tg travels

முஸ்லிம்களை ஏமாற்றியுள்ள ஆளுந் தரப்பு..


எஸ்.றிபான் - 

முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அசம்பாவித நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று அரசாங்கம் அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. ஆயினும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு நடந்த அநீதிகளை விடவும் கூடுதலான அநீதிகள் இன்றைய அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாட்டில் சட்டமும், ஒழுங்கும் சீராக அமுல்படுத்தப்படாதுள்ளன. நாட்டிற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் பொது பல சேனவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை அமைச்சர்களே பாதுகாத்து வைத்துள்ளதாக பகிரங்கமாகவே குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஞானாசாரர் தலைமறைவு

ஞானசார தேரரை கைது செய்வதற்கு பொலிஸார் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை, நீதிமன்றத்தை அவமதித்த வழக்கொன்றுக்கு கூட நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காது ஒளிந்து கொண்டுள்ள ஞானசார தேரரை பொலிஸார் கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை நாட்டு மக்களிடையே கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. ஞானாசார தேரர் ஒரு போதும் சரணடைய மாட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதென்று பொது பல சேன தெரிவித்துள்ளது.


இதே வேளை, ஞானசார தேரரை அமைச்சர்கள் விஜேதாஸ ராஜபக்ஷ தமது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்று அஸாத்சாலியும், அமைச்சர் சம்பிக்க ரணவக்க தமது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்று முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரணவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்கள். 


இக்குற்றச்சாட்டை அமைச்சர் சம்பிக்க ரணவக்க மறுத்துள்ளார். பொது பல சேன ஆரம்பத்தில் எம்முடன் செயற்பட்ட போதிலும் இப்போது எமக்கும், அவர்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என்;றும் அவர் தெரிவித்துள்ளார்.


பொது பல சேன மஹிந்தவின் தேவைக்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. எம்மை பலி வாங்குவதற்காகவே இயங்கி வருகின்றது. எம்மை பலி வாங்கும் வகையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார்கள் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


இவர் இவ்வாறு தெரிவித்துக் கொண்டாலும் இலங்கையில் பௌத்த இனவாத ஆதிக்கப் போக்கை விதைத்தவர்களில் சம்பிக்க ரணவக்கவுக்கும், ஜாதிக ஹெல உறுமயவுக்கும் மிகக் கூடிய பங்களிப்பு இருக்கின்றது. ஜாதிக ஹெல உறுமய தேர்தல் வெற்றிக்காக கிறிஸ்தவத்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக பல கருத்துக்களை முன் வைத்தன. இக்கருத்துக்களை முன் வைத்தவர்களில் முன்னணியில் நின்றவர்தான் சம்பிக்க ரணவக்க. ஜாதிக ஹெல உறுமயவின் பௌத்த இனவாத சிந்தனை ஆங்காங்கே செயற்பட்டுக் கொண்டிருந்த பௌத்த ஆதிக்கவாத பிக்குகளையும், ஏனையவர்களையும் ஜாதிக ஹெல உறுமயவின் கீழ் ஒன்று திரட்ட வைத்தது. இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் பௌத்த இனவாத அமைப்புக்களில் அதிகமானவை ஜாதிக ஹெல உறுமயவில் இருந்தவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்றது. 


இன்றும் கூட சம்பிக்க ரணவக்க இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரம் காணப்படுவதாக அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். இதனை வளர விடுவது இலங்கையின் எதிர் காலத்திற்கு ஆபத்து என்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். இதே வேளை, மஹிந்தராஜபக்ஷ ஆதரவாளர்கள் பொது பல சேனவுடன் சம்பிக்க ரணவக்கவுக்கு நெருங்கிய தொடர்புகள் இன்றும் உள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.


மேலும், ஞானசார தேரர் சிங்கள அமைச்சர்கள் பலரை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாலும் சம்பிக்க ரணவக்கவை குற்றம் சாட்டி கருத்துக்களை முன் வைத்தாக எம்மால் அறியமுடியவில்லை.


