Kidny

Kidny

வாக்குகள் விழுங்கிய எருதுகள்!


பித்து தலைக்கேறிய பைத்தியங்கள்
பின்னிரவுகளில் இனவாத வாந்தி எடுக்கிறார்கள்
வாந்தியின் கருவூலம் தீப்பொறியாய் தெறிக்கிறது
பற்றிக்கொள்கிறது ஏழை பாமரர் உழைப்பு!

நாளும் பொழுதும் சிந்தப்பட்ட வியர்முத்துக்கள்
கோபுரங்களாக அடுக்கப்படும் ஆண்டுகளாக!
நெருப்பின் காதல் வீரியமானது
வினாடிகளுக்குள் வசியம் செய்து வஞ்சித்துவிடுகிறது!

இன்றைய காலத்து மின்சாரம் ஓரினவாதி
தேர்வு செய்து எரிக்கிறது நிகழ்தகவு முறையில்!
கணணிகளை விஞ்சும் செயற்பாடு
முற்றுமுழுதாக அகப்படுவது ஓரினம் மட்டுமே!

நகர்ப்புற கடைகளில் நெய் குப்பிவிளக்குகள்
பெருச்சாளிகள் உலாவரும் நேரம்
ஒரு வாசனையின்பால் மட்டும் கவரும்
தேடி வந்து தீ மூட்டும்
கூடி நின்று வாய்பார்க்கும் பார்!

பேச்சுக்களை விற்றுவிட்ட கோமாளிகள்
ஊமை நாடகம் போடுகிறார்கள்!
தன் கால் வாரப்படுவதறியாமல்
குதித்து மகிழ்கிறார்கள் நிஜ போராளிகள்!

முதலீர் பிரஜைகள் வடித்த முதலைக்கண்ணீர்
தீப்பொறியைக்கூட அணைக்க போதவில்லை!
தொடர்ந்து வடிக்கிறார்கள்
மூழ்கிப்போகிறார்கள் வாக்குகள் விழுங்கிய எருதுகள்!

வாக்குறுதிகளுக்கு பஞ்சமில்லை
நடைமுறைப்படுத்த திராணியுமில்லை
தட்டிக்கேட்க தோனவேயில்லை
வாங்கியதும் பகிர்ந்ததும் தடைகளாக!

தேர்தலொன்று வருங்கால்
கற்பிழந்த கரையோரம் கன்னியாகும்
புது மணக்கோலத்தில் தலைவர்கள்
பக்கவாத்தியங்கள் பல்லிலித்து இம்சை கொடுக்கும்
ஆரம்பத்திலிருந்தே வாக்குறுதிகள் வானைப்பிளக்கும்
ஞாபக மறதி கொண்ட செக்குகள் கைகொட்டி வாழ்த்தும்!

✍️Dr அப்துல் ரஷாக்

வாக்குகள் விழுங்கிய எருதுகள்! வாக்குகள் விழுங்கிய எருதுகள்! Reviewed by Madawala News on 6/11/2017 10:30:00 AM Rating: 5