Ad Space Available here

புதிய யாப்பு - இலவு காத்த கதை!


ஒரு பிச்சைக்காரனின் புண்ணைப்போல இந்த சின்னஞ்சிறு தீவில் நிறைவேறாமல் கிடக்கும்  பிரச்சினைகள் ஒரு பெரிய பட்டியல்.

புதிய புதிய கிறுக்குத் தனமான விளக்கமில்லா குழப்பங்கள் தான் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர  பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்தல் என்பது அணுவளவும் உயர்ந்த பாடில்லை.

ஒரு நெடுதூர பிரயாணி தனது ஆசனத்தை தனக்கு சௌகரியமாக விரித்தும் மடித்தும் உயர்த்தியும் விடுவதை போல நாடான்ட ஆட்சியாளர்கள் தங்களுக்கு சௌகரியமாக யாப்பை மாற்றுவதும்,

பின் அடுத்த ஆட்சியாளர் பழைய யாப்பை திருத்துவதும் அல்லது மாற்றுவதும் தான் கடந்த கால பாடமாகவிருக்கிறது.

அப்படியான ஒரு பின்னனியில் தான் பழைய சிவப்புச் சால்வை ஆட்சிக்கு சாவுமணி அடித்துவிட்டு புதிய குழுவொன்று மைத்ரி தலைமையில் களம் புகுந்து, புதிய யாப்பு, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு, சிறுபான்மை சுயநிர்ணயம் என்ற ப்ளஸ்பெக்கோடு களம் புகுந்து இன்று சேற்றில் நட்ட கம்பு போல நிலையின்றி பலமின்றி  ஆடிக்கொண்டிருக்கிறது.

இப்படியான ஒரு பின்னனியில் ஆட்சியேற முன் சிறுபான்மை மக்களின் தலையில் அடித்து வாக்குறுதியளிக்கப்பட்ட அந்த புத்தம் புதிய யாப்பு எப்போது வரும், என்னென்னதை சுமந்து வரும் என்றெல்லாம் நாம் நமது எதிர்பார்ப்பு அம்புகளை எய்து கொண்டிருக்கிறோம்.

ஐயம்பதி விக்ரமரத்தினவிடம் புதிய யாப்பு உருவாக்கும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது.இவர் ஒரு அரசியல் அறிவு செறிந்த இனவாத போக்கு அற்றவர் என்றாலும் அவருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

மகிந்த தரப்பு பழைய யாப்பில் திருத்தத்தையும், மற்றைய தரப்பு புதிய யாப்பையும், இன்னுமொரு தரப்பு நரி மௌனத்தையும் கொண்டிருக்கையில் யாப்பு  நிறைவேற்ற முன் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மை கருதி சமனிலை சிந்தனையை கொண்டுவர வேண்டும்.

நிச்சயமாக யாப்பு மேற்சொன்ன மூன்று கூட்டத்தையும் திருப்திப் படுத்த போவதில்லை.

முன்னைய ஆட்சியாளரோடு குடும்பம் நடத்தி சுகபோகம் அனுபவித்து, பின்னர் விவாகரத்து பெற்று புதிய கணவனோடு வாழ்ந்து வருகிற,
நூற்றுக்கு நூறு சிறுபான்மை எதிர்ப்பு கொண்ட ஒருவன் ஆட்சியேறினால் அவனுக்கு வால் பிடிக்க காத்திருக்கும் சம்பிக்க போன்ற டெம்பரரி பார்ட்டியெல்லாம் நம்பி சிறுபான்மை நலன் சார் யாப்பொன்றை திரைக்குவிட்டால் அதற்கப்பால் சொல்ல ஒன்றுமில்லை.

ஆட்சியை தூக்கி நிறுத்துதலே பெரும் பாடாக இருக்கையில் புதிய யாப்பை கொண்டு வந்து கூடுதல் பெரும்பான்மை பெற்று அசால்ட்டாக நிறைவேற்றி விடுதல் என்பதெல்லாம் முஸ்லிம் கட்சிகளெல்லாம் ஒற்றுமைப்பட்டுவிடுதல் போல கற்பனைக்கும் சாத்தியமற்ற ஒரு சூழலே சமகாலத்தில் காணப்படுகிறது.

