Yahya

முஸ்லிம் இலக்கு வைக்கப்படுவதன் பின்னணி என்ன ? 


முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து தாக்கப்படுவதன் நோக்கமும் அதன் பின்னனியில் இருப்பவர்கள் யார் என்பதையும் முஸ்லிம் சமூகம் நிதானமாக சிந்திக்க வேண்டிய காலகட்டாயத்தில் இருக்கிறது.

இரவில் மாத்திரம் வர்த்தக நிலையங்களை குறிவைத்து தாக்கும் இந்த கும்பலால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு காரணமானவர்கள் யார்? என்ற கேள்வியும், இதுவரை அரசாங்கம் இவ் வன்செயல் குறித்து எதுவித கவலை வெளியிடாமையும், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பாரிய அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலை நீடிக்குமாக இருந்தால் பர்மாவினுடைய ரோஹின்ய முஸ்லிம்களை போல் இலங்கை முஸ்லிம்களும் விரைவில் வெளிநாடுகளில் புகழிடம் கோரும் அவலநிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.ஏனெனில் அங்கேயும் ஆரம்பத்தில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை குறிவைத்தே தாக்குதல்கள் நடத்தப்பட்டது.பிற்பட்ட காலப்பகுதியில் அதுவே இனப்படுகொலையாக விஸ்வரூபம் எடுக்கவும் ரோஹின்ய முஸ்லிம்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படவும் காரணமாக அமைந்த வரலாறுகளை நாங்கள் கவனத்தில் கொள்ளத் தவறக்கூடாது.

நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கு சவாலாக இடம்பெறும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை எதிர்கட்சி தலைவர் என்ற வகையில் இரா. சம்பந்தன் ஐயா அவர்களோ அல்லது அவர் சார்ந்தவர்களோ வாய்திறக்காமல் மௌன விரதம் இருப்பது, முஸ்லிம் சமூகத்தை வேட்டையாடும் கூட்டுச் சதியாக ஏன் இருக்கக் கூடாது என்ற கோணத்திலும் நாம் ஆராய வேண்டும்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மழுங்கடிக்கப்பட காரணமாக இருந்த முஸ்லிம்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற நோக்கத்தில் தமிழர் தரப்பு இருக்கக் கூடும் என்ற வாதமும் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. என்றாலும் ஆழமாக சில விடயங்களை ஆராய்ந்து நோக்கினால் இந்த இனவாத கும்பலின் நிகழ்ச்சி நிரழ்களுக்கு பின்னால் இவர்ளுடைய ஊக்கமும், அனுசரணையும் இருக்கிறது என்பதை நாம் ஊர்ஜிதம் செய்து கொள்ள முடியும். ஏனெனில் அண்மைக் காலமாக ஏற்பட்டு வருகின்ற அசாம்பாவிதங்கள் நீண்ட காலம் திட்டமிடப்பட்ட நேர அட்டவணையுடன் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளாகும்.

இக்காரியங்களை சாதாரண ஒரு குழுவால் அவ்வளவு தைரியமாகவும், சுலபமாகவும் அரசாங்கத்திற்கு சவலாக நிறைவேற்ற முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய இராணுவ கட்டமைப்பு தகர்த்தெறியப்பட்ட போதிலும் கூட அவர்களுடைய புலனாய்வும், நிதிப்பிரிவும் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று நாடு கடந்த தமிழீழப் விடுதலைப் புலிகளின் அரசாங்கமும், அதன் பிரதமர் அமைச்சர்கள் என அவர்களுடைய தீர்மானங்களும் அவர்களின் வழமையான நடவடிக்கைகளும் நிறைவேற்றப்படுவதில் இருந்து அவர்கள் அவர்களுடைய போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது.

அதில் ஒரு அங்கமாகத்தான் டயஸ்போராவினுடைய உதவியால் கடந்த மஹிந்தவினுடைய ஆட்சியை இப்போதுள்ள அரசாங்கத்தினால் வீழ்த்த முடிந்தது. என்பதையும் அவர்களுடைய கோடிக்கணக்கான ரூபாய்களினால் சிங்கள பேரினவாத இயக்கங்களை விலை கொடுத்து வாங்கவும், சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற பயன்படுத்தவும் முடிகின்றது.

ஞானசார தேரர் போன்ற கடும் போக்குவாத அமைப்புக்களுக்கு நிதியுதவி செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது வெளிநாட்டு சக்திகளின் மூலமாக அழுத்தங்களையும் கொடுத்து முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பௌத்த சிலைகள், விகாரைகள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை அபகரிக்கவும் இதன் மூலமாக முஸ்லிம் சமூகத்தை நெருக்குவாரப்படுத்தி தாங்கள் வேண்டி நிற்கும் தன்னாட்சி அதிகாரம் ஒன்றை பெருவதற்காக சிங்கள முஸ்லிம் மோதலை ஏற்படுத்தி அதனூடாக தமிழர்களிடம் முஸ்லிம்கள் அடைக்கலம் கோரும் நிலையை உருவாக்குதன் மூலமாக அவர்களின் பிரதான நோக்கத்தை நிறைவேற்றுவதே அவர்களின் வேலைத்திட்டமாகும்.

