Yahya

புனித ரமழானில் சாதகமான முன்னெடுப்புகளை மேற்கொண்ட பதுளை சிவில் சமூக அமைப்புகள்.


தொகுப்பு :- ஏ எம் எம் முஸம்மில் – பதுளை  

“ ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதகுல மேம்பாட்டிற்கான புனித அல் குர் ஆன் இறக்கப்பட்டது ” என்று அல்லாஹ் ரமழானைபற்றி சான்று பகர்கின்றான். இஸ்லாத்தின் அதிகமான போதனைகள் சமூக சேவையின் முக்கியத்துவததையே சுட்டி நிற்கின்றது.

அதாவது மனித குல மேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஒவ்வொரு தனிமனிதனும் தனித்தும் கூட்டாகவும் செயற்படுவதன் முக்கியத்துவம் இஸ்லாமிய போதனைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் படும் விடயமாகும். அல்லாஹ் தம்மை வணங்கும் மிகப் பிரதான வணக்கங்களில் ஒன்றாக ஏழை வரி சக்காத்து தொடக்கம்,  வணக்கவழிபாடுகளில் விடப்படும் தவறுகளுக்கு பிராயச்சித்தமாக ஏழைகளுக்கு உணவளிக்கும் படி ஏவப்பட்டிருப்பது மற்றும் , நோன்பாளிக்கு உணவளித்து நோன்பு திறக்க வைப்பதன் மகிமையை மறுமையில் தன்னை காணும் போது ஏற்படும் பரவசத்தோடு ஒப்பிட்டு தொடர்பு படுத்தி சிலாகித்து சொல்வதும், இரு பெருநாட்களின்  சந்தோசத்தை தன்னுடன் இணைந்துவாழும் சகோதரனுடனும் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தும் சகாத்துள் பித்ரா மற்றும் குர்பான் போன்ற வழிபாடுகள் வரை சக சகோதரனுக்கு உதவும் முறைகளையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்லப் படுகின்றதை நாம் ஆழ்ந்து நோக்கும் போது அறிய முடிகின்றது.

         இந்த வகையில் பதுளையில்  இயங்கும் பல சிவில் சமூக அமைப்புகளால் பல சாதகமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு கடந்த ரமழான் மாதத்தை கண்ணியமாக வழியனுப்பி வைக்கப் பட்டுள்ளது..


பதுளை பைதுஸ் சகாத் அமைப்பின் மூலம் நடத்தப் பட்ட இப்தார் நிகழ்வு


       
  பதுளை பைதுஸ் சகாத் நிறுவனம் கடந்த 20014 ம் ஆண்டு பதுளை நஜீம்ஸ் உரிமையாளர் அல் ஹாஜ் கே எம் நஜீம் , பதுளை ஆர் எல் ஜி பெஷன் உரிமையாளர் அல் ஹாஜ் ஏ ஏ ஜுனைதீன் மற்றும் பதுளை கச்சேரியில் சேவையாற்றிய ஓய்வு நிலை இலிகிதரான ஏ ஜே கலீலுர் ரஹ்மான் ( தற்போது ஹபுகஸ் தலாவ ) ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரின் முயற்சியில் ஆரம்பிக்கப் பட்டதாகும்.

 “கூட்டு சகாத் முறைமை தேவையில்லை தனித்தனியாக சகாத் கொடுப்பதில் தவறில்லை” என்ற கருத்து சமூக மட்டத்தில் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் பல சவால்களுடன் ஆரம்பிக்கப் பட்ட இந்த பைதுஸ் சகாத் அமைப்பின் முதலாவது தலைவராக கே எம் நஜீம் ஹாஜியார் அவர்களும் செயலாளராக ஏ ஜே கலீலுர் ரஹ்மான் அவர்களும் பொருளாளராக அல் ஹாஜ் ஜுனைதீன் அவர்களும் தெரிவுசெய்யப் பட்டு அதன் ஆரம்ப நிதியாக 286000.00 ரூபா நிதியும் சேகரிக்கப் பட்டது.

இவ்வாறு ஆரம்பிக்கப் பட்ட இவ் பைதுஸ் சகாத் இன்று பதுளை ஒக்ஸ்போர்ட் சர்வதேச பாடசாலை பணிப்பாளர் ரிசான் சைன் நலீமியின் தலைமையில்  சுமார் ஐம்பத்தி நான்கு இலட்ச ரூபா நிதியிருப்புடன் பல வாழ்வாதார செயற்திட்டங்களை அமுல் நடத்தி  இயங்கி வருகின்றது. இவர்கள் மூலம் கடந்த ரமழான் ஆரமபத்தில் ஓர் இப்தார் நிகழ்வு ஒழுங்கு செய்யப் பட்டு சகாத் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சகாத் நிதி வசூலிப்பு , சகாத் பகிர்வு சம்பந்தமாக பொது மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. இந்த இப்தார் நிகழ்வு ஓர் முன்னுதாரண செயற்பாடாக இருந்தது குறிப்பிட தக்க விடயமாகும்.


