Kidny

Kidny

குற்றங்களின் மறுபக்கம்!

எம்.எம்.ஏ.ஸமட்

முன்னோர்போதும் இல்லாத அளவு நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றமையை அன்றாடம் இடம் பெறும் சம்பவங்கள் சான்று பகிர்கின்றன. கொலை, தற்கொலை, கொள்ளை, கடத்தல், பெண்கள் சிறுவர் மீதான உடல், உள, பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகம், வன்முறை, கருக்கலைப்பு எனத் தொடர்சங்கிலியாக தொடரும் குற்றச் செயல்களினால் பல்வேறு விளைவுகளை குடும்பங்களும், சமூகங்களும், பிரதேசங்களும், இந்நாடும் எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.

 

குற்றம் என்பது விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறிச் செயற்படும் செயலாகும். இத்தகைய செயல்கள் அதிகாரத்தில் உள்ளவர்களால் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம். ஒவ்வொரு குற்றமும் சட்ட மீறலாகும். தனிநபர்கள் புரியும் குற்றம், தனிநபருக்கு எதிரான குற்றம், வன்முறைசார் குற்றம், பொது ஒழுங்கு மீறல்கள், மதம் மற்றும் பொது வழிபாட்டுக்கு எதிரான குற்றம். இணையத்தளங்களினூடான குற்றங்கள் என குற்றங்கள் பல்வேறு வகைப்படுத்தலுக்கு உட்படுகிறது.

 

ஒரு சிலர் குற்றங்கள் புரிகின்றபோது அந்நபர்களை சட்டம் தண்டிக்கிறது. மற்றும் சிலர் புரியும் குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஒரு சில பெரும்பான்மை மத குருமார் இந்நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை இனங்களுக்கு எதிராகப் புரியகின்ற குற்றங்கள், குற்ற ஊக்குவிப்புக்கள், மத சிந்தனைகள், வெறுப்புப் பேச்சுக்கள் போன்ற சட்டம் வகைப்படுத்தும் குற்றங்கள் குற்றங்களாக கருத்திற்கொள்ளப்படுவதில்லை.

ஒரு இனத்தினரின் வழிபாட்டுத்தளங்கள், வியாபார நிலையங்கள், போன்றவற்றுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு ஊக்குவிக்கும் காரணதாரிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்டம் அதன் கடுமையை பிரயோகிக்காத நிலையில,; சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் மாற்றுமதம் அல்லது மதப் போதகர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது அவை பாரிய குற்றங்களாக கருதப்பட்டு அவற்றுக்குகெதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டு குறித்த சிறுபான்மையினர் சிறையில் அடைக்கப்படும் நிலை இத்திருநாட்டில் வழமைபெற்றுக் காணப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டால் இருக்க முடியாது.

ஏனெனில் நாட்டில் அதிகரித்துள்ள குற்றங்களின் மறுபக்கங்கள் பல்வேறு காரணிகளோடு தொடர்புபட்டமையாகக் காணப்படுகின்றன. இந்த வகையில் ஒரு இனத்திற்கு எதிராக குற்றம் புரிகின்றவர்களின் பின்னணி தொடர்பில் கண்டறியப்படுது அவசியமென்பதோடு பொது ஒழுங்கு மீறல்கள் தொடர்பான குற்றங்களின் மறுபக்கங்களுக்கான காரணிகள், குற்றங்களின் அதிகரிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையென உரிய பொறுப்புதாரிகளினால் கருதப்படல் அவசியமாகும்.

 

குற்றங்களின் பின்னணி

 

நவீன உலகின் இயந்திரமயமான வாழ்க்கை முறையினால் சமூகத்திலும், கலாசாரத்திலும், சுற்றாடலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பல கோணங்களில் மனிதரிடையே உளப்பாதிப்புக்களைத் தோற்றுவிக்கிறது. கையடக்கத் தொலைபேசி பாவைனயும், தேவையற்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், திரைப்படங்களும், சின்னத்திரை நாடகங்களும், ஊடகங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களும், நிகழ்ச்சிகளும் இளம் தலைமுறையினரை வெகுவாகப் பாதிக்கிறது. குறிப்பாக திரைப்படங்களினதும் சின்னத்திரை நாடகங்களினதும் விரும்பத்தகாத காட்சிகள் இளைஞர்களின் உணர்வுகளைப் பாதிப்பதோடு குற்றங்களைப் புரிவதற்கு துனை நிற்கின்றன.

