Yahya

முஸ்லிம் சமூகத்தின் சமகால நெருக்கடிகள் ,சிந்திக்கப்படுமா மாற்று வழிகள்?


எம்.எம்.எம்.நூறுல்ஹக்

சாய்ந்தமருது - 05

இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் பங்களித்த மக்களுள் முஸ்லிம் சமூகம் குறிப்பிடத்தக்கதொரு இடத்தினை வகிக்கின்றனர். குறிப்பாக இந்நாட்டிலுள்ள வாக்களித்த முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்டோர் நல்லாட்சி உருவாகுவதற்காக வாக்களித்திருந்தனர் என்பது மிகவும் வெளிப்படையானது.


மைத்திறிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிட்ட கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, பல தேர்தல் தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் வெற்றியை நிர்ணயித்துக் கொடுத்திருப்பதை பார்க்கலாம். இவை மகிந்தவின் அரசாங்கத்திற்கும் மகிந்தவின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி அதிகாரத்துவம் மீதும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியின் அடையாளமாக அமைந்தவையாகும்


முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்த பல்வேறு எதிர்பார்ப்புக்கள் எதுவுமே நிறைவேறாத ஒரு நிலைப்பாடு பரவலாக இன்று காணப்படுகின்றது. பெரிதும் முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்த தமது மதஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள் தமது உடமைப் பாதுகாப்புகள் என்பனவை சரியாக உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரணைப் பெறவில்லை. தொடர்ந்தும் முஸ்லிம்களின் பொருளாதாரத்திற்கும் மத ஸ்தலங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்ட வண்ணமே இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் ஒரு தொடர்கதையாக நடைபெற்று வருகின்றது.


வில்பத்து பிரச்சனை குறித்து மக்கள் தொடர் சத்தியாக்கிரக போராட்டங்களை செய்வதற்கு முற்பட்ட போது அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளாது இடைநடுவில் நிறுத்தப்பட்டது. இதற்கு சொல்லப்பட்ட காரணம் வில்பத்து விடயமாக வெளிவந்த வர்த்தமானி அறிவித்தலை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு ஜனாதிபதி உடன்பட்டிருப்பதாகவும் அதற்காக தனது செயலாளரை பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் பிரச்சனைகளின் உண்மைத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்கும் வாக்குறுதி அளிக்கப்பட்ட பின்னரே இப்போராட்டம் கைவிடச் செய்யப்பட்டது.


ஜனாதிபதியின் வாக்குறுதியை அந்த மக்களிடம் எடுத்துவந்து கூறிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆஸாத் ஸாலி போன்றவர்கள் இந்த விடயத்தில் எந்த நடவடிக்கைகளும் இன்று வரை முன்னெடுக்கப்படவில்லை என்பதை அறிவார்கள். ஆரம்ப வாரங்களில் ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட குழுவில் உள்வாங்கப்பட்டிருந்த பைஸர் முஸ்தபா வெளிநாடு சென்றிருப்பதைக் காரணம் காட்டி அடுத்த வாரம் நடைபெறும் என்று ஒரு அறிக்கை விட்டதோடு, அது தொடர்பில் எந்தவிதமான முன்னகர்வுகளும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. வில்பத்து விவகாரத்தில் கடும் குரல்கொடுத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் இதனை மறந்த நிலையில் அல்லது கண்டுகொள்ளாத நிலையில் இயங்குவது போன்ற தோற்றப்பாட்டையே இன்று நம் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது.


முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் நிறைவேறாத ஒரு சூழலில், இது குறித்து ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் பேசுவதற்கும் மாற்றீடுகள் பற்றி கலந்துரையாடுவதற்கும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்படல் வேண்டும் என நமது மக்கள் அரசியல் பிரதிநிதிகளான எம்.பிக்கள் நேர ஒதுக்கீடுகள் கேட்டும் வழங்கப்படாத இருட்டடிப்பு நிகழ்வு இடம்பெறுவதை அவதானிக்கிறோம்.  


