Yahya

சட்டப்படி தப்பித்தல்


முன்னொரு காலத்தில் கிராமப்புற சிறுவர்களால் கள்ளன் - பொலிஸ் விளையாட்டு ஒன்ற ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு விளையாடப்படும். இந்த விளையாட்டில் கள்வர்களாக பாத்திரமேற்கும் சிறுவர்களை பொலிஸாக பாத்திரமேற்கும் சிறுவன் தேடிப்பிடிப்பதுதான் முக்கிய விடயமாகும். கள்வர்கள் தேடிப் பிடிக்கப்பட்டதும், 'சூட்டிங்' என்ற வார்த்தையை கூறி கற்பனையாக சுடுவதோடு ஆட்டம் முடிந்துவிடும். 


முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்ட கள்வன், அடுத்த ஆட்டச் சுழற்சியில் பொலிஸாக பாத்திரமேற்பான்.

இந்த ஆட்டத்தில் கள்வர்களாகவும் பொலிஸாகவும் பாத்திரமேற்பவர்கள் நெருக்கமான நண்பர்களாக இருப்பதுண்டு. கள்வர்கள் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வதற்கும் எல்லை விதிக்கப்பட்டிருக்கும். 

எனவே வீடுகளின் சுவர் முடுக்குகளிலும், மர இடுக்குகளிலும், மேசைக்கு கீழாகவுமே கள்வர்கள் ஒளிந்து கொண்டிருப்பார்கள். இவ்வாறான நேரத்தில் பொலிஸாக பாத்திரமேற்பவர் தனது நண்பர் ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தை ஓரளவுக்கு அறிந்தாலும், அவரை முதலில் கண்டுபிடித்தால் அடுத்த ஆட்டத்தில் அவன் பொலிஸாக பாத்திரமேற்று சிரமப்பட வேண்டும் என்பதற்காக, நண்பனை காணாதது போலவே நடித்து, மற்ற எல்லாரையும் கண்டுபிடித்த பிறகு நண்பனை கண்டுபிடிப்பான் அந்த சிறுவன்.


இலங்கையில் கிறிஸ் மனிதன் விவகாரம், பேருவளை வன்முறைகள் மற்றும் அதற்குப் பின்னரான இனவாத செயற்பாடுகளில் சட்டத்தின் ஆட்சி தொடர்பாக நடக்கின்ற சம்பவங்கள், சில வேளைகளில் ஒரு பொது மகனுக்கு இவ்விளையாட்டை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த சீசனுக்கான இனவாத தொலைக்காட்சித் தொடர் நாடகத்தின் கடைசி அங்கத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அல்லது சம்பவங்கள் பல்வேறு விதமான மனவோட்டங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. 


பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை, அமைச்சரவையின் அறிக்கை, அஸ்கிரிய பீடத்தின் அறிவிப்பு, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இப்தார் நிகழ்வுகளை புறக்கணிக்கப் போவதாக முஸ்லிம்கள் பயங்காட்டியமை, பின்னர் கலந்து கொண்டமை, சர்வதேச நாடுகளின் இராஜதந்திர அழுத்தம், தேடப்பட்டு வந்த தேரர் நீதிமன்றத்தில் சரணடைந்தமை, பொலிஸார் கைது செய்தமை, உடனடியாக பிணை வழங்கியமை எல்லாவற்றையும் கோர்வையாக தொகுத்து நோக்குகின்ற போது பல்வேறு சிந்தனைத் தூண்டுதல்கள் தோற்றம் பெறுகின்றன.


  • பொறுமையை சோதித்தல்

கடந்த பல வருடங்களாக இலங்கை முஸ்லிம்களின் இன, மத தனித்துவங்களுக்கு எதிராக மடித்துக் கட்டிக் கொண்டு நிற்கின்ற ஒரு சில காவியுடைதாரிகளையும் வேறு சில போலி தேசப் பற்றாளர்களையும் உள்ளடக்கிய இனவாத சக்திகளின் செயற்பாடுகள், வழக்கம் போல இந்த ரமழான் நோன்புகாலத்திலும் தீவிரமடைந்திருந்தன. இது விடயத்தில் முஸ்லிம் மக்கள் இன்னும் பொறுமை காத்துக் கொண்டிருந்தாலும், நல்லாட்சி மீது அவர்களுக்கு விரக்தி ஏற்பட்டிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.


