Ad Space Available here

ஸகாதுல் பித்ராவுக்கான சிறந்த நடைமுறைகள்.


நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி, இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்”என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி)  நூல்கள்: பைஹகீ, தாரகுத்னீ

அனுபவம் 1
நோன்பு 29 அன்று பித்ராவாக இலங்கையின் பிரதான உணவான அரிசை மஸ்ஜித்களில் கையளிக்கவும். அரிசை தவிர்ந்த வேறெதுவும் பித்ராவாக கொடுக்க கூடாது என்ற பத்வா வெளியிடப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மத்ஹபை அடிப்படையாக கொண்ட அந்த பத்வாவை தொடர்ந்து  மஸ்ஜித்கள் அனைத்திலும் அரிசிமலையாக வந்து குவிந்தது.

நமது பிரதேசத்தில் ஒரு மாதத்துக்கு முன் வெள்ளம் வந்து அதற்கு நிவாரணமாக கிடைத்த பொருட்களில் அரிசி தான் அதிகம் என்று சொல்லலாம்.  பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும் அரிசி மலையாக குவிந்திருந்தது. மஸ்ஜித்களும்அரிசை சேகரித்து அரிசை பித்ராவாக பங்கீடு செய்தார்கள். பித்ராவாக கிடைத்த அரிசியைத்தான் இவர்கள் பெருநாளன்று சமைத்து உண்டார்கள் என்று யாராலும் உறுதியாக கூற முடியாது. பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் தேவைக்குஅதிகமாக அரிசி இருந்ததால் பலரும்  பெருநாளின் பின்னர் சேர்ந்த அரிசியை கடைக்கு விற்பனை செய்து பணத்தை பெற்றார்கள் என்பதே எமக்கு கிடைத்த, நம் கண்களால் கண்ட காட்சி. பாதிக்கப்படாதவர்களின் பலரின் வீடுகளிலும் இது தான் நிலைமை

அனுபவம் 2
நோன்பு 25 இருக்கும்

“ உங்கள் பித்ராவை பணமாகவும் தரலாம். அரிசியை மட்டும் தான் பித்ராவாக தர வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு சார்பாக இமாம்கள் பலர் பத்வா வெளியிட்டுள்ளனர், மத்ஹ்ப்களிலும் அதற்கான அனுமதியுள்ளது,

பித்ராவின் நோக்கத்தையே நாம் பார்க்க வேண்டும் பித்ரா நடைமுறைபடுத்தப்படுதன் மூலம் இஸ்லாம் அடைய நினைக்கும் இலக்கையே பார்க்க வேண்டும் என்று கூறி ஒரு சாரார் பித்ராவை பணமாக சேகரித்து. 29 ஆம் அன்று இரவு அவற்றின் மூலம் ஒரு குடும்பத்துக்கு பெருநாளைக்கு சமைக்கத் தேவையான அத்தனை பொருட்களையும்

கொள்வனவு செய்து பொதி செய்து அந்த பொதியுடன் சேர்த்து 1000 பணத்தையும் கையில் வழங்கினர்.

சுமார் 150 குடும்பங்களுக்கு இவர்கள் இவ்வாறுபெருநாளைக்கு சமைக்கத் தேவையான பொருட்கள் அடங்கிய பொதியை வழங்கினர்.

இந்தப் பொதியை பெற்றவர்கள் பித்ராவாக வழங்கப்பட்ட பொருட்களை  பெருநாளன்றே சமைத்து  சாப்பாட்டுக்கு எந்த செலவுமின்றி பெருநாளன்று  சமைத்து உண்பதனை காண முடிந்தது. அப்படி இப்பொதியை பித்ராவாக பெற்ற ஒரு ஏழை குடும்பஸ்தர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்

“நீங்களும் வெறும் அரிசை தந்து விட்டுப் போவீர்கள் என்று நினைத்தேன். பலரும் அரிசை அள்ளி அள்ளி தந்தாலும் நமக்கு நல்ல கரி வாங்க பணம் இல்லை என்பதனை யாரும் யோசிப்பதில்லை. நீங்கள் பித்ராவை நடைமுறைபடுத்தும் இம்முறை உண்மையில் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு மிக பயனுள்ளதொரு முறை என தெரிவித்தார்”

அனுபவம் 3
நோன்பு 22 இருக்கும் முகப்புத்தகத்தில் இப்படியானதொரு அறிவிப்பை பார்த்தேன்

‘ஏழைகளின் வீட்டிலும் பெருநாள்’ என்று தலைப்பிடப்பட்டு

‘அடுத்தவர்கள் பசித்திருக்க நாம் புசித்திருக்கலாமா?’