இந்த நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதற்காக எமது அமைச்சர்கள் இராஜினாமாச் செய்யவேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கை முஸ்லிம் அரசியல் களத்தில் பல தரப்புக்களினாலும் ஒருமித்து முன்வைக்கப்படுகின்றது. இந்த முறைமையின் ஊடாக முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்ற தீர்வுகளை அடைந்’து கொள்வதற்கு வழியாகுமா? என்பது குறித்து நாம் அலசி ஆராய்ந்து பார்த்து தீர்க்கமான முடிவொன்றை எட்டிக்கொள்ள வேண்டிய தேவையை நமக்கு இன்று முன்னிலைப்படுத்தி இருக்கின்றது.


முஸ்லிம் சமூகதத்திற்கு இன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற இன வன்முறைகள் மாத்திரம்தான் தொடர்ந்தும் எம்மை இம்சைப்படுத்தி தொடரப் போகின்றதா? மற்றும் இதற்கப்பாலான அரசியல் ரீதியான நெருக்குவாரங்கள் போன்ற கெடுபிடிகளும் நமது இருப்பியலுக்கான அச்சுறுத்தல்களும் எதிர்காலத்தில் தோன்றமாட்டாது என்று முடிவு செய்துகொள்ளத்தான் எம்மால் முடியமா?


ஒரு அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இவர்களால் அரசாங்கத்தின் தலைவர்களை சந்திப்பதிலும் பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதிலும் சிரமங்கள் இருக்கின்றதென்றால், சாதாரணமான குடிமகனுக்கோ அல்லது நமது சமூக அமைப்பில் காணப்படுகின்ற குடிமை அமைப்புக்கள் போன்றவற்றினால் இவற்றினை சாத்தியப்படுத்துவதில் பாரிய இடைவெளி இருக்குமென்பதில் ஐயமில்லை


அதேநேரம் மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசாங்க தலைவர்கள் செவிசாய்க்காத நிலை காணப்படுவது ஒரு வெட்கக்கேடான செயற்பாடு போன்ற பிரதிபலிப்பை முன்னிறுத்தினாலும் அதற்காகவேண்டி அரசியல் பதவி நிலைகளை துறப்பதுதான் இதற்கு உகந்த வழியென சரிகாண்பதும் பல சரிவுகளை நமக்கு ஏற்படுத்த வல்லதாகும்.


பிரச்சினைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெவ்வேறு வடிவங்களில் நம்மை சூழ்ந்து கொள்ளக்கூடிய அபாயங்கள் விதிக்கப்பட்டிருப்பதை கண்கூடாக காணுகின்ற அவலத்தை எதிர்வு கொள்கின்ற தோற்றப்பாடுகளையும் நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிடக்கூடாது. இந்த அவதானத்தின் ஊடாக பார்க்கின்ற போது அரசியல் பதவிகளை அவசரப்பட்டு எமது மக்கள் பிரதிநிதிகள் தாமாகவே களைந்து கொள்வது அதிக சாதகத்தை எமது சமூகத் தளத்துக்கு கொண்டுவராத ஒரு பக்கமாகவே நோக்கவேண்டியுமுள்ளது.


ஓர் அரசியல் அதிகாரம் என்பது உள்நாட்டில் மட்டுமன்றி நாட்டுக்கு வெளியிலும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய பதவியாகும். அந்த வகையில் நமது நாட்டில் தோற்றுவிக்கப்படுகின்ற நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற போது அந்தக் களத்தில் நின்று கொண்டு செயற்படுவதற்கு இந்தப் பதவி இரண்டுவிதமாக உதவ முடியும். ஒன்று அரசாங்கத்தின் உயர்மட்டங்களோடு உரிமையோடு பேசுவதற்கும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளின் போது தேவையான பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளோடு நமது மக்களின் அவலங்களை தைரியமாக எடுத்துச் சொல்வதற்கும் வாய்ப்பான ஒன்றுமாகும்.


