Yahya

நாளை குத்ஸ் தினம் ! லத்தீப் பாரூக்

புனித றமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை உலகம் தோறும் முஸ்லிம்களால் சர்வதேச குத்ஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் புனித றமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையை தற்போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ள முஸ்லிம்களின் மூன்றாவது புனித பள்ளிவாசலான பைத்துல் முகத்தஸ் பள்ளி வாசல் மீட்பை நினைவு கூறும் சர்வதேச குத்ஸ் தினமாக அனுஷ்டிக்கின்றனர்.


றமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையை சர்வதேச குத்ஸ் தினமாக ஈரானின் மறைந்த ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி அறிவித்தது முதல் சர்வதேச மட்டத்தில் அந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கடந்த பல ஆண்டுகளாக இந்த சர்வதேச குத்ஸ் தின ஊர்வலங்கள் உலகின் கவனத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளன. மேற்கில் வாஷிங்டன் முதல் லண்டன் வரையிலும் தூர கிழக்கில் மலேஷியா முதல் இந்தோனேஷியா வரையிலும் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.


ஆனால் இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு மட்டும் இந்த தினத்தின் முக்கியத்துவம் புரியவில்லை. அதை அவர்கள் கண்டு கொள்ளாமலேயே விட்டு வருகின்றனர். இந்த காலப்பகுதியில் கூட வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கங்கள் வழமையான வழிபாடுகள் பற்றியும் நரக நெருப்பு பற்றியதாக மட்டுமே அமைந்துள்ளன. முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் கூட இதை மறந்து போய்விட்டன. சியோனிஸ காட்டு மிராண்டித் தனத்துக்கு அன்றாடம் பலியாகிக் கொண்டிருக்கும் பலஸ்தீன சகோதர சகோதரிகள் மீது காட்டப்பட வேண்டிய மனிதாபிமானத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் எந்தளவு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்பதையே இது புலப்படுத்துகின்றது.


அல் அக்ஸா பள்ளிவாசல் மீதும் அதனைச் சூழவுள்ள புனிதப் பிரதேசங்கள் மீதும் சியோனிஸ்ட்டுகள் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாக இந்த குத்ஸ் தின ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் பேரணிகளும் உலகில் பிரதான இடம் பிடித்துள்ளன.


இஸ்லாத்தையும் உலக முஸ்லிம்களையும் பொறுத்தமட்டில் மஸ்ஜிதுல் அக்ஸா மூன்றாவது முக்கிய புனிதப் பிரதேசமாகும். ஆரம்பத்தில் உலக முஸ்லிம்கள் இந்தத் திசையை நோக்கி தான் தொழுது வந்துள்ளனர்.


யூத மதம், கிறிஸ்தவ மதம் மற்றும் இஸ்லாம் என்பனவற்றின் கோத்திர பிதாவாகக் கருதப்படும் இறைதூதர் இப்றாஹிம் தொழுகைக்காக நோக்கிய திசை இதுதான். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் புனித விண்ணுலக பயணத்தை மேற்கொண்ட இரவில் இறைவன் முந்திய நபிமார்கள் எல்லோரையும் மீண்டும்; வரவழைத்து முஹம்மது நபி அவர்கள் தலைமை தாங்கி தொழுகை நடத்திய இடமும் இதுதான்.

குப்பத் அல் ஷக்ரா பள்ளிவாசல் பகுதியின் கீழ் புறத்தில் உள்ள சொர்க்கத்துக்கான கற்கோபுரம் என புகழப்படும் இடத்தில் முஹம்மது நபி அவர்கள் நின்றமை இஸ்லாமிய ஆன்மிக வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வை நினைவு கூறுவதாக அமைந்துள்ளது. ஜெரூஸலம் முஸ்லிம்களுக்கு எந்தளவு முக்கியமானது என்பதையும் இந்நிகழ்வு உணர்த்தி நிற்கின்றது.


முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் ஜெரூஸலம்

இரண்டாவது கலீபா உமர் பின் கத்தாப் அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஜெரூஸலம் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. சேவகன் ஒருவரின் துணையோடு கலீபா உமர் ஒட்டகத்தில் ஜெரூஸலம் சென்றார். பெரும் குதிரைப் பட்டாளத்துடன் அவர் அங்கு சென்றிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.


