Kidny

Kidny

அமைச்சர் ரிஷாதின் வாய்க்கு பூட்டுப்போடப்படுகிறதா..?

செருப்புக்கள் வேண்டாம் கால்கள்தான் வேண்டும் என்று வந்தவர்கள் இன்று, கால்களை இழந்து விட்டு செருப்புக்களை பெற முயற்சிப்பது என்பது நகைப்புக்குறிய விடயமே...!

இன்று கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி அவர்களினால் "இரத்தினபுரி மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்புக்கு பொறுப்பான அமைப்பாளாராக"   நியமித்த விடயத்தை அறிந்து மட்டில்லா மகிழ்ச்சியடைந்தோம்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் எந்த அமைச்சை கொடுத்தாலும் திறம்பட செயல்படுத்தக்கூடியவர் என்று ஜனாதிபதி மைத்திரி அவர்களினால் பாராட்டுப்பெற்றவராவார், அதே நேரம் சமூகம் சார்ந்த விடயங்களில்  துணிந்து குரல் கொடுக்கக்கூடியவர் என்பதும் நாம் அறிந்த உண்மையாகும்.

அண்மைக்காலங்களாக முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பல துயரச்சம்பவங்கள் நடந்து கொண்டு வருகின்றது, குறிப்பாக மரிச்சிக்கட்டி விடயம், மாயக்கல்லில் சிலைவைத்த விடயம், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட விடயம், முஸ்லிம்களின் பெருமதிவாய்ந்த கடைகள் எறிக்கபபட்ட விடயம், ஞானசாராவினால் நமது மார்க்கம் விமர்சிக்கப்படும் விடயங்கள் என்று பல துயரமான சம்பவங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றது.

இதனை தாங்கிக்கொள்ள முடியாத நமது அரசியல்வாதிகள் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யுமளவுக்கு நிலைமை பாரதூரமாக இருந்தது வருகின்றது, அதே நேரம் முஸ்லிம் மக்கள்  அனைவரும் ஒவ்வொரு தொழுகையிலும் குனூத் ஓதி துவாச் செய்யும் அளவுக்கு நாட்டின் நிலைமை சென்று கொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.

இந்த நேரத்தில் நமது அமைச்சர்கள் ஜனாதிபதி அவர்களை சந்தித்து இதற்கான தீர்வுகளை பெற முயற்சித்தாலும் அதற்கான முழுமையான வெற்றி இதுவரை கிடைக்கவில்லை. ஞானசாரா விடயத்திலும் அரசாங்கம் அலட்சியப்போக்கைத்தான் இதுவரை கடைப்பிடித்து வருகின்றது.

இந்த நிலமைகளில் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துவருகின்றார்கள் என்பது மட்டுமல்ல, இப்படி எம்மை கண்டுகொள்ளாத அரசாங்கத்தில் நீங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதைவிட எதிர்க்கட்சியில் வந்து அமருங்கள் என்று கூறும்மளவுக்கு மக்கள் விரக்தியின் விழிம்பிலே நின்று கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலைமையில்தான்  நாட்டின் ஜனாதிபதி அவர்கள் முக்கியமான நோய்க்கு மருந்து கட்டுவதை விட்டுவிட்டு , நோயாளிக்கு உதவியாக சென்றவருக்கு சலுகைகளை வழங்குவது போன்று நடந்து கொள்ளும் விடயமானது, அவ்வளவு ஏற்புடைய செயலாக தெறியவில்லை.

இன்று கூட தோப்பூர் முஸ்லிம்களின் காணிகளுக்குள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் திடீரென புகுந்து நிலஅளவை செய்ய முயன்றுள்ளனர், இதனை அப்பகுதி மக்கள் போராடி தடுத்துள்ளனர் என்ற விடயத்தை அறிந்ததும் நாங்கள் வேதனைப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இப்படியான செயல்பாடுகளுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி தீர்வை வழங்குவதை விட்டுவிட்டு,  அமைச்சர்களுக்கு பதவிகளை வழங்கி அழகு பார்க்கும் விடயமானது  மிகவும் ஆச்சரியமான செயளாகத்தான் தெறிகின்றது.
அதே நேரம் நமது அமைச்சர்களும் எந்த பதவி என்ன, எத்தனை பதவிகளைத்தந்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்வோம் என்பது மாதிரித்தான் நடந்தும் கொள்கின்றார்கள்.

நாட்டிலே நடந்ததும், நடந்து கொண்டிருப்பதுமான இனவாத பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முயற்சிக்கின்றபோது, அரசாங்கம் அதற்கு தீர்வை வழங்காமல், இவர்களுக்கு பதவிகளைத்தான் கொடுக்கின்றார்களே தவிர,உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க மறுக்கின்றார்கள்.

இந்த பதவி வழங்கும் நாடகமெல்லாம் முஸ்லிம் அரசியல் வாதிகளின் வாய்களுக்கு பூட்டுப்போடும் செயல்பாடுகளே தவிர வேறொன்றும் இல்லை என்பதை நமது தலைவர்களும் அறிந்து கொள்ளாமல், அவர்கள் விரிக்கும் வலையிலே விழுகின்றார்களே தவிர, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்வதில் தோல்வி அடைகின்றார்கள் என்பதே உண்மையாகும்.

நாட்டிலே முஸ்லிம்கள் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ,  வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நமது அரசியல் வாதிகளை அழைத்தால் பதறியடித்துக் கொண்டு செல்கின்றார்கள். அதே நேரம் பதவிகளை கொடுத்தால் மறுபேச்சில்லாமல் பெற்றுக்கொள்கின்றார்கள்.

அது மட்டுமல்ல,நமது அரசியல்வாதிகளுக்கு  கொடுக்கவேண்டியதை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுத்து பேசா மடந்தைகளாக மாற்றி வைத்திருக்க சிங்கள அரச தலைவர்களுக்கு தெறிந்த "கைவந்த கலையாகும்" என்பதும் இதனை ஆழமாக சிந்திக்கும் எல்லோருக்கும் தெறிந்தவிடயம்தான்.

ஆகவே... எங்களுக்கு செருப்புகள் தேவையில்லை கால்கள்தான் வேண்டும் என்ற கொள்கையில் இருந்து வந்தவர்கள் எல்லாம், இன்று கால்களை இழந்து செருப்புக்களை பெறுவதற்கு முயற்சிக்கும் விடயமானது எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தை பணத்துக்கும் பதவிக்கும் காட்டிக்கொடுக்கும் செயல்பாடுதான் என்பதை நாம் புரிந்து கொள்ளாதவரை நமது பாடு திண்டாட்டம்தான்.
அமைச்சர் ரிஷாதின் வாய்க்கு பூட்டுப்போடப்படுகிறதா..? அமைச்சர் ரிஷாதின் வாய்க்கு பூட்டுப்போடப்படுகிறதா..? Reviewed by Madawala News on 6/02/2017 04:55:00 AM Rating: 5