tg travels

தொடரும் 'பசு பாசம்' : உஸ்மான் அன்சாரி பசு பாதுகாவலர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வீடு தீவைக்கபட்டது.


இந்தியா:

 ஜார்க்கண்ட் மாநிலம் பாரியாபாத்தில் பால் பண்ணை உரிமையாளர் உஸ்மான் அன்சாரி பசு பாதுகாவலர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உள்ளார். அவருடைய வீடு தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது. அவருடைய வீட்டிற்கு வெளியே தலையில்லாமல் பசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இச்சம்பவம் நேரிட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று மதியம் பசு பாதுகாவலர்கள் மற்றும் சில கும்பல் அவருடைய வீட்டை தாக்கிய போது போலீஸ் விரைந்து சென்று உள்ளது. அப்போது போலீசையும் கும்பல் தாக்கி உள்ளது. இதில் 12-க்கும் அதிகமான போலீசாரும் காயம் அடைந்து உள்ளனர்.

உஸ்மான் அன்சாரி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பசு பாதுகாப்பு கும்பலை போலீஸ் தடியடி நடத்தியும், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் விரட்டி உஸ்மான் குடும்பத்தாரை போலீஸ் காப்பாற்றி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது எனவும் போலீஸ் தெரிவித்து உள்ளது.

உஸ்மான் அன்சாரியின் குடும்பம் போலீஸ் பாதுகாப்புடன் மற்றொரு பகுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து பாரியாபாத் பகுதிக்கு அம்மாநில சிறப்பு படை போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என கூறிக்கொள்பவர்களால் தலித்கள், இஸ்லாமியர்கள் தொடர்ந்து இலக்காக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஜூன் 22-ம் தேதி அரியானா மாநிலத்தை சேர்ந்த சிறுவன் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ரெயிலில் சக பயணிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை விதித்தும், மாடு வாங்கல், விற்றலை ஒழுங்குபடுத்தியும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ‘மிருகவதை தடை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள்- 2017’ என்ற தலைப்பில் அறிவிக்கை வெளியிட்டது. பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களும் பசு வதைக்கு எதிராக கடுமையாக தண்டிக்கும் சட்டங்களை கொண்டு வந்து உள்ளது.

 இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆர.எஸ்.எஸ். கொள்கையை நாடு முழுவதும் மக்களிடம் திணிக்க முயற்சி செய்கிறது, இஸ்லாமியர்கள் மற்றும் தலித் பிரிவினர் இலக்காக்கப்படுகின்றனர் என கடுமையாக சாடி வருகின்றன.
தொடரும் 'பசு பாசம்' : உஸ்மான் அன்சாரி பசு பாதுகாவலர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வீடு தீவைக்கபட்டது. தொடரும் 'பசு பாசம்' : உஸ்மான் அன்சாரி பசு பாதுகாவலர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வீடு தீவைக்கபட்டது. Reviewed by Madawala News on 6/28/2017 04:42:00 PM Rating: 5