நமது நாட்டிலுள்ள பொலிசார்களில் பலர் பக்கச்சார்பாகவும் நீதிக்கு புறம்பாக அச்சுறுத்தி, அவர்கள் கேட்கின்ற நியாயங்களை செய்துகொடுக்காது அநீதிக்குள் அகப்படுகின்ற முஸ்லிம்களை விரட்டிவிடுகின்ற சம்பவங்களும் நடைபெறாமல் இல்லை. இவ்வாறான கெடுபிடிகளைத் தவிர்த்து நமது மக்களின் நிலைகுறித்தும் தேவைப்படுகின்ற பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கும் பாதுகாப்பு அதிகாரிகளோடு நெருங்கி உரையாடுவதற்கும், உறவாடுவதற்கும் அரசியல் மக்கள் பிரதிநிதித்துவ அதிகாரம் வாய்ப்பளிப்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.


இவற்றுக்குப் புறம்பாக நமது பிரச்சனைகளை ஓரளவு சர்வதேச மயப்படுத்துவதற்கு மிகவும் உறுதியான ஒரு பதவிநிலையாகவும் மக்கள் அரசியல் பிரதிநிதித்துவம் அமைய முடியும். சாதாரணமானவர்களும் குடிமைச் சமூக அமைப்புக்களும் வெளியில் எடுத்துச் சொல்வதற்கு முடியுமாக இருந்தாலும் அதனுடைய குரலின் கணதி என்ற வகையில் இவர்களைப் பார்க்கிலும் மக்கள் அரசியல் பிரதிநிதிகளின் சக்தி சற்று கூடியது என்பது இலகுவாக விளங்கிக்கொள்ளத்தக்கது.


இவ்வாறான நலன்களை நமது சமூகத்துக்கு செய்யக்கூடிய ஒரு துடுப்பை உடனடியாக இல்லாமல் செய்வது அல்லது அதற்குரிய வலிமையை நாங்களாகவே குறைத்துக்கொள்வதென்பது எதிர்காலங்களில் நாம் அடைந்துகொள்ள முனைகின்ற பாதுகாப்பையோ அல்லது மோதல்களை தவிர்ப்பதற்கான முன்னெடுப்புக்களையோ செய்வதற்குரிய ஆளுமையை இழந்துவிட்டு, அவ்வாறான ஒரு மாற்று சக்தியை நாம் தேடவேண்டிய அந்தக நிலைகள் நமக்கு ஏற்படுகின்ற போது இவ்வாறான ஒரு காப்பரண் நமக்கு இல்லாமலாகிவிடும். அதுகூட நமக்கு இன்னுமொரு சங்கடத்தையே ஏற்படுத்தும்.


நமது சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளை செய்கின்ற அல்லது விரிக்கின்ற சமூகத்தின் அரசியல் மக்கள் பிரதிநிதிகளையே நாம் கெஞ்ச வேண்டிய நிர்ப்பந்தத்தையும் தரும். இவைகளை வைத்து கூட்டுமொத்தமாக பார்ப்போமானால் மக்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தையோ அதனோடு இணைந்து நிற்கின்ற அமைச்சர் என்ற அந்தஸ்த்துக்களையோ நாமாக துறப்பதென்பது புத்திசாதூரியமான செயற்பாடாக அமையாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். ஆயின் இதற்கு மாறான வழிகளில் எவ்வாறு எங்களை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்பதை சிந்திப்பதுதான் காலப்பொருத்தமுடையதாகும்.


இன்றைய நாடாளுமன்றத்தில் மொத்தமாக இருபத்தியொரு முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் இருக்கின்றன. இவைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு முஸ்லிம் தனிக் கட்சிகளிலும் பெரும் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதானமாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாகவும் இந்த பிரதிநித்துவங்கள் பெறப்பட்டிருக்கின்றன.


