Ad Space Available here

காத்தான்குடி சமூகம் எப்போது திருந்தப்போகிறது..? இது காத்தான்குடி அப்துல் கையூம் இன் ஆதங்கம்.


'சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்போம்' எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி நகர சபையினால் காத்தான்குடி கடற்கரையை ஒட்டிய மெரின் ட்ரைவ் வீதியோரத்தின் அன்வர் பள்ளி கடற்கரை அண்மித்த பகுதியில் 120 குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் அன்றாடம் கடற்கரை பகுதியில் சேர்கின்ற மூவகையான கழிவுப்பொருட்களுக்கும் தனித்தனியான குப்பைத்தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் நமது காத்தான்குடி பிரதேசவாசிகளோ அக்குப்பைத் தொட்டிகளையோ, அவை வைக்கப்பட்டிருப்பதன் ஆரோக்கியமான நோக்கத்தையோ கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் கழிவுப்பொருட்கள் அனைத்தையும் கடற்கரை மணலிலேயே வீசியெறிந்துவிட்டுச் சென்றிருப்பது வேதனையான விடயமாகும். இதனால் அப்பகுதியில் உணவு தேடிவரும் கால்நடைகளும் கூட அழகான கடற்கரை மணலை அசுத்தப்படுத்துகின்றன.

கடற்கரைத் திடலென்பது பலரும் பொழுது போக்குவதற்காக புத்தாடைகளோடு, குடும்பத்தோடு வந்து அமர்கின்ற ஒரு பகுதியாகும். மேலும் நமதூரின் விசேடமான சிறப்பம்சமாகவும் விலை மதிப்பற்ற சொத்தாகவும் கருதப்படுவது இக்கடற்கரை என்றால் அதில் மிகையேதுமில்லை. அதன் காரணமாகவே வெளியூர்வாசிகள் கூட பெருநாள் தினத்தன்று தங்களுடைய சொந்த ஊரைத்துறந்து பெரும் பொருளாதாரத்தை செலவு செய்து காத்தான்குடியை நோக்கிக் குடும்பம், நண்பர்கள் சகிதமாகப் படையெடுத்து வருகின்றார்கள். அவர்கள் அனைவருமே தங்களுடைய ரசனைக்காகவும் மன ஆறுதலுக்காகவும் சிந்தனையில் இலக்கு வைப்பது நமதூரின் கடற்கரைதான் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.

அப்பேர்ப்பட்ட நமதூரின் விலை மதிப்பற்ற சொத்தை பேணிப்பாதுகாப்பது யாருடைய கடமை என்பதை ஏனோ தெரியவில்லை, நமதூர் சமூகம் சிந்திக்க மறுக்கின்றது. சுத்தம் ஈமானில் பாதி என்ற அடிப்படைக் கொள்கையை வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ள நாங்கள் அதை உதாசீனப்படுத்தி இவ்வாறு பேணிப்பாதுகாக்க வேண்டிய கடப்பாடுகொண்ட பகிரங்கப் பொது இடங்களை மாசு படுத்துவது இஸ்லாத்தின் பார்வையில் எந்தளவு தூரம் கண்டிக்கப்பட வேண்டியதென்பதை சற்றேனும் உணர்ந்துபார்க்க வேண்டும்.

அதேநேரம் காத்தான்குடியிலிருந்து அதனையண்டிய மற்றும் தூரப் பிரதேசங்களிலுள்ள பொழுதுபோக்கும் இடங்களுக்குச் செல்கின்ற நம்மவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதில்லை. தாங்கள் உண்டு, பருகிக் கழிக்கின்ற உணவுக் கழிவுகளை அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மிகவும் கவனமாகவும் பேணுதலாகவும் இட்டு விடுகின்றனர். ஆனால் தமது பிரதேசமான காத்தான்குடிக் கடற்கரையை மட்டும் ஏன் இவர்கள் இவ்வாறு அசுத்தப்படுத்திகின்றனர், அசிங்கப்படுத்துகின்றனர் என்பதுதான் புரியவில்லை.

எனவே அன்புச்சகோதர சகோதரிகளே..!

நமதூரின் கடற்கரை என்பது நமக்கு இறைவன் வழங்கிய விலை மதிப்பற்ற ஒரு சொத்து. அதன் தூய்மையான சுகாதாரமான சூழலைப் பேணுவதற்காக நமதூரின் நகரசபை தன்னால் முடிந்த ஒரு முயற்சியாகவே நமது வரிப்பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த 120 குப்பைத் தொட்டிகளையும் பாதையோரத்தில் வைத்துள்ளது. அந்த வகையில் அவற்றை முடியுமானவரை பயன்படுத்தி நமது பொழுதுபோக்கும் பிரதான இடமாகிய கடற்கரைத் திடலை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணிப்பாதுகாக்க வேண்டியது பிரதேசவாசிகளான நமது பிரதான கடமை என்பதை உணர்ந்து எதிர்வரும் காலங்களிலேனும் பொறுப்புணர்வோடு செயற்படுவோம்.

-அப்துல் கையூம்,
காத்தான்குடி.
28/06/2017

காத்தான்குடி சமூகம் எப்போது திருந்தப்போகிறது..? இது காத்தான்குடி அப்துல் கையூம் இன் ஆதங்கம். காத்தான்குடி சமூகம் எப்போது திருந்தப்போகிறது..? இது  காத்தான்குடி அப்துல் கையூம் இன் ஆதங்கம். Reviewed by Madawala News on 6/28/2017 12:37:00 PM Rating: 5