிவிருத்தித் திட்டங்களையும் முடியுமானவரை ஆங்காங்கே செய்துவந்தது.
 
PMGG கூட்டணி
இப்படியாக தமக்கான இலக்கில், தமக்கான பாதையில் நிதானித்து பயணித்துக்கொண்டிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது கடந்த வடமாகாண சபைத் தேர்தல் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ தமது தனித்துவத்தில் நெகிழத்தொடங்கியது. அந்த நெகிழ்ச்சி இன்று வரை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது இலக்கினை அடைவதை தூரமாக்கிக் கொண்டே இருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது.
 
அதாவது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது சகோதரர் சிராஜ் மசூர் மற்றும் சகோதரர் நஜா முஹம்மது ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்புக்களோடு கூட்டணி வைத்துக்கொண்டது. இவ்விரு சகோதரர்களும் தமது அமைப்புக்கள் என புதிதாக சிலவற்றை அடையாளப்படுத்திக்கொண்டாலும் இவர்களிருவரும் முறையே ஜமாத்துஸ் ஸலாமா மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஆகிய இஸ்லாமிய இயக்கங்களின் அரசியல் பிரதிநிதிகளேயாவர். இவ்விரு இயக்கங்களும் காலாகாலமாக அரசியல் ஆசைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தன. அதிலும் ஜமாத்தே இஸ்லாமியானது முதன் முதலாக கிண்ணியா பகுதியில் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஓர் உறுப்பினரைப் பெற்றிருந்தது. அத்தேர்தலில் ஆரம்ப கட்டத்திலேயே பல்வேறு விமர்சனங்கள் ஜமாத்தே இஸ்லாமி மீது வந்து குவிந்திருந்தன. அதாவது கிண்ணியாவிலுள்ள இஸ்லாமிய வங்கிச் சேவை நிறுவனம் மக்களது பணத்தை ஜமாத்தே இஸ்லாமியின் அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தியதென்றும் ஜமாத்தே இஸ்லாமி சகோதரர்கள் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளைச் செவ்வனே நிறைவேற்றவில்லையென்றும் மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர்.
 
இத்தகைய நிலையில் அரசியல் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் இருந்த மேற்படி இஸ்லாமிய இயக்கங்கள் தமது இயக்கத்தின் பேரிலேயே நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமலிருந்தன. இதற்கு அவர்கள் நாட்டில் கிளம்பியிருந்த இனவாதச் செயற்பாடுகளைக் காரணம் காட்டினாலும் அது அத்துணையளவு யதார்த்தமானது அல்ல. ஏனெனில் ஜமாத்தே இஸ்லாமி கிண்ணியாவில் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட போது தனது இயக்கத்தின் சார்பாக நேரடியாகவே களமிறங்கியது. எனவே தமது இயக்கங்களில் மக்கள் நம்பிக்கையிழந்திருந்தமையே வேறு ஒரு அமைப்பின் பேரில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் அரசியல் கூட்டணியை அமைத்துக்கொள்ளக் காரணமாகும்.
 
ஆனால் இந்நிலைமையை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சகோதரர்கள் அறியாமலிக்க வாய்ப்பிருக்க முடியாது. இருப்பினும் அவர்கள் இஸ்லாமிய இயக்கங்களைத் தம்மோடு இணைத்து தமது அரசியல் பயணத்தை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். இதில் வடமாகாண சபைத் தேர்தலில் இக்கூட்டணி தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து தேர்தல் பணி மேற்கொண்டதன் விளைவாக ஒரு ஆசனத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இவர்களுக்கு வழங்கியிருந்தது. அதில் சகோதரர் அய்யூப் அஸ்மின் உறுப்பினராவார். இதுவரையும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் அவ்வளவாக அரசியல் தொடர்போ கொள்கைத் தொடர்போ இல்லாத இவர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கக் கூட்டணி சார்பாக மாகாண சபை சென்றார். இவ்வாறு சந்தர்ப்பத்திற்கு கூட்டம் சேர்ந்தமையே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் இலக்கின் தூய்மையை ஓரளவு வலுவிழக்கச் செய்யத் தொடங்கிவிட்டது.
 
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாக மாறிப்போனது. இலக்கினை அடைவதற்கான அணுகுமுறையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தடம்புரளத் தொடங்கிய இடம் இக்கூட்;டணியும் அதன் தேசிய ரீதியிலான அகலக் கால்வைத்த அரசியல் செயற்பாடுகளுமேயாகும்.
 
