Yahya

கிண்ணியா கிடப்பில் கிடக்கிறது...!


தசாப்தங்கள் தாண்டிய நகர்ச்சியில் ஆங்காங்கே சின்னதான வளர்ச்சிகள், தனிமனித முயற்சிகள் - பாலைவனத்தில் சிறு துளியான சந்தோசிப்புக்களைக் கொடுத்தாலும் ஊர் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.


பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களைத் தவறாது பெற்று வந்தும் எமக்கான வேண்டுகோள்கள் ஊமையாகவே கிடக்கின்றன. ஒன்றல்ல, இரண்டல்ல ஏக காலத்தில் மூன்று பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தோம், ஷஷநாம்|| எதையும் அனுபவிக்கவில்லை. அப்படித்தான் ஓரிரெண்டு சேவைகள் அரங்கேறியிருந்தாலும் அவையெல்லாம் பொதுவான பட்டியலிலுள்ளவைகள். எமக்கென்று பிரத்தியேகமாகப் பெறப்பட்டவைகளல்ல. இன்றும் அப்படியே எமதூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளோம். இவை வரமா...? சாபமா...? என்று கூட இன்னும் அனுமானிக்க முடியவில்லை. 


காலகாலமாக கிண்ணியாப் பாலத்திற்கு உரிமை கோரியே அரசியல் செய்து வந்தவர்கள் இன்று பல்கலைக் கழகக் கல்லூரிக்கு உரிமை கோரத்துவங்கியிருக்கிறார்கள். பிறக்காத குழந்தைகளுக்கு பேர் வைப்பதிலேயே எமது அரசியல் தலைமைகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மத்திய கல்லூரி அதிபர் நியமனத்தில் எமது இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்தில் அவர்கள் ஊருக்கு ஆற்றும் பணிகளை விடவும் அரசியல் ஆதாயம் பளிச்சிட்டது.  


ஆயுதம் ஆட்சி நடாத்திய கடந்த காலங்களில் எம்மீதேறி நடந்து சென்றவர்கள் எத்தனை பேர்?

எம்மவர்களைக் கடத்திச் சென்றார்கள்.

ஏன், எம்மண்ணிலேயே கிடத்திச் சென்றார்கள்!

எமது கதறலை வாங்கிக்கொள்ள யாருக்கும் வலிமையிருக்கவில்லை.


அதே நிலைதான் இன்றும் தொடருகின்றது.

ஏமது இளைஞர்கள் வைத்தியசாலையைத் தரமுயர்த்தக் கோரி செய்த போராட்டத்திற்கு உயிர்கொடுக்க எமது அரசியல் தலைமைகளால் முடியாமலேயே இருக்கிறது. 


இவைகளை விடுத்து இன்று ஊருக்குள்ளே உற்றுப் பார்த்தால் வேலிக்கு வைத்த முட்கள் காலிலே தைக்கின்றன.


எமக்கான திணைக்களங்கள்

எமக்கான செயலகங்கள் 

எமக்கான பொதுமனைகள்


இவைகளில் எவைதான் எம்மைத் திருப்திப்படுத்துகின்றன? இங்கெல்லாம் எமது கண்ணீர் காணிக்கையிடப் பட்டுக்கொண்டேயிருக்கின்றமை கவனிப்புக்குட்படுத்தப் படாமலேயே இருக்கின்றது.


எமக்கான ஒருத்தன் அதுவும் எங்களில் ஒருத்தன் எம்மையே நசுக்கும் போது கடந்த காலத் துப்பாக்கிப் பொசுக்குதல்களெல்லாம் அவ்வளவு கசப்பான அனுபவமாகத் தோன்ற முடியாது.

