tg travels

நல்லாட்சியில் நம்பிக்கை இழந்துள்ள முஸ்லிம்கள்

சஹாப்தீன் -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக பல எதிர் நடவடிக்கைகள் பொது பல சேன உட்பட பௌத்த இனவாத அமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வினவாத நடவடிக்கைகள் பற்றி அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் பௌத்த இனவாத அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாறாக இத்தகைய அமைப்புக்களுக்கு ஒரு சில அமைச்சர்களினதும், அதிகாரிகளினதும் பூரண ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. இதனால், மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் மீது முஸ்லிம்கள் வெறுப்புக் கொண்டார்கள். இந்த வெறுப்புணர்வுதான் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறவும், நல்லாட்சி என்ற நாமத்தை தாங்கிய அரசாங்கமும் உருவாவதற்கும் வழி அமைத்தது. 

நம்பிக்கை இழப்பு
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். தேர்தல் காலங்களில் இனவாதத்தை ஒழிப்போம். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாமல் செய்வோம். இனவாதம் பேசி நாட்டை குழப்ப முயற்சிகளை எடுப்பவர்களை நாய்க் கூட்டில் அடைப்போம். எல்லா இனங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய புதிய அரசியல் அமைப்பொன்றினை உருவாக்குவோம் என்றெல்லாம் முன் வைக்கப்பட்ட கவர்ச்சிகரமான வார்த்தைகள்தான் முஸ்லிம்களிடையே இன்றைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ள காரணமாக இருந்தது. ஆனால், இன்று மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கம் பருவாயில்லை என்று எண்ணும் வகையில் நல்லாட்சி நாம அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். தேர்தல் காலங்களில் முன் வைக்கப்பட்ட முஸ்லிம்களை நம்பிக்கை கொள்ளச் செய்த எந்த வார்த்தையும் உயிர் பெறவில்லை. அவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முன் வைக்கப்பட்ட ஏமாற்று நாடகங்கள் என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் வந்துள்ளார்கள். 

நல்லாட்சி அரசாங்கத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பொது பல சேன மற்றும் இதர பௌத்த இனவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்த அமைப்புக்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அந்த அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர்களை கண்டிக்கவோ, கட்டுப்படுத்தவோ நடவடிக்கைகளை எடுக்கப்படவில்லை. இதனால், பௌத்த இனவாத அமைப்புக்களின் முஸ்லிம் விரோதப் போக்கின் இரும்புக் கரங்களின் அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. முஸ்லிம்களின் பள்ளிவாசல்களும், வர்த்தக நிலையங்களும் நாளாந்தம் தாக்குதல்களுக்கு உட்படுகின்றன. முஸ்லிம்களின் காணிகள் கபளிகரம் செய்யப்படுகின்றன. முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் கூட தொல்பொருள் திணைக்களத்தின் கழுகுப் பார்வைக்குள் கொண்டு வரப்படுவதோடு, தொல்பொருள் பிரதேசம் என்று அடையாளப்படுத்தும் கற்களும் நடப்படுகின்றன.

கடந்த 01.06.2017 வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தோப்பூர் செல்வநகரில் கடந்த 40 வருடங்களாக வாழ்ந்து கொண்டு வரும் முஸ்லிம்களின் குடியிருப்பு பிரதேசத்தினை தொல்பொருள் திணைக்களத்தினர் தொல்பொருள் பிரதேசம் என்று அடையாளப்படுத்தியுள்ளார்கள். இதனால், செல்வநகர் முஸ்லிம்கள் தாம் எந்த வேளையிலும் வீதிக்கு வரலாமென்ற அச்சத்திற்குள்ளாகி உள்ளார்கள். இவ்விதமாக முஸ்லிம்களை துரத்துவதற்கு முற்படும் சம்பங்கள் நடைபெற்றவாறு இருக்கின்றன. இதனால், முஸ்லிம்கள் யார் ஆட்சி செய்தாலும் முஸ்லிம்களை திட்டமிட்டு ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டே இருப்பார்கள் என்ற விரக்தி நிலையை அடைந்துள்ளார்கள்.