சரி சமமற்றவர்களுக்கிடையிலான கூட்டும் அகலக் கால் வைப்பும்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் இணைந்துகொண்ட மேற்படி இரு சகோதரர்களும் ஏற்கெனவே தீவிரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்களோ சுயாதீனமாக இயங்கிக்கொண்டிருந்தவர்களோ அல்லர். இவர்களிருவரும் தாம் அங்கத்துவம் வகிக்கின்ற இஸ்லாமிய இயக்கங்களால் நெடுங்கயிற்றில் விடப்பட்டவர்கள். எத்தனையோ வருடங்களாக சமூகத் தளத்தில் பணிபுரிந்தும் கூட மக்கள் மத்தியில் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளும்படியான அரசியல் தலைமைத்துவமாகத் தம்மை அடையாளங்காட்ட முடியாமல், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கதில் வந்து தஞ்சம் புகுந்தவர்கள். தீட்சன்யமான அரசியல் கொள்கையோ அனுபவமோ அற்றவர்களாக இருந்த இவர்கள் சீரிய அரசியல் இலட்சியத்தோடு பயணித்துக்கொண்டிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் இணைந்துகொண்டார்கள். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எனப் பெயரை மாற்றிக்கொண்டு ஆளுக்கொரு பொறுப்பையும் பெற்றுக்கொண்டார்கள். தேசிய ரீதியில் ஓடத்துவங்கினார்கள். இதனால் விளைந்தது யாது??? ஓட்டத்திற்கான பரப்பு அதிகரித்ததே தவிர இலக்கிற்கான எல்லை இன்னுமின்னும் தூரமாகிக்கொண்டுதானிருக்கிறது என்பதை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் இன்னும் உணரவில்லையென்றுதான் தோன்றுகிறது.
 
ஓர் உண்மையான இலட்சியத்திற்கான விதிமுறை பிழைத்தல்
ஓர் உண்மையான இலட்சியத்திற்காய் பயணிக்கும் உறுப்பினர்கள் யாவரும் ஒரே பாசறையில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் தலைவரின் நேரடி வழிகாட்டலையும் பெறும் சந்தர்ப்பங்களையும் கொண்டிருத்தல் இன்றியமையாததாகும். ஆனால் இந்த விடயமானது இக் கூட்டணியில் சாத்தியமற்ற ஒன்றாக மாறியிருக்கிறது. எடுத்துக்காட்டாக வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் அரசியல் அணுகுமுறை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சாயலிலிருந்து வேறுபடுகின்றது. அது மாத்திரமன்றி தற்போது ஜமாத்துஸ் ஸலாமா மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஆகிய இயக்கங்களின் பிராந்திய உறுப்பினர்கள் தாமும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்களே என தம்மை அடையாளப்படுத்தி இயங்கி வருகிறார்கள். அவர்களைக் கூர்ந்து அவதானிக்கும் போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் முதிர்ச்சி எங்கே... இவர்களெங்கே... என அறுவறுக்க வைக்கிறது.
 
கூட்டணியின் விளைவுகள்
குறிப்பிட்ட அவ்விரு இஸ்லாமிய இயக்கங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தையும் வந்து ஒட்டிக்கொணடது தவிர இந்தக் கூட்டணியால் விளைந்த பயன் எதுவுமில்லை. இத்தகைய கூட்டணி ஏதோ சமூகத்தொண்டுகளை பன்முகப்படுத்த வேண்டுமானால் உதவலாம். ஆனால் அரசியல் விஸ்தீரணத்திற்கு ஒரு போதும் வழிவகுக்கப்போவதில்லை. ஏனெனில் மக்களின் அரசியல் எண்ணக்கருக்களை மாற்றுமளவிற்கோ மக்கள் அவர்களை நம்பும் அளவிற்கோ இலங்கையில் எந்த இஸ்லாமிய இயக்கமும் மகத்தான பணியாற்றவில்லை.  
 
இதனால் இன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது சுயத்தை இழந்து யார் வேண்டுமானாலும் சரி என்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதே எனது அவதானம். கொள்கை இலட்சியத்திற்கான ஓர் அழகான பயணம் இன்று தனித்துவமிழந்து கூட்டம் சேர்க்கும் பயணமாக மாறிப்போனது வேதனைக்குரிய விடயமேயாகும்.
 
சிறுகச் சிறுகத் தனித்துவமாக இயங்கி வந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது பாராளுமன்ற அடைவினை எட்டும் வரைக்குமாவது தேசிய ரீதியிலான அகலக் கால் வைப்பைத் தவிர்ந்துகொண்டிருக்கலாம். ஏனெனில் பாராளுமன்ற அடைவிற்கு அது கிஞ்சிற்றும் அவசியமுமில்லை. தனது ஓட்ட எல்லை சிறிதாயிருக்கும் போது வெற்றி இலக்கும் கண்ணுக்குப் புலப்படுமொன்றாகவே இருக்கும். ஆனால் தற்போது அது தூரமாகியுள்ளதோடு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கொள்கை அடர்த்தியும் குறைந்து போயுள்ளது.
 
எனவே நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சகோதரர்கள் இவ்விடயங்களை மீள்பரிசீலனை செய்து தமது தனித்துவத்தை மீண்டும் மீட்க வேண்டும். தமது இலட்சியத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் அதை மலினப்படுத்தாமல் பாதுகாக்கவும் வேண்டும். தம்மை அடையாளப்படுத்துவோர் யாவரும் தமது பாசறையில் வளர்த்து வார்க்கப்பட்டோராயிருக்க வழி செய்யவேண்டும். இதுவே உண்மை இலட்சியத்திற்கான அடையாளம்.
 
ரா.ப.அரூஸ்
15.05.2017
PMGG ஆனது NFGG ஆகிப்போன கதை ! PMGG ஆனது NFGG ஆகிப்போன கதை ! Reviewed by Madawala News on 5/15/2017 11:43:00 PM Rating: 5