Yahya

குப்பைகளை அகற்றும் விடயத்தில் லஞ்சம் மற்றும் தரகு கோரும் அதிகாரிகளை ஓட ஓட அடித்துத்துரத்த வேண்டும்.


இலங்கையின் பல பாகங்களிலும் குப்பைகளை அகற்றும் விடயத்தில்; லஞ்சமும் தரகும் கோரி கொள்ளையடிக்கும் பல அதிகாரிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை ஓட ஓட அடித்து விரட்டினால் கூட அது பாவமில்லை என்று கூறினார் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்.

மீதொட்டமுல்லையில் குப்பை மேடு சரிந்து விழுந்து உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு மேலதிக நட்டஈடு வழங்கும் நிகழ்வில் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.இவர்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள நட்டஈட்டுக்கு மேலதிகமாக அமைச்சர் கபீர் ஹாசிம்மிடம் மரிக்கார் விடுத்த வேண்டுகோளையடுத்து கபீர் ஹாசிமின் அமைச்சினூடாக மேலும் 50 லட்சம் ரூபா வழங்கப்பட்டது.

இந்த தொகையை பாதிககப்பட்டவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கொலன்னாவை பிரதேச செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே மரிக்கார் இவ்வாறு கூறினார்.

நாங்கள் எதிர்பாராத ஒன்று நடந்து விட்டது. குப்பை மேட்டை அகற்றி அங்கு இயல்பான சூழலோடு வாழக்கூடிய ஒரு நிலையை உருவாக்கத்தான் நாங்கள் பாடுபட்டோம். நடந்தது இயற்கை அழிவோ தவறோ அல்ல. கடந்த அரசாங்கத்தினதும் இந்த அரசாங்கத்தினதும் முடிவுகளை எடுக்கும் நிலைப்பாட்டில் காணப்பட்ட மந்த கதியால்தான் நாம் எமது சகோதர சகோதரிகளை இழந்தோம். இப்போது மீதொட்டமுல்லை பற்றி எவறுமே பேசுவதில்லை யாரும் கண்ணீர் வடிப்பதும் இல்லை.

கடந்த கால நிகழ்வுகளில் இருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து அந்த மக்கள் மத்தியில் எழுந்த கோபமும் கொந்தளிப்பும் நியாயமானதே. கொலன்னாவை பிரதேச பிரதிநிதி என்ற வகையில் அவற்றுக்கு ஈடு கொடுக்கும் சக்தி என்னிடம் அவசியம் இருக்க வேண்டும். ஏனெனில் மக்களின் இந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க கடைசி வரையில் முகம் கொடுக்க வேண்டியவன் நான்தான்.இந்த சம்பவத்தின் பின் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்புக்களின் போது இவ்வளவு பேர் மரணமடைந்த பிறகாவது நாங்கள் சொல்லுவதை கொஞ்சம் கேளுங்கள் என்று அவரிடம் நான் கூறினேன்.

எங்களுடைய முதலாவது கோரிக்கை மீதொட்டமுல்லையில் மீண்டும் குப்பை கொட்ட வேண்டாம் என்பதாகத்தான் இருந்தது. அடுத்து ஏற்பட்ட மரணங்கள் இயற்கை அழிவாலோ அல்லது தெரியாமல் செய்த தவறுகளாலோ ஏற்பட்டதல்ல. மூன்றாவதாக நாம் முன்வைத்த கோரிக்கை இந்த குப்பைகளை மீள்சுற்றில் பாவிக்க கூடிய பொருளாதார கேந்திர நிலையமாக இந்த இடத்தை மாற்ற வேண்டும் என்பதாகும்.அப்போதுதான் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதோடு அதிலிருந்து அரசுக்கும் சமூகத்திற்கும் ஒரு பாடத்தையும் கற்றுக் கொள்ள முடியும். கடைசியாக நாம் விடுத்துள்ள கோரிக்கை மீண்டும் குப்பை கூளங்கள் நிறைந்து இவ்வாறான ஒரு அழிவு ஏற்படக் கூடாது என்பதாகும்.

மீதொட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததும் மஹரகம கோட்டை கடுவெல ஆகிய இடங்களிலும் பிரச்சினைகள் தலைதூக்கின. கொழும்பு மாநகர சபையும் கொலன்னாவை நகர சபையும்தான் மீதொட்டமுல்லையில் குப்பைகளைக் கொட்டின. இப்போதுதான் ஏனைய இடங்களில் எவ்வாறு பிரச்சினைகள் தலைதூக்கின என்பது புரிகின்றது. 32 உயிர்களை பலியெடுத்த பின்னரும் குப்பைகளை வைத்து கொள்ளையடிக்கும் அதிகாரிகள் மக்களின் துன்பங்களை புரிந்து கொள்ளவில்லையென்றால் அவர்களை ஓட ஓட அடித்து துரத்துவதை விட வேறு என்னதான் செய்ய முடியும் எனவே துணிச்சலோடு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

படவிளக்கம் 01 கொலன்னாவை ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி கொலன்னாவை தம்மிக்க தேரர் கீரத்தி ரத்தின பெரேரா என்பவருக்கு காசோலையை கையளிக்கின்றார்.பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் பிரியன்த மாயாதுன்னை ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.

படவிளக்கம் 02 கொலன்னாவை ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி கொலன்னாவை தம்மிக்க தேரர் பி.ரம்யலதா என்பவருக்கு காசோலையை கையளிக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் படத்தில் காணப்படுகின்றார்.

குப்பைகளை அகற்றும் விடயத்தில் லஞ்சம் மற்றும் தரகு கோரும் அதிகாரிகளை ஓட ஓட அடித்துத்துரத்த வேண்டும். குப்பைகளை அகற்றும் விடயத்தில் லஞ்சம் மற்றும் தரகு கோரும் அதிகாரிகளை ஓட ஓட அடித்துத்துரத்த வேண்டும். Reviewed by Madawala News on 6/18/2017 10:55:00 AM Rating: 5