Ad Space Available here

தேசிய அரசாங்கத்தால் இனமுறுகளை கட்டுப்படுத்த முடியாதா?


எம்.எம்.எம். நூறுல்ஹக்

சாய்ந்தமருது - 05

இலங்கை முஸ்லிம்கள் சிங்கள – பௌத்த ஆதிக்க சக்திகளின் கெடுபிடிகளை அனுபவிக்க தொடங்கியதென்பது நேற்று இன்று அல்ல. மாறாக ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றை அது கொண்டிருக்கின்றது. சிங்கள பேரினவாதத்தின் முதற்படியாக முஸ்லிம்கள் காவு கொடுக்கப்பட்டிருப்பது இலங்கை வரலாற்றில் மாசுபடிந்த பக்கமும் நமது துயர் மிகுந்த கதையுமாகும்.


கூட்டு மொத்தமான ஒரு தாக்குதல் முஸ்லிம் மக்கள் மீது தொடுக்கப்படுவதென்பது பரவலாகவும் உரத்துப் பேசவும் உட்படும் என்கின்ற முன் ஜாக்கிரதை ஒழுங்கு நிரலில் நின்று கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற நன்கு திட்டமிடப்பட்ட ஓர் இயங்கியல் செயற்பாட்டை தீட்டிக்கொண்டு முஸ்லிம்கள் மீது அண்மைக்காலமாக இரண்டு விதமான எதிர்த்தாடல்களை சிங்கள-பௌத்த ஆதிக்க சக்திகள் மேற்கொண்டு வருகின்றனர்.


1. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாக தீ வைத்தும் பொருட்களைச் சேதப்படுத்தியும் இழப்பீடுகளை முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தி கொண்டிருப்பது.


2. இலங்கை முஸ்லிம்களின் மதஸ்தலமான பள்ளிவாசல்கள் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் ஊடாகவும் மாற்று வழிகளின் மூலமும் தகப்பதும் உடைப்பதுமான அத்துமீறல்களை மேற்கொண்டு வருவது.

மகரகம, மகியங்கன, திருகோணமலை, மருதானை, நுகேகொட,தம்புள்ள, நாவலப்பிட்டி என்று பல பகுதிகளிலும் மேற்குறித்த இரண்டு விதமான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை அங்குமிங்குமாக மேற்கொள்வதன் நிகழ்வினால் இது ஒரு திட்டமிட்ட செயற்பாட்டின் பின்புலங்கள் என எம்மை நோக்க வைக்கின்றது.


”சிறு துளி பெரும் வெள்ளம்” போல் சிறுகச்சிறுக செய்யப்பட்டு வருகின்ற முஸ்லிம்கள் மீதான இத்தகைய அத்துமீறல்களும் அதன் விளைவாக ஏற்படுத்தப்பட்டு வருகின்ற இழப்பீடுகளும் கூட்டு மொத்தமாக பெரிதாக காண்பிக்காத போதிலும் அதன் தாக்கமென்பது பொருளாதார ரீதியாக பல கோடி நஷ்டங்களை ஏற்படுத்தி இருப்பதை நாம் புரிந்து கொள்ளாத ஒன்றுமல்ல.

அதே போன்று பள்ளிவாசல் தாக்குதல் என்பது பொருளாதார சேதங்களுக்கு அப்பால் முஸ்லிம்களின் உணர்வோடும் உயிரோடும் வாழ்வோடும் உரிமையோடும் இரண்டறக் கலந்து ஆதிக்கம் செலுத்துகின்ற ஒன்றென்பதனால், இந்த அழிவுகள் பாரிய தாக்கங்களை முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படுத்தக் கூடியதுமாகும்.


மத ரீதியாக முஸ்லிம்கள் மீது முன்வைக்கப்படுகின்ற எதிர்ப்புணர்வு அல்லது பாராபட்சமான நிகழ்வுகளின் ஊடாக தாக்குதல்களை முன்னிறுத்துகின்ற போது முஸ்லிம்கள் தீவிரமாக கிளர்ந்தெழுந்து ஒரு கலவரச் சூழலுக்குள் உணர்ச்சிவசப்பட்டு வந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பின் உந்துதலால் எமது மதம், மதத்தலங்கள் மீதான அத்துமீறல்களை மேற்கொள்வதன் தாற்ப்பரியம் என்பது நமது அறிதலுக்கு அப்பாலானதல்ல.


முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தற்செயலாக நடைபெறுகின்ற ஒரு நிகழ்வாக நோக்க முடியாததுமாகும். ஏனென்றால் இலங்கையின் வர்த்தக பொருளாதாரம் முஸ்லிம்களின் கைகளில் அதிகம் இருப்பது போன்ற ஒரு பிரமை கட்டமைக்கப்பட்டு அதன் மீதான காழ்ப்புணர்வுகள் வேகமாக பரப்பப்பட்டும் வந்திருப்பதை காண்கின்றோம்.

இதனோர் உட்சபட்சமான ஒரு வெளிப்பாடாகவே 1915 களில் கண்டி- கம்பளை சிங்கள – முஸ்லிம் கலவரத்தைப் பார்க்கின்றோம். அதன் தொடர்ந்தேர்ச்சியான நடவடிக்கையாக எமது வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதையும் அவதானிக்கலாம்.

முஸ்லிம்களின் வர்த்தகத்தின் மீதான காழ்ப்புணர்வின் அல்லது எதிர்ப்புணர்வுகளின் மேலீடாகத்தான் இலங்யைின் தலைநகரம் கொழும்பு என்பது மாற்றியமைக்கப்பட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர என மாறியதன் பின்னணியிலும் முஸ்லிம் வர்த்தகத்தின் உடைப்பு இருந்ததென்கின்ற ஒரு விமர்சனமும் இது விடயத்தில் இருந்து வருகின்றது.


கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கோட்டை, புறக்கோட்டை பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் முஸ்லிம்களின் வியாபாரம் ஓங்கிக் காணப்படுவதை கட்டுடைப்புச் செய்து, சிங்கள வர்த்தக நிலையங்களாக பெருக்கெடுக்கச் செய்வதற்காக இலங்கையின் தலைநகர மாற்றம் நிகழ்ந்ததாயினும் அது பாரிய வெற்றியைத் தரவில்லை.


இதற்கு முக்கிய காரணம் கொழும்பு துறைமுகம் அமைந்துள்ள கோட்டை, புறக்கோட்டை பகுதிகளை உள்ளடக்கிய கொழும்பு வர்த்தக பரிவர்த்தணங்கள் முஸ்லிம்களின் கைகளில் ஏற்கனவே அதிகம் இருந்ததினாலும் அதனை ஒட்டியதாக துறைமுகம் அமைந்திருந்ததனாலும் முஸ்லிம்களின் வர்த்தகம் பறிபோகாத அல்லது கைமாற்றம் ஏற்படாத ஓர் உறுதிப்பாட்டைப் பெற்றது.


இப்படி முஸ்லிம்களின் வர்த்தகத்தின் மீதும் அவர்களின் மதத்தலங்கள் மீதும் பொறாமையையும் வெறுப்புணர்வையும் விதைப்பதில் சிங்கள - பௌத்த ஆதிக்க மனோபாவமுடைய சிலரின் வெளிப்பாடுகளும் அதனை ஒட்டிய முன்னகர்வுகளும் காலத்துக்கு காலம் முஸ்லிம் மக்கள் மீது நன்கு திட்டமிட்டு மேற்கொள்வதற்கு பௌத்த துறவிகளையும் சிங்கள காடையர்களையும் ஏவி விடுவதற்கான சில அமைப்புக்கள் எப்போதும் முன்னின்று உழைத்து வந்திருப்பதைப் பார்க்கலாம்.


இவர்களின் இந்த ஈனச்செயல்களை கண்டும் காணாததும் போல் ஒரு மறைமுகமான ஒரு ஆதரவு தளத்தை இலங்கையின் ஆட்சியாளர்கள் வழங்கி வந்திருக்கின்றனர். இந்த தொடர்ச்சியின் நிரலாகவே இன்றெழுந்திருக்கின்ற முஸ்லிம் மக்கள் மீதான பௌத்த- சிங்கள ஆதிக்க சக்திகளின் அத்துமீறல்களை அடக்கி ஒடுக்குவதில் சரியான ஒரு திட்டமிடலை ஆட்சியாளர்களினால் கைக்கொள்ள முடியாதிருப்பதன் பின்னணியாகும்.


