Yahya

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பெருநாள் வாழ்த்து செய்திகள். முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பெருநாள் வாழ்த்து செய்திகள்.


இன நல்லிணக்க முயற்சிகளுக்கு உறுதிபூணுவோம்!
பெருநாள்
வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ் 

புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள் ஈத்முபாறக்! நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்பட இத்திருநாளில் விசேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடடுவதுடன், அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்த ஒவ்வொரு முஸ்லிமும் உறுதிபூண வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

புனித அல்குர்ஆன் உபதேசித்துள்ளது போன்று முஸ்லிம்கள் எவ்வாறான சூழ் நிலையிலும் பொருமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்ற இக்காலப்பகுதியில் நாங்கள் மிகவும் கவனமாகவும், சமயோசிதமாகவும் செயற்பட வேண்டியுள்ளது.

சமகாலத்தில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கான தீர்வினை துஆக்கள் மூலம் பெற்றுக்கொள்ள ஈதுல் பித்ர் புனித நாளில் விசேட துஆப்பிராத்தனைகளிலும் முஸ்லிம்கள் ஈடுபட வேண்டும்.

குறிப்பாக ஒற்றுமை, நல்லிணக்கம், நிலையான சமாதானம், நாட்டின் அபிவிருத்தி போன்றவற்றுக்காகவும் முஸ்லிம்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெருநாள் கொண்டாட்டங்கள் பிறமத சகோதரர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு மேற்கொள்ளும் அதேவேளை, நல்லிணக்கம் - புரிந்துணர்வுக்கான நாளாக அதனை அமைத்துக் கொள்ளவும் நாங்கள் முயற்சிக்க வேண்டும்.  – என அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம்
பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ரிஷாட்.

முஸ்லிம்கள் அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய காலகட்டம் இது.

 நமது சமூகம் ஐக்கியப்படுவதன் மூலமே நமக்கெதிரான சூழ்ச்சிகளையும், சதிகளையும் முறியடிக்கமுடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனது ஈத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

 நல்லமல்களையும், பண்பாட்டுப் பயிற்சியையும் நமக்களித்த றமழான் நம்மிடமிருந்து பிரியாவிடை பெற்று விட்டது.  நாம் பூரிப்புடன் பெருநாளை கொண்டாடவுள்ளோம்.

 புனித றமழான் மாதம் இறைவன் நமக்களித்த அருட்கொடைகளில் ஒன்று. ஆண்டாண்டு தோறும் நமது விருந்தாளியாக வந்து செல்லும் றமழான் தந்த நன்மைகள் ஏராளம். மனிதன் மனிதனாக வாழ வேண்டும். புனிதனாகவும் வாழ வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பம். எனவே தான் புனித றமழானில் இறைவன் நமக்கு பண்பாட்டுப் பயிற்சிகளை வழங்கியுள்ளான்.

இந்த றமழான் ஆரம்பத்தில் நமது சமூகத்தின்  உணர்வுகளைத் தட்டியெழுப்பி அதனை உரசிப்பார்க்க ஒரு சிறிய இனவாதக்கூட்டம் பாரிய கொடூரங்களை நமக்கு ஏற்படுத்திய போதும் இஸ்லாம் கற்றுத் தந்த வழியில் அடக்கம், பொறுமை, சாந்தமானபோக்கு, சமாதானம் ஆகிய பண்புகளை கடைப்பிடித்து நாம் வாழ்ந்திருக்கினறோம்  என்ற மன திருப்தி இருக்கின்றது.

முஸ்லிம்களாகிய நாம் சகோதரத்துவத்துடன்  ஏனைய இனங்களுடன் ஒற்றுமையைப் பேணி இனநல்லுறவை வளர்த்து வாழவிரும்புகின்றோம் என்பதை இந்த றமழானில் நாம் உணர்த்தி இருப்பது போன்று தொடர்ந்தும் அதனை கடைப்பிடிப்பதன் மூலம் இனவாதிகளின் கொட்டத்தை அடக்கமுடியும் என்பதே எனது உறுதியான நம்பிக்கையாகும்.

இந்த றமழான் காலத்தில் நமது சகோதரர் பலரின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் இருக்கின்றன. அதே போன்று வெள்ளம் மண்சரிவுகளால் அனைத்து சமூகங்களினதும் இயல்பு வாழ்க்கை பெரிதும்  பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் தமது இயல்பு  நிலைக்கு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.

அத்துடன் முஸ்லிம் நாடுகளில் சியோனிஷ சக்திகளும் ஏகாதிபத்தியவாதிகளும் ஊடுருவி அந்நாடுகளுக்கிடையே பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளன.