நோன்புப் பெருநாளன்று ஒரு ஏழைக் குடும்பத்துக்கு உணவளிப்போம் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்’

ஒரு குடும்பத்துக்கான செலவு 2500

அந்த அறிவிப்பில் மேலே குறிப்பிட்டவாறு ஒரு விளம்பரம் பதியப்பட்டிருந்தது.

இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்திய சகோதரர்கள்

பெருநாளன்று அவர்களின் அனுபவத்தை முகநூலில் இவ்வாறு பகிர்ந்து கொண்டிருந்தனர்.

இன்றைய பெருநாள்தினத்தில் பெண்தலைமைதாங்கும் குடும்பங்களினை சந்தோசப்படுத்தும் நோக்கிலும்,

தந்தையை இழந்து துயருறும் சின்னஞ்சிறுசுகளின் உள்ளங்களிற்கு ஆறுதலளித்து அரவணைக்கும் நோக்கிலும்,

நோன்பு உணர்த்திய பசியின் கொடுமையிலிருந்து இன்றைய பகல் பொழுதிலும்,

இனிவரும் பொழுதுகளிலும் இச்சகோதரிகளையும் அவர்தம் அன்புக்குழந்தைகளையும் மீட்டெடுக்கும் மகத்தான பணியின் முதல்நாள் காட்சிகளே இவை.

அடையாங்காணப்பட்ட 47 குடும்பங்களுக்கு இன்று பகலுணவு முகநூல் சொந்தங்களின் அன்பளிப்பினால் வழங்கிவைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

சாப்பாட்டுச் சஹன் ஒன்றினை வழங்கிவிட்டு ஆட்டோவில் ஏறும்போது வந்த அழைப்பின் மறுமுனையில்

நான்கு குழந்தைகளின் தாய் “ஜஸாகல்லாஹு கைரா இப்படி உணவுகளை போட்டோக்களில் தான் நாம் பார்த்துள்ளோம்

அதனை ருசிபார்க்க சந்தர்ப்பமளித்த உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும்” என்று கூறினால் அந்த தாய்

எனது கண்கள் பனித்தன உள்ளம் அல்ஹம்துலில்லாஹ் என்றது ஏழைவீட்டிலும் இன்று பெருநாள் என்ற சந்தோசம் மட்டற்ற மகிழ்ச்சியை என்னுள் ஏற்படுத்தியது.

மற்றுமொரு அழைப்பு எனது வீட்டிலிருந்து 2.30 மணிக்கு மறுமுனையில் சின்ன மகள் “அபீ சாப்பிடவாங்களேன்” இதோ வருகின்றேன் என்றபடி வீட்டை நோக்கிய சென்றேன்.

இந்நாளில் வாப்பா சாப்பிட வாங்களேன் என்று கூப்பிட முடியாமலும்
நமது வாப்பா இருந்திருந்தால் …….? என்ற
ஏக்கங்களோடும் வாழும் குழந்தைகளை எண்ணி மனதுக்குள் அழுதவனாக வீடுசென்றேன்.

அல்ஹம்துலில்லாஹ் முகநூல்வழியாக எமது வேண்டுகோளை ஏற்று பண உதவிபுரிந்த,

இப்பணியை வெற்றிபெறச்செய்ய கள உழைப்புச்செய்த அனைவருக்கும் நன்றிகள் அல்லாஹ்வே கூலிதரப்போதுமானவன்.

இன்றோடு முடிக்கவொன்னா இப்பணி என்றுமே தொடர எனக்கும் என் தோழமைகளுக்கும் அருள்புரிவாயாக ஆமீன்.

இந்த 3 நடைமுறையிலும் யார் சரி? யார் பிழை என விவாதம் நடாத்துவதனை விட இதில் எந்த நடைமுறை சிறந்தது,

மேற்கூறப்பட்ட ஏழைகளின் தேவையை இல்லாமல் செய்யுங்கள் என்ற ஹதீஸின் இலக்கை பூர்த்தி செய்யும் நடைமுறை எது?

 ஏழைகளுக்கு அதிகம் பிரயோசனமானது எந்த நடைமுறை என நம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

நபியவர்கள் மேற்குறிப்பிட்ட ஹதீஸில் அடைய விரும்பும் இலக்குகளான

ஏழைகள் யாரும் பெருநாளன்று பசித்திருக்க கூடாது

பெருநாளன்று ஏழைகள் சந்தோசமாக இருக்க வேண்டும்

என்ற இந்த உயர் இலக்குகளை அடைய பொருத்தமான நடைமுறை  எதுவென்று நாம் தெரிவு செய்து.