முஸ்லிம் மக்கள் மீதான எதிர்ப்புணர்வில் செயற்படுகின்ற சிங்களவர்களின் தொகை மிக குறுகியதாக இருந்தாலும் அவர்களுக்கான ஆதரவுத்தளம் பெருகியதாகவே காணப்படுகின்றது. சிறு குழுவினர்களை எதிர்ப்பது சிங்கள மக்களுக்கு ஒரு இயலாத காரியமாக இருப்பதென்பதும் இதனை வலியுறுத்துவதாக அமைகின்றது. இதற்கு முக்கிய காரணம் முஸ்லிம் மக்கள் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதலின் போது குறித்த பிரதேசவாசிகளை விட அடுத்த பிரதேசவாதிகளைக் கொண்டிருப்பதாகும்.

உதாரணமாக அளுத்கமையில் ஒரு சம்பவம் நடைபெறுகிறதென்றால் அப்பிரதேச சிங்கள மக்கள் பெரிதாக அதில் பங்காற்றுவதில்லை. இது முஸ்லிம்களுக்கு ஒரு ஆறுதலான பக்கமாக இருந்த போதிலும் குறித்த பிரதேசத்திற்கு வெளிப்பகுதிகளிலிருந்து வருகை தருகின்ற வன்ம உணர்வுகளைக் கொண்டவர்களாளயே தாக்குதல்கள் நடத்தி முடிக்கப்படுகின்றன. இதனை எதிர்த்து உள்ளூர் சிங்கள மக்கள் இயங்குவதை தடைசெய்கின்றது. இது ஆதரவுத்தளத்தை பெருப்பித்து காண்பிக்கின்றது.


இதன் இன்னொரு முகமாகவே இலங்கையின் பாதுகாப்பு படையினர்கள் பக்கச் சார்பாகவும் அத்துமீறல்களில் ஈடுபடுகின்ற சிங்கள துறவிகள், காடையர்கள் மீது கட்டுப்படுத்துவதற்கான முன்நடவடிக்கைகளையோ, மற்றும் சட்ட நடவடிக்கைகளையோ நீதியாகச் செய்வதற்கு முன்வருவதில்லை. இதுவும் இன்னொரு வகையில் சிறு சிங்களக் குழுக்களின் இனவாதச் செயற்பாட்டை ஊக்குவிப்பதாகவும் அதன் ஆதரவுத்தளம் அகன்றதாக மாறுவதற்கும் வாய்ப்பளிக்கின்றது.

இவ்வாறு இலங்கையில் சிங்கள – பௌத்த ஆதிக்க பேரினவாத செயற்பாடுகள் நீண்ட காலமாக அதுவும் தொடர்ந்தேர்ச்சியான ஒரு நடவடிக்கை கட்டமைப்பை பெற்று வருவது வெறுமனே அரசியல் நோக்கத்தை மையப்படுத்திய ஒரு வெளிப்படுத்துகை என்று இதன் தடத்தை குறுக்கி அடையாளப்படுத்த முடியாது. இது ஒரு அகன்ற பௌத்த ராச்சியத்தின் கட்டமைப்பையும் பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான தனிநாடு இலங்கை என்கின்ற உணர்வு பூர்வமான நிகழ்ச்சி நிரலில் வடிவமைக்கப்பட்டு முன்னெடுத்து வருகின்ற ஒரு கோட்பாட்டு ரீதியான உருவாக்கத்தில் மோதுகையாக இதனை பார்க்க வேண்டி இருக்கின்றது.


இந்த விமர்சனம் வெறுமனே யூகத்தின் அடிப்படையில் எழுப்பப்படுகின்ற ஒன்றல்ல. மாறாக இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு சமூகத்தினர்கள் மீதும் ஓர் இனச்சுத்திகரிப்பு என்ற வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதையும் சிங்கள – பௌத்த ஆதிக்க மேலான்மையை வெகுவாக காலூன்றும் வகையிலும் சுதந்திர இலங்கையின் அரசியல் நகர்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஆயின் முஸ்லிம் மக்கள் மீதான சிங்கள- பௌத்த ஆதிக்க சக்தி மனோபாவம் என்பது மிகுந்த வலிமையுடையதாக கட்டியெழுப்பப்பட்டிருப்பதையும் முஸ்லிம் மக்களாகிய நாம் மறந்து விடக்கூடாது.

