tg travels

பேஸ்புக்கில் மத நிந்தனை கருத்து வெளியிட்ட ரஸா (30) என்பவருக்கு மரண தண்டனை. பாகிஸ்தானில் முதன் முதலாக ஒரு தீர்ப்பு.


பாகிஸ்தானில் முதன் முதலாக, சமூக வலைத்தளத்தில் மத நிந்தனை கருத்துகளை வெளியிட்டவருக்கு மரண தண்டனை விதித்து, பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

பாகிஸ்தான் 97 சதவீதம் முஸ்லிம் மக்களை கொண்டுள்ள நாடு ஆகும். அங்கு மத விரோத கருத்துகளை யாரேனும் வெளியிட்டால் அது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அங்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

மத நிந்தனை குற்றங்களில் ஈடுபடுவோர், அங்கு கடந்த காலத்தில் கொலையும் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் அங்கு கைபர் பக்துங்வா மாகாணம், மார்தானில் உள்ள அப்துல் வாலிகான் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து வந்த மாணவர் மாஷல் கான் என்பவர் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் மத நிந்தனை செய்யும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதையொட்டி ஒரு கும்பல் அவரை அடித்துக்கொன்றது. அவரது சக மாணவரான அப்துல்லா படுகாயங்களுடன் போலீசாரால் உயிருடன் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பஞ்சாப் மாகாணம், பகவல்பூர் மாவட்டம், ஒக்காரா பகுதியில் வசித்துவரும் ஷியா பிரிவை சேர்ந்த தைமூர் ரஸா (வயது 30) என்பவர் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தில் சன்னி பிரிவினரை பற்றியும், நபிகள் நாயகத்தைப் பற்றியும் அவதூறான கருத்துகளை வெளியிட்டு மத நிந்தனை குற்றம் செய்ததாக புகார்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அவர் மீது மத நிந்தனை குற்றச்சாட்டு, மத அடிப்படையிலான வெறுப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பான குற்றச்சாட்டு ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரிவுகளின்படி முல்தான் நகர பயங்கரவாத தடுப்பு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை பகவல்பூர் மாவட்ட பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நீதிபதி ஷபீர் அகமது விசாரித்து வந்தார். விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி ஷபீர் அகமது நேற்று முன்தினம் தனது தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பில், தைமூர் ராஸா மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக்கூறி, அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஷபீர் அகமது உத்தரவிட்டார்.

பாகிஸ்தானில் சமூக வலைத்தளம் ஒன்றில் மத நிந்தனை கருத்துகளை வெளியிட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களில் மத நிந்தனை கருத்துகள் தொடர்ந்து வெளியிடப்பட்டால், அந்த வலைத்தளங்கள் முடக்கப்படும் என்று உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் மத நிந்தனை கருத்து வெளியிட்ட ரஸா (30) என்பவருக்கு மரண தண்டனை. பாகிஸ்தானில் முதன் முதலாக ஒரு தீர்ப்பு. பேஸ்புக்கில் மத நிந்தனை கருத்து வெளியிட்ட ரஸா (30) என்பவருக்கு மரண தண்டனை. பாகிஸ்தானில் முதன் முதலாக ஒரு தீர்ப்பு. Reviewed by Madawala News on 6/12/2017 04:57:00 AM Rating: 5