 

அண்மையில் தென்னிலைங்களில் ஒரு தனியார் நிறுவனத்தின் 77 இலட்டசம் ரூபா பணம் திரைப்படப்பாணியில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு, இளைஞர்களும், சிறுவர்களும் புரியும் குற்றங்களின் பின்னணியில் ஊடகங்களின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. திரைப்படங்களிலும் சின்னத்திரை நாடகங்களின் வரும் கொலை, தற்கொலை, கொள்ளைக் காட்சிகள் இவர்களின் குற்றங்களுக்கு வழிகாட்டுவதாக உளவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

இக்காட்சிகள் ஆளுiமைக் கோளாறுகளை மனதளவில் உருவாக்கி பல்வேறு குற்றச் செயல்களுக்கு இட்டுச் செல்கிறது. குறிப்பாக சமூக விரோத ஆளுமைக் கோளாறுகள் கொண்டவர்களின் பிறழ்வான செயற்பாட்டுக்கு ஊக்கியாக அமைகின்றன.

 

சமகாலத்தில் தாய்;, தந்தையைக் கொள்ளும் மகன், தங்கையைக் கொள்ளும் அண்ணன், பிள்ளையைக் கொள்ளும் தந்தை, மனவியைக் கொள்ளும் கணவன், கணவனைக் கொள்ளும் மனைவி என நாட்டில் இடம்பெறும் கொலைச் சம்பவங்கள், தற்கொலைகள் மனதை நெகிழ வைக்கின்றன. கடந்த செவ்வாய்கிழமை கம்புருபிட்டியில் 44 வயதுடை தந்தையொருவரினால் மூன்று பிள்ளைகள் தற்கொலை செய்யப்பட்டு அத்தந்தையும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமானது மன விரக்தியின் விழிப்பில் நின்று மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயலாகும். இத்தற்கொலைச் சம்பவமானது உளப்பாதிப்பின் அதிகரிப்பைக் கனவத்திற்கொள்ளச் செய்துள்ளது.

 

மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காரணமாக சின்னச் சின்ன விடயங்களுக்காக தற்கொலைகளும,; தற்கொலை முயற்சிகளும்; நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. அது தவிர, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம,; பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், சிறுவர் பெண்கள் கடத்தல், போதைவஸ்துப் பாவனை, போதைப்பொருள் வியாபாரம், சமூகவலைத்தளங்களினூடனான குற்றச்செயல்கள், செல்ஃபி அனர்த்தம் என்பவற்றின் மறுபக்கத்தில் உள ஆரோக்கியத்தின் பாதிப்பு காணப்படுவதாக உளவியல் தொடர்பான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன

 

ஒவ்வொரு குற்றச் செயல்களுக்கும் பல காரணங்கள் காணப்பட்டாலும் உள்ளத்தில் ஏற்படுகின்ற ஆரோக்கியமற்ற மாற்றங்கள், நடத்தைப் பிறழ்வுகள் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடச் செய்கிறது. ஒருவரின் உள்ளம் பாதிக்கப்படுகின்றபோதுதான் அவரது நடத்தையில் விரும்பத்தகாத மாற்றங்களைக் காண முடியுமென உளவியல் சுட்டிக்காட்டுகிறது. அந்தவகையில் இக்குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் ஏதோவொரு வகையில் உளப்பாதிப்புக்களுக்கும் உள்ளாகியிருக்கவும் கூடும்.

 

இளவயதினரும்; உள நிலையும்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக, கலாசார மாற்றங்களினால் குறிப்பாக இளைஞர்கள் தமது பாரம்பரிய, சமூக, கலாசார பண்புகளை விட்டு தூரமாகச் செல்கின்றனர். இளம் சந்ததியினரின் மனப்பாங்கு, சிந்தனை, உடை, நடை, பாவனை என்பவற்றில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களினால் ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்குமிடையில் இடைவெளிகளும் முரண்பாடுகளும் உருவாகின்றன. இலங்கையின் சனத்தொகையில் அதிக வளர்ச்சி வேகத்தைக் காட்டும் வயது எல்லையினராக 15-30 வயது வரையிலானோர்; உள்ளனர். இவ்வயதுப் பிரிவினரே உளநோய் அதிகளவில் காணப்படும் வயதுப் பிரிவினர் என்ற காரணத்தினால் இலங்கையில் உளநோயாளர்கள் அதிகரிக்கும் விடயத்தில் இந்த வயது நிலையும் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.

