Kidny

Kidny

மல்லிகைத்தீவு பெருவெளிச் சம்பவம் : குற்றவாளி யார்?


-எஸ்.றிபான் -
இலங்கையில் முஸ்லிம்களை பிரச்சினைகளுக்குள் மாட்டி அவர்களை பயங்கரவாதிகளாகவும், இனவாதிகளாகவும், கொடூரமான எண்ணங்களையும், செயல்களையும் கொண்டவர்கள் என்று காண்பித்து முஸ்லிம்களை நாசமாக்குவதற்கு திட்டமிட்டவாறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் முஸ்லிம்கள் மிகவும் அவதானத்துடனும், புத்திசாதுரியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களை திட்டமிட்டவாறு நசுக்குவதற்கு பேரினவாதிகளும், வெளிநாட்டு சக்திகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்ற பலத்த சந்தேகம் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இனந் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வருகின்றன. இவைகள் பற்றி அரசாங்கத்திடம் முறையீடு செய்துள்ள போதிலும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இங்கு மேலும் முஸ்லிம்களின் மீதான வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. முஸ்லிம்களை பொருளாதார ரீதியாகவும், மத ரீதியாகவும் சிறுமைப்படுத்துவதற்கே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகும்.

தற்போது இத்தகைய நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பேரினவாதிகளினதும், இனவாதிகளினதும் முஸ்லிம்களுக்கு எதிரான தமது கழுகுப் பார்வை திருகோணமலை மாவட்டத்தில் செலுத்தியுள்ளது.
முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் மோத வைத்து இனக் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இதில் முஸ்லிம்கள் பொறுமையாக இருந்து கொண்டிருக்கின்றமையால் இத்திட்டம் இன்று வரைக்கும் வெற்றியைக் கொடுக்கவில்லை. இந்நிலையில் முஸ்லிம்களை தமிழர்களோடு மோதவிடுவதற்கும், மீண்டும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே மோதல்களை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு அப்பாவி பொது மக்கள் பலியாகிக்  கொண்டிருக்கின்றார்கள். தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கு சதி செய்து கொண்டிருக்கும் திட்டமிடலாளர்களின் பொய் உணர்ச்சிகளை நம்பி வீதியில் இறங்கி முஸ்லிம்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

சிறுமிகள் மீது பாலியல் வன்முறை
கடந்த 2017.05.28ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் மல்லிகைத்தீவு பெருவெளிக் கிராமத்தைச் சேர்ந்த 03 மாணவிகள் மீது பாலியல் வன்முறை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகினறன. பெருவெளி கலவன் பாடசாலையில் வகுப்புக்கு சென்ற மாணவிகள் மீதே பாலியல் வன்முறை இனந்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தை யார் செய்தார்கள் என்று தெரியாத நிலையிலும் முஸ்லிம்கள்தான் இதனைச் செய்துள்ளார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது. தமது கட்டிட வேலையை முடித்து மாலை வேளையில் வீடு சென்றிருந்த குறிப்பிட்;ட பாடசாலையில் கட்டிட நிர்மாண வேலைகளில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாடசாலையின் அதிபர் மூலமாக அழைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வருகை தந்ததும் அங்கு குழுமியிருந்தவர்களினால் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள். மிக மோசமாக நீண்ட நேரம் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வேளையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் கட்டி வைத்து தாக்கப்பட்டவர்கள் தங்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தவில்லை என்று தெரிவித்த போதிலும் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலமாக முஸ்லிம்களை வன்முறைக்கு அழைப்பது போலவே உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்த பின்னரும் முஸ்லிம் இளைஞர்களின் மீது தாக்குதல் நடத்தியமை தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளவர்கள் இச்சம்பவத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு எண்ணுகின்றார்கள்.

தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே மீண்டுமொரு இனக் கலவரம் ஏற்படுமாயின் அரசியல் தீர்வு என்பதும், சிறுபான்மையினருக்கு அரசியல் அதிகாரம் என்பதும், இனங்களுக்கு இடையே இறுக்கமான ஒற்றுமை என்பதும் ஏற்படுவதற்கு சுமார் 50 வருடங்கள் காத்திருக்க வேண்டியேற்படும். இக்காலப் பகுதியில் நாடு மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் இவர்கள் எங்களை பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தவில்லை என்று தெரிவித்த பின்னரும் குற்றவாளிகளை தேடிப் பிடிப்பதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் எடுக்கவில்லை. ஆத்திரப்பட்ட தமிழர்கள் உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடியுங்கள் என்று பொலிஸாரை கேட்டுக் கொள்ளாது முஸ்லிம் இளைஞர்களையே சந்தேக நபர்களாக கைது செய்துள்ளார்கள். இதன் மூலமாக முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் திணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2017.06.05ஆம் திகதி மூதூர் நீதிவான் மன்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் இளைஞர்கள் ஆள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதன் போது பாதிக்கப்பட்ட மாணவிகள் இவர்கள்தான் எங்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள் என்று அடையாளங் காட்டவில்லை. இதன் மூலமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் குற்றமற்றவர்கள் என்பது இரண்டு தடவைகள் நிருபிக்கப்பட்டுள்ளன. முதற் தடவையாக கட்டி வைத்து தாக்கப்பட்ட போது இவர்களில்லை என்று தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆத்திர மூட்டும் குற்றச்சாட்டுக்கள்
தமிழ் மாணவிகள் மீதான வன்முறைக்கும் சந்தேகத்தின் மீது கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிய வந்துள்ள போதிலும் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கு இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் அழுத்தமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், யார் குற்றவாளி என்று தெளிவாக தெரியாத நிலையில் இதனை முஸ்லிம்கள்தான் செய்துள்ளார்கள் என்ற போர்வையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றவர்கள் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருப்பது முஸ்லிம் சமூகத்தின் தன்மானத்தினை பாதிக்கச் செய்யும் செயற்பாடுகளாகும்.

குறிப்பிட்ட குற்றத்தை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எல்லா சமூகத்திலும் ஒழுக்கமற்றவர்கள் உள்ளார்கள். ஒழுக்கமற்ற செயல்களை அவர்கள் செய்யும் போது அவர் சார்ந்த சமூகத்தின் மீது விரலை நீட்டுவது கூட ஓழக்கமற்ற செயலாகும். இச்சம்பவத்தில் குறிப்பிட்ட முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பில்லை என்று தெளிவாக தெரிந்துள்ள போதிலும் ஆர்ப்பாட்டங்களின் போது இஸ்லாமிய காடையர்களின் செயல், தோப்பூர் சோனிகளின் காடைத்தனம், இஸ்லாமிய மாடு தின்னிகளின் கொடூரம், குர்ஆன் ஓதி நோன்பு பிடித்தவர்களின் செயல் என்று முஸ்லிம் சமூகத்தை ஆத்தி மூட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் சமூகத்தின் மீது முஸ்லிம்கள் அன்பு வைத்துள்ளார்கள். தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகத்தின் மீது அன்பு வைத்துள்ளார்கள். இந்த அன்பில் கீறல்கள் ஏற்படாத வகையில் நமது எதிர்ப்புக்கள் இருக்க வேண்டும். தமிழ் மாணவிகள் மாத்திரமல்ல குடும்பப் பெண்களும் தமிழர்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். சிலர் வன்புணர்விற்கு பின்னர் கொலையும் செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவங்களின் போது யாரும் தமிழ் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைக்கவில்லை. தமிழ் சமூகத்தின் ஆத்திரத்தை வரவழைக்கும் வகையில் சொற்களை கையாளவில்லை.

ஆனால், முஸ்லிம் இளைஞர்கள் இதில் சம்பந்தமில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதன் பின்னரும் முஸ்லிம் சமூகத்தின் மீதும், குறிப்பிட்ட இளைஞர்கள் மீதும் விரல் நீட்டிக் கொண்டிருப்பதும், திட்டமிடப்பட்ட வகையில் கிழக்கு மாகாணத்தில் ஆங்காங்கே தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களின் போது முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கும் நபர்களை தமிழர்கள் அடையாளங் காண வேண்டும். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் உறவுகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இதனை உடைத்து எறிய முடியாது. புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்றவர்கள் இங்கு இன மோதல்கள் எற்பட்டால்தான் அவர்களினால் அங்கு வசிக்க முடியும். இலங்கையில் அமைதி நிலவிக் கொண்டிருப்பதனால் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அந்நாடுகள் திருப்தி அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது. இதனால், இதனை விரும்பாதவர்கள் இலங்கையில் அமைதியில்லை என்று காட்ட வேண்டியுள்ளது. அப்போதுதான் அவர்களினால் ஐரோப்பிய நாடுகளில் வசிக்க முடியும். இதனால், இவர்களின் மறைகரம் இதிலுள்ளதாக முஸ்லிம்கள் சந்தேகிக்கின்றார்கள்.