இந்த நிலை முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமன்றி, உலக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நாடுகளுக்கிடையிலான பிரிவினை நீங்கி, சுமூக உறவுக்கு வழி ஏற்பட வேண்டும் எனவும் 30 வருடங்களாக அகதிகளாக வாழும்  வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வெற்றி பெற வேண்டும் எனவும்  இறைவனைப் பிரார்த்திப்போம்.


அனைவருக்கும் எனது ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்கள்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ‘ஈதுல் பித்ர்’ வாழ்த்துச் செய்தி.இலங்கையிலும் உலகில் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் முஸ்லிம்கள் முன்னொரு போதும் இல்லாதளவு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம்கொடுத்துள்ள நிலையில் புனித நோன்பின் முடிவில் ‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளை கொண்டாடும் இவ்வேளையில் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள 'ஈதுல் பித்ர்' வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள 'ஈதுல் பித்ர்' செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையை பொறுத்தவரை முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாம் வலியுறுத்தும் சகிப்புத்தன்மையின் உச்சக்கட்டத்தில் பொறுமையைக் கையாண்டு, இனரீதியாக இழைக்கப்படும் அநீதிகளுக்கு மத்தியிலும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மத்தியிலும் ஒரு மாதகால நோன்பை நிறைவு செய்த திருப்தியில் இன்னொரு பெருநாளை சந்திக்கின்றோம்.

இவ்வாறான சூழ்நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் போலல்லாது, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நீதியும், நியாயமும் நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பில் அல்லாஹ்வின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் இந்நாட்டு முஸ்லிம்களாகிய நாங்கள் இக்கட்டான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அத்துடன் மூன்று தசாப்தகால கோரயுத்தம் முடிவடைந்து, நாட்டில் அமைதி நிலவுவதாக கூறப்படுகின்ற போதிலும், வடகிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உரிய முறையில் மீள்குடியேற்றப்படுவது இன்னமும் கேள்விக்குறியாகவே இருப்பதையும் இந்த பெருநாள் தினத்தில் நினைவூட்டுகின்றோம்.

அல்குர்ஆன் இறங்கிய இந்த மாதத்தில் ரமழான் நோன்பின் பயனாக கூட்டாகவும், தனியாவும் நாம் மேற்கொண்ட இறைவணக்கங்களினால் எமது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.
ஈத் முபாரக்!


இனவாதம் மற்றும் மதவாதத்தை முறியடித்து இலங்கையர் என்ற வகையில் ஒன்றுபடுவோம்!
-முஜீபுர் றஹ்மான்

பல்லின மக்கள் வாழும் இலங்கைத் திருநாட்டில் முஸ்லிம்களாகிய நாம்  ஏனைய சமூகஙகளுக்கு முன்மாதிரியான நீதியான, நேர்மையை நேசிக்கும் சமூகமாக வாழ வேண்டும். முஸ்லிம் உம்மத் இன்று தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய சமூகமாக மாறியிருக்கிறது.

பூகோள அரசியல் காய் நகர்த்தல்களில் ஓர் இலக்காக இன்று முஸ்லிம் உம்மத் குறிவைக்கப்பட்டிருக்கிறது.

துன்பங்களும், துயரங்களும் சுமந்த ஒரு சமூகமாக இன்றைய முஸ்லிம் உம்மத் உலகளாவிய ரீதியில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படியான  இக்கட்டான சூழ்நிலையில் இந்த ஈதுல் பித்ர் எம்மை வந்தடைந்திருக்கிறது.

எமது இலங்கைத் திருநாட்டைப் பொருத்தவரையிலே பல நூற்றாண்டுகளாக சகல இன மக்களோடும் சினேகபூர்வமாக சகோதர வாஞ்சையோடு வாழ்ந்து முஸ்லிம் சமூகம்; வரலாறு படைத்திருக்கிறது.
இன்று சமாதானத்தையும், இனங்களுக்கிடையிலான சௌஜன்யத்தையும், சகவாழ்வையும் சிதைப்பதற்கான சூழ்ச்சிகளும், மறைமுக திட்டங்களும்;, சர்வதேசத்தைப் போன்று எமது நாட்டிலும் ஊடுருவ ஆரம்பித்திருக்கின்றன.

கடந்த காலங்களைப் போன்று தற்போதும்  இனவாத சக்திகள் திரைமறைவில் இருந்துகொண்டு மதவாத்த்தையும், இனவாதத்தையும், குரோதத்தையும் கிளப்பி முஸ்லிம்களை அச்ச உணர்வுக்குள் தள்ளி  வருகின்றன.

இனங்களுக்கிடையிலான குரோதத்தை வளர்த்து இந்நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல சதி முயற்சிகள் அரங்கேறியும் வருகின்றன.

