Yahya

இப்தார் அரசியல்: நோன்பு காலத்து கவலைகள்


நோன்பு காலம் என்பது இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கே ஒரு புனிதமான காலப்பகுதியாகும்.   

அவர்கள், அக்காலப்பகுதியில் தங்களுடைய மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவான, அமைதியான சூழல் நிலவ வேண்டியது அவசியமாகும். ஆனாலும், கடந்த சில வருடங்களாக அவ்வாறான அமைதியான சூழல் இலங்கையில் இல்லை என்பது மிகுந்த கவலைக்குரியது.   


நமது அனுபவங்களின்படி, கடந்த சில வருடங்களாக, இலங்கையில் இனவாத செயற்பாடுகள் முனைப்புப் பெற்றிருக்கின்றன. இந்த இனவாதச் செயற்பாடுகள், நோன்பு காலங்களில் தீவிரமடைகின்றன.   

‘கிறீஸ் பூதம்’, ‘அபாயா பிரச்சினை’, ‘பள்ளிகளுக்குள் பன்றி இறைச்சி வீசியமை’, ‘பள்ளிவாசல்களைத் தாக்கியமை’, ‘முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்குத் தீயிட்டுக் கொழுத்தியமை’ போன்ற சம்பவங்கள், நோன்பு காலத்தை மையமாகக் கொண்டே, மேற்கொள்ளப்பட்டமை அல்லது ரமழான் நோன்பில் தீவிரமடைந்தமை கவனிப்புக்குரிய விடயமாகும்.   


இம்முறை நோன்பு காலத்தில், பள்ளிவாசல்கள் மீது கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. பல இடங்களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இவை எல்லாக் காரியங்களையும் மேற்கொள்வது யாரென்பது தெட்டத்தெளிவாகத் தெரிந்திருக்க, சட்டம் தனது கடமையைச் செய்யவில்லை என்பது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.   

சட்டம் தனது கடமையைச் செய்யவில்லை என்று கூறுவதைக் காட்டிலும், பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத விதத்தில், மேலிடத்தில் இருந்து தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.   


இதனால், முஸ்லிம்கள் ஆத்திரமடைந்திருந்த கட்டத்தில், ஜனாதிபதி கொழும்பில் நடாத்திய நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டுமென்று, முஸ்லிம் சமூக செயற்பாட்டுத் தளத்தில் இருந்து குரல்கள் எழுந்தன.   


அதையும் மீறி, முஸ்லிம் அரசியல்வாதிகளும் கணிசமான முஸ்லிம்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மறுநாள், நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த, பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்தில் சரணடைந்தார்.   


எனவே, இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுகின்றது என்று, இனவாதத்துக்கு எதிரான எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கும்போதே, அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டு, இரண்டு நீதிமன்றங்களால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. இதனால், முஸ்லிம்கள் மத்தியில் மீளவும் பல்வேறு கருத்துகள் எழுந்திருக்கின்றன.   


இது இவ்வாறிருக்க, ஜனாதிபதியின் இப்தாருக்கும் ஞானசார தேரர் சரணடைந்ததுக்கும் சிலவேளைகளில் தொடர்பிருக்கலாம் என்ற அனுமானங்களும் சமூக வலைத்தளங்களில் பகரப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.  

இம்முறை, ரமழான் நோன்பு காலத்தைப் பொறுத்தமட்டில், முஸ்லிம்களின் அரசியலிலும் சரி, தேசிய அரசியலிலும் சரி இப்தார் நிகழ்வுகள் வழமையைவிடவும் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்ததாக சொல்ல முடியும்.   


குறிப்பாக, கிழக்கிலும் கொழும்பிலும் இந்நிலைமைகள் அவதானிக்கப்பட்டன. கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கட்சிகளும் அமைப்புகளும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.  


 ஊடக அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா மற்றும் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எனப் பலர் கலந்து கொண்டனர். ஆனால், மு.கா தலைவரோ, அவரது கட்சியைச் சேர்ந்த யாருமே இந்த இப்தாருக்கு வந்திருக்கவில்லை.  


மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில், சம்மாந்துறையில் இடம்பெற்ற இப்தாரில், அக்கட்சியின் தலைவர் கலந்து கொண்டார். தேசிய காங்கிரஸ் கட்சியினால் அக்கரைப்பற்றில் நடாத்தப்பட்ட இப்தாரில் அக்கட்சியின் தலைவர் கலந்து கொண்டார்.   

ஆனால், இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்குப் பிராந்திய முக்கியஸ்தர்களாலும் மாகாண சபை உறுப்பினர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டு கிழக்கில் நடந்த இப்தார் நிகழ்வுகளில், கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவில்லை என்பது பல்வேறு கருத்தாடல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.   

மேற்குறிப்பிட்ட எல்லா நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட அல்லது கலந்து கொள்ளாத அரசியல்வாதிகளின் முடிவுகளுக்குப் பின்னால், கொஞ்சம் அரசியலும் கொஞ்சம் நியாயங்களும் இருக்கின்றன என்பதையும் இவ்விடத்தில் மறந்து விடக் கூடாது.   


குறிப்பாக, அட்டாளைச்சேனையில் நடைபெற்ற இப்தாரில் மு.கா தலைவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேசியப்பட்டியல் எம்.பி தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட அட்டாளைச்சேனைக்கு இன்னும் அந்த வெகுமானம் கொடுக்கப்படவில்லை. தற்காலிக எம்.பியே ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, அப்பதவியில் இருக்கின்றார்.   


எனவே, இந்த இப்தாரில் இது குறித்துத் தலைவர் ஏதாவது பேசியாக வேண்டிய ஓர் இக்கட்டான நிலை இருந்தது. இந்த நிலையிலேயே, அவர் அதில் கலந்து கொள்ளவில்லைப் போலும். இதற்கு உண்மையாகவே நியாயமான காரணங்கள் கூறப்பட்டாலும், தேசியப்பட்டியல் எம்.பி குறித்த தேவையற்ற தலையிடிகள் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் மு.கா தலைவர் இவ்வாறு நடந்து கொண்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.   


சரி, அட்டாளைச்சேனைக்குத்தான் வரவில்லை என்றாலும் கூட, கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மு.க சார்பு இப்தார் நிகழ்வுகள் எதிலுமே அக்கட்சியின் தலைவர், ஏன் பிரசன்னமாகி இருக்கவில்லை என்ற கேள்வி கட்சி முக்கியஸ்தர்களிடையே தோன்றியுள்ளது. ஏனெனில், தலைவருக்கு மிக நெருக்கமான கிழக்கு முதலமைச்சர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்விலோ, அக்கரைப்பற்றில் மாகாண சபை உறுப்பினர் ஒருவரால்  ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலோ மு.கா தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது, மக்களால் கவனிக்கப்பட்டுள்ளது.   


கிழக்கில் மு.காவுக்கு பாரிய சவால்கள் எழுந்துள்ள ஒரு காலசூழலில், கட்சி உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கின்றார் என்றால், அதற்குத் தலைவரிடம் பலமான காரணங்கள் இருக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயமானது.   


இது இவ்வாறிருக்க, நாட்டின் ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வுபற்றிக் குறிப்பிடத்தக்க வாதப் பிரதிவாதங்கள் மேலெழுந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இலங்கையில் கடும்போக்கு சக்திகள், மிக மோசமான இனவெறுப்புப் பிரசாரங்களிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.  

 சட்டம் எல்லோருக்கும் பொதுவானது எனச் சொல்லப்பட்டாலும் கடும்போக்குச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஓரிரு பௌத்த துறவிகளின் விடயத்தில், அந்தப் பொதுவான தன்மையைக் காணக் கிடைக்கவில்லை.   

