tg travels

எதிர்க்கட்சி வரிசையில் அமர்தல் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகுமா?



எம்.எம்.எம்.நூறுல்ஹக்

சாய்ந்தமருது - 05

முஸ்லிம்களின் இன்றைய அரசியல் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளைச் செய்வதற்கு ஆயத்தமாக இல்லாத ஒரு நிலையில், பகிரங்கமாகவே இருந்து வருகின்றது. இதற்கு நாம் எந்த வகையில் தீர்வுகளை எட்டிக்கொள்வதென்று சிந்திக்க வேண்டியுள்ளது.


இதற்கு இரண்டுவிதமான வியூகங்களை வகுக்க வேண்டும் என்ற கருத்தாடல் இன்று முஸ்லிம் அரசியல் களத்தில் பரப்புரை செய்யப்படுகின்றது. ஒன்று இன்றைய பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசையில் சென்று அமர்வது, இரண்டாவது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்வது. இந்த இரண்டு வழிமுறைகளும் நமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அனுகூலமானவையா என்று ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.


இன்றைய பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற முஸ்லிம் எம்பிக்கள் பல கட்சிகளையும் சார்ந்து இருக்கின்றனர். இதில் முஸ்லிம் தனிக் கட்சிகளைச் சார்ந்தவர்களுக்கு அப்பால் பெருந் தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இவ்விரு பகுதியினர்களும் வெவ்வேறு தலைமைத்துவங்களையும் கட்சிக் கட்டுக்கோப்புக்களையும் அனுசரிக்க வேண்டிய தேவை உடையவர்களாகக் காணப்படுகின்றனர்.


முஸ்லிம் தனி அரசியல் கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு வழங்குகின்ற ஆதரவை விலக்கிக் கொண்டு எதிர்க்கட்சி வரிசைக்கு செல்வதென்பது பாரிய தாக்கங்களை தனிப்பட்ட அவர்களின் பதவி நிலையிலும் கட்சி மட்டத்திலும் ஏற்படுத்தாது.


ஏனெனில் அவர்கள் முஸ்லிம் மக்களுக்காகவே தமது சேவைகளை ஆற்ற வந்தவர்கள். ஆதலால் அவர்களின் விருப்பு மக்களின் விருப்புக்கு விரோதமாக இருக்க முடியாது. அதேநேரம் அவர்களின் கட்சி தலைமைத்துவங்களும் மக்களின் விருப்புக்கு உடன்பட்டவர்களாகவே களமாற்ற முடியும்.


ஆனால் பெருந் தேசியக் கட்சிகளிலோ ஏனைய சிறிய கட்சிகளிலோ அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க் கட்சி வரிசையில் சென்று அமர்வது என்பது இரண்டு விதமான பிரச்சனைகளை அவர்களுக்கு ஏற்படுத்தும். ஒன்று அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டதென்பதும் தமது கட்சிக் கொள்கைகளை மீறியவர்கள் என்ற வகையிலும் கட்சியின் அங்கத்துவம், அரசியல் பதவி நிலை என்பனவற்றை இழப்பதற்கான சூழலை கட்சி மட்டத்தில் அவர்களுக்கு ஏற்படுத்தும்.


இதன் எதிர்வினையாக எதிர்காலத் தேர்தல்களில் அவர்கள் மாற்றுக் கட்சிகளில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாம். அவ்வாறான சூழலை எதிர்கொள்வதை இயல்பாகவே அரசியல் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில் விரும்பக் கூடியவர்களாக இருக்கமாட்டார்கள்.


இத்தகைய இடர்பாடுகளை முஸ்லிம் தனிக் கட்சிகளினுடைய முஸ்லிம் அரசியல் மக்கள் பிரதிநிதிகள் எதிர்கொள்ள வேண்டிய தேவையை அவர்களுக்கு ஏற்படுத்தாது. அதனால் அவர்கள் இந்த முயற்சியில் இறங்குவது ஏற்புடையதாக பார்க்க முடியும்., அது அவர்களினதும் அவர்களின் கட்சித் தலைமைத்துவத்தினதும் பொறுப்புக்களோடும் கடமையோடும் தொடர்புபட்டவையாகும்.


பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது என்பது கூட்டுமொத்தமான இருபத்தியொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சாத்தியமான ஒன்றல்ல. இதில் அவரவர்கள் சார்ந்திருக்கின்ற கட்சிகளைப் பொறுத்து தீர்மானத்துக்கு வரவேண்டிய தன்மை இருப்பதனால் ஒரேமுகமான செயற்பாட்டை ஒருமித்துச் செய்ய முடியாத பலவீனம் இதில் காணப்படுகின்றது.


அமைச்சுப் பதவிகளைத் துறப்பதனூடாக இது விடயத்தில் சாதிக்கலாம் என்று கூறுவதில் சில சிக்கல்களும் வரையறைகளும் காணப்படுகின்றன. மொத்த முஸ்லிம் நாடாளுமனற எம்பிக்களில் அமைச்சர்கள் என்று இதனை எடுத்து நோக்கும் போது இடர்பாடுகளை எதிர்கொள்வது தவிர்க்க முடியாத ஒன்றாகவே அமையும்.


அவ்வாறில்லாது தனிக்கட்சி எம்பிக்களில் அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்கள் மாத்திரம் தமது பதவிகளை துறந்து விடுவது என்பது சிறிய ஆறுதலான விடயமாக இருக்கலாம். என்றாலும் முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கையை விட அமைச்சர்களின் எண்ணிக்கை குறைவானதாகும். எனவே அமைச்சர்களின் பதவித் துறப்பு என்பதனூடாக ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிர்ப்பாக அது அமைய முடியாத ஒரு நிலையும் இதில் காணப்படுகின்றது.