குறிப்பிட்ட நடைமுறையை நாம் மஸ்ஜித்வாரியாக நடைமுறைபடுத்தி அடுத்த ரமழானில் நம் நாட்டில் வாழும் அனைத்துஏழைகளுக்கும் 3ஆம் அனுபவத்தில் குறிப்பிட்டவாறான ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்க  முயற்சிப்போம்.

நபியவர்கள் காலத்தில் குதிரைக்கு ஸகாத் வசூலிக்கப்பட்வில்லை ஆனால் கலீபா உமர்(றழி) அவர்களின் காலத்தில் குதிரைக்கு ஸகாத் வசூலித்தார்கள். கலீபா உமர் அவர்களின் இச்செயற்பாடு ஒரு போதும் சுன்னாவுக்கோ நபியவர்களின் கட்டளைக்கோ மாற்றமானதல்ல. ஏன் எனில் கலீபா உமர் அவர்கள் ஸகாத்தின் நோக்கம் இலக்கு அதன் பிரயோக வடிவம் அனைத்தையும் தெளிவாக புரிந்து வைத்திருந்தார்கள்.

கலீபா உமர் அவர்களுக்கு இருந்த தெளிவு இன்று சமகாலத்தில் பலருக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அதனால் தான் ஸகாதுல் பித்ர், ஸகாத் போன்ற உயரிய இலக்குடன் கூடிய திட்டங்கள் சமூகத்தில் பரவலாக நடைமுறைபடுத்தப்பட்ட போதும் அதன் சிறந்த விளைவுகளை சமூகத்தில் காண முடியாதுள்ளது.

இதற்கான் காரணம்இஸ்லாத்தின் இந்த உயரிய கோட்பாடுகள் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சமகால சமூகத்துக்கு தெளிவின்மையே.

ரமழான் மாதத்தில் பாதை முழுதும், மஸ்ஜித் வாயில்கள் முழுதும் பிச்சைக்காரர்கள் குவிந்திருப்பதனை பார்த்து நாங்கள் நொந்துகொள்கிறோம் குறை கூறுகிறோம்.

அல்லாஹ் உயர் இலக்குகளுடன் நமக்கு கடமையாக்கிய ஸகாத், ஸகாதுல் பித்ர் போன்ற கடமைகளை நாம் மிகப் பிழையாக நடைமுறைபடுத்துவதன்
 ஒரு பயங்கர விளைவே சமூகத்தின் இந்த நிலைமைக்கு காரணம் என்பதனை
 நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குறைந்தது இம்முறையாவது மஸ்ஜித் வாரியாகவோ, குடும்பம் வாரியாகவோ, நண்பர்கள் வாரியாகவோ உங்கள் ஸகாதுல் பித்ரை பணமாகவோ, பொருளாகவோ சேர்த்து அல்லது இவற்றை விட ஒரு சிறந்த நடைமுறையை நீங்களாகவே சிந்தித்து உங்களுக்கு தெரிந்த அல்லது உங்கள் குடும்பத்திலேயே உள்ள ஏழை அங்கத்தவனின் பெருநாள் தேவையை நிவர்த்தி செய்து மேலே குறிப்பிட்ட ஹதீஸின் இலக்கை அடைந்துகொள்ள
 முயற்சிப்போம்.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் கட்டாயம் கரிசணை செலுத்தி தெளிவு பெற முயற்சிக்க வேண்டும்.

இல்லையெனில் ஒரு ஏழை தனது கவிதையில் பாடிய நிலை தான் சமூகத்தில் பரவலாக இருக்கும்

“நோன்பு பெருநாளன்று கிடைத்த பித்ரா அரிசை வைத்துக் கொண்டு காத்திருக்கிறோம்.

ஹஜ்ஜூப் பெருநாளன்று குர்பான் இறைச்சி வந்து சேரும்வரை” அரிசியுடன் இறைச்சி கரி சமைத்து சாப்பிட”

- ARM INAS -
ஸகாதுல் பித்ராவுக்கான சிறந்த நடைமுறைகள். ஸகாதுல் பித்ராவுக்கான சிறந்த நடைமுறைகள். Reviewed by Madawala News on 6/20/2017 04:39:00 PM Rating: 5