Ad Space Available here

மீண்டும் சர்ச்சையில் தேசியப்பட்டியல்?


எஸ்.றிபான் -

புனிதமான ரமழான் மாதத்தில் நன்மைகளை கூடுதலாகப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் பலரும் இப்தார் நிகழ்வுகளை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை, இப்தார் நிகழ்வின் மூலமாக தங்களை சமூகத்தின் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவதற்காகவும் ஒரு சிலர் இப்தார் நிகழ்வுகளை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். 


இவ்வாறு இப்தார் நிகழ்வுகள் நடாத்தப்பட்டாலும் அரசியல் கட்சிகளினாலும், அரசியல்வாதிகளினாலும் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்வுகளில் பெருந் தொகையானவர்கள் கலந்து கொள்வதனையும் அவதானிக்க முடிகின்றன. 


அந்த வகையில் எல்லா அரசியல் கட்சிகளும், அவற்றின் பிரதிநிதிகளும் இப்தார் நிகழ்வுகளை அம்பாறை மாவட்டத்திலும் நடாத்தியுள்ளார்கள். குறிப்பாக இத்தகைய இப்தார் நிகழ்வுகளுக்கு அவர்கள் சார்ந்த கட்சியின் ஆதரவாளர்களே அழைக்கப்படுகின்றார்கள். மேலும், இவை முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆதரவாளர்கள் தமது கட்சியின் தலைவர் என்ன செய்தியை சொல்லப் போகின்றார் என்பதில் அதிக ஆர்வங் காட்டுவதனையும் குறிப்பிட்டாக வேண்டும்.


கடந்த வருடம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் இப்தார் நிகழ்வுகள் அட்டாளைச்சேனயிலும், அக்கரைப்பற்றிலும் நடைபெற்றது. இவற்றில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அன்றைய அரசியல் சூழல் தொடர்பில் கருத்துக்களை முன் வைத்தார்.


இம்முறை அட்டாளைச்சேனையிலும், அக்கரைப்பற்றிலும் நடைபெற்ற இப்தார் நிகழ்வுகளில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்வார் என எதிர் பார்க்கப்பட்ட போதிலும் ஏதோ காரணங்களினால் அவரால் இவற்றில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மாத்திரமன்றி ஏற்பாட்டாளர்களும் பெரிதும் ஏமாற்றமடைந்தார்கள். 


அட்டாளைச்சேனையில் இப்தார், இதில் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்வார் என்றதும் கூடவே முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியது. 


அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிய அறிவித்தலை ரவூப் ஹக்கீம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அட்டாளைச்சேனையில் அதிகரித்துக் காணப்பட்டது. அது பற்றிய கருத்தாடல்கள் சமூக வலைத்தளங்களிலும் சூடு பிடித்துக் கொண்டன. இதனை இன்னும் ருசிப்படுத்தும் வகையில் அட்டாளைச்சேனையில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக கடந்த இரண்டு வருடங்களாக எப்போது கனியுமென்று எண்ணத்திலுள்ள ஒரு சிலர் கொழும்புக்கு சென்ற கதைகளும் உள்ளன. மேலும், ரவூப் ஹக்கீமிடம் இளைஞாகளில் ஒரு குழுவினர் தேசியப்பட்டியல் விவகாரத்தை நேரடியாகவும் கேட்க இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுமென்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தெரிவித்திருந்தார். இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதே போன்று தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி எம்.எச்.சல்மான் இன்று வரைக்கும் அப்பதவியில் நிலைத்துள்ளார். இதனால், தற்காலிகம் என்ற போர்வையில் சல்மானுக்கு நிரந்தரமாக வழங்கப்பட்டுள்ளது என்பதே முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பலரினதும் அபிப்ராயமாகும்.


இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நபவி எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் தமது பதவியை இராஜினமாச் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுன்றன. இதனால் அவரது இடத்திற்கு சம்மாந்துறையைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எம்.எஸ்.எம்.இஸ்மாயில் நியமிக்கப்பட இருப்பதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் ஊர்ஜிதப்படுத்தினார். 


இதனால், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு முன்னதாக தெரிவிக்கப்பட்ட எந்த சாட்டுக்களையும் இனிமேல் சொல்ல முடியாதொரு சூழலில் ரவூப் ஹக்கீம் உள்ளார். ஆரம்பத்தில் ஹஸன்அலி, பசீர் சேகுதாவூத் ஆகியோர்கள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எனக் கூறப்பட்டது. தற்போது இவர்கள் வகித்த பதவிகள் கூட பறிக்கப்பட்டுள்ளன. சாதாரண உறுப்பினர்கள் போலவும், தேசியப்பட்டியலைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமலும் உள்ளார்கள். எனவே, ரவூப் ஹக்கீம் மீண்டும் ஒரு தடைவ அட்டாளைச்சேனையை ஏமாற்றப் போகின்றாரா அல்லது தனது வாக்குறுதியை நிறைவேற்றப் போகின்றாரா என்ற கேள்விகள் அம்பாறை மாவட்டத்தில் பரவலாக உள்ளது.

இதனிடையே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இஸ்மாயிலை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் பட்சத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்கு மிகப் பெரிய தலையிடியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சம்மாந்துறையில் மாத்திரமின்றி, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் இந்த நியமனம் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பித்தக்கது. 