தோப்பூரில் ஆர்ப்பாட்டம்
இதே வேளை, 2017.06.07ஆம் திகதி தோப்பூர் முஸ்லிம்கள் மல்லிகைத்தீவு பெருவெளி பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை மேற்கொண்டவர்கள் அடையாளங் காணப்பட வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் மீது வேண்டுமென்று குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கட்டி வைத்து தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகள் கைது செய்யப்பட வேண்டும். அடையாள வகுப்பின் போது மாணவிகள் முஸ்லிம் இளைஞர்களை அடையாளங் காட்டவில்லை. இதனால் இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி கண்டன ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை நடத்தியுள்ளார்கள். இதனை தோப்பூர் - மூதூர் இணைந்த சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. இன்றைய தினம் தோப்பூர் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் தனியார் அலவலகங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன.

முஸ்லிம்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது குறிப்பிட்ட குற்றத்தைப் புரிந்தவர்கள் கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்கள். தற்போது சந்தேகத்தின் பேரில் கை செய்யப்பட்டவர்கள் இதில் சம்பந்தமில்லை என்றிருந்தாலும், வேறு நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவர்கள் யார் என்பதுதான் சந்தேகமாகும். மறைந்திருக்கும் இக்குற்றவாளி முஸ்லிமாகவோ அல்லது தமிழராகவோ இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென்று கேட்டுள்ளமை மூலமாக முஸ்லிம்கள் நடுநிலையாக சிந்திக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வளர்ந்து கொண்டிருக்கும் இனவுறவு மீண்டும் பாதிக்கப்படக் கூடாதென்பதில் முஸ்லிம் சமூகம் தெளிவாக உள்ளது. இதே போன்றதொரு தெளிவில் தமிழ் சமூகமும் இருக்க வேண்டும்.

கடந்த கால அனுபவம்
கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற போது தமிழர்கள் பிழையாகவே வழி நடத்தப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சம்பூர் பாட்டாளிபுரத்தில் தமிழ் ஆசிரியை கற்கழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இவரின் நகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன. இச்சம்பவம் 2015ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனை கடற்படையினர்தான் செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் பொலிஸார் 04 தமிழர்களை கைது செய்தார்கள். இவர்கள்தான் அக்குற்றத்தையும் செய்தார்கள் என்பது தெளிவானதும் கடற்படையின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

மேலும், சம்பூர்pல் 16வயது சிறுவன் ஒருவன் வயிற்றில் கல்லைக் கட்டி கிணற்றில் போடப்பட்டு கொலை செய்யப்பட்டான். இச்சம்பவத்தில் கூட கடற்படையினர் மீதே குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால், பின்னர் இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட கொலையாளியாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆகவே, குற்றங்கள் இடம்பெறும் போது அதனைச் செய்தவர்கள் இவர்கள்தான் என்று தெளிவாக தெரியாத நிலையில் யார் மீதும் துணிந்து குற்றச்சாட்டுக்களை முன் வைக்கக் கூடாது. அவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும் போது பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தம் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று முஸ்லிம்களின் மீது பௌத்த கடும்போக்கு அமைப்புக்களும், தேரர்களும் வேண்டுமென்று குற்றச்சாட்டுக்ளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு சதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவர்களின் மீது அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இந்நிலையில் தமிழர்கள் மத்தியிலும் ஒரு சாரார் முஸ்லிம்களின் மீது எழுந்தமானத்தில் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும் போது இவர்களும் பௌத்த இனவாத கும்பலுடன் கைகோர்த்து விட்டார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஆதலால், தமிழ், முஸ்லிம் சமூகத்தில் உள்ள தலைவர்கள் இது விடயத்தில் அக்கறை கொள்ளுதல் வேண்டும். தமிழர்களும், முஸ்லிம்களும் மோதிக் கொண்டதனால்தான் அரசியல் தீர்வினை அடைந்து கொள்ள முடியவில்லை. அரசியல் தீர்விற்காக 30 வருடங்கள் யுத்தம் செய்து பல ஆயிரம் உயிர்களையும் இழக்க வேண்டியேற்பட்டது. ஈற்றில் தோல்வியில் முடிவடைந்தது.

தற்போது தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக செயற்பட்டு அரசியல் அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் மேற்படி குற்றச்சாட்டுக்கள் எம்மை பின் நோக்கி நகர்த்தும் என்பதனை தமிழ் பேசும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி- விடிவெள்ளி
மல்லிகைத்தீவு பெருவெளிச் சம்பவம் : குற்றவாளி யார்?  மல்லிகைத்தீவு பெருவெளிச் சம்பவம் : குற்றவாளி யார்? Reviewed by Madawala News on 6/11/2017 02:09:00 PM Rating: 5