UCMC நலன்புரி நிலைய வாகன அன்குரார்பன நிகழ்வும் , மலையக முஸ்லிம் கவுன்சில் (UCMC) இப்தார் நிகழ்வும் .
மலையக முஸ்லிம் கவுன்சில் கடந்த காலங்களில் பல சமூக அபிவிருத்தி திட்டங்களில் முன்னுதாரணமாக செயற்பாடுகளை முனைப்புடன் செயற்படுத்தி வருகின்றது. பதுளை ப/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் கல்வி ரீதியிலான அடைவுகள் மற்றும் கல்வி அபிவிருத்தி நடவடிக்ககைகளில் பின்புலமாக நின்று பல காத்திரமான பங்களிப்புகளை செய்து  செயற்பட்டு வரும் அதே வேலளை வேறுபல சமூக நல விடயங்களிலும் முக்கிய பங்காற்றி வருகின்றது.

  அந்த வகையில் இவ்வமைப்பின் மூலம் பதுளை மாநகரில் வெளிப் பிரதேசங்களிலிருந்து வரும் நோயாளிகளுக்கான தங்குமிட வசதிகள் செய்துகொடுக்கும் நோக்கில் UCMC நலன்புரி நிலையம் ஒன்று நடத்தப் பட்டுவருகின்றது. சாதி மத இன வேறுபாடுகளுக்கப்பால் மனிதநேய அடிப்படையில்  உதவிகள் மேற்கொள்ளும் இந் நிலையத்தின் மூலம் நோயாளிகள் மற்றும் ஜனாசக்களை கொண்டு செல்லும் வகையிலான வாகனமொன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இவ்வாகனத்தை அன்குரார்பனம் செய்யும் நோக்கில் மத்திய மாகாண உறுப்பினர் அல்ஹாஜ் முத்தலிப் அவர்களின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வும் வாகன அன்குரார்பன நிகழ்வும் கடந்த ரமழானில் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
பதுளை பொதுப் பணி வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக கருதப் படுகின்றது.

பதுளை YMMA  இப்தார் நிகழ்வும், கல்வி அபிவித்தி செயற்திட்ட வாருவாயிற்கான மூலோபாயமாக “ பட்மிண்டன் திடல் ” திறப்புவிழாவும்.


        பதுளை YMMA பன்னெடுங்காலமாக பல சமூக அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு பதுளை மாநகர முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் தடம்பதித்து வருகின்றதொரு அமைப்பாகும். விளையாட்டு துறைக்கு புறம்பாக  பதுளை மாவட்ட மட்ட முஸ்லிம்  பாடசாலைகளுக்கு மத்தியில் கல்விக் கருத்தரங்குகள், புலமை பரிசில் மாதிரி பரீட்சைகள், தொழில் வழிகாட்டல் செயலமர்வுகள் போன்ற பல திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் அமைப்பாக இதன் சமகால  நிர்வாக குழு துடிப்பாக செயற்பட்டு வருகின்றது.

         இவர்களது முஸ்லிம் கல்வி அபிவிருத்திக்கான முயற்சிகளின் மைல்கல்லாக மேற்குறித்த “ பட்மிண்டன் திடல் ” திறப்பு நிகழ்வு அமைந்திருந்தது. அதாவது YMMA வளாகத்தில் தரம்வாயிந்த (STANDART) “ பட்மிண்டன் திடல் ” ஒன்றை அமைத்து அதை வாடகைக்கு விடுவதால் கிடைக்கும் வருவாயை கொண்டு ஏழை முஸ்லிம் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக உதவ திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. பதுளை YMMA யில் ஏற்கனவே அமுலில் இருக்கும் கல்வி அபிவிருத்தி நிதியத்திற்கு இதன் மூலம் கிடைக்கும் வருமானம் வைப்பிலிடப்பட்டு அதனூடாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவ ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
( ஏற்கனவே கலைத்துறையில் கல்வி பயிலும் மூன்று மாணவர்களுக்கான மாதாந்த உதவித் தொகை வழங்கப் பட்டு வரும் அதே வேளை 2016 ம் ஆண்டில் பதுளை மாநகரிலிருந்து வைத்திய துறைக்கு தெரிவான இரண்டு ஏழை மாணவர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் உதவலாம் என்று தாழ்மையுடன் இவ்விடத்தில் சிபாரிசு செய்கின்றேன் ) .  