இனவாதிகள் தங்களுடைய பொறுமையை சோதிக்கின்ற போது சாதாரண முஸ்லிம் மக்கள் பொறுமையுடன் செயற்பட்ட போதும், ஒரு சில முஸ்லிம் அரசியல் தலைமைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் பொறுமையிழந்து வருகின்றனர். மிகக் குறிப்பாக, சிங்கள சமூகத்தின் முற்போக்கு சக்திகள், மானிடவியல் பண்புள்ளோர், புத்திஜீவிகள், சில பிக்குகள் கூட அநாகரிகமான இனவாத செயற்பாடுகள் தொடர்பில் வெளிப்படையாக பேசத் தொடங்கியிருக்கின்றார்கள். இவ்விடயத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் சரியாக சர்வதேசமயப்படுத்தவில்லை என்றாலும் கூட தூதரகங்கள் ஊடாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் இவ்விவகாரம் உலகின் காதுகளை எட்டியுள்ளது.


அந்த வகையில், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் பல தமது உத்தியோகபூர்வ கண்டனத்தை தெரிவித்துள்ளன. கொழும்பில் ஒன்றுகூடிய ஆறுக்கு மேற்பட்ட நாடுகளில் தூதுவர்கள், இலங்கை முஸ்லிம்கள் மீதான இனத்துவ நெருக்குவாரங்கள் குறித்த தமது அரசின் அதிருப்தியை உறுதியாக பதிவு செய்திருக்கின்றனர். பலஸ்தீனம் உள்ளடங்கலாக பல முஸ்லிம் நாடுகளில் குண்டுகளை பொழிந்து வரும் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் கூட மட்டக்களப்பில் வைத்து இனவாத செயற்பாடுகளை கண்டிக்கும் தொனியில் பேசியிருக்கின்றார். முஸ்லிம் நாடுகள் எதுவும் தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக அறிய முடியவில்லை என்றாலும், ஓ.ஐ.சி. அமைப்பு இது விடயத்தில் அவதானம் செலுத்தியிருப்பதாக தெரிகின்றது.


உண்மையில் இது இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்காத சர்வதேச இராஜதந்திர நெருக்கடியாகும். எனவே இது விடயத்தில் சட்ட நடடிவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு இருந்தது. ஆனபோதும், தற்கால இனவாதத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்ற கலகொட அத்தே ஞானசார தேரரை தேடும் படலம் தொடர்;ந்து கொண்டிருந்ததே தவிர அவரை கைது செய்ய முடியவில்லை.


  • நிர்ப்பந்த நிலை

உலகின் மிகப் பலம்பொருந்திய புலனாய்வு அமைப்பைக் கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், ஒரு பௌத்த துறவியை கைது செய்ய முடியாமல் தவிப்பது எவ்வாறு? என்ற கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்ட சமகாலத்தில் இராஜதந்திர அழுத்தங்களும், முஸ்லிம் தரப்பின் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. தற்கால இனவாதத்தை சம்பிக்க ரணவக்கவே ஆரம்பித்து வைத்தார் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தேரருக்கு தஞ்சம் கொடுத்திருக்கின்றார் என்றும் அரசல் புரசலாக பேசப்பட்டது.


அதுமட்டுமன்றி, நாட்டில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருப்பதை அரசாங்கம் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. ஆகவேதான், கடும்போக்கு செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்த நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது.


ஜூன் 23ஆம் திகதி ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையானது ஒரு காத்திரமான அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில், 'முஸ்லிம் சமூகத்தினர் மற்றும் ஏனைய மதங்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை தூண்டுபவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டத்திற்கு அமைவாக உடன் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்போது குற்றவாளியின் சமூக அந்தஸ்து, இன, மத பின்னணி மற்றும் அரசியல் சார்புநிலை பற்றி கவனத்தில் எடுக்காது பாரபட்சமற்ற விதத்தில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இவ்வறிக்கை ராஜதந்திர மட்டத்திலும் மிகுந்த கவனிப்பை பெற்றிருந்தும் ஐந்தாறு நாட்களாக இதில் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையிலேயே, ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்பாடு செய்கின்ற இப்தார் நிகழ்வுகளை முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று சிவில் செயற்பாட்டுத் தளத்தில் இருந்து நவீன ஊடகங்கள் மூலமாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.