சட்டம் எல்லோருக்கும் சமம்
இதே வேளை, 01.06.2017இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலாகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி இன்றைய நிலையில் முஸ்லிம்களின் மனநிலை எவ்வாறுள்ளதென்று தெளிவுபடுத்தியுள்ளார். அவர் அங்கு கருத்துரைக்கையில், ' முஸ்லிம்களுக்கு எதிராக ஞானசார தேரரே மிகத் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். ஆனால், அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு மௌனம் காக்கிறது. கடந்த காலங்களில் உலமா சபை ஞானசார தேரருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பலன் ஏற்படவில்லை. அவர் வீதியில் இறங்கி முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிராக விமர்சனங்களை வெளியிடுவதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். நாம் தீர்வொன்றினை நாடியே வந்துள்ளோம். தீர்வே எமக்கு முக்கியம். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை. முஸ்லிம்களாகிய நாம் பிக்குமார்களை கண்ணியப்படுத்துகிறோம். அவர்கள் நம்பகத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி கருத்துக்கள் தனியே ஜம்மிய்யத்துல் உலமா சபையின் கருத்தல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்களினதும் கருத்துக்களும் இதுவாகவே உள்ளன. ஆதலால், அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், முஸ்லிம்கள் தமது பிரச்சினகைள் குறித்து அரசாங்கத்திடமோ, அதிகாரிகளுடனோ பேச்சுவார்த்தைகளை நடத்தவதில் பயனில்லை. பேச்சுவார்த்தைகள் தங்களை ஏமாற்றுவதற்கும், தங்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்கும் கையாளப்படும் இராஜதந்திரம் என்பதனைப் புரிந்துள்ளார்கள் இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கவனத்திற் கொள்ளல் வேண்டும். 

இன்று நாட்டில் சட்டம் ஆளுக்கும், இனங்களுக்கும் வேறுபட்ட வகையில் அமுல்படுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால், பொலிஸாரின் கடமைக்கு தடைகளை ஏற்படுத்தியமை, இனங்களுக்கு இடையே ஒற்றுமையை சீர்குழைக்க முற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் ஞானசார தேரர் கைது செய்யப்படவுள்ளார். இதற்கான உத்தரவு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இது வரைக்கும் கைது செய்யப்படவில்லை. ஆதலால், சட்டம் எல்லோருக்கும் சமம் என்ற சித்தாந்தம் செத்துக் கிடக்கின்றது. மேற்படி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்வதற்கே இழுத்தடிப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று எவ்வாறு முஸ்லிம்களினால் நம்பிக்கை கொள்ள இயலும். 

ஆதலால், முஸ்லிம்களிடையே அரசாங்கம் குறித்து ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனத்தை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிறுபான்மையினரும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதனை சட்ட அமுலாக்கல் சமமாக மேற்கொள்ளப்படும் போது மாத்திரம்தான் உறுதி செய்து கொள்ள முடியும். 

இதே வேளை, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கண்டி அஸ்கரிய, மல்வத்த பீடங்களின் பௌத்த பிக்குகள் தோரயாயவில் ஞானசார தேரரை கைது செய்வதற்கு பொலிஸார் முயற்சித்தமையை கண்டித்துள்ளார்கள். அது தவறு என்றும் தெரிவித்துள்ளார்கள். இதுதான் பௌத்த தேரர்களின் மனநிலையாகும். சட்டத்திற்கு முரணாக நடந்து கொள்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வேண்டிய இடத்தில் கைது செய்வதற்கு சட்டத்தில் இடமுள்ளது. ஆயினும், ஞானசார தேரரை கைது செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை பௌத்த பீடங்களின் பிக்குமார்கள் கண்டிப்பது என்பது சட்ட அமுலாக்கத்திற்கு விடுக்கப்படும் சவாலாகும்.

விடுதலைப் புலிகளின் தோல்வி
இலங்கை சுதந்தரமடைந்த காலம் முதல் முஸ்லிம்கள் பெரும்பாலும் சிங்கள அரசியல் தலைவர்களுடன் இணைந்து இணக்க அரசியலையே மேற்கொண்டு வந்துள்ளார்கள். முஸ்லிம்கள் தங்களின் வாக்குப் பலத்தின் மூலமாக தமது தனித்துவத்தையும், அரசியல் பலத்தையும் காட்டியது கிடையாது. முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்தின் பின்னர்தான் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவமும், பலமும் நிருபிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1994ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஆட்சியை பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் பெரும் பங்காற்றியது. சந்திரிகாவின் தலைமையிலான அரசாங்கத்தின் பங்காளியாக முஸ்லிம் காங்கிரஸ் மாறியது. இது முஸ்லிம்களின் வாக்குப் பலத்தின் வெற்றியாகும். ஆனால், மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் அரசாங்கத்தில் இணக்க அரசியலைச் செய்யாது. உரிமை அரசியலையே மேற்கொண்டார்கள். அரசாங்கத்தின் பங்காளி என்ற நிலையில் இருந்து கொண்டே முஸ்லிம்களின் உரிமையின் குரலாகவும், உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய வழிகளை தேடிய பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

ஆனால், இக்காலப் பகுதியில் நாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் ஓங்கிருந்த காரணத்தினால் முஸ்லிம்களின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியமாகியது. இதனால், மர்ஹும் அஸ்ரப்பின் செல்வாக்கு அரசாங்கத்தில் ஆழப்பதிந்திருப்பதனை பௌத்த இனவாதிகள் விரும்பவில்லை. அவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார்கள். அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் இருப்பதனை பௌத்த இனவான அமைப்புக்களும், அவ்வமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்;ட அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. ஆயினும், ஆட்சியாளர்கள் தங்களின் தேவைக்காக முஸ்லிம் காங்கிரஸை ஒதுக்கி வைக்க விரும்பவில்லை.

