Kidny

Kidny

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இப்தாரை புறக்கணித்து எதிர்ப்பின் முதற் படியை வெளிப்படுத்துவோம்..


இலங்கை முஸ்லிம்கள் இலங்கை நாட்டில் நிலவும் இனவாத செயல்களை முன்னாள் ஜனாதிபதி கட்டுப்படுத்த தவறியதால், அதன் பின்னால் அவர் தான் உள்ளாரா என சந்தேகம் கொண்டு இவ்வாட்சிக்கு தங்களது பெரும்பான்மை வாக்குகளை அளித்திருந்தார்கள். முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட இவ்வரசானது, முஸ்லிம்கள் இதனை ஏன் கொண்டுவர சிந்தித்தார்களோ அதனை சிறிதேனும் நிவர்த்தி செய்யவில்லை. இன்னும் சொல்லப் போனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தை விட பிரச்சினைகள் பூதாகரமாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவினுடைய காலத்தில் மிக நீண்ட காலத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு இனவாத செயல் அரங்கேறும். தற்போது விடிந்து எழும்பி சமூக வலைத்தளங்களை அவதானித்தால் எங்கயாவது ஒரு இடத்தில் இனவாதிகள் தங்களது கை வரிசையை காட்டி இருப்பார்கள். இன்று முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் இவர்களின் செயற்பாடுகள் மிக அதிகமாக காணப்படுகின்றன. சாய்ந்தமருது அம்பாறைக்கு இடமாற்றப்பட்டு விடுமா என கேட்குமளவு இனவாத ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுகின்றன.

அன்றும் இன்றும் இடம்பெற்ற இனவாத செயல்களுக்கு இடையில் உள்ள வேறுபாடு என்னவெனில், அன்று இடம்பெற்ற இனவாத செயல்களுக்கு அரச அங்கீகாரம் இருக்கவில்லை. இன்று இடம்பெறும் இனவாத செயல்களுக்கு அரச அங்கீகாரம் உள்ளது என்பதாகும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்கள் இடமாற்றப்படுவதற்கு நிச்சயம் அரச அங்கீகாரம் வேண்டும். இதுவே இன்றைய இனவாதத்தின் பின்னுள்ள அரச அங்கீகாரத்தை நிறுவ போதுமான சான்றாகும்.

இன்னும் இலங்கை முஸ்லிம்கள் ஜனாதிபதியின் முந்தானை பிடித்து, இதனை அவரால் தீர்க்க முடியுமென நம்பினால் அதனை விட மடமை வேறு எதுவாகவும் இருக்காது. எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களது பதவி ஆசைகளுக்காக இந்த உண்மைகளை நன்கு அறிந்தும் பேசாமல் இவ்வரசுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.  இன்று நிலவும் இனவாதம் தொடருமானால் இவர்கள் தங்களது பதவிகளை இவ்வாட்சியாளர்களின் முகத்தில் தூக்கி வீசிவிட்டு வெளியேற வேண்டும். அதனை செய்வதற்கு முன்பு தற்போதைய இனவாதம் தொடருமானால் தாங்கள் பதவிகளை வீசிவிட்டு வெளியேறுவோம் என்பதற்கான சிறு சமிஞ்சையை இவ் இப்தாரை புறக்கணிப்பதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

அதனை விடுத்து எது செய்தாலும் நாங்கள் உங்களோடு தான் இருப்போம் என்றவாறு இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டால், அவர் இனவாத செயல்களுக்கு இன்னுமின்னும் அங்கீகாரம் வழங்குவார். ஒரு புறத்தில் இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டு மறு புறத்தில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதானது முஸ்லிம்களை மடையர்களாக்கி அடிபணியச் செய்யும் செயல்களாகும். இதற்கு நாமும் துணை போய் விடக்கூடாது. இஸ்லாத்தின் விரோதிகள் இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கு முஸ்லிம் பொது மக்களும் முஸ்லிம் அரசியல் வாதிகளும் துணை போய் விடக்கூடாது.

முஸ்லிம் அரசியல் வாதிகளே! உங்கள் உள்ளங்களில் இன்றைய இனவாதத்துக்கு இவ்வாட்சியாளர்கள் துணை போகவில்லையென கருதினால் புனிதமான உங்கள் நோன்புகளை திறக்க குறித்த நிகழ்வுகளுக்கு செல்லுங்கள்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இப்தாரை புறக்கணித்து எதிர்ப்பின் முதற் படியை வெளிப்படுத்துவோம்.. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இப்தாரை புறக்கணித்து எதிர்ப்பின் முதற் படியை வெளிப்படுத்துவோம்.. Reviewed by Madawala News on 6/03/2017 01:17:00 AM Rating: 5