எதிர்க்கட்சி ஆசனத்தில் எந்த முஸ்லிம் எம்.பி.யும் இல்லாத காலப்பகுதியில், அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு, அதன்வழிவந்த வரப்பிரசாதங்களையும் சுகித்துக் கொண்டு இப்தாருக்கான ஒரு அழைப்பை புறக்கணிப்பது சாத்தியமானதா என்பதும், அவ்வாறு செய்வதால் சாதிக்க முடியுமா என்பதும் பரிசீலனைக்குரியதாகும். எவ்வாறிருப்பினும், முஸ்லிம்கள் இப்தாரை புறக்கணித்து சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் அரச உயர்மட்டத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்நிலையிலேயே, ஜனாதிபதியின் இப்தார் நடைபெற்று மறுநாள் கடந்த 21ஆம் திகதி காலை 10.25 மணிக்கு ஞானசார தேரர் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக செய்தி வெளியாகியது. 


ஞானசாரர் இவ்வாறு சரணடைந்ததற்கும், ஜனாதிபதியின் இப்தாரில் முஸ்லிம் அரசியல்வாதிகள் கலந்து கொண்டதற்கும் இடையில் ஏதோ சம்பந்தம் இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும் அதற்கு ஆதாரங்கள் இல்லை. எவ்வாறிருப்பினும், இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் ஒரு ஆறுதலான செய்தியாக ஞானசாரர் சரணடைந்த விடயம் இருந்தது. ஆனால், அந்த ஆறுதல் மூன்று மணித்தியாலங்களுக்கு கூட நீடிக்கவில்லை.


  • மூன்று பிணைகள்

கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஞானசார தேரர் சரணடைந்ததை தொடர்ந்து, முன்னதாக அந்த நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டிருந்த பிடியாணை அவர் சரணடைந்தமையால் மீளப்பெறப்பட்டு பிணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திலும் மற்றும் 4ஆம் இலக்க நீதிமன்றத்திலும் தேரர் ஆஜர் செய்யப்பட்டார். அந்த நீதிமன்றங்களும் அவருக்கு பிணை வழங்கியுள்ளன.


நீதிமன்ற தீர்மானத்தை விமர்சிக்க முடியாது என்றாலும், வயிற்றுப் பிழைப்புக்காக திருடுபவன், முடிச்சிவிக்கி, மொள்ளமாரி என சின்ன சின்ன குற்றவாளிகளுக்கே தண்டனை வழங்கப்படுகின்ற ஒரு நாட்டில், இனவெறுப்பு பிரசாரத்திற்காக ஒரு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேசத்தில், ஒரே நாளிலேயே ஒரு சரணடைதலில் இருந்தும், இரண்டு கைதுகளில் இருந்தும் பிரதான இனவெறுப்புப் பிரசாரகருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு ஒருவித மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.


இலங்கையில் சட்டம் நிலைநாட்டுவதற்காக ஒரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. ஆனால், ஞானசாரர் கைது செய்யப்படவில்லை என்ற பரவலான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் இதோ கைது செய்தோம், நீதிமன்றம் அவருக்கு பிணைவழங்கியுள்ளது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்காகவும், சட்டப்படி தப்பிக்கும் உத்தி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் முஸ்லிம்களிடையே பரவலாக உருவாகியுள்ளது. இந்த சந்தேகம் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி கோட்டை நீதிவானுக்கும் ஏற்பட்டுள்ளதாக சொல்ல முடியும்.


