Ad Space Available here

மைத்திரியின் முன் ஊமைகளான முஸ்லிம் அமைச்சர்கள்..

 
இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை சமூகங்களின் வாக்குப்பலத்தின்; மூலம் ஆட்சிபீடமேற்றிய நல்லாட்சி அரசாங்கம் நன்றிகெட்ட நிலையில் இடம்பெற்றுவரும் இந்த இனவாத வன்முறைகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்த்து வருகிறது.   

இன்று நல்லாட்சியை நம்பி மோசம் போய் விட்டோமே என்று முஸ்லிம் சமூகம் பீதியில் உறைந்து போய் இருக்கிறது. 

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்து சமூகத்தை வன்முறைகளிலிருந்து பாதுகாக்க முடியாத வக்கற்ற நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முடவர்களாய் கிடக்கின்றன. 

பதவியை முதல் நிலையிலும் சமூகத்தை இரண்டாம் நிலையிலும் பார்த்து பழகிப்போன இவர்களின் செயற்பாட்டால்; சமூகத்தின் பாதுகாப்பு நாளுக்கு நாள் அபாயகரமானதாகவும் கேள்விக்குறியாகியும் வருகிறது.

அது மட்டுமல்லாமல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இனவாதிகளை நாய்க் கூட்டில் அடைப்போம் என்று சபதமிட்டவர்கள், இன்று இனவாதிகளை தமது மடியில் வைத்து போசித்து வருவதை நன்றாக உணரக் கூடியதாக இருக்கிறது. 

இவர்கள்  இனவாதிகளின் அட்டகாசங்களுக்கு நேரடியாகவே அனுசரணையும் வழங்கி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கள் பள்ளிவாசல்களும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களும்  முப்பதுக்கும் அதிகமாக தாக்கப்பட்டுள்ளது. தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.  

ஆனால் இதுவரை குற்றவாளிகள் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை. சட்டமும் ஒழங்கும் ஒரு சமூகத்திற்கு மாத்திரம் செயற்படுவதாகவே உள்ளது. புத்தரை அவமதித்து பேஸ்புக் பதிவிட்ட கடுகண்ணாவை இளைஞன் உடனடியாக கைது செய்யப்பட்டார். ஆனால் இஸ்லாத்தையும், அல்லாஹ்வையும், முஸ்லிம்களையும் அவமதித்து பகிரங்கமாக பேசும் அல்லது பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தோhர் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. 

இந்த நிலையில்,
நேற்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு தலைமை தாங்கியுள்ளார். முஸ்லிம் ஆமைச்சர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து  ஜனாதிபதியை நேரடியாக சந்திக்கும் சந்தர்ப்பம்  இங்கு கிடைத்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்யவதில் நின்றும் தடுக்கும் கைகளாக ஜனாதிபதி செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் மேலோங்கி இருக்கும் நிலையில் தான் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்றனர். 

தமது சமூகத்தின் பிரச்சினைகளை முன் வைத்து விவாதிக்க இருந்த இந்த அருமையான சந்தர்ப்பத்தில் கூட முஸ்லிம் அமைச்சர்கள் வாய் மூடி மௌனிகளாகவே இருந்துள்ளனர்.

சமூகத்தின் பிரச்சினைகளை, பாதுகாப்பற்ற நிலையை காத்திரமாகவும், காரமாகவும் சொல்ல சந்தர்ப்பம் கிடைத்தும் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறும் அசம்பாவிதங்கள் பற்றி முஸ்லிம் அமைச்சர்கள் வாயே திறக்காமல் இருந்துள்ளனர். இது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையாகும். பாராளுமன்றத்தில் வீர வசனம் பேசுபவர்கள். மைத்திரியின் முன்னால் ஏன் மங்கி மடிந்தப்போக வேண்டும்? மௌனம் ஆக வேண்டும்? இந்த அரசியல் வித்தையின் இரகசியம் என்ன? முஸ்லிம்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க, 

முஸ்லிம்களுக்கெதிரான தொடரும் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்துவதிலும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் அசட்டையாக இருக்கும் பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு கடுமையாக தொனியில் எச்சரிக்கை விட்டிருப்பதாகவும் அறிய வருகிறது. 

இந்த செய்திகளைக் கூட நம்பும் மனநிலையில் முஸ்லிம்கள் இல்லை.  அநீதி இழைக்கப்பட்மோரின் பிராத்தனை திரையின்றி ஏற்றுக்கொள்ளப்படும். இது நபி (ஸல்) அவர்களின் அமுதவாக்கு. இந்த புனித ரமழானில் இருகரமேந்தி பிரார்த்திப்போம். யா அல்லாஹ் !நயவஞ்சக அரசியலிலிருந்து எமக்கு விடுதலை வழங்கு! இனவாத அரசியலிலிருந்து எமக்கு பாதுகாப்பு வழங்கு!
மைத்திரியின் முன் ஊமைகளான முஸ்லிம் அமைச்சர்கள்.. மைத்திரியின் முன் ஊமைகளான முஸ்லிம் அமைச்சர்கள்.. Reviewed by Madawala News on 6/07/2017 02:37:00 PM Rating: 5