Kidny

Kidny

பேய்க்கு பயந்து பிசாசில் விழுந்த கதை... ( மீண்டும் பிசாசில் பயந்து பேயில் விழுவதா?-முஜீப் இப்ராஹீம்-

2015 ஜனவரியில் ஒரு பழைய விதானையினை நாம் ஜனாதிபதியாக்கினோம்!
அவர் இதற்கு பிறகு ஜனாதிபதியாகும்
நோக்கம் தனக்கில்லை என்று எளிமையாக நடைபெற்ற சுதந்திர சதுக்க பதவியேற்பு நிகழ்வில் சொன்னார்.
ஆனாலும் அவருக்குள் உள்ளூர இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகும் ஆசை வளர்ந்ததாக சில முஸ்லிம் அமைச்சர்கள் பிறகு சொன்னார்கள்!
அந்த ஆசை எந்த மட்டில் உள்ளதென்று இப்போது சரியாக அறியமுடியவில்லை.

அவர் சொந்தக்கையால் சோறு திண்டதையும், எல்லோரும் பயணிக்கும் விமானத்தில் ஏறிச்சென்றதையும் 'ஆ' என்று பார்த்து ஆச்சரியப்பட்டோம்.
2020 வரை தான் ஜனாதிபதியாக பதவி வகிப்பதை மரணத்தை தவிர எதுவும் தடுத்துவிடாது என உறுதியாக நம்புகிற உள்ளார்ந்த கடும் போக்கு பெளத்தரான அவரிடம் நாம் எந்த விதமான கழிவிரக்கத்தை எதிர்பார்க்க இயலும்?

2015 ஆகஸ்ட் இல் நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பாலான ஆணையை பெற்று போதாக்குறைக்கு சுதந்திரக்கட்சியோடு தேசிய அரசை அமைத்த பிரதமர் ரணில் அல்லது ஞானசாரவின் பாஷையில் பொன்னயர் அல்லது சர்வதேச அளவில் அரசியல் நரியாக அறியப்பட்டவர்!

அவர் 2020 வரை தனது ஆட்சி கவிழப்போவதில்லை என்று உறுதியாக நம்புகிறார்!

புதிய யாப்பின் படி ஜனாதிபதியே நினைத்தாலும் 2019 இல்தான் பாராளுமன்றத்தில் கைவைக்க முடியும்!

இந்த பின்னணியில் நமது 21 சோனக மந்திரிமாரும் ஓவர் நைட்டில் சமூக உணர்வு பொங்கி எதிர்கட்சியில் அமர்ந்துவிடும் அற்புதங்கள் நிகழ்ந்தாலும் கூட ரணிலின் ஆட்சிக்கு எந்த அசைவையும் அது கொடுத்துவிடாது!
ஆகவே அவரிடமிருந்தோ அவரது சிஷ்யப்பிள்ளையான சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பான அமைச்சரிடமிருந்தோ நமது எரிகிற பிரச்சினைகளுக்கு நிவாரணங்களை எதிர்பார்க்க இயலாது!

-------------------------------------------
நமது 21 மந்திரிகளும் அரசிலேதான் ஒட்டிக்கொண்டுள்ளனர்!
கடந்த அரசிலாவது எதிர்க்கட்சிகளில் எதிர்த்துப்பேச ஒன்றிரண்டு பேராவது இருந்தார்கள்!

இப்போது அனைவரும் ஒரே பக்கம் இருப்பது அவர்களுக்கு ரொம்ப comfortable zone!

அவர்களுக்குள் யாரும் யார் மீதும் விரல் நீட்டி உமது அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?

இவ்வளவு நடந்தும் ஏன் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறாய்?
என்றெல்லாம் கேள்விகளை கேட்க முடியாது!

அவர்கள் ஒரே பாத்திரத்தில் போடப்பட்ட முட்டைகளை போல ரொம்ப பத்திரமாக இருக்கிறார்கள்!

அவர்களது அரசியல் என்றுமில்லாதவாறு மிக்க பாதுகாப்பாய் இருக்கிறது!
நாள்தோறும் கொளுத்தப்படுகிற தீச்சுவாலையில் வந்து மடிகிற புகையினை தங்களது எதிர்கால தேர்தல்களுக்கான முதலீடாக கவனமாக சேமித்துக்கொண்டிருக்கிறார்கள்!

நடக்கிற கொடூரங்களை கட்டுப்படுத்த நாதியற்ற இந்த கோழைகள் வெளிநாட்டு சதிகளிலும், மஹிந்தவின் கும்பலிலும் பழியை போட்டு நழுவுகிற வழமையான பல்லவிகளையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்!
அவர்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் அதிலும் பாதுகாப்பான அரச பக்கத்தில் பக்குவமாக பதுங்கியிருக்கிறார்கள்!