   இத்திட்டமானது அகில இலங்கை ரீதியில் இயங்கும் ஏனைய YMMA அமைப்புகளுக்கும் ஒரு முன்னுதாரண செயற்திட்டமாக உள்ளதை குறிப்பிட்டுக் கூற வேண்டும்.    

        இந்த பட்மிண்டன் திடலை திறந்து வைக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அழைக்கப் பட்டவர் விசேடமாக குறிப்பிட்டுக் கூற வேண்டியவராவார். பதுளையில் பிறந்து பதுளையில் கல்வி கற்று இன்று தனது இளவயதிலேயே  சத்திர சிகிச்சை வைத்திய  நிபுணராக வைத்திய துறையில் தேசிய ரீதியில் சாதனைகள் புரிந்து வரும் வைத்திய கலாநிதி எம் எம் ஏ ரிப்கான் அவர்களும் பதுளை மண்ணுக்கு பெருமை தேடித்தந்தவராவார். கடந்த 2017 பெப்ரவரி மாதம் காலியில்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  கைகளால் திறந்து வைக்கப் பட்ட “ கூட்டுறவு இருதய சத்திர சிகிச்சை நிலையம் “ இலங்கையின் தரம் வாய்ந்த ஐந்து இருதய சிகிச்சை நிலையங்களில் ஒன்றாக இவரின் சிந்தனையில் உருவான  இருதய சத்திர சிகிச்சை நிலையம் திகழ்கின்றது.

  சுமார்  இருபத்தி ஐந்து இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப் பட்ட குறித்த YMMA பட்மிண்டன் திடலை திறந்து வைத்து உரை நிகழ்த்திய வைத்திய கலாநிதி எம் எம் ஏ ரிப்கான் அவர்கள் இதன் மூலம் வரும் வருமானத்தை ஏழை மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக செலவிடப் பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வைத்திய கலாநிதி எம் எம் ஏ ரிப்கான் அவர்கள் UCMC நலன்புரி நிலையத்திற்கு வருகை தந்ததும், நிதி அன்பளிப்பு செய்தலும். 


YMMA நிகழ்வுகள் முடிவுற்றதும், ,மலையக முஸ்லிம் கவுன்சில் மூலம் நடனடத்தப்படும் UCMC நலன்புரி நிலையத்தை பார்வையிட வருகைதந்த வைத்தியர் ரிப்கான் அவர்கள் குறித்த நலன்புரி நிலையத்தின் சேவைகளை வெகுவாக பாராட்டி தற்கால சமூக சூழலுக்கு ஏற்ற சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான செயற்த்திட்டங்கள் சமூகத் தலைமைகளால் ஊக்குவிக்கப் படவேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டி , இந் நிலையத்தால் செயற்படுத்தப் படும் நோயாளர்கள் மற்றும் ஜனாஸாக்களை கொண்டு செல்லும் வாகனத்திற்காக இரண்டு இலட்ச ரூபா நிதியினை நன்கொடையாக வழங்கி வைத்தார்.  

பதுளை வர்த்தக நலன்புரி சங்க (TWA) உதயமும், இப்தார் நிகழ்வும் .


           பதுளை முஸ்லிம்களை பொறுத்தளவில் பாராளுமன்றத்திலோ மாகாண சபையிலோ முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றை பெறாத அரசியல் ரீதியிலாக பின்தங்கியதொரு சமூகமாகும். அரசியல் ரீதயில் பிரதிநிதித்துவம் பெறாததொரு சமூகம் ஒருவகையில் பாதுகாப்பு இழந்ததோர் சமூகமாகவே கருதப் படவேண்டியுள்ளது. அதேவேளை பேரினவாத தீவிர போக்குடைய சக்திகளின் கெடுபிடிகளுக்கு அடிக்கடி முகங்கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் பதுளை முஸ்லிம் வர்த்தகர்கள்  உள்ளார்கள்.

       ஒரு சமூகத்தின் உயிர்நாடியாக அந்த சமூகத்தின் பொருளாதாரத்தை சுமந்துள்ள வர்த்தக சமூகமே கணிக்கப் படுகின்றது. அந்த வர்த்தக சமூகத்தின் பாதுகாப்பானது மொத்த சமூகத்தினதும் பாதுகாப்பாக கருதவேண்டியுள்ளது. ஆகவே வர்த்தக சமூகத்தின் நலன்புரி விடயங்களில் அவதானம் செலுத்துவது ஒரு சமூகக் கடமையாகும். அந்த வகையில் பதுளை முஸ்லிம் வியாபார சமூகத்தின் நலன் காக்கும் வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்தும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தொரு வாய்ப்பு கடந்த ரமழானில் ஏற்பட்டது.