இந்த மக்கள் அரசியல் பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நடைபெறுகின்ற அநீதிகளை தட்டிக்கேட்பதற்கு முனைவதென்பதும் அவற்றினைத் தொடராமல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று முனைவதும் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு கோரிக்கையாக அல்லது நடவடிக்கையாக அமைவதில்லை என்பதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்.இன்றெழுந்திருக்கின்ற பிரச்சனையானது முஸ்லிம் மக்களின் வர்த்தக அழிப்பு, மத நிந்தனை என்பன நேரடியாகவே நல்லாட்சி அரசாங்கத்தின் கெடுபிடியினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்ற ஒன்றல்ல.


மாறாக சில இனவாதக் கும்பல்களினால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற வன்மங்களையும் வன்முறைகளையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டிய அதிகாரத்துவத்தையும் பொறுப்பையும் கொண்டுள்ள அரசாங்கம் கைகட்டி நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றது என்கின்ற குற்றச்சாட்டே ஆகும்.இதனை உரத்துப் பேசுவதோ அதற்கான நியாயங்களைக் கோருவதோ முற்றுமுழுதாக அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடாக நமது அரசியல் மக்கள் பிரதிநிதிகள் பார்க்கக் கூடாது.


இந்த அடிப்படையில் நமது மக்கள் அரசியல் பிரதிநிதிகள் உணர்ந்துகொள்வதோடு கூட்டிணைந்து ஒருமித்த குரலாக தங்களை ஒலிக்கச் செய்துகொண்டு நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தந்தாகவேண்டிய பொறுப்புடைய அரசாங்கத்தின் தலைவர்களோடு பேசித் தீர்க்க வேண்டிய நமது கடப்பாட்டை நாம் செய்வதற்கு ஆயத்தமானாலும் அதற்கு அவர்கள் கதவடைப்பை செய்கின்ற பாங்கில் நேர ஒதுக்கீடுகளை மறுத்துவருகின்றனர்.


இதற்கு மாற்றுவழியாக நாம் நமது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மாதத்தில் நடைபெறுகின்ற இரு வாரங்களுக்குரிய பாராளுமன்ற அமர்வுகளில் ஒரு வாரத்தை முழுமையாக பகிஷ்கரிப்பதன் மூலம் நமது செய்தியை அரசாங்கத்துக்கு தெரிவிக்கின்ற முயற்சியை முதல்கட்டமாக நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.இதன் மூலம் நமது பிரதிநிதிகள் சார்ந்திருக்கின்ற எந்தக் கட்சியானாலும் பிரதிநிதிகள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்கோ அல்லது தமது பதவிகளை தாமாக விலக்கிக்கொண்ட நிலைக்கோ இட்டுச் செல்லாது.


ஏனெனில் இன்று அமைந்திருக்கின்ற அரசாங்கத்தைப் பொறுத்த வரை பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் ஆளும் கட்சிகளாகவே இருக்கின்றனர். அந்த அடிப்படையில் எல்லாக் கட்சிகளுக்கும் முஸ்லிம் மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக் கொடுக்கின்ற பொறுப்பு இருக்கின்றது.


இதில் எந்தக் கட்சி எதிராக செயற்பட்டாலும் அது முஸ்லிம் மக்களுக்கு விரோதமான போக்கைக் கடைப்பிடிக்கின்ற கட்சி என்ற மதிப்பீட்டை அவர்கள் மீது சுமத்தும். இது எதிர்காலத்தில் அக்கட்சிக்கு முஸ்லிம்களால் வழங்குகின்ற ஆதரவுத்தளத்தை இல்லமலாக்கும் என்கின்ற உணர்வும் உணருதலும் கட்சித் தலைமைகளுக்கு வந்துவிடும். இதனால் நேரடியாக முஸ்லிம் மக்கள் அரசியல் பிரதிநிதிகளை ஒழுக்காற்றுக்குள் கட்டுப்படுத்த முனையாது.