இந்த நோக்கத்தை அடைய தடையாக இருந்த, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதட்டல்களுக்கு அஞ்சாத மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுதலை புலிகளின் இராணுத்தை இல்லாதொழித்ததோடு மாத்திரமல்லாது, இணைந்திருந்த வட கிழக்கை பிரித்து அரசியல் அரங்கில் முஸ்லிம் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெறவும் காரணமாக இருந்தார். அதற்காக அவரை ஆதரித்த முஸ்லிம் நாடுகள் பலவகையான உதவிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து கொடுத்தது. 

வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவை எதிர்த்து ஐ.நா சபையின் வாக்கெடுப்பில் கூட மஹிந்த வெற்றி கொண்டது, சர்வதேச அரங்கில் அமெரிக்கா அவமானப்பட காரணமாகவும் அமைந்தது தனது கட்டுபாட்டில் இருந்த குவைத் போன்ற முஸ்லிம் நாடுகளும் மஹிந்தவுக்கு ஆதரவாக வாக்களித்ததும் என்றும் இல்லாதவாறு இந்தியா, பாக்கிஸ்தான் அரசாங்கங்கள் மஹிந்த விடயத்தில் ஒற்றுமையாக பக்கபலமாக இருந்ததும் மஹிந்தவை அமெரிக்கா நெருங்கவே முடியாதவாறு அச்சுறுத்தலாக அமைந்தது.

எனவே மஹிந்த ராஜபக்ஷவுடனிருக்கும் முஸ்லிம் சமூகத்தை பிரித்து அவருக்கும் முஸ்லிம் நாடுகளுக்குமிடையே உள்ள தொடர்பை பலவீனப்படுத்துவதனூடாக மாற்று தரப்பினரை ஆட்சிக்கு கொண்டுவர மேற்கொண்ட இனவாத நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மஹிந்த மீதான நன்மதிப்பு இழக்க காரணமாக அமைந்தது, அத்துடன் முஸ்லிம்களின் ஆதரவோடு இந்த நல்லாட்சியை கொண்டுவரவும் சந்தர்ப்பமாக அமைந்தது.

ஆட்சியைப் பிடித்த கையோடு முஸ்லிம் சமூகத்தை நிராகரித்து அவர்களுடைய வளங்களை அழித்து பொருளாதார, அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தி, தமது நேசர்களான தமிழர் தரப்பை அதிகாரத்தில் கோலோச்ச செய்யும் நடவடிக்கையாக இந்த இனவாத அச்சுறுத்தலை, செயற்பாடுகளை உக்கிரமடையச் செய்து சாதித்துக் கொள்ளவும், இதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டுவந்து அதனூடாக ஏலவே தங்களுடைய நிகழ்சி நிரல்களுக்கு துணை நிற்கும் சில முஸ்லிம் அரசியல் தரப்பினரையும் சேர்த்துக் கொண்டு காரியத்தை சாதிப்பதே அவர்களின் நோக்கமாகும். 

இன்று பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் இருக்கும் சில முஸ்லிம் அரசியல் தரகர்கள் பல கோடி கணக்கான ரூபாய்களை பெற்று இத்திட்டங்களுக்கு உடன்பட்டதன் காரணமாகவே நடைபெறும் முஸ்லிம் விரோத அசம்பாவிதங்களுக்கு வாய் மூடி மௌனிகளாகவும், அதேநேரம் முஸ்லிம்கள் மத்தியில் வந்து அமைதிகாக்குமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.

நல்ல நோக்கத்திற்காக ஆட்சி மாற்றம் நடைபெறுகிறது என நம்பி மஹிந்தவை தோற்கடித்த முஸ்லிம்களின் மார்பில் குத்தும் இந்த நல்லாட்சியை விரைவாக வீட்டுக்கு அனுப்ப முஸ்லிம் சமூகம் அவசரமாக களத்தில் கால்பதிக்க வேண்டிய காலகட்டாயத்தில் இருக்கிறது, என்பதை உணர்ந்து நல்லாட்சி என்ற அமெரிக்காவின் கைக்கூலிகளின் பொது எதிரியான மஹிந்தவை முஸ்லிம் சமூகம் நண்பனாக்கி கொள்வதுடன் மீண்டும் மஹிந்தவின் மக்களாட்சியை கொண்டுவர முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும். அப்போதுதான் எங்கள் உயிர்கள்,உடமைகள் மற்றும் இருப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

அஹமட் புர்க்கான்

கல்முனை.

முஸ்லிம் இலக்கு வைக்கப்படுவதன் பின்னணி என்ன ?  முஸ்லிம் இலக்கு வைக்கப்படுவதன் பின்னணி என்ன ?  Reviewed by Madawala News on 6/10/2017 02:23:00 PM Rating: 5