          குறிப்பாக நாட்டில் பரவலாக நடந்துவரும் அசாதாரண சூழ்நிலைகள் பதுளையிலும் ஏற்பட்டால் அறிவார்ந்த ரீதியில் அவ்வாறான நிலைப்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்வது, என்பது பற்றி கலந்தாலோசித்து சிறப்பானதொரு பொறிமுறையை ஏற்படுத்தும் நோக்கில் மேற்படி வர்த்தக நலன்புரி சங்கம் (TWA) ஒன்று ஏற்படுத்தப் பட்டு அதன் அங்குரார்பன நிகழ்வாக இப்தார் நிகழ்வொன்றும் பதுளை கிரீன் மவுன்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப் பட்டது. பதுளை முஸ்லிம் வர்த்தகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இவ்வமைப்பு இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் எதிர்காலத்தில் பல காத்திரமான செயற்திட்டங்களை  முன்னெடுத்து செயல்படவுள்ளது.


சசெக்ஸ் விளையாட்டு கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப் பட்ட இப்தார் நிகழ்வும். பதுளை தக்கியாக்களுக்கான நிதி வழங்கள் நிகழ்வும்.
  

        பதுளை சசெக்ஸ் விளையாட்டுக் கழகம் பதுளையில் துடிப்புடன் இயங்கும் மற்றுமொரு சமூக சேவை அமைப்பாக அனைவராலும் பாராட்டப் படும் நிறுவனமாகும். ஜனாப் எம் ஹிஷாம் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் இவ்வமைப்பு மலையக முஸ்லிம் கவுன்சிலுடன் இணைந்து பல சமூக நல திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் பல இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தேவையுடையவர் களுக்கான வாழ்வாதார வசதிகள் பெற்று கொடுப்பதில் ஜனாப் ஹிஷாம் அவர்களோடி ணைந்த சசெக்ஸ் விளையாட்டு கழக உறுப்பினர்கள் தொண்டாற்றி வருகின்றனர்.

பதுளை YMMA மண்டபத்தில்  இவர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட இப்தார் நிகழ்வில் பதுளை புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹபுவத்தை தைக்கியாவுக்காக ரூபா ரூ50000.00 வும்,  ஜஜஸ் ஹில் தக்கியாவுக்கு ரூ 50000.00 வும் பதுளுபிடிய முஜாஹித் தக்கியாவுக்கு ரூ30000.00  நிதி வழங்கி வைக்கப் பட்டது.

பதுளை ஒக்ஸ்போர்ட் சர்வதேச பாடசாலையின் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வும் இஸ்லாமிய கொள்கை விளக்க புத்தக இலவச விநியோகமும்.  


    பதுளை ஒக்ஸ்போர்ட் சர்வதேச பாடசாலை நிர்வாகமும் அதன் பெற்றர்களும் இணைந்து சமூக நல்லிணக்க இப்தார் ஒன்றை மரியட் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள் . உலமாக்கள் ,மாற்று மத மத போதகர்கள், ஊவா மாகாண சபை உறுப்பினர்கள்  பதுளை மாநகர சபை கமிஷனர் மற்றும் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள், மாற்றுமத பெற்றார்கள் எனும் பலவேறு மட்டத்தினர்கள் இவ் இப்தார் நிகழ்விற்கு அழைக்கப் பட்டிருந்தனர். பேராதனை பல்கலைகழக முகமைத்துவ விடுகை வருட மாணவன் பாஹிம் இக்பால் அவர்களினால் தொகுத்து வழங்கப் பட்ட இந் நிகழ்வில்   முஸ்லிம்கள் மீது கடமையாக்கப் பட்ட நோன்பின் மூலம் எதிர்பார்க்கப் படும் மார்க்க ரீதியிலான அடைவுகள், சமூக வாழ்வில் அதன் அவசியம் பற்றி சிங்கள மொழிமூலம் விளக்கமளிக்கப் பட்டது.

      மேலும் இந்த நிகழ்வில் பெறுமதிமிக்க இஸ்லாமிய நூல்கள் மற்றும் மாற்று சமய நூல்கள் இலவசமாக விநியோகிக்கப் பட்டது சமய புரிதல்களுக்கு மற்றும் சமய நல்லிணக்கத்திற்கு ஏதுவான சந்தர்ப்பமாக இருந்தது.

