Kidny

Kidny

பெண்களின் இராக்கால வணக்கமும் இடைஞ்சல் தரும் இளைஞர்களும் .


(எச்.எம்.எம்.பர்ஸான்)   

புனித ரமழான் மாதம் வந்து விட்டால் உலக முஸ்லீம்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்து, இன்முகத்துடன் அந்த மகத்தான மாதத்தை வரவேற்பார்கள். ஏனென்றால், அது மகத்துவம் பொருந்திய, அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட, மனிதர்கள் செய்த பாவங்கள் தவ்பா மூலம் மன்னிக்கப்பட்டு, மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் சிறப்புமிக்க மாதமாகும்.

இந்த மாதத்தில் தான் வயது வித்தியாசமின்றி அல்லாஹ்வின் மாளிகையோடும். நல்லமல்களோடும் தங்களது நேர காலங்களை ஒவ்வருவரும் செய்வதற்கான அழகிய சந்தர்ப்பங்களாக இந்த ரமழான் காலம் அமைகின்றது. இன்று நாம் அடைந்துள்ள ரமழான் மாதம் அடுத்த முறை வரும் போது நாம் உயிருடன் இருப்போமா? என்ற நிச்சயமில்லா நிலையில், இம்மாதத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கடப்பாட்டு நம்மிடமுள்ளதை நாம் உணர வேண்டும்.

குறிப்பாக இளைஞர் சமூகத்தினர் உணர வேண்டும். மறுமையில் அதிகம் விசாரிக்கப்படும் வயது எமது இளமைப்பருவமே. இதனைத்தவற விட்டு பல இளைஞர் கூட்டம் வீதிக்கு வீதியாக, சந்திக்கு சந்ததியாக, கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு அல்லாஹ்வின் மாளிகைக்கு வணக்க வழிபாடுகளை செய்ய வரும் பெண்களுக்கு சச்சரவுகளையும், தொந்தரவுகளையும் ஏற்படுத்தி, அவர்களை அசௌகரியப்படுத்துகின்றனர்.

நாம் தான் நன்மையான காரியங்களில் ஈடுபட முடியாவிட்டாலும், அதனை ஒரே நோக்கமாகக்கொண்டு பள்ளிவாயல்களை நோக்கி வரும் எமது தாய்மார்கள், சகோதரிகளுக்காவது இடையூறு கொடுக்காமல் தவிர்ந்து நடக்க முயற்சிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

பெண்கள் பள்ளிக்கு வரும் போதும், போகும் போதும் அவர்களை வழி மறித்து பட்டாசி கொழுத்தி, கூக்குரலிட்டு, அங்குமிங்குமாக இந்த ஈனச்செயலை இந்தப்புனிதமான ரமழான் காலங்களில் கட்டாக்காலியாகத் திரியும் இளைஞர் கூட்டம் செய்து வருகின்றது.

பொலிஸ் நிலையங்களிலிருந்து குறித்த இளைஞர்கள் தொடர்பாக பள்ளிவாயல்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது. உங்கள் இளைஞர் சமூகத்தைக் கட்டுப்படுத்துங்கள். அவர்களுக்கு ஒவ்வொரு தொழுகையின் பின்னாலும் அறிவுரைகள் வழங்குங்கள். அவர்கள் தொடர்பாக நிறைய முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெறுகிறது.

ரமழான் காலங்கள் வந்து விட்டால், அவர்களின் பிரச்சனைகள் தான் தலைதூக்குகிறது என்று பொலிசார் சொல்லுமளவுக்கு நம் சமூகத்திலுள்ள குறிப்பிட்ட சில இளைஞர் கூட்டம் இருக்கின்றார்கள். இவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் மிகக்கவனஞ்செலுத்த வேண்டும்.

இரவு நேரங்களில் விடிய விடிய ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்றுக்கும் அதிகமானவர்கள் வீதிகளில் அதிவேகமாகச் சென்று விபத்துக்குள்ளாவதையும், அப்பாவி மக்கள் மீது மோதுண்டு அவர்களை காயங்களுக்குள்ளாக்குவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

அத்தோடு, சகோதர சமூகங்களுடன் இணைந்து வாழும் பகுதிகளிலும் பாதைகளிலும் கிறிக்கட போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவதும் அவர்களுக்கு தொல்லை கொடுப்பதும், அவர்களது வீடுகளுக்கு சேதங்களை ஏற்படுத்துவதனூடாக பல பாரிய பிரச்சனைகளை உருவாக்கவும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை சிக்கலுக்குள் மாட்டி விடவும் இவ்வாறான செயற்பாடுகள் அமையும்.

இன்று நாம் பல்வேறு வழிகளில் நெருக்குவாரங்களுக்குள் உட்பட்டுப்போயுள்ள நிலையில் எமது இளைஞர் சமூகத்தின் இவ்வாறான செயற்பாடுகள் எம் சமூகத்தின் மீது அவப்பெயரையே தோற்றுவிக்கும்.

எனவே, இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் எதிர்காலங்களில் இஸ்லாமிய அமைப்புக்களும், உலமா சபையினரும், சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து இந்த இளைஞர் சமூத்தினரை இவ்வாறான தீய செயல்களிலிருந்து தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். அவர்களை நேரான வழியில் இட்டுச்செல்வது நம் ஒவ்வொருவருடைய பொறுப்பாகும். எதிர் காலத்தில் இவர்களுடைய செயற்பாடுகளில் முழுக்கவனஞ்செலுத்துவது நம் சமூகத்துக்கும் நல்லமல்களில் ஈடுபட பள்ளிவாயல்களை நோக்கி வரும் எம் சகோதரி, தாய்மாருக்கும் சிறப்பாக அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
பெண்களின் இராக்கால வணக்கமும் இடைஞ்சல் தரும் இளைஞர்களும் . பெண்களின் இராக்கால வணக்கமும் இடைஞ்சல் தரும் இளைஞர்களும் . Reviewed by Madawala News on 6/24/2017 10:23:00 AM Rating: 5