பொது பல சேன தங்களை பலி வாங்குவதற்காகத்தான் போலியான குற்றச்சாட்டுக்ளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அந்த அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், ஒளிந்திருக்கும் ஞானசார தேரரை தேடிக் கண்டு பிடிப்பதில் உள்ள அசமந்தப் போக்கை இல்லாமல் செய்வதற்கும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பாதுள்ளமைக்கான காரணமென்ன என்று கேட்கின்றோம்.


அரசாங்கத்தில் உள்ளவர்கள் என்னதான் காரணங்களை சொல்லிக் கொண்டாலும், எங்களுக்கும் பொது பல சேனவிற்கும் தொடர்புகளில்லை என்று சொல்லிக் கொண்டாலும் ஞானசார தேரரை பாதுகாத்துக் கொள்வதற்கு மறைமுகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை.


ஜனாதிபதி மறுப்பு

சிறுபான்மையினரின் அதிகபட்ச ஆதரவு இல்லாதிருந்தால் இன்றும் மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்திருப்பார். நான் வெற்றி பெறாது போனால் என்னை மண்ணுக்குள் புதைத்து இருப்பார்கள் என்று தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்காது இருக்கின்றார். 


முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களைப் பற்றி பேசுவதற்கே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கடிதம் மூலமாக கேட்டுள்ளார்கள். 


ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பௌத்த இனவாத அமைப்புக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்காது இருக்கின்றாரோ என்று எண்ண வேண்டியுள்ளது. இதே வேளை, பௌத்த மேலாதிக்கவாத தேரர்களுடன் அவர் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். 

சிறுபான்மையினரின் ஆதரவுடன் வெற்றியைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்காக பேசுவதற்கு தயக்கம் காட்டிக் கொண்டிருக்கின்றார். 


மஹிந்தவின் ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமான சம்பவங்கள் இன்றைய அரசாங்கத்தில் நடைபெற்றுள்ளன. 


இதே வேளை, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளமை குறித்த செய்திகள் தொடர்பில் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். நாளை நமது வர்த்தக நிலையத்திற்கு என்ன நடக்குமோ என்று முஸ்லிம் வர்த்தர்கள் கவலையுடன் இருக்கின்றார்கள். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சொல்லியுள்ளது போன்று முஸ்லிம்கள் அலட்டிக் கொள்ளாமல் இருக்க முடியாது. 


முஸ்லிம்களுக்கு பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று தெரிவித்துக் கொண்டே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. இதற்கு முஸ்லிம்களிடையே ஒற்றுமையின்மைதான் காரணமாகும். 


முஸ்லிம்கள் மத்தியில் மத அடிப்டையிலும், அரசியல் ரீதியாகவும் பல பிளவுகள் உள்ளன. என்ன பிரச்சினையாக இருந்தாலும் இவற்றின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

அரசியல் கட்சிகளிடையே பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஒரு கட்சிக்குள்ளேயே ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறு முஸ்லிம்களிடையே காணப்படும் பிளவுகளை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் காணப்படும் பதவி ஆசையும், பண மோகமும் மிகப் பெரிய பலவீனமாகும். முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன் வைக்காது போனாலும் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்லமாட்டார்கள் என்பதாகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி அரசாங்கம் கணித்துள்ளது. 


முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏதோவொரு அடிப்படையில் ஒற்றுமைப்படுதல் வேண்டும். இதற்கான அழுத்தங்களை முஸ்லிம்கள் கொடுக்க வேண்டும். முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இலாபத்தின் அடிப்படையிலேயே தீர்மானங்களை எடுப்பார்கள். சமூகம் பற்றிய சிந்தனை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பதற்கு முடிவுகளை எடுத்துக் கொண்டார்கள். இதன் பின்னர் தங்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக மக்களின் முடிவுகளோடு காலம் தாழ்த்தி வந்தார்கள். இதற்கு கூட முஸ்லிம் கட்சி ஒன்று பெரிய தேசிய கட்சியிடம் பணம் பெற்றுக் கொண்டதாக கதைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பணத்திற்காகவும், பதவிக்காகவும் எதனையும் செய்வதற்கு தயாராக உள்ளவர்களிடம்தான் முஸ்லிம்கள் தங்களின் எதிர்பகாலத்தை ஒப்படைத்துள்ளார்கள். இவர்களை இன்னும் முஸ்லிம் சமூகம் நம்பிக் கொண்டிருக்குமாயின் முஸ்லிம்களின் எதிர்காலம் மிக மோசமாகவே இருக்கும். 