அரசாங்கம் நமது பிரச்சனை தொடர்பில் திரும்பிப் பார்க்க வேண்டும் அல்லது கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் எடுக்கின்ற முடிவுகள் ஒவ்வொன்றிலும் சில பாதகங்களும் சில சாதகங்களும் இருக்க முடியும். இவ்வாறான பாதகங்கள் இல்லாத தனிச் சாதகமான வழிமுறைகளை கண்டறிதல் என்பது மேற்குறித்த இரு வழிமுறைகளிலும் சிக்கலாகவே உள்ளது.


அவ்வாறெனில் இதற்கு மாற்று வழிதான் என்ன? உண்மையில் எந்த விடயத்தை நோக்கினும் அவற்றில் சாதகம், பாதகம் என்பன இல்லாமல் இருக்க முடியாது. இந்த யதார்தத்தை கட்டுடைப்புச் செய்யுமளவில் இயலுமையை நமது அறிவு கொண்டில்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொண்ட நிலையில்தான் இதற்கான மாற்றுவழி பற்றிய எமது சிந்திப்புக்கள் விரியமுடியும்.


சமூக உணர்வோடும் சமூகத்துக்காக சேவையாற்ற வேண்டும் என்கின்ற தூய்மையான எண்ணத்தோடும் அரசியல் செய்கின்றோம் என்பதில் உறுதியும் உண்மைத்தன்மையும் இருக்க வேண்டும். சில இழப்புக்களைச் சுமந்துகொண்டு சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டி இருக்கும். இந்த யதார்த்த நிலையைப் புரிந்துகொண்டுதான் செயற்படவேண்டியும் உள்ளது. இதன் மறுதலை சில தியாகங்களினூடாகவே நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிகளைத் தேடிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.


முஸ்லிம் தனிக் கட்சிகளுக்கு புறம்பானவர்களிடம் இவ்வாறான மனோபாவத்தை முஸ்லிம் சமூகம் எதிர்பார்ப்பதென்பது அறவே பயனற்ற ஒன்றாகும். ஆனால் தனி முஸ்லிம் கட்சிகளில் இருந்து நமது பிரதிநிதிகளாக தங்களை உருவாக்கிக் கொண்டவர்கள் தியாகங்களைச் செய்வதற்கு தயாராக இருப்பது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற கடப்பாடாகும். அந்த வகையில் அவர்கள் எல்லோரும் அரசாங்கத்துக்கு வழங்குகின்ற ஆதரவை விலத்தி அடுத்த கட்சிகளில் இருக்கின்ற நமது முஸ்லிம் உறுப்பினர்களுக்கு முன்மாதிரியைக் காட்டுவதற்கு முன்வரவேண்டும்.


குறைந்தபட்சம் முஸ்லிம் தனிக் கட்சிகளின் ஆதரவு ஆளும் தரப்புக்கு எதிராக மாறுவதென்பது தேசிய அரசாங்கத்தின் பண்புகளை சிதைக்கக் கூடியது என்கின்ற ஒரு அவதானத்தின் அடிப்படையிலாவது முஸ்லிம்களின் பிரச்சனைகளைக் கேட்டறிவதற்கு இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் மாறுகின்ற ஒரு நிலை தோன்றக் கூடும் என்ற நம்பிக்கையை இவ்விடத்தில் முன்னிறுத்தலாம்.


இதையாவது முதல் கட்டமாக எமது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக முஸ்லிம் தனிக் கட்சி சார்ந்தவர்கள் செய்து காட்டுவதற்கு முன்வர வேண்டும். மாறாக முஸ்லிம் தனிக் கட்சிக்கு புறம்பான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான ஒரு தீர்மானத்துக்கு வந்தால்தான் நாங்களும் அதன்படி நடப்போம் என்று அடம்பிடிக்கின்ற ஒரு தேவைப்பாடு முஸ்லிம் தனிக்கட்சி பிரதிநிதிகளிடம் இருக்கக் கூடாது.


ஏனெனில் அவர்களையும் விட தனிக்கட்சி உறுப்பினர்கள்தான் முஸ்லிம் சமூகத்தின் காவலர்களாக இருப்போம் என்ற வாக்குறுதியை அளித்து அதன் மூலம் நமது மக்களின் அதிகமான ஆதரவைப் பெற்ற நிலை இருப்பதனால் இவர்கள் அடுத்தவர்களோடு தங்களை ஒப்பிட்டு விலகிச் செல்வதற்கான வழிகளை தேடுவது முறையல்ல.


நாம் எந்த நகர்வுகளையும் முன்னெடுக்காத நிலையில் நமது பிரச்சனை குறித்து இன்றைய நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தாது என்பது நன்கு புலப்பட்டு நிற்கின்றது. இதனால் குறைந்தபட்சம் நமது பிரச்சனை என்னவென்றாவது கேட்பதற்கான சூழலும் அறவே இல்லாமல் வெறுமையாகக் காணப்படுகிறது.


நமது இந்த மௌனத்தின் பலனாக இந்நிலை தொடர்கின்றதென்றால், சிறிய அளவிலாவது மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு தனிக் கட்சி சார்ந்தவர்களாவது அரசாங்கம் சார்ந்த ஆதரவை விலத்தி காண்பிப்பதனூடாக மாற்றம் ஒன்று வந்தால் அதுவே நமக்கு வெற்றியாகும். செய்துதான் பார்ப்போமா?

எதிர்க்கட்சி வரிசையில் அமர்தல் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகுமா? எதிர்க்கட்சி வரிசையில் அமர்தல் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகுமா? Reviewed by Madawala News on 6/24/2017 05:59:00 PM Rating: 5