Yahya

இப்தாரின் பெயரில் பள்ளியில் “பன” ஓதுபவர்கள், சிலையை வைத்து வணங்கினாலும் ஆச்சரியமில்லை.


இலங்கையில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ள இனவாத சூழ்நிலை காரணமாக, இனவாதத்தை இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் அணுகி, உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ள தெரியாத அல்லது விரும்பாத முஸ்லிம் (பெயர் தாங்கி) தலைவர்கள் மத நல்லிணக்கம் என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டல்களையும் தூக்கியெறிந்து விட்டு வழிகேட்டின் உச்சத்திற்கே சென்று உயிர் பிச்சை கேட்க்கும் அவலம் இலங்கையில் நடந்தேறுகிறது.

இனவாதத்திற்கு பயந்து,
இஸ்லாத்தை விட்டுக் கொடுப்பது.
கொள்கையை விட்டுக் கொடுப்பது.
குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டல்களை புறக்கணிப்பது.
சிலைகளுக்கு சேவகம் செய்வது.

பன்சலைகளையும், புத்த சிலைகளையும் நிர்மாணித்துக் கொடுப்பது.
பன்சலைகளைகளுக்கு பெயிண்ட் அடித்துக் கொடுப்பது.
வெள்ளம் வந்தால் முதலில் பன்சலைகளை துப்பரவு செய்து கொடுத்து நல்ல பெயர் எடுக்க முயற்சிப்பது.

பௌத்த மத குருக்களை கும்பிடுவது.

என்று இஸ்லாத்தை தூக்கியெறிந்து விட்டு உயிருக்கு பயந்து இது போன்ற காரியத்தில் பலரும் ஈடுபடுவதை சர்வ சாதாரணமாக நாம் பார்த்து வருகிறோம்.

குர்ஆனையும், நபி மொழிகளையும் படித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டிய உலமாக்களுக்கு மத்ஹபுகளையும், தரீக்காக்களையும் பாடமாக படித்துக் கொடுத்து வழிகெடுத்ததின் விளைவை இன்றைய இலங்கை சமுதாயம் உணர்ந்து கொண்டிருக்கிறது.

அல்லாஹ்வுக்கு பயப்பட வேண்டியவர்கள் அவ்லியாக்களுக்கு பயப்பட்டதின் விபரீதம் இன்று காண முடிகிறது.

குர்ஆன், சுன்னாவை பின்பற்ற வேண்டியவர்கள் மத்ஹபுகளையும், தரீக்காக்களையும் பின்பற்றியதின் ஆபத்தை இன்று புரிய முடிகிறது.
மொத்தத்தில் இஸ்லாத்திற்கும் இவர்களின் செயல்பாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் மார்க்கத்தை விற்றுப் பிழைக்கும் காரியத்தை கன கச்சிதமாக செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தான் கடந்த 14.06.2017 அன்று ஒரு முஸ்லிமினால் ஜீரணிக்க முடியாத மா பாதக செயலொன்னை அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாயலில் செய்து முடித்திருக்கிறார்கள்.

“பன” ஒதிய மத குருவும், மைக் பிடித்த மவ்லவியும்
அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாயலில் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போது பவுத்த, கிருத்தவ, ஹிந்து மத தலைவர்கள் அழைக்கப்பட்டு நிகழ்வு இடம் பெற்றது. இதில் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் முன்னால் அதிபர் எம்.ஐ. உதுமாலெப்பை தலைமை தாங்கியதாகவும், மவ்லவி எம்.ஏ. ரஹ்மதுல்லாஹ் என்பவர் உரையாற்றியதாகவும், மவ்லவி லத்தீப் மற்றும் சித்தீக் ஹாபிஸ் போன்றவர்களும், முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் மற்றும் டாக்டர் அப்துல் ஜப்பார் என்பவருடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல் ஜமீல் ஆகியோரும் கலந்து கொண்டதாக செய்தி இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பவுத்த மத குருவுக்கு மஃரிப் தொழுகை நேரத்தில் மிம்பருக்கு அருகில் இருந்து “பன” ஓதுவதற்கும் குறித்த பள்ளி நிர்வாகிகளும், மவ்லவி மார்களும் அனுமதியளித்துள்ளதாகவும் குறித்த செய்தி விபரிக்கிறது.

(குறித்த செய்தி உண்மையெனில்) அல்லாஹ்வை வணங்குவதற்காக மாத்திரம் கட்டப்பட்ட பள்ளிகளில் “பன” ஒதி பவுத்த மதத்திற்காக பிரச்சாரம் செய்யும் இவர்கள் எந்த மதத்தினை கடைப்பிடிக்கிறார்கள் என்ற சந்தேகம் தற்போது எழுகிறது?

அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள், அவன் தூதரை மாத்திரம் பின்பற்றுங்கள் என்று பிரச்சாரம் செய்ய வேண்டிய உலமாக்கள் அல்லாஹ் அல்லாத போலி தெய்வங்களுக்கு வழிபாடு செய்வதற்கு பள்ளியில் இடம் கொடுக்கும் கொடுமையை மார்க்கம் அனுமதிக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் மாளிகையில் “பன” ஓதுவதற்கு அனுமதியளித்த இவர்கள் பள்ளிக்குள் சிலை வைக்க அனுமதிக்க மாட்டார்களா என்ன?

மார்க்கத்திற்காக உயிரையும் தியாகம் செய்த நபிமார்களினதும், நபித் தோழர்களினதும் வரலாற்றை பேசும் உலமாக்கள் உயிருக்குப் பயந்து “பன” ஓதுவதற்கு துணிந்தது எப்படி? இவர்களின் ஈமான் என்ன ஆனது? யாருக்கு? எவ்வளவுக்கு ஈமானை இவர்கள் விற்பனை செய்தார்கள்?

மரண பயமும், உலக ஆசையும் மிகைத்த காரணத்தினால் அல்லாஹ்வின் மாளிகையை அவமதிக்கும் கொடூரத்தில் கொஞ்சமும் மனக் கஷ்டமின்றி ஈடுபட்டுள்ளார்கள் இந்த சண்டாளர்கள்.

இப்தாருக்கும் மாற்று மத, மத தலைவர்களுக்கும் என்ன தொடர்பு?
நோன்பு திறக்கும் நிகழ்வு என்பது இறைவனுக்காக உண்ணாமல், பருகாமல் இருந்து நன்மையை எதிர்பார்க்கும் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரிய ஒன்றாகவே இஸ்லாம் சொல்கிறது. இஸ்லாத்தையே ஏற்றுக் கொள்ளாத இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்தின் அடிப்படை ஏகத்துவக் கொள்கைக்கு நேர் மாற்றமாக இருக்கிற மாற்று மதத்தினருக்கும் நோன்பு திறக்கும் நிகழ்வுக்கும் என்ன தொடர்பிருக்கிறது?

நோன்பு திறக்கும் நிகழ்வுகளுக்கு மாற்று மத தலைவர்கள் அழைக்கப்படுவதின் நோக்கம் என்ன?

இப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மாற்று மத தலைவர்களுக்கு “லா இலாக இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” வின் விளக்கம் சொல்லிக் கொடுக்கப்படுகிறதா? அல்லாஹ்வை தான் வணங்க வேண்டும், சிலைகளை வணங்கக் கூடாது என்ற ஏகத்துவப் பாடம் நடத்தப்படுகிறதா?
வழிகெட்ட சித்தாந்தங்களை பின்பற்றக் கூடாது. முஹம்மது நபியை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்கிற நேர்வழிச் சிந்தனை அவர்களுக்கு வழங்கப்படுகிறதா?

“லா இலாஹ இல்லல்லாஹ்” வின் விளக்கம் தெரிந்தால் (பெயர் தாங்கி) உலமாக்களே பள்ளிக்குள் “பன” ஓத அனுமதி கொடுக்கும் நாசகார காரியத்தில் ஈடுபடுவார்களா?

அப்படியெனில், எதற்காக இப்தாருக்கு மாற்று மத தலைவர்கள் அழைக்கப்படுகிறார்கள்?

மத நல்லிணக்கம் என்ற பெயரில் நடத்தப்படும் நாடகத்திற்காகவே அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அல்லாஹ்வுக்காக நோன்பிருந்த ஒருவன் நோன்பு திறக்கும் போது இறைவனின் இறை பொருத்தத்தை எதிர்பார்க்கிறான். மாற்று மத தலைவர்களை அழைத்து நோன்பு திறக்கும் நேரத்தில் கஞ்சியும், சம்சாவும் கொடுப்பதினால் எவறுடைய பொருத்தத்தை இந்த உலமாக்கள் எதிர்பார்கிறார்கள்?

அல்லாஹ்வுக்கு பயப்படுவதற்கு பதிலாக மத குருக்களுக்கு பயப்பட்டால் இது போன்ற இழி நிலைகளைத் தான் இவர்கள் சுமந்து கொள்ள நேரிடும் என்பதை திருமறைக் குர்ஆன் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

அல்லாஹ்வை அவமதித்த அக்கரைப்பற்று பள்ளி நிர்வாகம்
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 72:18
அல்லாஹ்வின் பள்ளியில் அல்லாஹ் அல்லாத யாரையும் அழைக்கவோ, வணங்கவோ, வணக்கத்திற்கு துணை புரியவோ கூடாது என்பதை மேற்கண்ட அல்குர்ஆன் வசனம் நமக்கு தெளிவாகவும், அழுத்தமாகவும் புரிய வைக்கிறது.

