Ad Space Available here

வியட்நாம் போர்: அவமானத்தால் துடித்த அமெரிக்கா.


- Muja ashraff  -
தென் வியத்நாமின் பொம்மை ஆட்சியைக் காப்பாற்ற 1965-இல் அமெரிக்க இராணுவம் வியத்நாமில் இறங்கியது. இரண்டே ஆண்டுகளுக்குள் வியத்நாமில் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை 5 லட்சமாகியது. வியத்நாம், லாவோஸ், கம்போடியா ஆகியநாடுகளில் அமெரிக்க இராணுவம் நடத்திய அட்டூழியங்கள் உலகறிந்தவை.

இரண்டாம் உலகப் போரில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளின் அளவைக் காட்டிலும் அதிகமான குண்டுகள் வியத்நாம் மீது மட்டும் போடப்பட்டன. நாபாம் தீக்குண்டுகள், குகைகளில் புகுந்து தாக்கும் ராக்கெட்டுகள், இரசாயன ஆயுதங்கள், விவசாயத்தை அழிக்கும் பயிர்க்கொல்லி மருந்துகள். என அணுகுண்டு ஒன்றைத் தவிர அனைத்தும் இந்நாட்டு மக்கள் மீது வீசப்பட்டன. சாவு எண்ணிக்கைக்குக் கணக்கில்லை. சுமார் பத்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கியது. அமெரிக்க மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட கட்டாய இராணுவச் சேவை அமெரிக்காவெங்கும் அதிருப்தியையும் வெறுப்பையும் தோற்றுவித்தது. 1950-களில் செல்வாக்கு பெறத்தொடங்கிய கருப்பின சிவில் உரிமை இயக்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டதும், கருப்பின மக்கள் வியத்நாமில் காவு கொடுக்கப்படுவதும் அவர்களிடையே பெரும் எதிர்ப்பு அலையைத் தோற்றுவித்தது.

வியத்நாம் ஆக்கிரமிப்பு மட்டுமின்றி தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளில் சி.ஐ.ஏ. நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புகள், அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகாரிகள் நடத்திய கொலைகள், தென் ஆப்பிரிக்க நிறவெறிக்கு எதிரான ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் போராட்டம், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் எழுச்சி, தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுக்கும் இசுரேலின் யூதவெறி அரசுக்கும் அமெரிக்கா அளித்துவந்த ஆதரவு இவையனைத்தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கும் அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சிகளைத் தோற்றுவித்தன.

அனைத்துக்கும் மேலாக, வியத்நாமிய மக்களின் உறுதியும், கம்யூனிஸ்டுகளின் வீரம் செறிந்த போராட்டமும் அமெரிக்க இராணுவத்தின் தார்மீக பலத்தைக் குலைத்தன. இன்னும் எத்தனை ஆண்டுகள் போரிட்டாலும் வெற்றி பெற முடியாத இந்தப் போரிலிருந்து பின்வாங்குவதைத் தவிர அமெரிக்க அரசுக்கு வேறு வழியின்றிப் போனது.

அடுத்து அமெரிக்க மக்களின் போர் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் அரசை அச்சுறுத்தின. இதற்குமுன் அமெரிக்கா இழைத்த அநீதிகள் – ஆக்கிரமிப்புகளின் போதெல்லாம் உள்நாட்டில் இத்தகைய பெரும் எதிர்ப்பை அமெரிக்க ஆளும் வர்க்கம் சந்தித்ததில்லை. இதுவரை வெளிநாட்டு மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டிருந்த துப்பாக்கி இப்போது உள்நாட்டு மக்களுக்கு எதிராகவும் திருப்பப்பட்டதால் அமெரிக்க அரசின் ஜனநாயக வேடம் கலைந்து கொண்டிருந்தது. மாபெரும் அமெரிக்க வல்லரசு அவமானப்பட்டு, தோற்று, தலைகுனிந்து 1975-இல் வியத்நாமிலிருந்து தப்பியோடி வந்தது.

தென்கிழக்காசியாவில் அடிவாங்கிய அமெரிக்காவை மீண்டும் செருப்பாலடித்தது ஈரானின் புரட்சி. அமெரிக்கக் கைக்கூலியான ஷாவின் அரசு 1979-இல் தூக்கியெறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கொமெய்னியின் அரசு கம்யூனிஸ்டுகளையும், மதச்சார்பற்றவர்களையும் வேட்டையாடிக் கொலை செய்தது அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஈரான் அரசு அமெரிக்க எதிர்ப்பாளராகவே இருந்தது.

ஷாவிற்கு அடைக்கலம் கொடுத்ததுடன் ஈரானின் சொத்துக்ளை முடக்கியது அமெரிக்கா. டெஹ்ரானின் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அனைவரையும் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்தது ஈரான். அவர்களை மீட்பதற்கு அதிபர் கார்ட்டரின் அரசு செய்த முயற்சிகள் தோற்றன. வேறு வழியின்றி ஈரான் அரசுடன் சமரசம் செய்து கொண்டு பணயக் கைதிகளை மீட்டது அமெரிக்க அரசு.

அமெரிக்காவின் காலடியிலேயே உள்ள சின்னஞ்சிறிய மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவில் அமெரிக்கக் கைக்கூலி சர்வாதிகாரியான சொமோசாவின் அரசைத் துக்கியெறிந்தனர் சாண்டினிஸ்டாக்கள்.

பொருளாதாரத் தேக்கம், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானிய நாடுகளின் வர்த்தகப் போட்டியைச் சமாளிக்கவியலாத நிலை, இராணுவச் செலவினங்களின் அதிகரிப்பு போன்றவற்றுடன் தொடர்ந்த தோல்விகளால் அமெரிக்க தேசியப் பெருமிதத்திற்கு ஏற்பட்ட அவமானம் ஆகியவற்றுடன் 70-களின் முடிவை எதிர்கொண்டது அமெரிக்க ஆளும் வர்க்கம்.
வியட்நாம் போர்: அவமானத்தால் துடித்த அமெரிக்கா. வியட்நாம்  போர்: அவமானத்தால் துடித்த அமெரிக்கா. Reviewed by Madawala News on 5/11/2017 12:47:00 PM Rating: 5