இந்த சவால்களுக்கு முகம்கொடுத்து சகல உரிமைகளோடும் வாழும் ஒரு சமூகமாக நாம் இலங்கையர் என்ற அடையாளத்தோடு எழுந்து நிற்க இந்த ஈத் திருநாளிலே உறுதி பூணுவோம்.

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் சிதைக்கும் எந்த தேசிய, சர்வதேசிய நிகழ்ச்சி நிரல்களுக்கும் அடிபணியாத ஒரு நாடாக இலங்கை திருநாட்டை உருவாக்கும் பணியில் பங்காற்றி, இந்நாட்டின் சகல இனங்களுடனும் ஒன்றிணைந்து சமாதானமான இலங்கையைக் கட்டியெழுப்ப  இந்த ஈதுல் பித்ர் தினத்தில் திடசங்கற்பம் கொள்வோம்.
அல்ஹம்துலில்லாஹ்!

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி.


இனங்களுக்கிடையில் நல்லுறவையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துகின்ற திருநாளாகவும் முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துகின்ற நன்னாளாகவும் புனித நோன்புப் பெருநாள் அமையவேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

ஓரு சில விசமிகளினால் திட்டமிடப்பட்டு முஸ்லிம்களுக்கெதிராக நாட்டில்  தோற்றுவிக்கப்பட்டுள்ள அசாதாரன நிலை மாறி இன,மத வேறுபாடுகள் இன்றி சகோதர வாஞ்சையோடு ஒரு தேசத்து மக்களாக ஒற்றிணைந்து இந்நாட்டில் வாழ்வதற்கும் முஸ்லிம்களுக்கு உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் நீங்கி ஒற்றுமைப்படுவதற்கும் இப்புனித பெருநாள் தினத்தில் அனைவரும் பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளோம்.


இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்துகின்ற அனைத்து நற்செயல்களையும் ஞாபகப்படுத்தும் மாதமாக புனித றமழான் மாதம் அமைகின்றது. அந்த வகையில் நோன்|பு காலத்தில் புடம்போடப்பட்டு எம்மில் ஏற்படுத்தப்பட்ட நல்ல மாற்றங்கள் புனித நோன்புப் பெருநாள் தினத்தோடு விடைபெற்றுவிடாமல் எமது வாழ்நாள் முழுவதும் தொடர்வதற்கும் நோன்பு காலத்தில் செய்த நல்லமல்கள் இறை ஏற்றத்தைப் பெற்று மறுமையில் ஈடேற்றத்தை பெறுவதற்கும் இறைவன் அனைவருக்கும் அருல் புரிய வேண்டுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.


 பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின்  பெருநாள் வாழ்த்து

நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு பெருநாளைக் கொண்டாடும் அனைவரும் பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தவிசாளரும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்!

பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒரு மாதகாலம் பசித்திருந்து, விழித்திருந்து நட்காரியங்களில் ஈடுபட்டது போல் தொடர்ந்தும் எமது மார்க்கம் எவைகளை தவிர்த்துள்ளதோ அவைகளை நமது பழக்க வழக்கத்தில் இருந்து தவிரித்து வாழ்வதற்கு இந்நாளிலிருந்து திடசங்கற்பம் செய்து கொள்ள வேண்டும்.

எமது நாடு பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். ஆதனால் எம் சமூகத்தில் உள்ளவர்களுடனும், பிற சமூகத்தில் உள்ளவர்களுடனும் சகோதர மனப்பான்மையுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நாம் ஒவ்வொருவரும் பழகிக் கொள்ள வேண்டும்.

எமது நாட்டில் இன முறுகல் நிலை ஏற்படக் கூடிய வiகில் சில குழுக்கள் செயற்பட்டு வருகின்றனர். ஆவ்வாறானவர்களின் இனத்தின் மீதான வன்முறைகளில் இருந்து எம்மை பாதுகாக்துக் கொள்வதற்கு நாம் அனைவரும் இச்சந்தர்ப்பத்தில் பிராத்தித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தனது பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.மு. த. ஹஸன் அலி
முன்னாள் இராஜாங்க அமைச்சர்
ஈகைப்பெருநாள் பிரார்த்தனை


போதி மாதவனின் நீதி நெறி தவறாத காருண்யம், சகிப்புத்தன்மை, பரிபூரண அமைதி என்ற போதனைகளை புறம்தள்ளி மலினப்படுத்தும் வகையில் இன்றைய ஒருசில காவிகளின் கர்ச்சனைகளும் எச்சரிக்கைகளும் அச்சுறுத்தல்களும் நம்மைக்கவ்விவரும் ஒருகாலகட்டத்தில் இன்று நாம் சந்திக்கும் ஈகைத்திருநாளில் நமது வேண்டுதல்களை சரியாக நெறிப்படுத்திக்கொள்வோமாக !