மேற்படி இப்தார் நிகழ்வுகளில் அந்தந்த விடயத்திற்கேபற்ப விளக்க உரைகளையும் இஸ்லாத்தின் பார்வையில் அதன் முக்கியத்துவங்களையும் எடுத்துக் கூறி விளக்கமளிப்பதில் பதுளையை சேர்ந்த அல் ஹாபில், அஷெய்கு  ரூபிள் இஹ்ஷாணி அவர்கள் பொதுப் பேச்சாளராக அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்ததுடன் அஷ்ஷேய்கு இக்பால் ஹாஷிமி அவர்களின் கிரா அத்தும் பாங்கோசையும் அனைத்து நிகழ்வுகளையும் அழகு படுத்தியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

       சனத்தை கூட்டி ஆடம்பர இப்தார் நிகழ்வுகள் நடைபெறும் காலச் சூழலில் இவ்வாறான சமூக மேம்பாடு திட்டங்களுடன் முன்னுதாரணமான இப்தார் நிகழ்வுகளை நடத்தி கடந்த புனிதமிகு ரமழான் மாத்தைத்தை கண்ணியப் படுத்தி வழியனுப்பி வைத்ததில் பதுளை சிவில் சமூக அமைப்புகள் ஒரு முன்மாதிரியை எடுத்துக் காட்டியுள்ளன.

    அதேவேலை  கசப்பாக இருந்தாலும் இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடுவது கட்டாயத் தேவை என கருதுகின்றேன்.   இவ்வாறு  தங்கள் தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் அமைய தங்களால் முடிந்த சமூக மேம்பாடு திட்டங்களை மேற்கொண்டு செயலாற்றி வரும் தொண்டு நிறுவனங்களுக்கு மத்தியில் இவற்றை தலைகீழாக விமர்சித்து சமூகத்தின் மத்தியில் வீண் குழப்பங்களையும் பிதுனாக்களையும் கிளப்பிவிடும் விசக் கிருமிகளும் தமது வழமையான செயற்பாட்டில் இறங்கி இவற்றை குழப்பியடிக்கும் நோக்கில் செயற்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பார்வைக்கு இஸ்லாமிய வெளித்தோற்றத்தில் காட்சி தரும் இவர்கள் முற்சந்திகளில் இருந்துகொண்டு சதாவும் அடுத்தவர்களை பற்றி விமர்சித்து திரியும் இவர்கள் பற்றி அஷெய்கு ரூபிள் இஹ்ஷாணி அவர்கள் மேற்படி நிகழ்வுகளில் கருத்துரைத்த தொரு விடயத்தை இங்கே குறிப்பிடுவது சிறந்ததென கருதுகின்றேன்.

“ இஸ்லாத்தின் அனைத்து போதனைகளும் நாம் பிரிந்துவிடாமல் இருப்பதையே வலியுறுத்துகின்றது. வியாபாரசமூகம் என்பது ஒரு சமூகத்தின் உயிர்நாடியாக உள்ளது. அவர்களின் நலன்புரி விடயத்தில் நாம் கரிசனை கொள்வது ஒரு சமூக பொறுப்பாகும்.

 இந்த மேலான முயற்சிகளுக்கு  நாம் கட்சி இயக்க பேதமில்லாமல் ஒத்துழைப்பு தர முன்வரவேண்டும். இவ்வாறான நல்ல சிந்தனைகளுக்கு எதிராக செயற்படுபவர்களும் எம் சமூகத்தில் உள்ளார்கள் என்பதை நினைத்து கவலையடைய வேண்டியுள்ளது. 

தோற்றத்தில் இவர்கள் இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்சியளித்தாலும் இவர்களின் செயற்பாடுகள் முற்றிலும் நயவஞ்சகத்தனமானதாகவே இருக்கும். இவர்களை போலானவர்கள் வரலாற்றில் எல்லா காலங்களிலும் இருந்துள்ளார்கள். 

ஆனால் இவர்களின் செயற்பாடுகளை வல்ல அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டிவிட்டு இந்த நல்ல முயற்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று இதன் ஏற்பாட்டாளர்களிடம் வேண்டிக்கொள்கிறேன் ” என்று கூறினார். .                
   
புனித ரமழானில் சாதகமான முன்னெடுப்புகளை மேற்கொண்ட பதுளை சிவில் சமூக அமைப்புகள். புனித ரமழானில் சாதகமான முன்னெடுப்புகளை மேற்கொண்ட பதுளை சிவில் சமூக அமைப்புகள். Reviewed by Madawala News on 6/29/2017 09:41:00 PM Rating: 5