ஈற்றில், புதிய யாப்பு வரும், நம் கனவுகளை நிறைவேற்றும், சுயாட்சி ஓங்கும், தசாப்த கால தவத்திற்கு பலன் கிடைக்கும் என்றெல்லாம் இலவு காத்த கிளி போல நம்பி காத்துக்கிடக்கும் தமிழ் மக்களும் முஸ்லிம்களும் தான் பரிதாபம்.

புத்தம் புதிய இனவாதத்தை தருவித்து சந்தைக்கு விற்கும் ஒரு நிரந்தர தொழிலை செய்து நாட்டை கூறுபோடும் ஒரு கலாசாரம் நாட்டில் வேறூன்றி இருக்கிற இத்தருவாயில்,

சிறுபான்மைகளுக்கு சமத்துவமளிக்கும், ஒரு யாப்பு மட்டுமல்ல ஒரு ஷரத்து கூட நிறைவேறுவது சூழ்நிலை அசாத்தியமாகும்.

தற்போதைய யாப்பிலும் கூட பல்லின சமத்துவம் முதன்மைப்படுத்தப்பட்டு பேரின வாதம் தலைதூக்கியிருக்கிறது.

1948 டொமினியன் யாப்பின் சுயாதீனத்தை வலியுறுத்தும் 29வது ஷரத்தை அப்டியே வைக்காமல் நீக்கியமை,

டீ.எஸ். சேனாநாயக்க திட்டமிட்டு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவியமை,

தோட்டத்தொழிலாளர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டமை,

1956 இன் தனிச்சிங்கள மொழிச்சட்டம்  போன்ற வரலாற்று துரோகங்கள் தான் இன்று சிறுபான்மையினரை புதிய யாப்பை வேண்டி சிங்கள கால்களில் மண்டியிட வைத்துள்ளது.

1949 இல் எழுந்த சமஷ்டிக் கோரிக்கை வெவ்வேறு பரிணாமங்களை தாண்டி பல தசாப்தங்கள் கடந்து வந்து இன்று சிங்கள காலடியில் கிடக்கிறது.

அரசு உள்ளூராட்சி தேர்தலை நடத்த கூட  பகீரத பிரயத்தனம் மேற்கொள்கையில்,

புதிய யாப்பு உருவாக்கம் அரசுக்கு மற்றுமொரு தலையிடியாகும்.

நாட்டின் சமகால நிலைமையோடு சீர்தூக்கி பார்க்கையில் சிறுபான்மையினர் எதிர்பார்க்கும் அந்த கனவுக்காகிதம் தற்போது கிடைக்க வாய்ப்பில்லை, நீங்கள் திரும்பி வாருங்கள் என்றுதான் அரசு சொல்லப்போகிறது என்று யோசிக்க வைக்கிறது. இல்லை அதுதான் நடக்கலாம்.

ஏற்கனவே நொந்து நூலாகி, அடிபட்டு, வலிகள் நிரந்தர நண்பனாகி, மக்களை இழந்து இருக்கிற ஒரு துளி ஜனநாயகத்தையாவது தட்டிக்கேட்க தலைப்பட்டிருக்கும் சிறுபான்மை மக்களுக்கு மற்றுமொறு ஏமாற்றத்தை தான் மைத்ரி அரசு பரிசளித்துவிட்டு ஆட்சிக்கு குட்பாய் சொல்லப்போகிறது.

அடுத்து வரப்போகிற ஆட்சிகளை நினைத்தால் இப்போதே புல்லரிக்கிறது.

ஒன்றுமில்லை, சிறுபான்மையாக இந்த நாட்டில் பிறந்த குற்றத்தின் தண்டனைக்கு விடுதலையே இல்லை. அவ்வளவுதான்.

கட்டுரையாளர் - சல்மான் லாபீர்


புதிய யாப்பு - இலவு காத்த கதை! புதிய யாப்பு - இலவு காத்த கதை! Reviewed by Madawala News on 6/30/2017 02:35:00 PM Rating: 5