இவர்களில் முதுகெலும்புள்ள ஒருவனாவது ஒரு நாளைக்காவது எதிர்த்தரப்பில் அமரமாட்டானா? என்ற நப்பாசையில்தான் இலங்கை முஸல்மான்களின் தீயின் மேலான சுடுகிற மூச்சுக்காற்று நகர்ந்து கொண்டிருக்கிறது!
--------------------------------------------
கடந்த அரசில் படுமோசமான அனுபவங்களை பெற்ற இலங்கை முஸ்லிம் சமூகம் மீண்டும் அதேவிதமான நெருக்கு வாரங்களுக்கு இலக்காகிற போது இன்னொரு தேர்தலில் அவர்களால் என்னதான் செய்துவிட இயலும்?
பேயில் பயந்து பிசாசில் விழுந்தோம்!

மீண்டும் பிசாசில் பயந்து பேயில் விழுவதா?

இந்த சூத்திரத்தினை இப்போது இரண்டு பெருந்தேசியவாத கட்சிகளின் தலைமைகளும் வடிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்!

தமிழனுக்கு அடுத்ததாக சோனகனை ஒடுக்கவேண்டும் என்று யாரோ கண்ணுக்கு தெரியாத சக்தி எழுதிக்கொடுத்த script இனை செயல்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு!

இலங்கை போன்ற பாவப்பட்ட தேசங்களில் நின்று போயுள்ள ஆயுத பெரு வணிகத்தை தொடர வேண்டிய தேவை அந்த script இனை எழுதிக்கொடுத்தவர்களுக்கு இருக்கிறது!

ஆகையால் சோனகர் மீதான நெருக்குவாரங்களுக்கு கடும் அவசரப்பட்டெல்லாம் நீதி வழங்க வேண்டிய தேவை இங்கே யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை!

அடுத்த முறை முஸ்லிம் வாக்குகளை whole sale ஆக முஸ்லிம்களின் காவலன் மஹிந்த ராஜபக்‌ஷ என்ற கோசத்துடன் வெற்றிகரமாக கொண்டு சேர்க்க இப்போதே ஆயத்தமாகும் "தேசியத்தலைவர்கள்" இருக்கும் வரை சதிகளை வரைகிற சர்வதேச எழுத்தாளர்களும், வியாபாரிகளும் தங்கள் முயற்சியில் சோர்ந்துவிடப்போவதில்லை!

அடுத்த தேர்தலில் "நாங்கள் மோசம் போய்விட்டோம், இனி மஹிந்தவே எம்மைக்காப்பார்" என்ற முழக்கங்களோடு அமைச்சுக்கும், அரை அமைச்சுக்கும் , திணைக்கள தலைமைகளுக்கும் என ஆளுக்காள் போட்டிபோட்டு பேரம் பேசப்போகும் சோனக அரசியல் தலைவர்களின் "பலத்தினை" இரு பெருங்கட்சிகளின் தலைவர்களும் நன்றாகவே அறிந்துவைத்திருக்கும் பின்னணியில் நமக்கான நீதி கிடைத்துவிடப்போவதில்லை!

-------------------------------------------
ஆகையினால் மக்களே!
தினந்தோறும் தீயில் வெந்து வெதும்பி ஆத்திரங்களை பொது வெளியில் கொட்டி....

ஜனாதிபதியை, பிரதமரை, அரசை, 21 நாயகர்களை திட்டி வசைபாடி...
எதுவும் நடந்துவிடப்போவதில்லை!
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.
இறைவனிடம் முறையிடுங்கள்.
மீண்டும் மீண்டும் முறையிடுங்கள்.....
ஆத்திரம் வருகிற போதெல்லாம் அவனிடமே முறையிடுங்கள்.
நெருப்புக்குள் நபி இப்ராஹிமை காத்த இறைவன்...
நமக்கு நிச்சயமாக நீதியை தருவான்.
அதை தவிர வேறெந்த தெரிவுமில்லை.
பேய்க்கு பயந்து பிசாசில் விழுந்த கதை... ( மீண்டும் பிசாசில் பயந்து பேயில் விழுவதா? பேய்க்கு பயந்து பிசாசில் விழுந்த கதை... ( மீண்டும் பிசாசில் பயந்து பேயில் விழுவதா? Reviewed by Madawala News on 6/11/2017 02:24:00 PM Rating: 5