இதே வேளை, அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் காங்கரஸ் வழங்காது போனால் அங்கு அக்கட்சியின் செல்வாக்கில் பாரிய எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் காண முடியாது. கட்சியின் செல்வாக்கை பாதுகாத்துக் கொள்வதற்கு அட்;டாளைச்சேனைக்கு வழங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் முஸ்லிம் காங்கிரஸிற்கு இருக்கின்றது. ஏனெனில் தமக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தரப்பட வேண்டுமென்று சுமார் 08இற்கும் மேற்பட்டவர்கள் ரவூப் ஹக்கீமை நச்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள். ரவூப் ஹக்கீம் இவர்களின் தன்மைகளுக்கு ஏற்ப விடைகளை அளித்துக் கொண்டிருக்கிறார். இவர்களில் யாரை நியமனம் செய்தாலும் 07 பேர் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக போர்கொடி தூக்குவார்கள். சில வேளை இவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலியின் அணியிலோ வேறு கட்சிகளிகளோ இணையவும் கூடும். கட்சியின் தலைமையை புகழ்நது கொண்டிருப்பவர்கள் தூசிக்கவும் தயங்கமாட்டார்கள். இத்தகைய முடிவுகள் முஸ்லிம் காங்கிரஸிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும். 


ஹஸன்அலியின் அணியில் ஒரு சிலர் ரவூப் ஹக்கீமின் தலைமைக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கையில் அவ்வணியில் மேலும் சிலர் இணைவது என்பது அந்த அணியை பலப்படுத்துவதாகவும் அமையும். மேலும், வேறு பிரதேசங்களிலும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தருவதாக ரவூப் ஹக்கீம் தேர்தல் காலங்களில் குறிப்பிட்டுள்ளார். 


குறிப்பாக, வன்னி, ஓட்டமாவடி பிரதேசங்களை குறிப்பிட முடியும். இந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டியதொரு சூழலில் ரவூப் ஹக்கீம் உள்ளார். அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கும் பட்சத்தில் அட்டாளைச்சேனையில் தமக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்துடன் எதிர்வாதம் செய்கின்றவர்களோடு வேறு பிரதேசங்களில் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையே என்று எதிர்ப்புக்களைக் காட்டுவார்கள். இவ்வாறு எதிர்ப்புக் காட்டுகின்றவர்களில் சிலர் ஹசன்அலியின் அணியிலோ வேறு கட்சிகளிலோ இணையலாம். 


இவ்வாறு இன்றைய சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சல்மானிடமிருந்து பெற்று வேறு நபர்களுக்கு வழங்கினாலும் பிரச்சினைதான், வழங்காது போனாலும் சிக்கல்தான். இந்த முடிச்சுக்களில் தப்பித்துக் கொள்வது என்பது ரவூப் ஹக்கீமுக்கு இலகுவாக அமையாது. 


எதிர்வரும் செப்படம்பர் மாதத்துடன் கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைகின்றது. அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் கிழக்கு மாகாண சபைக்காக தேர்தலை நடத்தும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. இத்தேர்தலை முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பில் எதிர்கொள்ள வேண்டுமென்று முஸ்லிம்கள் பரவலாக எதிர்பார்க்கின்றார்கள். இதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகள் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளன. இதே வேளை, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கும் அழைப்பு விடுக்கவுள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு என்பது தம்மை அழித்துக் கொள்வதற்கான பொறி என்று கணித்துள்ளது. குறிப்பாக ரவூப் ஹக்கீமின் தலைமைக்கு வைக்கப்படும் ஆப்பாகவே முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு அமையும் என அக்கட்சியின் தலைமை விசுவாசிகள் கருதுகின்றார்கள். இதனால், முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பில் இணைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன. 


மறுபுறத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இல்லாத நிலையில் ஏனைய முஸ்லிம் கட்சிகள் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கினாலும் அது முஸ்லிம் காங்கிரஸிற்கு சவாலாகவே அமையும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை. இனவாத செயற்பாடுகள், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக பெரும்பான்மையான முஸ்லிம்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், கட்சிகளும் ஓர் அணியில் இணைந்து செயற்பட வேண்டுமென்ற நல்லெண்ணத்தைக் கொண்டுள்ளார்கள். இந்த எண்ணம் முஸ்லிம்களிடையே தானாகவே தோன்றி வளர்ந்துள்ளமைதான் இதில் உள்ள ஆபத்தாகும். இதனை சரியாக கையாளாது போகின்ற தரப்பினருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் ஏற்படவும் கூடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவதற்கு இருக்கின்ற ஒரே வழி முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு ஏதோவொரு வகையிலும் உருவாக்காமல் இருப்பதுதான். இதற்கான சாத்தியங்களும் இல்லாமலுமில்லை. 


மேலும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பேசு பொருளாக தேசியப்பட்டடியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, கட்சிகளுக்குள் காணப்படும் உட்பூசல், முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாத நடவடிக்கைகள், அரசாங்கத்தின் மௌனப் போக்கு, முஸ்லிம் தலைவர்களின் பொம்மலாட்டம் போன்றன அமையும் என்பதும் குறிப்பி;டத்தக்கது. இவற்றில் எக்கட்சி முன்னேற்றகரமாக செயற்பட்டுள்ளதோ அக்கட்சிக்கே முஸ்லிம்கள் வாக்களிக்கவும் கூடுமென்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்படுகின்றன. 


நன்றி: விடிவெள்ளி

மீண்டும் சர்ச்சையில் தேசியப்பட்டியல்? மீண்டும் சர்ச்சையில் தேசியப்பட்டியல்? Reviewed by Madawala News on 6/25/2017 10:50:00 PM Rating: 5