இத்தகைய பின்புலங்களையெல்லாம் சட்டை செய்து கொள்ளாத நமது இளைஞர் சமூகமும் குறுகிய மூத்தோர்களும் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கத் தவறிய இவர்கள் இன்றைய நிகழ்வை அனுபவிக்கின்ற போது ஒரு கொதிப்பு நிலைக்கு உள்ளாகி, இளம் இரத்த முறுக்கின் உந்துததினாலும் சில மூத்தோர்களினாலும் வீர வசனங்களை ஆக்ரோசமான விமர்சனங்களாக முன்வைப்பதனையும் காண்கின்றோம். 


குறிப்பாக வலைத்தளங்களில் இதனை அதிகமாக காணக்கூடியதாக உள்ளது.

அடங்கி வாழ்வதற்கு நாம் என்ன கோழையா என்கின்ற ஒரு உசுப்பேத்தலுக்கு மதிப்பளித்து முஸ்லிம் தரப்பிலிருந்து சிங்களவர்களுக்கு எதிரான ஒரு சிறிய சம்பவம் நடைபெறுவதை எதிர்பார்துக் காத்திருக்கின்ற சிங்கள பேரினவாதிகளுக்கு வழி திறந்து விடுகின்ற ஒரு சூழலுக்கு எம்மை இரையாக்கி விடாத அவதானம் என்பது ஒரு அடங்கி வாழ்தலின் வெளிப்பாடு என்று நம்மவர்கள் கூப்பாடு போடுவதனையும் நாம் பார்க்கின்றோம். இதனை ”புலி பதுங்குவது பாய்வதற்கு” என்ற மூதுரைக்கேற்ப செயற்படுகின்றோம் என்கின்ற உணர்தல் இங்கு முஸ்லிம்களுக்கு முக்கியமாகின்றது.


இதனை வேறு வார்த்தையில் கூறுவதாயின் விட்டுப்பிடித்தல் என்ற பண்பின் அடிப்படையில் நாம் காரியமாற்றுகின்ற தருணத்தை கவனத்தில் எடுக்காது, எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போல் நாம் நடந்து கொள்வது விவேகத்தின் வழியன்று. நமது பலம், பலவீனம் என்பனவற்றை நிறுத்துப்பார்க்காது ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுவது மட்டும் நமக்கு ஏற்றங்களை தந்துவிடாது என்கின்ற அவதானமும் அவசியப்படுகின்றது.


நம்மீது இன்று தொடரப்படுகின்ற பௌத்த – சிங்கள ஆதிக்க நெருக்குவாரங்கடளயிட்டு நமது மக்கள் அரசியல் பிரதிநிதிகள் நமது நாட்டு உயர்சபை நாடாளுமன்றத்தில் உணர்ச்சியுடன் கூடிய வீர வசனங்களை பேசுவதைப் பார்க்கின்றோம். அதற்கு கைதட்டுபவர்களாகவும் எம்மை இரையாக்கிக் கொண்டிருக்கின்றோம். இதன் மூலம் நாம் கண்ட பலம்தான் என்ன?.


இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களாக இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் ஆகியோரிடம் நமது பிரச்சினைகளை நமது மக்கள் அரசியல் பிரதிநிதிகள், நமது குடியியல் சமுகத்தில் உள்ள அமைப்புக்கள், நமது உயர் சபையான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உட்பட நம்மீது தொடுக்கப்படுகின்ற சிங்கள பேரினவாதத்தை கக்குகின்ற, கடும் போக்காளர்களை கட்டுப்படுத்துமாறு கேட்டும் அது முடிவுக்கு வராத ஒரு சூழ் நிலைதான் இன்றும் காணப்படுகின்றது.


சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக முஸ்லிம் மக்கள் மீது தொடுக்கப்படுகின்ற சிங்கள- பௌத்த ஆதிக்க சக்திகளின் செயற்பாட்டை காட்டி இதனை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதாக ஒரு பாசாங்கு செய்கின்ற நாடகமும் இதற்குள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


இவைகள் ஒரு புறம் இருக்க இன்றைய கெடுபிடிகளை ஒரு சமூகத்தின் மீதான பாய்ச்சலாக அல்லது சிறுபான்மைச் சமூகத்தின் மீது பெரும்பான்மைச் சமூகம் முன்னெடுக்குகின்ற இனச்சுத்திகரிப்பு என்ற வகைக்குள் விமர்சிக்கப்பட்டுவிடக் கூடாது என்கின்ற ஒரு பின்புலத்தை இதில் பார்த்தாலும் இந்தச் செயற்பாடுகளின் பின்னால் இன ஒடுக்குதல் அடிப்படைகளும் கூறுகளும் அதில் அடங்கியிருப்பதை மறுத்துவிட முடியாது.


