Ad Space Available here

முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பில் அமெரிக்க தூதுவரின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே - ஜுனைட் நளீமி


'காலாவதியான முஸ்லீம் விவாவக விவாகரத்து சட்டமூலம் பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் பின்நிலையப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு முஸ்லீம் சமூகத்தலைவர்கள் கவலையை வெளிப்படுத்தினர்' என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த செய்தி பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் அமெரிக்க தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டபின்னர் கெசாப் மேற்படி பதிவூட்டத்தினை செய்திருந்தார்.


குறித்த நிகழ்வில் துறை சார் முக்கியஸ்த்தர்களும், சமூக ஆர்வலர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்வில் உரைநிகழ்த்திய அமெரிக்க தூதுவர் முஸ்லிம்களின், வணக்கஸ்த்தலங்கள், வியாபார இஸ்தாபனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை கண்டிப்பதாகவும் வன்முறைகளை தோற்றுவிப்பவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சிறந்த அறிக்கையினை குறிப்பிட்டார். குறித்த உரையினை அடுத்து இப்தார் நகிழ்வும் இராப்போசனமும் இடம்பெற்றது. 


இடைப்பட்ட வேளையில் அமெரிக்க தூதுவர் கலந்து கொண்ட பிரமுகர்களுடன் தனிப்பட்டமுறையில் தனித்தனியே அளவளாவினார். குறித்த கருத்து பரிமாற்றங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றோ அல்லது சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளின் ஏகோபித்த முடிவுகளாகவோ அமைந்திருக்கவில்லை. அத்தோடு பரிமாறப்பட்ட கருத்துக்கள் அவரவர் சார்ந்த தனிமனிதர் கருத்துக்களாகவே அன்றி சமூக மட்ட ஏக தீர்மானங்களாக அவை அமையவும் இல்லை. கலந்துகொண்ட பிரமுகர்களுக்கப்பால் இன்னும் சிவில் சமூக பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வெளியில் இருப்பது மாத்திரமல்லாமல் இஸ்லாமிய மற்றும் முஸ்லீம் விவகாரங்கள், சட்டங்கள் குறித்து பொதுமைப்பாடான கருத்துக்களை சமூகம் சார்ந்து முன்வைக்கும் ஒரு பொறிமுறையான அகில இலங்கை ஜம்மியாயத்துள் உலமா, ஷரியா கவுன்சில் போன்ற அமைப்புக்கள் இந்நிகழ்வில் உத்தியோகபூர்வமாக கலந்து கொள்ளாத நிலையில் சிலரது கருத்தினை பொதுமைப்படுத்துவதான பதிவு தவிர்க்க்கப்பட்டு 'தலைமைகள் சிலர் கருத்து தெரிவித்தனர் என குறிப்பிட்டிருந்தால் ஏற்புடையதாக அமைந்திருக்கும்.


குறித்த விடயம் குறித்து முஸ்லீம் சமூகம் நிதானமாக கருத்துக்கள் முன்வைக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது என்பதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டமூலத்தில் சிலமாற்றங்கள் கொண்டுவரப்பெடவேண்டும் என்பதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவோ, இஸ்லாமிய புத்திஜீவிகளோ மாற்றுக்கருத்துக்கொண்டிருக்கவில்லை. ஆனால் அவை அமெரிக்க தூதுவரினுடாக மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நோக்கில் பகிரப்பட்டிருந்தால் ஏற்புடையதாக அமையாது. புதிய அரசியல் யாப்பு திருத்த நடவடிக்கையில் முஸ்லிம்களது அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்வுகாணப்படவேண்டிய நிலையில் அதுகுறித்து மௌனம் சாதித்து வெறுமனே உள்வீட்டில் பேசித்தீர்க்க வேண்டிய விடயங்களை மேடையேற்றி விவாதப்பொருளாக சம்பந்தப்படாதவர்களுடன் அலாவுவது சிந்திக்க வேண்டிய ஒன்று.


கடந்த காலங்களைவிட தற்போது அமெரிக்க தூதரக அதிகாரிகள் முஸ்லீம் சமூகத்துடனான நல்லுறவை கட்டியெழுப்ப சிவில் சமூகத்தை நாடி இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது வரவேற்கத்தக்க ஒன்று. உண்மையில் முஸ்லீம் அரசியல் தலைமைகள் ஏனைய நாட்டு தூதுவர்களுடன் முஸ்லிமகளது பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்க திராணியற்ற நிலையில் முஸ்லீம் சிவில் சமூகம் இத்தகைய சந்திப்புக்களையும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து அவர்களை கலந்துகொள்ளச்செய்து எமது பிரச்சினைகள் குறித்து அளவளாவியிருக்கவேண்டும்.அத்தகைய எவ்வித வழிகாட்டலும் புத்திஜீவிகளால் முன்வைக்கப்படாமை வருந்தத்தக்கது. 