மக்கள் நம்மிடம் தருகின்ற பதவி என்பது அந்த மக்களுக்காக பிரயோகிக்கப்பட முடியாத ஒரு முட்டுக்கட்டை தோற்றுவிக்கப்படுமானால், அதனை கட்டுடைப்புச் செய்வது ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்கு இரண்டு வகையில் கட்டாயமாகும். ஒன்று அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை பிரதிநிதிகளாக அனுப்பிய மக்களின் இறைமைக்கு துரோகம் இழைக்கின்ற நிலையையும் மறுபுறம் பதவி தருபவன் இறைவன். அந்தப் பதவியை நேர்மையாகப் பேணிக்கொள்ள வேண்டிய இறை கடமை தன் மீது இருப்பதை புறக்கணித்த அல்லது மீறிய குற்றத்துக்கும் ஆளாகின்றார்.


இந்த நம்பிக்கைகளும் பொறுப்புக்களும் சரிவர செய்யப்படுவதற்கு நம்மிடம் வரவேண்டிய உறுதியும் துணிவும் நம்மை விட்டுத் தூரமாகிவிடாத நிலையில் செயற்படத் தொடங்குவோமேயானால், அந்த உளத்தூய்மையே நம்மை வெற்றிகளின் படிக்கட்டுக்களில் நடத்திச் செல்லும். கடந்த 2001-2004 இல் அமைந்திருந்த அரசாங்க காலப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை மிகவும் கொடுமைப்படுத்திய நிகழ்வுகள் நடைபெற்றன.


அதன் ஒரு உச்சமாக தமிழ் பிரதேசங்களுக்குள் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களைக் கூட கொண்டுவருவதற்கு இந்த நாட்டின் அரசாங்கமோ அரச படைகளோ உதவாது கைகட்டி நின்ற சந்தர்ப்பத்தில், அந்த அரசாங்கத்தில் பங்காளாராக இருந்துகொண்டு அவற்றுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்திருந்தார். மூதூர் கடற்படைத் தளத்துக்குள் அவர் இருந்துகொண்டு அன்றைய ஆட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க நேரில் வந்து பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற ஒரு தீவிரமான முனைப்பைக் காட்டிய தடயத்தை நாம் இன்று கவனத்தில் கொள்ள வேண்டும்.


அதற்காக வேண்டி, அதன் பிற்பாடுவந்த பல தேர்தல்களிலும் ஆட்சி அதிகாரங்களிலும் ரவூப் ஹக்கீமை தூரப்படுத்துகின்ற எந்தச் செயற்பாட்டையும் ரணில் முன்னெடுக்காத நிலையை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஆயின் அரசாங்கத்திடம் நமது பிரச்சனைகளை எடுத்துக் கூற முனைகின்ற வழிகளை வைத்து முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தையோ தனிக் கட்சி ஆளுமையையோ பாதகங்களுக்குள் தள்ளிவிடும் என்ற அச்சம் தேவையற்றது என்பதை இது உணர்த்துகின்றது.


அது மாத்திரமன்றி, மேற்சுட்டிக் காட்டிய 2001 – 2004 அரசாங்க காலத்தின் போது பிரதி அமைச்சராக இருந்த அதாவுல்லாஹ் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ், மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் போன்றோர்கள் முஸ்லிம்களுக்கெதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் கொட்டத்தை அடக்காது அவர்களுக்குச் சாதகமாக இருந்த அன்றைய அரச தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவரது ஆட்சிக்கு எதிராகவும் திருமலையிலிருந்து பொத்துவில் வரையான ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணி குறித்து அரசியல் ரீதியான விமர்சனங்கள் இருந்தன. அது அவர்களின் தனிப்பட்ட அரசியல், பதவி மாற்றொழுங்கின் அடிப்படையில் மேற்கொண்டதாக சிலர் கூறிய போதிலும் அந்த நேரத்தில் அவர்கள் முன்னெடுத்த அந்த செயற்பாடு என்பது முஸ்லிம் சமூகத்துக்கு அவசியம் தேவையான ஒன்றாக இருந்தது. அதனால் அது முஸ்லிம் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட ஒன்றாகவும் மாறியிருந்தது. இதற்காக இவர்கள் சார்ந்திருந்த கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கையோ, அரசியல் பதவி பறிப்புக்களோ மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கு அப்பால் நாம் இதில் அவசியம் புரிந்துகொள்ளக்கூடிய பகுதி யாதெனில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்ற துணிவு, ஆக்ரோஷம், சமூக உணர்வு என்பன இன்றிருக்கின்ற நமது நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் இல்லாமல் பயத்துடன் கூடிய ஒரு போக்கை பார்க்கின்றோம். அவ்வாறான பயம் தேவையில்லை.