இந்தச் சக்திகளுக்குப் பின்னால், ஓரிரு அமைச்சர்களோ அல்லது அரசியல் பலமோ இருக்கின்றது என்று கூறப்படுகின்ற நிலையில், கண்முன்னே அத்துமீறுகின்ற இனவாதிகளைக் கைது செய்து, அதற்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடிக்காமல், ‘இது சதி’ என்று அரசாங்கம் தொடர்ந்து கூறிக் கொண்டு, மெத்தனமாகச் செயற்படுகின்ற போக்கை, முஸ்லிம்கள் கடுமையாக ஆட்சேபிக்கின்ற நிலை இன்னுமிருக்கின்றது.  


எனவே, இப்படியாகச் செயற்பட்டுக் கொண்டு, முஸ்லிம்களோடு நட்புப் பாராட்டுவதற்காக ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வை, பகிஸ்கரிக்க வேண்டும் என்று முஸ்லிம் சிவில் செயற்பாட்டுத் தளத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.   

ஆனால், அதையும் மீறி, கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, நோன்பு திறந்ததையும் அவதானிக்க முடிந்தது.   


இலங்கை முஸ்லிம்கள், தமக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனவாத நெருக்குவாரங்கள் மற்றும் அதற்கெதிராகச் சட்டம் தன் கடமையைச் செய்யாதிருக்கின்றமை ஆகியவற்றுக்கு தமது எதிர்ப்பை அரசுக்கு வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது என்பதைக் கொஞ்சம் கூட மறுப்பதற்கில்லை. 

 ஆனால், இப்தார் போன்ற நிகழ்வுகள் இதற்குப் பொருத்தமான கருவியா என்பதையும் ஒரு சமய நிகழ்வைப் பகிஷ்கரிப்பதன் மூலம், தமது எதிர்ப்பை முஸ்லிம்கள் போதுமானளவுக்கு வெளிப்படுத்த முடியுமா என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.   


இப்போது முஸ்லிம்கள், எதிர்க்கட்சி அரசியலை முற்றாக இழந்திருக்கின்றனர். அதாவது, எதிர்க்கட்சி ஆசனங்களில் எந்த முஸ்லிம் எம்.பியும் இல்லை. எல்லா முஸ்லிம் எம்.பிகளும் ஆளும் தரப்பிலேயே அங்கம் வகிக்கின்றனர். பலருக்கு அமைச்சு, அரைஅமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.   


இந்நிலையில், தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்றால், அரசாங்கத்தில் கணிசமான வீதத்தில் இருக்கின்ற முஸ்லிம் எம்.பிக்கள் சபை நடவடிக்கையைப் பகிஷ்கரிக்கலாம்; நாடாளுமன்றத்தின் முன் சத்தியாக்கிரகம் செய்யலாம்; ஓரிருவராவது தமது பதவிகளை இராஜினாமாச் செய்யலாம். அதன்மூலம், அரசாங்கத்தில் ஆட்சிக் கட்டமைப்பில் ஓர் அதிர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அதைவிடுத்து, ஆளும் தரப்பில் இருந்து கொண்டு, அமைச்சுப் பதவிகள், அதற்குண்டான சொகுசுகளை எல்லாம் அனுபவித்துக் கொண்டு, இப்தார் போன்ற சாதாரணமான நிகழ்வுகளைப் பகிஷ்கரிப்பது எந்தளவுக்கு நன்மைபயக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.   

இவற்றையெல்லாம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள், உலமா சபையினர் ஆழமாகச் சிந்தித்தார்களோ, சிந்திக்கவில்லையோ தெரியாது. ஆனால், அரச இப்தார் நிகழ்வில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பொது மகன்களும் கலந்து சிறப்பித்தனர்.   


இதைச் சரியென்று ஒரு தரப்பும் பிழை என்று இன்னொரு தரப்பும் வாதித்துக் கொண்டிருந்த நிலையில், நான்கு பொலிஸ் குழுக்களால் சல்லடை போட்டுத் தேடப்பட்டு வந்த, பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், மிகவும் இலாவகமான முறையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.   