ஜெரூஸலத்தை சென்றடைந்தபோது ஏற்கனவே சேவகருடன் இருந்த உடன்பாட்டின் படி ஒட்டகத்தில் சேவகர் அமர்ந்திருக்க வேண்டிய முறை. ஆனால் கலீபாவை மக்கள் எதிர்ப்பார்த்து இருப்பார்கள் என்பதாலும் அவருக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சேவகர் கலீபா உமரை ஒட்டகத்தில் அமரச் சொன்னார். ஆனால் உமர் அதை நிராகரித்தார். ஒட்டகத்தில் சேவகர் அமர்ந்திருக்க கலீபா உமர் கால் நடையாகவே ஜெரூஸலத்துக்குள் பிரவேசித்தார். இது மக்களை பெரும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அப்போது அங்கிருந்த கோத்திரத் தலைவர் சொப்ரோனியஸும் அதிர்ந்து போனார். குறிப்பிட்ட இடத்தை அடையும் போது கலீபா உமர் தனது காலணியை கரங்களில் ஏந்தியவாறு மக்கள் பார்த்திருக்க கால் நடையாகவே அந்தப் பகுதிக்குள் பிரவேசித்தார்.


இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த கூடியிருந்த முஸ்லிம்கள் அந்த இடத்தில் எல்லாம் வல்ல இறைவனின் புகழையும் மகோன்னத பண்புகளையும் விளக்கும் குர்ஆன் வசனங்களை ஓதினர். அக்குவேர் ஆணிவேறாக காணப்பட்ட ஆடையுடன் கலீபா உமர் அங்கு நிலை கொண்டிருந்த இராணுவத்தை நோக்கி நகர்ந்தார். ஜெரூஸலத்தின் மதில்களில் நின்றவாறு இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் அதிர்ச்சியால் நிலை குலைந்து காணப்பட்டனர். ஒரு கலீபாவின் அற்புதமான எளிமையைக் கண்டு அவர்கள் வியந்து நின்றனர். இந்த மாபெரும் சேனையின் தலைவனாக இவ்வளவு எளிமையான ஒருவர் எவ்வாறு இருக்க முடியும் என்று அவர்கள் வியந்தனர்.


அங்கு நின்றிருந்த கோத்திரத் தலைவன் கலீபாவின் நடவடிக்கையால் பெரிதும் கவரப்பட்டவராக உலகில் யாருமே இந்த தலைமைக்கும் மக்களுக்கும் ஈடு இணையாக அமைந்து விட முடியாது. அவர்களிடம் சரணடைந்து விடுங்கள் என்று கூறினார். பின்னர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து பிரபலமான உமைரிய்யா உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டது. ஜெரூஸலத்தில் உள்ள புனித செபுல்சர் தேவாலயத்தில் இந்த உடன்படிக்கை இன்னமும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.


இந்த உடன்படிக்கைக்கு முன் அங்கு இருந்திராத யூதர்கள் மன்னிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு ஜெரூஸலத்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என கிறிஸ்தவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். உமர் அதை ஏற்றுக் கொண்டார். அது மட்டும் அன்றி சகல சமயங்களையும் சேர்ந்தவர்களுக்கு ஜெரூஸலத்தில் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் உமர் உறுதி அளித்தார். அவர்களது விசுவாசங்கள் பாதுகாக்கப்படும் அவர்களின் புனிதச் சின்னங்களும் பாதுகாக்கப்படும் என்றும் அவை ஒருபோதும் அழிக்கப்பட மாட்டா என்றும் கலீபா உமர் உத்தரவாதம் அளித்தார்.


இந்த உடன்படிக்கை கைச்சாத்தான பின் முறைப்படி இந்த நகரம் கி.பி. 637ல் முஸ்லிம்களிடம் கையளிக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு சாலை வழியாக உமர் கிறிஸ்தவர்களின் புனித கல்லறை ஆலயத்துக்கு சென்றார். உள்ளே சென்ற கலீபாவிடம் தொழுங்கள் என்று கோத்திரத் தலைவன் கூறினார். ஆனால் கலீபா உமர் அங்கு தொழவில்லை. அந்த கோரிக்கையை நிராகரித்தார். தான் அங்கு தொழுதால் கிறிஸ்தவர்கள் அந்த ஆலயத்தை தமது வழிபாடுகளுக்கு பயன்படுத்த முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்திலேயே கலீபா அங்கு தொழ மறுத்தார். எவ்வாறேனும் இந்த ஆலயத்தின் புற பகுதிக்குச் சென்று அவர் தொழுதார். ஜெரூஸலத்தில் உமர் பள்ளிவாசல் என்று இன்றும் அந்த இடம் அழைக்கப்படுகின்றது.