நாம் இந்த சூழலிருந்து விடுபடுவதற்காக பல முயற்சிகளை அகிம்சை வழியில் நின்று முன்னெடுக்கின்றோம். அது இந்த நாட்டின் சட்டதிட்டங்களை மீறாதும் சட்ட ஒழுங்குளின் கட்டுப்பாடுகளிலிருந்தும் செயற்படுத்துகின்றோம். இது எமக்கு வெற்றித் தீர்வைத் தரவில்லை என்கின்ற பதிவையே அடையாளப்படுத்தி இருக்கின்றது. இதனால் நாம் மேற்கொண்ட முயற்சிகள் தவறானதென்றோ, இந்த வழிமுறைக்கு எதிரான போக்குகள் தான் சரியான தீர்வை எட்டிக்கொள்ள வழியாகும் என்கின்ற நிலைக்கு நாம் வருவதும் ஒரு உடனடித் தீர்வாக அமையாது.


நமது இன்றைய பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு இன்றைய அரசாங்கத்தை மாற்றியமைப்பதுதான் என்று நாம் சிந்திக்க தொடங்குவதும் இது விடயத்தில் ஒரு ஆரோக்கியமான அனுகுமுறையாக அமையாது என்கின்ற புரிதல் முக்கியமாகும். இது சிலவேளை தலையிடிக்கு தலையணையை மாற்றுவது என்கின்ற கருத்தை ஒத்ததாக இருந்து விடவும் முடியும்.

நமது நாட்டில் எந்தத் தரப்பின் அரசாங்கம் அமைந்தாலும் அது சிங்கள - பௌத்த ஆதிக்க சக்திகளின் கரங்களை மீறி ஓர் அரசியலை இயங்கியலாக முன்னிறுத்துவதில் பாரிய சங்கடங்கள் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்ட நிலையில்தான் தீர்வுகளைத் தேட வேண்டிய சந்தர்ப்பத்தை கருத்தில் எடுக்க வேண்டியிருக்கின்றது. அந்த வகையில் பின்வரும் அம்சங்களில் நமது கவனத்தை திருப்ப வேண்டிய அவசியத்தையும் புறக்கணிக்கலாகாது.


இலங்கையின் இனவாத அரசியல் செயற்பாடு நமது நாட்டை அமைதிக்குப் புறம்பான ஒரு நிலையில் அல்லது இனவாத முறுகல் கொதிப்புக்குள் மக்களை வைத்துக்கொண்டு தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்கின்ற போக்கு நேற்று இன்று தோன்றியதல்ல. அது நன்கு வேர் பிடிக்கப்பட்ட ஒன்றாகவும் நடப்பட்டு வளர்ந்து பல கிளைகளை பரப்பியும் உள்ளன.

இந்த நிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாக இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். சிறு சிங்களக் குழுக்களின் ஆதிக்கத்தை கவனத்தில் எடுக்காது, நாட்டின் நீண்டகால நலன்களை முதன்மைப்படுத்தி நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் ஓர் உகந்த தருணமாக இதனைப் பிரயோகித்து நமது நாட்டின் அரசியல் சூழல் மாறுவதற்கான ஒரு வாய்பினையும் கொண்டுள்ளது.


நல்லாட்சி என்பது ஊழல்களுக்கு எதிரான நேர்மையான செயற்பாட்டை மட்டும் குறித்து நிற்பதல்ல. நாட்டில் வாழ்கின்ற அனைத்துச் சமூகங்களும் நல்லுறவோடும், நல்லிணக்கத்தோடும் நிம்மதியாகவும் அமைதியோடும் வாழ வைப்பதற்கான சூழலைத் தோற்றிவிப்பது நல்லாட்சி என்ற அம்சத்தினுள் அடங்கி இருக்கிறது என்கின்ற உணர்தலும் வேண்டும். இந்த வகையில் நாட்டின் நலன், மக்கள் பலம் என்பனவை நன்கு பேணும் வகையிலும் நீடித்த நிலைப்பேறை அடையும் மாதிரியிலும் இன்றைய அரசாங்கம் நடவடிக்கைகளை தீர்ச்சன்னியமாக ஏற்பாடு செய்தல் வேண்டும்.