அவர் சரணடைந்த செய்தி கடந்த புதன்கிழமை காலை 10.30 மணிக்கு வெளியானது. இனவாதத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழ், சிங்கள முற்போக்குச் சக்திகளுக்கும் இது ஓர் ஆறுதலான செய்தியாக இருந்தது. சட்டத்தின் ஆட்சி நிலைபெறுவதாக அவர்கள் உணரத் தொடங்கினர்.   


ஆனால், அந்த உணர்வும் ஆறுதலும் நீடிக்கவில்லை. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட பிடியாணை, அவர் அங்கு சரணடைந்ததைத் தொடர்ந்து மீளப்பெறப்பட்டு, பிணை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் மற்றும் 4ஆம் இலக்க நீதிமன்றம் ஆகியவற்றில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போதும், அவருக்கு அந்தந்த நீதிமன்றங்கள் பிணை வழங்கியுள்ளன. சில மணித்தியால இடைவெளியில், ஒரு விறுவிறுப்பான திரைப்படக் காட்சியைப் போல மேற்சொன்ன எல்லாமும் நடந்தேறின. அவர் கைதான செய்தி மக்களுக்கு கிடைத்தவுடனேயே பிணை வழங்கிய செய்தியும் வெளியாகியிருந்தது.   


நீதிமன்ற நடவடிக்கைகளை யாரும் விமர்சிக்க முடியாது. ஆனாலும், முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டது மட்டுமன்றி, நாட்டில் ஒட்டுமொத்தமாக, இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்ட ஒரு நபர், இவ்வாறு சரணடைந்ததுக்கும் அரச இப்தாரில் முஸ்லிம் அரசியல்வாதிகள் கலந்து கொண்டதற்கும் தொடர்பிருக்கின்றதா என்ற கோணத்திலும் இவ்விடயம் நோக்கப்படுகின்றது. 

அதாவது, முஸ்லிம்களைக் கலந்து கொள்ளச் செய்வதற்காக அல்லது கலந்து கொண்டதற்கு பகரமாக அவர் சரணடையச் செய்யப்பட்டாரா என்று நோக்கப்படுகின்றது.   


அதைவிட முக்கியமாக, மேற்படி தேரர் நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்பட்டு வந்தவர். அவர் மீது பல முறைப்பாடுகளும் இருந்தன. இப்படியிருக்க, நான்கு பொலிஸ் குழுக்களாலும் கண்டுபிடிக்க முடியாதிருந்த (?) ஒருவருக்கு ஒரு நீதிமன்றத்தில் பிணை வாபஸ் பெறப்பட்டுள்ளது; மட்டுமன்றி, கைது செய்யப்பட்டு ஆஜர் செய்யப்பட்ட இரு நீதிமன்றங்களும் கூட பிணையில் விடுவித்து இருக்கின்றன.   


இலங்கை முஸ்லிம்கள் காலகாலமாக நாட்டின் சட்டத்தையும் இறைமையையும் மதித்துச் செயற்படுகின்றார்கள். இனவாதிகளை சிறையில் அடைக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பல்ல; ஏனெனில், அதனால் ஏற்படக் கூடிய எதிர்விளைவுகளையும் அவர்கள் அறிவார்கள். மாறாக, இந்நாட்டில் இனவாத நெருக்குவாரங்கள் இல்லாத சூழலில், இன செளஜன்யத்துடன் வாழ வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றனர்.  

அவ்வாறான ஒரு சூழல் நாட்டில் தற்போது இல்லை என்பதே நோன்புக் காலத்திலும் தொடரும் முஸ்லிம்களின் கவலையாக இருக்கின்றது. எனவே, சட்டமும் நீதித்துறையும் அந்தக் கவலையை போக்க வேண்டியுள்ளது.   

இப்தார் அரசியல்: நோன்பு காலத்து கவலைகள் இப்தார் அரசியல்: நோன்பு காலத்து கவலைகள் Reviewed by Madawala News on 6/25/2017 03:37:00 PM Rating: 5