பாடசாலைகளில் இருப்போர் யாவரும் எமதூர் அதிபர்களும் ஆசான்களும்தான். ஆனால் கல்வி வளர்ச்சி வீதம் கண்களை நிறைக்கின்றது. வைத்தியசாலையில் பணிபுரிவோர் அனேகர் எமது வைத்தியர்கள்தான். ஆனால் தமது தனியார் டிஸ்பென்சரிகளில் மட்டும்தான் ஆரத்தழுவி அருமருந்து!


பிரதேச செயலகத்திலும் ஏனைய அலுவலகங்களிலும் பணிபுரியும் அதிகாரிகள் பெரும்பாலானோர் எமது மண்ணின் மைந்தர்களே. இவர்களாற்றும் சேவைகளில் எம்மால் திருப்திப்பட முடியாமலேயே இருக்கிறது. 


நமது நகர, பிரதேச சபைகள் நகைப்புக்கிடமாகிக் கிடக்கின்றன. 


இப்படியாக எம்மவர்களால் ஆகிற பிரச்சினைகளுக்கே நாம் தீர்வின்றிக்கிடக்கையில் வெளியிலே எமக்குப் பென்டிங்கில் (Pநனெiபெ) ஏராளமான பிரச்சினைகள் காத்திருக்கின்றன, என்ன செய்யப்போகிறோம்?


இவைகளொரு புறமிருக்க, தேசத்தின் முதுகெலும்புகள் தான்தோன்றித் தனமாய் தடுமாறும் காட்சிகள் ஊரின் எதிர்காலத்தைப் புடம்போடுகின்றன. கிரிக்கட், சினிமா, வீதியோரச் சில்மிஷங்கள், போதை, களவு, செல்போன் என எமது தந்தியறுந்த ஓசைகள் அக்கினிக் குஞ்சுகளாய் எப்போது அவதாரமெடுப்பது?


எதையெதையோ இயக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் எமது இளைஞர்களைச் சரியாக இயக்க எப்போது முன்வருவது? எம்மவர்களில் மதம் படித்தவ்hகளை விடவும் மதம் பிடித்தவர்கள்தான் நிறைந்துகிடப்பதாகத் தோன்றுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்வதெப்போது...? உலமா சபை தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாகச் செய்கிறதா...?


இப்படியாக,

அரசியல்

அதிகாரம்

ஆன்மீகம்

என அனைத்திலுமே காலங்காலமாக பின்தங்கியிருக்கின்றோம்.


எங்களை எடுத்துக்காட்ட, எம் தேவையை எழுந்து கேட்க, எம் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல யார் இருக்கிறார்கள்? இங்கு யாருக்குத்தான் துணிச்சலிருக்கிறது? யாருக்குத்தான் மனிதாபி -மானமிருக்கிறது? 


பாடசாலைகளின் எண்ணிக்கையும் பள்ளிவாயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்த அளவிற்கு கல்வியிலும் ஆன்மீகத்திலும் எமது மண் விருத்தியடையவில்லை. அரசியல் தலைமைகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு பொதுமக்களின் அரசியல் அனுபவிப்புக்கள் அதிகரிக்கவில்லை. அமைப்புக்களின் எண்ணிக்கையும் இயக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த அளவிற்கு வழிகாட்டுதலின் வீரியம் அதிகரிக்கவில்லை.


என்ன செய்யப்போகிறோம்....?

அல்லாஹ்வால் ஆசிர்வதிக்கப்பட்ட அழகிய கிண்ணியா;

அதைக்கட்டிக்காக்க, கட்டியெழுப்ப நாமனைவரும் என்ன செய்யப்பபோகிறோம்....???


காத்திரமாகச் சிந்தித்து புதியதோர் விதிசெய்வோம்....!

சூத்திரதாரிகளின் சதிவெல்வோம்!


நன்றி- ரா.ப.அரூஸ்

கிண்ணியா கிடப்பில் கிடக்கிறது...! கிண்ணியா கிடப்பில் கிடக்கிறது...! Reviewed by Madawala News on 6/27/2017 04:19:00 PM Rating: 5