 

அங்கோடை தேசிய உளச் சுகாதார நிறுவகத்தின் 2015ஆம் வருடத் தகவல்களின் பிரகாரம் பல்வேறு சமூக பொருளாதார மற்றும் குடும்பப் பிணக்குகள் காரணமாக உளவியல் நோய்களினால் பாதிக்கப்படும் நாட்டு மக்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 20 முதல் 25 வீதமாக உயர்வடைந்துள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானவர்கள் ஏதேனும் ஓர் வகையிலான உளவியல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு, உளப் பிரச்சினையினால் பாதிக்கப்படுகின்ற 8000பேர் வரையில் உளச்சுகாதார நிறுவகத்தில் வருடாந்தம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

 

 

மேலைத்தேய நாகரியத் தாக்கங்களின்; விளைவாக ஏற்பட்டுள்ள குடும்பக் கட்டமைப்பு மாற்றங்களினால் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு, முதியோர் பராமரிப்பு போன்றவற்றிலும் பல்வேறு பிரச்சினைகள் தற்காலத்தில் அதிகரித்துச் செல்கின்றன. வறுமை, மாணவர் ஆசிரியர் தொடர்பாடலில் இடைவெளி, காதல் வயப்படல், பாலியல் பிரச்சினைகள் மற்றும் சம வயது நண்பர்களின் அழுத்தங்கள் போன்ற பல்வேறு காரணங்களினால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தல், பாடசாலைக்கு ஒழுங்காக சமூகமளிக்காமை, பாடங்களில் கவனம் செலுத்தாமை, தூக்கமின்மை, மனதை ஒருமுகப்படுத்த முடியாமை பரீட்சைகளுக்கு முகங்கொடுக்க முடியாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.

 

அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் உயிரிழக்கும் வீதம் அதகரித்துள்ளதாக தேசிய வீதிப்பாதுகாபபு சபையின் தலைவர் மருத்துவர் கோதாகொட தெரிவித்திருப்பதை இங்கு சுட்டிக்காட்டுவதும் அவசியமாகும். ஏனெனில,; கடந்த வராங்களில் பாடசாலை மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும், செல்ஃபி அனர்த்தங்களினால் உயிர் இழந்த சமப்வங்களும் அவரின் கூற்றை ஆதாரப்படுத்துகின்றன.

 

அத்தோடு, பல்வேறு காரணங்கள் மூலம் தொழில் வாழ்க்கையில் திருப்தி அடையாமை மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி இயந்திரமயமாதல் மூலம் கணினிகளோடு மட்டுப்படுத்தபடுவதனாலும் உளநெருக்கீடு, மனித உறவுகளில் சிக்கல் போன்றவற்றை பலர் எதிர்நோக்குகின்றனர். பசுமை நிறைந்த கிராம வாழ்க்கைச் சூழலிலிருந்து நகர வாழ்க்கையை நோக்கிச் செல்வதால் அமைதியின்மை, கவலை, என்பவற்றுக்கு உள்ளாக வேண்டி ஏற்படுகிறது. இவ்வாறான குறைபாடுகளுக்கும் அதனோடு இணைந்த குற்றச் செயல்களுக்கும் தீர்வாக அமைவது ஒவ்வொருவரினதும் உள்ளம் வளப்படுத்தப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. குற்றங்களின் மறுபக்கத்தில் உள ஆரோக்கியத்தின் பாதிப்பும் அதற்கான ஆற்றுப்படுத்தலின் அவசியமும் புடம்போடப்படுவதுடன் சமூகத்தின் பொறுப்பையும் முக்கியத்துவப்படுத்துகிறது.

 

ஆற்றுப்படுத்தலும் ஆரோக்கியமான சமூகமும்;

உள்ளத்தை வளப்படுத்தும் செயற்பாடான உளவளத்துணை சேவை ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்புப் பொறிமுறையினூடாக கிராம மட்டம் தோரும் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது.

 

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இளைஞர் யுவதிகள் மத்தியிலும் இச்சேவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு அவர்களின் உள ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கண்டறியப்படுவதோடு இப்பிரச்சினைகளிலிருந்து அவர்களாகவே விடுபட்டு குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அவர்கள் வாழும் சூழலுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு அவர்கள் ஆற்றுப்படுத்தப்படுவது அவசியமாகவுள்ளது.

 

ஏனெனில், குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களில் மாணவர்களும் ஒரு கனிசமாகவர்களாகக் காணப்படுகின்றனர். மாணவர்கள் மத்தியில் பல்வேறு தீயபழக்க வழக்கங்கள் மேலோங்கிக் காணப்படுகிறது. குறிப்பாக புகைத்ததல் மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டவர்களாக மாறிவரும் சூழல் ஆபத்துமிக்கதாகவுள்ளது. அத்தோடு. சமூக வலைத்தளப் பாவனைக்கு அடிமைப்படுதல் அதிகரித்துள்ளது. இவ்வாறு அடிமைப்படும் மாணவர்கள் குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அண்மைக்காலமாக வடபுலத்தில் இடம்பெறும் வாள்வெட்டு போன்ற வன்முறைச் செல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மாணவரும் உள்ளமை அதிர்ச்சியளித்துள்ளது.