இன்றைய அரசாங்கம் பாராளுமன்றத்தை தேசிய அரசுப் பேரவையாக மாற்றி வைத்திருக்கின்றது. ஆனால் அங்கு எதனை முன்னெடுப்பதற்காக இவ்வாறு மாற்றப்பட்டதோ அந்த அரசியலமைப்பாக்கம் வெறும் கூடிக்கலைவதோடு நாட்களை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. இதனைத் தவிர்த்து தேவையான நல்லிணக்கங்களை உறுதியாக கட்டியெழுப்புவதற்கும் பேணுவதற்கும் வகை செய்யும் நல்ல தீர்வுகளை நீண்ட கலந்துரையாடல்களுக்கு விடாது, உடனடியாக அரசியல்அமைப்பாக்கம் செய்வதற்கு உள்வாங்கி நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு கவனம் எடுத்தாக வேண்டும்.


பெருந் தேசிய கட்சிகள் இரண்டும் ஒன்றினணந்து ஆட்சியமைப்பதென்பது பல பாதகங்களைக் கொண்டதென்ற அரசியல் ரீதியான விமர்சனங்கள் ஏற்கத்தக்கனவாக இருந்த போதிலும் சில நல்ல திட்டங்களைக் கொண்டு வருவதன் ஊடாகவே இந்த விமர்சனங்ளை பொய்யாக்கி, நன்மைகளையும் கொண்டுவர முடியும் என்கின்ற உதாரணத்தையும் ஏற்படுத்திக் காட்ட முடியும்.

தனிக்கட்சிகள் அரசாங்கமாக அமைந்திருந்த போது அவை தனது ஆட்சியை நிலைநிறுத்தும் முகமாக முன்னெடுத்த அரசியல் அமைப்பு உருவாக்கங்களின் போது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு எதை அமுல்ப்படுத்த எண்ணினார்களோ அதை அரசியலமைப்பாக எழுதிய வரலாறு நமது நாட்டுக்குண்டு.


அதே போன்று ஆட்சிக்கெதிரான கலகங்களை பௌத்த பிக்குகள் முன்னின்று நடத்த முற்பட்ட சந்தர்பங்களில் அவர்களை பொலிஸார் கலைத்து விரட்டிய சம்பவங்களும் தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் நமது நாட்டில் பதிவாகாமல் இல்லை. இவைகள் எதனை நமக்கு எடுத்துக்காட்டுகின்றதென்றால் அமைந்திருக்கின்ற அரசாங்கம் எவற்றை அமுல் நடத்த விரும்புகின்றதோ அதற்கு இசைவாக காய்களை நகர்த்துவதில் பின்னிற்க்காத கோணமாகும்.


ஆகவே இன்றைய தேசிய அரசாங்கம் நாட்டு நலனுக்குத் தேவையானவைகளையும் நல்லிணக்கம் குலையாத நிலைப்படுத்துதலுக்கும் தேவையாகின்ற செயற்பாடுகளையும் விமர்சணங்களுக்கு அஞ்சாது முன்னெடுப்பதற்கு முன்வருவதில்தான் தங்கியிருக்கின்றது. இதில் இந்த நாடு பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என்ற கருத்தோட்டத்தினால் ஏற்பட்ட கசந்த அறுவடைகளை முன்னிறுத்தி, பல்லின சமூகங்களைக் கொண்ட பன்மைத்துவ நாடு என்ற தோரணையில் எமது புதிய அரசமைப்பாக்கத்தை உருவாக்கிக் கொள்வதில்தான் இன நல்லுறவும் நாட்டின் அமைதியும் தங்கியுள்ளது.

தேசிய அரசாங்கத்தால் இனமுறுகளை கட்டுப்படுத்த முடியாதா? தேசிய அரசாங்கத்தால் இனமுறுகளை கட்டுப்படுத்த முடியாதா? Reviewed by Madawala News on 6/14/2017 05:58:00 PM Rating: 5