மஹிந்தராஜபக்ஷ முதலாவது தடiயாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது ஆதரவை மஹிந்தவிற்கு வழங்கவில்லை. இதனால், மஹிந்தராஜபக்ஷ சிறுபான்மையினருக்கு எதிரான சுமாரான கருத்துக்களுடனும், பௌத்த ஆதிக்கத்தை நிலை நாட்டும் வகையிலும் திட்டங்களை முன் வைத்து தேர்தலில் வெற்றி பெற்றார். முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளை சமப்படுத்தும் வகையிலேயே இவ்விதமாக அவர் முடிவு செய்தார். சிலவேளை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியிருந்தால் அவரின் முடிவுகள் வேறுபட்டதாக இருந்திருக்கும்.

இதன் பின்னர் சிறுபான்மையினரின் வாக்குகளின்றி சிங்களவர்களின் வாக்குகள் மூலமாக அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்தினை மஹிந்தராஜபக்ஷ பௌத்த கடும்போக்கு அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொண்டார். இரண்டாவது தடவை சிறுபான்மையினரின் பெரும்பான்மையான வாக்குகள் இவருக்கு எதிராக அளிக்கப்பட்ட போதிலும் அவர் வெற்றி பெற்றார்.

இதன் பின்னர் விடுதலைப் புலிகளை அடக்கியதனைப் போன்று முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியை அடக்குவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இக்காலப் பகுதியில் பௌத்த ஆதிக்கத்தை நிலை நாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பௌத்த இனவாத அமைப்புக்கள் தாம் உருவாக்கிய அரசாங்கம் என்ற தைரியத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்கள். இதனையிட்டு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் பங்காளிகள் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு உரிமை அரசியலை மறந்து இணக்க அரசியலை மேற்கொண்டார்கள். 

இன்று முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாத அமைப்புக்கள் மேற்கொண்டிருக்கும் அதிரடி நடவடிக்கைகளை இந்தப் பின்னணியிலேயே நோக்க வேண்;டும். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையும், முஸ்லிம்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டமையும்தான் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாத அமைப்புக்களின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுவதற்கு காரணமாகும். விடுதiலைப் புலிகள் தோற்கடிக்கப்படாதிருந்தால் முஸ்லிம்கள் இன்றைய நெருக்கடிகளை எதிர் கொண்டிருக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களையும், முஸ்லிம்களையும் அடக்கி ஆள வேண்டுமென்ற பௌத்த இனவாத அமைப்புக்களின் நீண்ட கால திட்டத்தையே தற்போது அமுல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட போது முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளுக்கு ஆசைப்படாது காத்திரமாக செயற்பட்டிருந்தால், முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்திருந்தால் முஸ்லிம்களின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிரான நடவடிக்கைளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இதனைச் செய்யாது தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்தி இருந்தார்கள். தமிழர்களின் இந்த நடவடிக்கைகளை மழுங்கடிக்கச் செய்யும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் துணையாக செயற்பட்டார்கள். தமது இந்த செயல் ஈற்றில் முஸ்லிம் சமூகத்தின் கால்களையும் சுற்றும் என்ற உண்மையை முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் புரிந்து கொள்ள முடியவில்லை. பதவி மீது கொண்ட பற்றுதல்கள் சமூகம் பற்றிய நீண்ட கால சிந்தனைகளை மழுங்கடிச் செய்தன. 

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இன்று கூட அரசாங்கத்தை நல்ல பிள்ளை என்று காட்டிக் கொள்வதற்கே அதிக கரிசனை காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தின் பங்காளி என்ற நிலையிலிருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை இணக்கத்தோடு வெற்றி கொள்ளலாமென்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். உரிமைகளை விற்று பட்டம் விடுவதில் சமூகம் நன்மைகள் அடைந்து கொள்ளாது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி என்ற பட்டத்தை முஸ்லிம் பிரதேசங்களில் பறக்கவிட்டுள்ளார்கள். இதுதான் முஸ்லிம்களின் உரிமைகள் என்று பழைய சித்தாந்தத்தை கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களும் இச்சித்தாந்தம்தான் நல்லதென்று நலம் பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

நல்லாட்சியில் நம்பிக்கை இழந்துள்ள முஸ்லிம்கள் நல்லாட்சியில் நம்பிக்கை இழந்துள்ள முஸ்லிம்கள் Reviewed by Madawala News on 6/04/2017 03:30:00 PM Rating: 5