  • நீதவானின் சந்தேகம்

கோட்டை மேலதிக நீதிவான் ஸ்ரீராகல நீதிமன்றில் வைத்தே பொலிஸாரிடம் இதுபற்றி கேட்டிருக்கின்றார். 'நள்ளிரவு வேளையில் பயங்கர விடயம் எனக் கூறி ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பீ அறிக்கையை நீதிமன்றில் வைத்து வாபஸ் பெற்றுக் கொண்டது' ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 'அந்த அறிக்கையை பார்த்தபோது நான் அதிர்ந்து போனேன். நாடே பற்றி எரியுமளவுக்கு அச்சுறுத்தும் வண்ணம் அதில் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. ஆனால் பிறகு சமர்ப்பிக்கப்பட்ட இடையீட்டு மனுவின் ஊடாக புதிய விடயங்கள் கூறப்பட்டுள்ளன. முன்னைய அறிக்கையில் உள்ளடங்கியிருந்த எதுவும் இதில் இருக்கவில்லை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


அது மாத்திரமன்றி, 'இவ்வாறான ஒருவருக்கு ஏன் பிணை வழங்கினீர்கள் என்று பொதுமக்கள் நீதிமன்றை தூற்றுவார்கள். பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் நீதிமன்றுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கின்றது' என்ற விடயத்தையும் நீதிவான் சுட்டிக்காட்டியுள்ளார். 


சரணடைந்த ஞானசார தேரருக்கு பிணை வழங்க பொலிஸ் தரப்பு ஆட்சேபம் தெரிவிக்காமை, ஒரு நீதிவானுக்கே இந்த அளவுக்கு சந்தேகங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்றால், சரண் - பிணை – கைது – பிணை என அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.


உலக அனுபவத்தின் படி, சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகி வாழ்கின்ற மியன்மார் நாட்டில் இனவாதம் முஸ்லிம்கள் மீது பாய்ந்துள்ளது. அதேபோன்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்யும் நாட்டில் இனவாதிகளை முழுமையாக கட்டுப்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது கடுமையான இனவாத ஒடுக்குமுறைகளுக்கு வித்திட்டவரான அசின் விராது தேரருக்கு எதிராக அந்த நாட்டின் பௌத்த உயர்சபை சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இலங்கையில் அவ்வாறான நிலைமைகளை அவதானிக்க முடியவில்லை.


  • விமர்சிக்கப்படும் அறிக்கை

அமைச்சரவை அறிக்கை வெளியான பிற்பாடு கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகா சங்க சபை வெளியிட்டுள்ள அறிக்கை கவனிப்பிற்குரியது. அந்த அறிக்கையில், 'ஞானசார தேரரின் ஆவேசமிக்க நடத்தையையும் கோலத்தையும் கருத்துத் தெரிவிக்கும் பாணியையும் நாம் எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறும் கருத்தை புறக்கணிக்க முடியாதுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பௌத்த உயர்பீடங்களின் மனநிலைலை சாடைமாடையாக வெளிப்படுத்துவதாகவும் எடுத்தாளப்படலாம்.


பொறுப்புவாய்ந்த மகா சங்க சபையினர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை முஸ்லிம்கள் மனதில் கவலை கலந்த உணர்வை ஏற்படுத்தியிருப்பது ஒருபுறமிருக்க, சிங்கள பௌத்த சமூகத்தில் இருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரபல பௌத்த மதகுருவுமான தம்பர அமில தேரர் இவ்வறிக்கையை வன்மையாக கண்டித்துள்ளார். 'இது மகா சபையினரால் நிறைவேற்றக் கூடிய ஒரு அறிக்கை அல்ல' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஞானசார தேரரின் வெளித்தோற்றம் (கோலம்) மட்டுமன்றி அவர் குறிப்பிடும் கருத்துக்களும் பேளத்த தர்மத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணானதே என்பதை சுட்டிக்காட்டியுள்ள அமில தேரர், புத்தபெருமானின் நடத்தைகள் மூலம் இக்கருத்தை நிறுவிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 'அஸ்கிரிய மகா சங்கத்தின் இவ்வறிக்கையானது புத்த தர்மத்தின் கோட்பாடுகளை புறக்கணித்துள்ளது' என்று கல்வியியலாளரான கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன தெரிவித்திருக்கின்றார். இந்த அடிப்படையில் நோக்கினால், சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள், புத்திஜீவிகள் போன்றோர் முஸ்லிம் சமூகத்தில் உள்ள அவ்வகை சார்ந்தோரை விடவும் துணிவுடன் செயற்படுவதை காண முடிகின்றது.


