Kidny

Kidny

புனித ரமழானுக்கு முன்னர் உள்ளூர் மற்றும் மாவட்ட ஷூரா சபைகள் அமைவது அவசியம்..!


-ஷெய்க் மஸித்தீன் இனாமுல்லாஹ்-

ஒவ்வொரு முஸ்லிம் ஊரிலும் அவ்வப்பிரதேசங்களில் உள்ள பள்ளிவாயல் நிர்வாகத்தினர் உலமாக்கள், புத்திஜீவிகள், வர்த்தகசமூகத்தினர், அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள், இஸ்லாமிய இயக்கங்களின் தரீக்காக்களின் பிரதிநிதிக,ள், பாடசாலை சமூகத்தினர் என சகல தரப்புக்களையும் கொண்ட ஷூரா சபைகளை அவசரமும் அவசியமுமாக (அடுத்த ஜும்மாவிற்கு முன்னர்) தோற்றுவித்துக் கொள்ளல் வேண்டும். குறைந்த பட்ச்சம் புனித ரமழானுக்கு முன்னர் உள்ளூர் மற்றும் மாவட்ட ஷூரா சபைகள் அமைவது அவசியம்..!


தேசிய அளவில் இல்லாமைகள் இயலாமைகள் போதாமைகளுக்கு மத்தியிலும் இயன்றவற்றை இயன்றவரை செய்யும் அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகளுடன் முறையான தொடர்புகளைப் பேணி அழுத்தமும் ஆதரவும் கொடுக்கின்ற அடிமட்ட தலைமைத்துவக் கட்டமைப்புக்கள் காலத்தின் தேவையாகும்.


பிரச்சினைகள் ஏற்படும்பொழுது சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தும் காவல் துறையினரை, சட்ட மற்றும் நீதித் துறையினரை அணுகுதல், பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் முஸ்லிம் அல்லாத அரசியல் தலைமைகளை அணுகுதல் போன்ற இன்னோரன்ன விவகாரங்களை நிதானமாக கலந்தாலோசித்து உகந்த நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்தல் அவசியமானதாகும்.


குறிப்பாக சட்டம் ஒழுங்கு நீதித்துறை என்று வரும்பொழுது சட்டத்தரணிகளின் சேவைகளை பெற்றுக்கொள்தல் அதேபோன்று இன்னோரன்ன நடவடிக்கைகளுக்கான செலவினங்களை எதிர்கொள்வதற்கான நிதியம் ஒன்றும் ஏற்படுத்திக் கொல்லப் படல் வேண்டும்.


வேற்றுமைகளுக்கு மத்தியிலும் சமூகத்தின் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் விடயத்திலும் தேசிய ஒருமைப்பாட்டிலும் சமாதான
சகவாழ்விலும் எமது கூட்டுப் பொறுப்பை உணர்ந்து நாம் அனைவரும் கடமை உணர்வுடன் செயற்படல் வேண்டும்.


வெளிநாடுகளில் வசிப்போர்,புலம் பெயர் சமூகத்தினர் சகலரும் தத்தமது பிரதேசங்களிலும் தேசிய அளவிலும் மேற்கொள்ளப் படுகின்ற முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்குதல் வேண்டும். உள்நாட்டு சிவில் சன்மார்க்க அரசியல் தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே அவர்கள் தமது செயற்பாடுகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் இது புதிய ஒரு தலைமைத்துவ கட்டமைப்பு  அல்ல, மாறாக மஸ்ஜித்களை மையமாகக் கொண்ட சமூக கூட்டு வாழ்வை , கூட்டுக் கடமைகளை , மிம்பர் எனும் வழிகாட்டும் அரியாசனத்தை, வார வார வெள்ளி பிரசங்கங்களை , ஷூரா முறையினை , இமாம், மாமூம், அமீர், மாமூர் கட்டுக் கோப்புகளை இஸ்லாம் அல்குரான் .அல்-ஸுன்னா   மூலம் மிகத்தெளிவாக அடையாள படுத்தியுள்ளது. அவற்றை அடிப்படியாக கொண்டு வாழ்ந்த நபித் தோழர்கள், முன்னோர்கள் என ஒரு அழகிய வரலாற்றுப் பாரம் பரியமும் எமக்கு இருக்கிறது.


இந்த நாட்டின் பிரஜைகள் நாம் எத்தகைய தீய சக்திக்கும் அஞ்சி வாழ வேண்டிய அவசியம் கிடையாது, அடுத்த சமூகங்களுடன் எப்பொழுதும் போல புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதோடு குறித்த பிரச்சினையில் அக்கம் பாக்கத்திலுள்ள அடுத்த மதத் தலைவர்கள் சிவில் அமைப்புகளையும் கலந்து பேசி தீய சக்திகளை ஒழித்துக் கட்ட அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் மிகவும் சமயோசிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


பெரும்பான்மை சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான நல்ல சக்திகள், முற்போக்கு அரசியல் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து தேசிய விவகாரமாகவே இந்த விவகாரங்களை நாம் சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் கையாள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம் என்பதனை எல்லா மட்டங்களிலும் நாம் உணர்ந்து செயற்படல் அவசியமாகும்.

புனித ரமழானுக்கு முன்னர் உள்ளூர் மற்றும் மாவட்ட ஷூரா சபைகள் அமைவது அவசியம்..! புனித ரமழானுக்கு முன்னர் உள்ளூர் மற்றும் மாவட்ட ஷூரா சபைகள் அமைவது அவசியம்..! Reviewed by Madawala News on 5/23/2017 08:54:00 AM Rating: 5