இந்தச் சம்பவத்தின் மூலம் வெற்றியும் ஸ்திரப்பாடும் தனதானாலும் கூட சகிப்புத்தன்மையும் பெருந்தன்மையும் எவ்வாறு பேணப்பட வேண்டும் என்பதை கலீபா உமர் உலகுக்கு உணர்த்தினார். அதுவே இஸ்லாத்தின் மகிமை. துணிச்சலுக்கும் உறுதிக்கும் புகழ்பூத்த ஒரு மனிதராக இருந்தும் கூட வெற்றியின் போது அவர் நடந்து கொண்ட விதம் உலகுக்கே ஒரு முன்னுதாரணமாக இன்றும் திகழுகின்றது. பின்னர் அவர் தன்னை மஸ்ஜிதுல் அக்ஸா பகுதிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். கோத்திரத் தலைவர் அவரை வழிநடத்திச் சென்றார்.


அங்கு வந்தபோது நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் உடன் வந்தனர். அந்த பிரதேசம் தூசியாலும் குப்பைகளாலும் மூடப்பட்டிருந்ததை அவர் கண்டார். உடனடியாக தனது ஆடைகளை மடித்துக் கட்டிக் கொண்டு அந்த பகுதியை சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டார். இதைப்பார்த்த அங்கு கூடியிருந்த முஸ்லிம்கள் இராணுவத் தளபதிகள் இராணுவ வீரர்கள் என சகலரும் சுத்திகரிப்பு பணியில் இறங்கினர். சுத்தம் செய்து முடித்த பின் அங்கு தொழுது விட்டு உமர் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். முஹம்மது நபி அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுத பின்னர் அங்கு ஒரு முஸ்லிம் தொழுத முதலாவது சம்பவம் அதுவேயாகும்.


உடனடியாக பள்ளிவாசலி;ன் புனர்நிர்மாண பணிகளுக்கு கலீபா உத்தரவிட்டார். மூவாயிரம் பேர் நின்று தொழக் கூடிய மரத்திலான பாரிய பள்ளிவாசல மஸ்ஜித் அல் மர்வாணி இங்கு நிர்மாணிக்கப்பட்டது. புனித ஆலயத்தின் தென் பகுதியில் இது கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டதும் இங்கு தொழுகையும் இடம்பெறத் தொடங்கியது. இவ்வாறுதான் மிகவும் அமைதியான முறையில் ஜெரூஸலம் வெற்றி கொள்ளப்பட்டு அந்த பள்ளிவாசலின் மகிமையும் நிலைநாட்டப்பட்டது.


கலீபா உமரின் பெருந்தன்மையால் அங்கிருந்து வெளியேற விரும்பியவர்கள் தமது சொத்து சுகங்களுடன் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அங்கே வாழ விரும்பியவர்களுக்கு உயிருக்கும் உடைமைகளுக்கும் அவர்களின் சமய வழிபாட்டு இடங்களுக்குமான பாதுகாப்புக்கான உத்தரவாதமும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு யூதர்களுக்கு அங்கு விதிக்கப்பட்டிருந்த 400 வருடகால தடையையும் கலீபா உமர் அகற்றினார். அவர்கள் மீண்டும் ஜெரூஸலம் திரும்ப அவர் அனுமதி அளித்தார். கிறிஸ்தவர்கள் தமது சமயத் தலங்களை இலவசமாக பாவிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இவ்வாறுதான் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் சகிப்புத் தன்மையோடும், புரிந்துணர்வேர்டும் நல்லுறவோடும் வாழும் ஒரு நகரமாக ஜெரூஸலம் நகரை கலீபா உமர் உருவாக்கினார்.


ஜெரூஸலத்துக்கு அதுவரை அனுமதி மறுக்கப்பட்டிருந்த கதவை யூதர்களுக்கு இவ்வாறுதான் கலீபா உமர் திறந்து விட்டார். கி.பி 637 முதல் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் இரண்டே இரண்டு தடவை குறுகிய காலப் பகுதிகளைத் தவிர ஜெரூஸலம் அதற்குரிய புனித நகரம் என்ற பெயரை தக்கவைத்தே வந்துள்ளது.


முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் அங்கு படுகொலைகள் இடம்பெறவில்லை. சொத்துக்களுக்கு தீ வைக்கப்படவும் இல்லை. சூறையாடப்படவும் இல்லை. சியோனிஸ யூதர்கள் இன்று செய்வதைப் போல் புனிதப் பிரதேசங்கள் எதுவும் அழிக்கப்படவும் இல்லை.


1099ல் ஜெரூஸலம் சிலுவை யுத்தக்காரர்களின் கரங்களில் வீழ்ந்த பின் ஆக்கிரமிப்பாளர்கள் ஈவு இரக்கமின்றி மக்களை கொன்று குவித்தனர். ஜெரூஸலம் பள்ளிவாசலில் பெரும்பாலான மக்கள் அடைக்கலம் புகுந்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அங்கு திரண்டனர். அதை விட அவர்களை கொன்று குவிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது எனக் கருதிய சிலுவை யுத்தக்காரர்களின் ஆளுனர் அங்கேயே அனைவருக்கும் சமாதி கட்டினார்.

91 வருடம் இவர்களின் கொடூரம் ஜெரூஸலத்தில் நீடித்தது. பின்னர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபியின் படைகள் மீண்டும் ஜெரூஸலத்தை கைப்பற்றினர்.


ஆனால் 1967 ஜுன் ஆக்கிரமிப்பின் போது கிழக்கு ஜெரூஸலத்தை ஆக்கிரமித்த சியோனிஸ யூதர்கள் அல் அக்ஸா பள்ளிவாசலை அழிக்க தொடர்ந்தும் சதி செய்தனர். அங்கு அவர்கள் புதிதாக சொலமன் தேவாலயம் ஒன்றை கட்டினர். பழைய தேவாலயம் கி.பி 70 களில் ரோமர்களால் அழிக்கப்பட்டிருந்தது. இதன் சிதைவுகள் இன்னும் அங்கு காணப்படுகின்றன. இங்குள்ள ஒரு சுவர்தான் யூதர்களால் ஒப்பாரி சுவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக மிக மோசமான ஈவு இரக்கமற்ற இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையையும் யூதர்கள் இங்கு முடுக்கி விட்டனர். பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வந்த பலஸ்தீனர்கள் தான் இவ்வாறு இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். கடந்த காலங்களில் அரபு ஆட்சியாளர்கள் பலஸ்தீனர்களையும் ஜெரூஸலத்தையும் அல் அக்ஸாவையும் கைவிட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.


1990ல் பஹ்ரேனில் மஸ்ஜித் அல் அக்ஸாவின் பணிப்பாளர் ஷேக் எக்ரிமாவை சந்தித்துப் பேட்டி கண்டபோது ஜெரூஸலம் ஆபத்தில் இருப்பதாக அவர் அப்போதே கூறினார். அதைப் பாதுகாக்க தவறினால் அது அழிந்து விடும் என்று அன்றே அவர் எச்சரிக்கை விடுத்தார். ஜெரூஸலத்துக்கு வரும் ஆபத்து யூத வடிவமைப்பின் படி முஸ்லிம்களின் ஏனைய புனித தலங்களையும் பாதிக்கக் கூடும் என்று அவர் மிகவும் உருக்கமான ஒரு கருத்தை வெளியிட்டார்.


அல் அக்ஸா பள்ளிவாசல் பகுதியிலும் பழைய நகரின் ஏனைய வதிவிட பகுதிகளிலும் இஸ்ரேல் தொடர்ந்து அகழிகளைத் தோண்டி வருகின்றது. இது அல் அக்ஸா பள்ளிவாசல் மற்றும் ஏனைய பள்ளிகள் தானாகவே இடிந்து விழ வழியமைத்து விடும். ஜெரூஸலம் நகரின் இஸ்லாமிய பண்புகளையும் அடையாளங்களையும் இஸ்ரேல் மாற்றி அமைத்து வருகின்றது. தினசரி ஏதாவது ஒரு விதத்தில் இது இடம்பெற்று வருகின்றது. அங்குள்ள பல இஸ்லாமிய அடையாளச் சின்னங்கள் மெல்ல மெல்ல அழியத் தொடங்கிவிட்டன. ஓன்றன் பின் ஒன்றாக அவை காணாமல் போய் வருகின்றன.

நாளை குத்ஸ் தினம் !  நாளை குத்ஸ் தினம் !  Reviewed by Madawala News on 6/22/2017 07:20:00 PM Rating: 5