நமது தனித்துவ அடையாளங்கள், நமது கலாச்சார பண்பாடுகள், நமது தனித்தேசியம், நமது பாரம்பரிய மண்ணில் நிலத்தொடர்புள்ள சுயநிர்ணய உரிமை, நம்முன்னோர்கள் அளித்த அரும்செல்வங்களான நீதி பொய்க்காத பன்மைத்துவ பல்லின வாழ்வு முறை போன்ற விழுமியங்களைப் பற்றிப்பிடித்துப் பாதுகாப்பதற்கான துணிவையும் சுணைபறக்காத திடமான வீரியத்தையும் தந்தருளுமாறு பிரார்த்திப்போமாக !

எம்மைச்சுற்றிக் கருக்கொண்டுவரும் மியன்மார் பாணியினாலான ஊழித்தீயினையும் பிரளயத்தையும் எதிர்கொண்டு சரியான பாதையில் பயணிக்கும் நெஞ்சுறுதியையும் தைரியத்தையும் தந்தருள்வதுடன் பெரும்பான்மையினரின் மத்தியில் சிறுபான்மையினராக வாழ்ந்து சகிப்புத்தன்மையையும் சகவாழ்வு முறைமையையும் சோரம்போகாது கடைப்பிடித்து வெற்றிபெற்ற அன்றைய சஹாபாக்களின் மனநிலையையும் எமக்குததந்தருள்வாயாக !


கிழக்கு முதலமைச்சரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
முப்பது நாட்கள் பசித்திருந்து  நோன்பு நோற்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கின்றேன்.

இந்த நோன்புப்  பெருநாள்​ முஸ்லிங்களிடையே ஐக்கியத்தையும் அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்தும் இனிய பெருநாள் தினமாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக் கொள்கின்றேன்.

கடந்த  ரமழானைப் போன்று இந்த ரமழானிலும் முஸ்லிங்களை அச்சமூட்டும் செயற்பாடுகளும் அச்சுறுத்தல்களும் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது. 

முஸ்லிங்களின் மதஸ்தலங்களின் மீதான தாக்குதல்கள்,வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் என தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்தைய அச்சமூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே இதை ஒரு போதும்  ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் அடுத்த நோன்பு காலத்திலாவது  முஸ்லிங்கள் நிம்மதியாக அச்சமின்றியும் தமது மார்க்கக் கடமைகளை முன்னெடுக்ககூடிய சூழ்நிலையை அரசாங்கம் தற்போதே ஏற்படுத்த முன்வரவேண்டும்,

கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முஸ்லிங்களுக்கு எதிரான செயற்பாடுகளினாலேயே முஸ்லிங்கள் நல்லாட்சிக்கு தமது வாக்கினை அளித்தனர்.

ஆனால் இந்த ஆட்சியிலும் சில அரசியல்வாதிகளினது  ஆதரவுடன் இனவாதிகள் சுதந்திரமாக இனவாதக் கங்குகளை கக்கிய வண்ணம் வலம் வருவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது,

இது இந்த நல்லாட்சியை சீர்குலைக்க  சதிகார சக்திகள் முன்னெடுக்கும் திட்டங்கள் என்றால் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பொலிஸார் இனவாதிகள் மீது நெகிழ்வுப் போக்கை கடைபிடிக்காமல் தராரம் பாராது  சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

அவ்வாறில்லாமல் இனவாதத்தை முன்னெடுப்போர் மீது நெகிழ்வுப் போக்கு கடைபிடிக்கப்படுமேயானால் அதன் மூலம் இந்த அரசாங்கம்,காவற்துறை மற்றும் நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை அற்றுப் போகும் நிலையே உருவாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே முஸ்லிங்களை  இலக்குவைத்து  முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முஸ்லிங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாவும் தமது மத சுதந்திரத்தையும் மார்க்கக் கடமைகளையும் முன்னெடுப்பதற்கான சூழலை இந்த அரசாங்கம் உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் முஸ்லிங்கள் தமக்கிடையேயான முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையுடன் தற்போது  ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள முன்வரவேண்டும்
 கிழக்கு மாகாண முதலமைச்சர்
  அல்-ஹாபிழ் நசீர் அஹமட்(பொறியியலாளர்)
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பெருநாள் வாழ்த்து செய்திகள்.  முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பெருநாள் வாழ்த்து செய்திகள். Reviewed by Madawala News on 6/25/2017 08:29:00 PM Rating: 5