அத்தோடு, எச்.ஐ.வி தொற்றுகுள்ளாகின்றவர்களில் இளவயதினரும் அடங்குகின்றனர் என்பதும் ஆரோக்கியமற்ற எதிhகாலத்தை நோக்கி இளைஞர் சமூகம் நகர்ந்து கொண்டு செல்கிறது என்ற அச்சம் உணரளவில் உருவாக்கியிருக்கின்றன.

 

இந்நிலையில,; உளப்பாதிப்புக்களினால் ஏற்படுகின்ற குற்;றச் செயல்களை குறைப்பதற்கு உள்ளத்தை வளப்படுத்தும் உளவளத்துணை சேவை அவசியமாக்கப்படுவது அவசியமாகவுள்ளது. உலகளாவிய ரீதியில் இன்று உளவளத்துணையின் அவசியம் வெகுவாக உணரப்பட்டு வருகிறது. உடல் ஆரோக்கியம் எவ்வளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு உள ஆரோக்கியமும் முக்கியம் என்ற கருத்தியலுக்கு ஏற்ப உலகளாவிய ரீதியில் உளவளத்துணை சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

 

சிறுவர்கள், வளர்ந்தவர்கள,; முதியவர்கள் இவர்களின் உள நிலைக்கு ஏற்ப உள ஆற்றுப்படுத்தல் ஆலோசனை வழங்கப்படுவது அவசியம். பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அரச தனியார் நிறுவனங்களிலும் இந்த உள ஆற்றுப்படுத்தல் சேவை முன்னெடுக்கப்படுவது உள ஆரோக்கியமுள்ள எதிர்கால சமுதயாத்தை தோற்றுவிக்கும்.

 

சமூக விரோத எண்ணங்களின் வெளிப்பாட்டால் புரியப்படுகின்ற மிகவும் கொடூரமான குற்றச் செயல்களின் பின்னணியில் அவற்றைப் புரிகின்றவர்கள் பலமான உள நோய்களுக்கு உள்ளாகியிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. ஆளுமை உளக்கோளாறு மற்றும் பாலியல் உளக்கோளாறுகளினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களால் புரியப்படுகின்ற குற்றங்கள் பாலகர்களைக் கூட பலி எடுத்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமைகளிலிருந்து எதிர்கால சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் கிராம மட்டம் தோரும் தொடர்ச்சியாக உள ஆற்றுப்படுத்தல் சேவைகள் அவசரமானதொன்றாகக் கருதப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொழிலவாண்மை உளவளத்துணையாளர்களைக் மூலம் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.

 

இச்சேவையினை ஒரு நீண்டகால திட்டமாhக சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படும்போதுதான் நாட்டின் முக்கிய மூலதனமான மனித வளம் அநியாயமாக மடிந்துபோதைத் தடுத்து அம்மனித வளத்தை நாட்டின் அபிவிருத்தியில் வெற்றிகரமாக பயன்படுத்த முடியும்.

 

ஏனெனில், ஒவ்வொருவரும் உடல், உள ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியது அவசியம். அந்த அவசியத்தை முன்னிலைப்படுத்தி உள்ளத்தை வளப்படுத்தும் இந்த சேவைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்போது உள ஆரோக்கியம் சீர்குழைந்து புரியப்படும் குற்றச் செயல்களிலிருந்து எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்ற முடியும் என்ற ஆரோக்கிய எண்ணம் சம்பந்தப்பட்டவாகள் மற்றும் பொறுப்புதாரிகள் மத்தியில் ஏற்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது.

 

குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் கைது செய்யப்பட்டு தண்டணை வழங்கப்டுகின்ற அதேசமயத்தில், இத்தகையவர்கள் ஏன் இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற காரணமும் அவர்களிடமிருந்து அறியப்படுவது அவசியமாகும். ஒவ்வொரு குற்றச் செயல்களின் பின்னணயிலும் பல்வேறு காரணங்கள் நிச்சயம் காணப்படும். அவ்வாறு காணப்படும் காரணங்களில் அவர்கள் உளவியல் பிரச்சிணைகளுக்கு உள்ளாகியிருப்பின் அவர்களது தண்டணைக்காலங்களில் அத்தகையவர்கள் உள சிகிச்சைக்கும் உற்படுத்தபடுவதன் மூலம் எதிர்காலத்தில் அத்தகையவர்களின் பிறழ்வான நடத்தைகளினால் ஏற்படுகின்ற குற்றச் செயல்களைக் குறைத்து இத்தகையவர்களால் சமூக, குடும்ப மட்டத்தில் ஏற்படுகின்ற அச்சம், பீதியை அகற்றி ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பை உருவாக்க முடியும்.

 

(விடிவெள்ளி – 29.06.2017)


 

குற்றங்களின் மறுபக்கம்! குற்றங்களின் மறுபக்கம்! Reviewed by Madawala News on 6/30/2017 07:38:00 AM Rating: 5