இவ்வாறு, இனவாதம் பற்றிய சிங்கள தேசத்தின் நிலைப்பாடுகள் ஆளுக்காள் வேறுபட்டதாக இருக்கின்றன. பல பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடாத்தியும் கண்டுபிடிக்க முடியாத குற்றம்சாட்டப்பட்ட பிக்கு ஒருவர் தானாக வந்து ஆஜரானாலும் அவர் பிணையில் செல்லக் கூடிய அளவுக்குத்தான் நமது யதார்த்த நிலைமை இருக்கின்றது என்பதை முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், இந்ந நிலைமைகளின் உள்ளரங்கங்களை அறிந்து கொள்ளாத அளவுக்கு முஸ்லிம்கள் முட்டாள்களுமல்ல என்பதை அரசாங்கமும் பொறுப்பு வாந்த தரப்பினரும் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.


பல்லின கலாசாரத்தைக் கொண்ட நாடான இலங்கையில், இனவாதத்தை தோற்றுவித்தவர்களும் அதனை திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளும் யார் யாராக இருந்த போதிலும், இனவாதத்தை மக்கள்மயப்படுத்துவதில் பொது பலசேனா அமைப்பு தற்போது மும்முரமாக செயற்பட்டு வருவது வெளிப்படையானது. ஞானசார தேரரை, பௌத்த மதத்தை காப்பாற்றும் செயற்பாட்டாளராக அல்லது இன்னுமொரு அநகாரிக தர்மபால போல் காண்பிப்பதற்கும் சிங்கள அரசியல்வாதிகள் சிலர் முயற்சிக்கின்றனர். அதன்மூலம் தமது அரசியல் கனவுகளை நனவாக்க கங்கணம்கட்டி செயற்படுகின்றனர்.


இதற்கிடையில், சட்டத்தின் ஆட்சி என்பது மக்களின் நம்பிக்கைகளை சிலவேளைகளில் தகர்த்தெறிந்து விடுகின்றது. இதற்கு பொலிஸாரை குற்றம் சொல்வது முட்டாள்தனமானது. ஏனெனில் பொலிஸார் தமக்கு கிடைக்கின்ற கட்டளைகளை நிறைவேற்றுகின்ற அரச ஊழியர்கள் மட்டுமே. எனவே எய்தவன் இருக்க அம்பை நோவதை விடுத்து, பொலிஸாருக்கு கட்டளையிடும் அரச உயர்மட்டத்துடனேயே முஸ்லிம் தரப்பு கலந்துரையாட வேண்டியுள்ளது. முஸ்லிம் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.


ஒரு நீதிபதியே கேள்வி எழுப்புமளவுக்கு, நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளில் முன்னுக்குப்பின் திருத்தங்கள் செய்யபடுமாயின், பொறுப்புவாய்ந்த பௌத்த சபை ஆரோக்கியமற்ற அறிக்கை ஒன்றை வெளியிடுமாயின் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அனுமானிக்க முடியாதுள்ளது. ஆனால் எதுவும் நடக்க வாய்ப்பிருக்கின்றது.


இப்போது ஞானசார தேரர் சரணடைந்தமை, பின் கைதாகியமை, மூன்று நீதிமன்றங்களாலும் பிணை வழங்கியுள்ளமை உண்மையில் சட்டப்படி நடைபெற்றிருக்கின்றது. எனவே, 'ஞானசாரரை கைது செய்யவில்லை' என்ற கோஷங்களை இனி யாரும் எழுப்ப முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதனால் இருபக்க செயற்பாட்டு களங்களிலும் இன்னும் சில நாட்களுக்கு இனம்புரியாத அமைதி நிலவும். அந்த இடைவெளியில் அடுத்த கட்ட காட்சிக்கான திட்டங்களை சம்பந்தப்பட்ட சக்திகள் தீட்டிக் கொள்ளலாம்.

உண்மையில் இது முடிவல்ல. காட்சி இடைவேளை.

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 25.06.2017)

சட்டப்படி தப்பித்தல் சட்டப்படி தப்பித்தல் Reviewed by Madawala News on 6/25/2017 01:33:00 PM Rating: 5