அல்லாஹ்வின் பள்ளிவாயலில் “பன” ஓதுவதற்கு அக்கரைப்பற்று பள்ளி நிர்வாகத்திற்கு என்ன அனுமதியுண்டு? அல்லாஹ்வின் பள்ளியில் இந்த அனாச்சாரத்தை செய்வதற்கு இவர்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்திருக்க வேண்டும்?

ஒரு உண்மையான முஃமின் இப்படியொரு காரியத்தை செய்வதற்கு கனவிலும் நினைக்கமாட்டான். ஆனால் இவர்களோ அனுவளவும் அல்லாஹ்வுக்கு பயமில்லாமல் இந்த மா பாதக செயலை செய்துள்ளார்கள் என்றால் இவர்கள் குர்ஆனுக்கு கொடுக்கும் கவுரவும் என்னவென்பது தெளிவாக புரிகிறதல்லவா?

அல்லாஹ்வை வணங்கி, அவனுக்கே அனைத்து இபாதத்களையும் செய்ய வேண்டிய பள்ளிவாயலில் அல்லாஹ் அல்லாதவருக்காக “பன” ஓதிய அக்கரைப்பற்று பள்ளி நிர்வாகம் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இவர்கள் அல்லாஹ்வின் பள்ளியை நிர்வகிக்க அறவே தகுதியற்றவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும்.

அல்குர்ஆன் 09:17,18
பள்ளிவாயல்களை நிர்வகிப்போர் எப்படியிருக்க வேண்டும் என்பதை அழகாகவும், ஆழமாகவும் கற்றுத் தரும் திருமறைக் குர்ஆன் “இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது” என்று தெளிவாக முடிவை அறிவிக்கிறது.

அல்லாஹ்வின் பள்ளியில் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களின் மார்க்க காரியங்களை செய்ய வழியேட்படுத்திக் கொடுக்கும் இத்தகையோர் பள்ளிகளை நிர்வாகம் செய்வதற்கு எவ்வித தகுதியும் அற்றோர் என்பதுடன், அல்லாஹ்வை மாத்திரம் நம்பக் கூடியவர்கள் மட்டுமே அல்லாஹ்வின் பள்ளிவாயலை நிர்வகிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்திக் கூறுகிறது.

அது மாத்திரமன்றி, அல்லாஹ்வின் பள்ளிவாயலில் இது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடும் வேதனையும் உண்டு என்றும் குர்ஆன் நமக்கு தெளிவூட்டுகிறது.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.


அல்குர்ஆன்  02:114
அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதற்காக கட்டப்படும் பள்ளியின் இலக்கணம்

ஒரு கட்டடத்தை பள்ளியாக நாம் அழைத்துக் கொண்டாலும் உண்மையில் அல்லாஹ்வின் பார்வையில் குறித்த இடம் பள்ளியாக இருக்க வேண்டும் என்றால் அது எப்படியிருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை இறைவன் நமக்கு கற்றுத் தருகிறான்.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏகஇறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

அதில் நீர் ஒருபோதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 09:117,118
மரண பயமும், உலக ஆசையும் இஸ்லாத்தின் கொள்கைகளை அழித்து, இஸ்லாத்தில் இருப்பதாக சொல்லிக் கொண்டு, இஸ்லாத்திற்கு மாற்றமாக இவர்கள் செயல்படுவதற்குறிய காரணத்தை நபிகள் நாயகம் அவர்களே முன்னறிவிப்பாக செய்து விட்டார்கள்.

மரண (உயிர்) பயமும், உலக (வாழும்) ஆசையும் மிகைத்து விட்டால் இதுபோன்ற நிலை தான் ஏற்படும் என்பதுடன் கொள்கையை விட்டுக் கொடுத்து, காபிர்களுக்கு ஏற்ற வகையில் இஸ்லாத்தை வலைப்பதற்கு இவர்கள் முனைப்புக் காட்டுவார்கள்.

இதோ நபியவர்களின் முன்னறிவிப்பைப் பாருங்கள்.

“உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள் உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள்.
எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்! உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் “வஹ்னை’ ஏற்படுத்தி விடுவான்” என்று பதிலளித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். “உலகத்தை நேசிப்பது மரணத்தை வெறுப்பது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), நூல் : அஹ்மத் 21363
மரணத்திற்கு பயந்து, உலகத்தை நேசித்து, கொள்கையை விட்டுக் கொடுத்து, வழிகேட்டில் சென்று மறுமையில் நஷ்டப்பட்டு விடாமல் உண்மையுள்ள முஸ்லிம்களாக வாழ்வதற்கு வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக!

-ரஸ்மின் MISc
இப்தாரின் பெயரில் பள்ளியில் “பன” ஓதுபவர்கள், சிலையை வைத்து வணங்கினாலும் ஆச்சரியமில்லை. இப்தாரின் பெயரில் பள்ளியில் “பன” ஓதுபவர்கள், சிலையை வைத்து வணங்கினாலும் ஆச்சரியமில்லை. Reviewed by Madawala News on 6/19/2017 10:04:00 AM Rating: 5