மாறிவரும் உலக ஒழுங்கில் எத்தனை உலக வல்லரசுகளை அல்லது குறைந்தது அண்டைய இந்திய அரசை அல்லது தூதுவரை முஸ்லீம் சிவில் சமூகம் சந்தித்து முஸ்லிம்களது பிரச்சினைகள் தீர்வுகள் குறித்து பேசியுள்ளன என்ற கேள்விக்கு பூச்சியமே விடையாக உள்ளது. எனவே இத்தகைய நிகழ்வுகளை ஆக்கபூர்வமான விடயங்களை முன்வைக்க முஸ்லீம் தலைமைகள், சமூக ஆர்வலர்கள் எனக்கூறிக்கொள்ளும் அனைவரும் பழகிக்கொள்வதுடன் சபையறிந்து செயலாற்றுவது பொருத்தமாகும் என கருதுகின்றேன், இலங்கையில் பெண்ணிலைவாதம், பாலின சமத்துவம் பற்றி பேசப்படும் முஸ்லீம் தளத்தில் இஸ்லாத்தை ஆழக்கற்ற, துறைசார்ந்த அறிவுப்பின்னணிகொண்ட எவரும் கூடுதலாக இல்லை என்பதுவும் சிலபோது சிலர் தமது குடும்ப சூழல், பொருளாதார அடக்குமுறைகளினால் உந்தப்பட்டு பெண்ணியம் பேசுவதும் அவதானிக்கத்தக்கது. 


இந்த வெற்றிடத்தை தசாப்தங்களைத்தாண்டி நடைபோடும் பெண்கள் அரபுக்கலாசாலைகளோ, தஃவா அமைப்புக்களின் பெண்கள் பிரிவுகளோ பயன்படுத்தியதாக தெரியவில்லை. சிலர் பெண்கள் தொடர்பாக ஏதாவது செய்திடவேண்டும் என்று செயற்படும்போது வெற்று விமர்சனங்களில் நின்றுகொள்வது அறிவுத்துவ வறுமைத்தன்மையாகும். இஸ்லாமிய பெண்ணியல் தளத்தில் மெரினா றிபாய், இஸ்ஸதுன்னிஷா போன்ற சில வைத்தியர்கள் அங்கங்கு சில அறிவுரீதியான விடயங்களை பெண்களுக்கெதிரான ஷரீஅத் அல்லாத இஸ்லாத்தின் பெயரிலான அடக்குமுறைகள், பெண்கள் மீதான தப்பபிப்பிராயங்களுக்காக மிக சிறிய துரியத்தில் குரல்கொடுப்பதை காணக்கிடைக்கின்றது.


 ஒருகாலத்தில் முஸ்லீம் சேவையில் சில வானொலிக்களைஞர்களும் பெண்கள் விடயம் குறித்து பேசிவந்திருந்த போதும் தற்போது முஸ்லீம் சேவை முஸ்லீம் சமூகத்தைவிட்டு அறிகிப்போன சூழ்நிலையில் முஸ்லீம் பெண்ணியம் குறித்த அமைப்பு ரீதியான எந்த தளமும் பலமானதாக பொதுமைப்படுத்தப்பட்டனவாய் இல்லை என்பதனை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். 


இஸ்லாமிய இயக்க, அமைப்பு ரீதியான பெண்கள் பிரிவு குறித்து நான் குறைகாண வரவில்லை. மாராக பொதுத்தளத்தில், முஸ்லீம் சமூகத்துக்குள்ளாகவும் முஸ்லீம் பரப்புக்கு வெளியில் ஏனைய சமூகங்களுடனும் அமைப்புக்களுடனும் சமாந்தரமாக கதிரையமர்ந்து விவாதிக்க கூடிய, கருத்தாடல் செய்யக்கூடிய ஓரளவு சமூக அங்கீகாரம் பெற்ற இஸ்லாமிய பெண்ணிய அமைப்புக்கள் இலங்கை முஸ்லீம் சமூகத்தில் இல்லை என்பதனை கவலையுடன் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இலங்கையில் இதுவரை எத்தனையோ மௌலவியாக்கள் உருவாக்கம்பெற்றபோதும் அவர்களுக்கான, அவர்களது பிரச்சனைகளை கலந்தாலோசிக்க கூடிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பெண்கள் பிரிவு உருவாக்குவதில் எமக்குள்ள மாற்றுக்கருத்துக்களும், பிடிவாத எண்ணங்களும் இருக்கும் வரையில் குறைந்தது காலி நீதிபதிகள் விடயத்தில் எத்தகைய முடிவுகளை எட்ட இஸ்லாமிய புத்திஜீவிகள் முன்வருவர் என்பதுவும் எதிர்பார்க்கை அம்சமே.


இத்தகைய மரணவீட்டில் திருமணப்பேச்சும், இப்தார் நிகழ்வில் சமையல் கலை பற்றிய பேச்சும் தவிர்க்கப்படவேண்டுமானால் இஸ்லாமிய புலமைத்துவம் வாய்ந்த ஷரியத் கற்கையில் ஆழவோட்டம் உள்ள பெண் புத்திஜீவிகள் இஸ்லாமிய பெண்ணியம் குறித்த திறந்த வெளியில் களமிறங்க வேண்டும். அதற்கான அனைத்து வழிமுறைகளையும் இஸ்லாமிய சமூகம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பில் அமெரிக்க தூதுவரின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே - ஜுனைட் நளீமி முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பில் அமெரிக்க தூதுவரின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே - ஜுனைட் நளீமி Reviewed by Madawala News on 6/23/2017 03:36:00 PM Rating: 5