பாராளுமன்றத்தில் முஸ்லிம் குரல்

பாராளுமன்றத்திற்கு முஸ்லிம்கள் தமது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளமை முஸ்லிம்களின் பிரச்சிகளைப் பற்றி பேசுவதற்காகவேயாகும். முஸ்லிம்களின் குரலாக செயற்பட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்க வேண்டும். ஆனால், நாட்டில் முஸ்லிம்கள் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றைப் பற்றி இதுவரை ஒரு வார்த்தையேனும் பேசாத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளார்கள். நாம் பேசி எதனைக் கண்டோம் என்று தங்களின் இயலாமைக்கு முடி சூட்டுகின்றார்கள். 


இன்னும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றவர்கள் பேசினால் நானும் பேசினேன் என்று காட்டுவதற்காக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் முஸ்லிம் அரசியலில் தம்மை தவிர வேறு யாரும் இலாபமடைந்து விடக் கூடாதென்று எண்ணுகின்றவர்கள்.


பொது பல சேன போன்ற பௌத்த அமைப்புக்கள் அமைச்சர்கள் றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர்களை கைது செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றன. 


ஆளுந் தரப்பு

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளுந் தரப்பில் உள்ளார்கள். ஆளுந் தரப்பில் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதிலும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீரவில்லை. பாராளுமன்றத்தில் ஆளுந் தரப்பு என்பதும், எதிர்க்கட்சி என்பதும் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை அளிப்பதாக இருக்க வேண்டும். தனி நபர்கள் இலாபமடைவதற்கு அணிகளை தீர்மானிக்கக் கூடாது. 


ஆளுந் தரப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் முஸ்லிம்களுக்கு பயனில்லை என்றால் அணியை மாற்றிக் கொள்வதனைத் தவிர வேறு வழியில்லை. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்த வேளையிலும் எதிர்க்கட்சிக்கு சென்று விடுவார்கள் என்ற பயம் உள்ளவரைதான் முஸ்லிம் சமூகத்தினால் நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும். 

ஆனால், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுந் தரப்பு என்ற அந்தஸ்தை இழப்பதற்கு தயாரில்லாத நிiலையிலேயே உள்ளார்கள். 


மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு அநீயாயம் நடைபெற்ற போது முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டுமென்று முஸ்லிம்களினால் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அளுத்கம தாக்கப்பட்ட போது இக்கோரிக்கை இன்னும் பலமடைந்தது. முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டமொன்றின் போது கட்சி எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டுமென்று கூட பேசப்பட்டது. ஆயினும், முஸ்லிம் கட்சிகள் ஆளுந் தரப்புக்குள் இருந்து கொண்டே முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முடிவு செய்தன. ஆனால், முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆளுந் தரப்பில் இருந்து தீர்க்க முடியவில்லை.


இன்றைய அரசாங்கத்தில் கடந்த காலங்களை விடவும் மிக மோசமான நிலையை முஸ்லிம்கள் அடைந்துள்ளார்கள். இன்றும் கூட ஆளுந் தரப்பிலிருந்துதான் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டுமென்று முஸ்லிம் கட்சிகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றுதான் முஸ்லிம்கள் மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்தார்கள். இந்நிலையில் இன்றைய அரசாங்கம் மஹிந்தவின் அரசாங்கத்தை விடவும் மோசமாக இருந்து கொண்டிருப்பதனால் ஆட்சி மாற்றம் முஸ்லிம்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

நன்றி- விடிவெள்ளி 16.06.2017


முஸ்லிம்களை ஏமாற்றியுள்ள ஆளுந் தரப்பு.. முஸ்லிம்களை ஏமாற்றியுள்ள ஆளுந் தரப்பு.. Reviewed by Madawala News on 6/16/2017 03:44:00 PM Rating: 5