நமது பிரச்சனைகளை எடுத்துரைப்பதற்கு நாம் முயல்கிறோம் என்பதை வைத்து எந்தக் கட்சிகளின் தலைமைத்துவங்களும் முஸ்லிம் மக்கள் அரசியல் பிரதிநிதிகளை புறக்கணிக்கப்போவதில்லை என்பதையும் இத்தகைய போராட்ட மன உணர்வுகளும் அதற்கான முன்னாயத்தங்களும் நமது இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வரவேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பைத் தவிர முஸ்லிம் சமூகம் தமது மக்கள் பிரதிநிதிகளிடத்தில் வேறெதனையும் எதிர்பார்க்கவில்லை.


முஸ்லிம் மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற பாராளுமன்ற பகிஷ்கரிப்பு போன்ற ஏதுவான எந்த முனைப்புக்கள் இருந்தாலும் அதற்கான முனைப்புக்களை நாம் செய்ய வேண்டும். அதனால் இன்று இருக்கின்ற எந்தக் கட்சிகளும் எந்த உறுப்பினரையும் நீக்கி விடுவது பற்றி சிந்திக்க வாய்ப்பு இல்லை. உதாரணமாக கபீர் ஹாஸிம், ஹலீம் போன்றவர்களை ஐக்கிய தேசியக் கட்சி நீக்க முனையுமா? மைத்ரி அணியினர் பௌஸி, ஹிஸ்புல்லாஹ் போன்றோர்களை நீக்குவார்களா? அவ்வாறான ஒரு முனைப்பு தோற்றம் பெறுமேயானால் அந்தக் கட்சிகளுக்கு முஸ்லிம்கள் வழங்குகின்ற ஆதரவுத் தளம் பலவீனப்பட்டுவிடும் என்ற ஓர் அச்ச உணர்வே நமது பிரச்சனைகளை என்னவென்று கேட்பதற்காவது ஆட்சித் தலைவர்களை கீழிறங்கிவரச் செய்யும்.


எனவே இவ்வாறான நமக்குச் சாதகமளிக்கக் கூடிய நிலைப்பாடுகளை நமது முஸ்லிம் மக்கள் அரசியல் பிரதிநிதிகள் கடைப்பிடிப்பதற்கு ஊக்கியாக நமது சமூகத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, தேசிய சூறா சபை, முஸ்லிம் கவுன்சில் போன்ற நமது குடிமைச் சமூக அமைப்புக்கள் ஒன்றுபட்டு அவர்களின் ஆலோசனையின் பெயரில் நமது பிரதிநிதிகளை செயல்படுத்துவதற்கான ஒரு முயற்சியை இந்த மூன்று அமைப்பினர்களும் செய்தால்தான் என்ன?

முஸ்லிம் சமூகத்தின் சமகால நெருக்கடிகள் ,சிந்திக்கப்படுமா மாற்று வழிகள்? முஸ்லிம் சமூகத்தின் சமகால நெருக்கடிகள் ,சிந்திக்கப்படுமா மாற்று வழிகள்? Reviewed by Madawala News on 6/22/2017 01:44:00 PM Rating: 5