Ad Space Available here

ஏன் கட்டாரை தனிமைப்படுத்தப் பார்க்கிறார்கள்?


-அஷ்கர் தஸ்லீம்-

அரபுலக - மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க- அரசியலில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நாடுகளை எந்த இடத்தில் வைத்து நோக்குவது என்பது அவ்வளவு சிக்கலான ஒரு காரியமல்ல.

அரபு வசந்தத்தை தொடர்ந்து எழுந்து வந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினதும், துருக்கி - கட்டார் கூட்டணியினதும் செல்வாக்கை முடக்குவதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் இந்த அறிவிக்கப்படாத கூட்டமைப்பு மிகச் கச்சிதமாக நடாத்தி வந்தமையானது, இந்நாடுகளின் பிராந்திய அரசியலைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த ஆதாரங்களாகும்.

எகிப்து மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த கலாநிதி முஹம்மத் முர்ஸியை சதிப்புரட்சி மூலம் கவிழ்ப்பதற்கு பல்வேறு தளங்களிலும் அணுசரனை வழங்கியது முதல் சில வருடங்களுக்கு முன்னர், வளைகுடா நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் கட்டார் தலையிடுவதாகச் சொல்லி கட்டாருடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது மற்றும் திரைமறைவில் கட்டாரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்காக சியோனிஸ மதியுரையகங்களுடன் (Think Tank) இணைந்து வேலைகளைச் செய்தது வரையிலும் இதனைப் பட்டியலிடலாம். ஆக மொத்தத்தில், இந்த நாடுகளின் உள்நாட்டுக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும், துருக்கி - கட்டார் கூட்டணிக்கும் எதிரானதாகவே அமைந்துள்ளன.

இவ்வாறிருக்கையில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர தொடர்புகளை மீண்டும் முறித்துக்கொள்வதாக இன்று (05) அறிவித்துள்ளன.

கடந்த சனிக்கிழமை (03), குளோபல் லீக்ஸ் என்ற ஹேக்கர்கள், அமெரிக்காவுக்கான எமிரேட்ஸ் தூதுவர் யூசுப் அல்உதைபாவின் ஈமெயிலில் ஊடுருவி, எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலிய ஆதரவு மதியுரையகமான எஃப்.டி.டி. (Foundation for Defense of Democracies) இற்கும் இடையிலான இரகசிய உறவு குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கின்ற நிலையிலேயே, எமிரேட்ஸ் உள்ளிட்ட இந்த நாடுகளின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த எஃப்.டி.டி. மதியுரையகத்துடன் இணைந்து கட்டாரை குறைமதிப்பிடு செய்து, கட்டாரை தாழ்த்துவதற்கான வேலைகளை எமிரேட்ஸ் செய்து வந்துள்ளமை இந்த ஊடுருவலின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதே நேரம் யூசுப் அல்உதைபா, கட்டாரை குறைமதிப்பீடு செய்து எழுதும் ஊடகவியலாளர்களுக்கு சன்மானங்கள் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதுவல்லாது, இந்த மதியுரையகத்தின் உயர் பதவியில் உள்ள ஒருவர், அர்தூகானை இரர்ணுவ அதிகாரத்தின் மூலம் பதவிகவிப்பது குறித்த கட்டுரையொன்றையும் எழுதியுள்ளார். எனவே, கடந்த வருடம் துருக்கியில் மேற்கொள்ளப்பட்டு, தோற்றுப்போன சதிப்புரட்சியில் எமிரேட்ஸின் திருவிளையாடலும் உள்ளதா என்ற சந்தேகமும் இப்போது வலுப்பெற்றுள்ளது என்பது மேலதிக தகவல்.

சவூதி அரேபியா கட்டாருடனான இராஜதந்திர உறவை முறித்துக்கொள்வது குறித்த செய்தியை, சவூதி அரேபியாவின் அரச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் தேசிய பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டார் நாடானது பிராந்தியத்தில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டிருக்கின்ற தீவிரவாதிகளுக்கும், குழுவாதிகளுக்கும் புகலிடம் வழங்குவதாகவும் சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது. அத்தோடு, கட்டாருடனான எல்லையை மூடியுள்ள சவூதி அரேபியா, கட்டாருடனான வான், கடல்வழிப் போக்குவரத்தையும் இடைநிறுத்தியுள்ளது.

அத்தோடு, சவூதி அரேபியாவின் மிக நெருங்கிய கூட்டாளியான பஹ்ரைனும், கட்டாருடனான வான், கடல்வழி தொடர்புகளை துண்டித்துக்கொள்வதாக, அதன் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. பஹ்ரைனின் உள்ளக விவகாரங்களில் கட்டார் தலையிடுவதாக பஹ்ரைனும் குற்றம் சாட்டியுள்ளது. மறுபுறம், எகிப்தின் வான் பரப்பு மற்றும் துறைமுகங்களை கட்டார் பயன்படுத்த முடியாது என்று எகிப்தும் இன்று (05) அறிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாத, தீவிரவாத, குழுவாத அமைப்புக்களுக்கு கட்டார் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவி வழங்குவதனால், கட்டாருடனான உறவுகளை முறித்துக்கொள்வதாக எமிரேட்ஸும், அதன் அரச செய்தி நிறுவனத்தின் ஊடாக இன்று அறிவித்துள்ளது. இந்த நாடுகள் அனைத்தும், கட்டார் இராஜதந்திரிகள் 48 மணித்தியாலங்களில் தமது நாடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும், கட்டார் பிரஜைகள் 2 வாரங்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளன.

இந்த நாடுகளின் முடிவு குறித்து கட்டார் வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இந்த முடிவானது நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, இந்த நாடுகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவொரு அடிப்படையும் இல்லை. இந்த முடிவால் கட்டார் பிரஜைகளதும், கட்டாரில் வாழ்வோரதும் சாதாரண வாழ்வுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இந்த முடிவின் இலக்கு மிகவும் தெளிவாக உள்ளது. கட்டாரின் மீது அதிகாரம் செலுத்தவே இவர்கள் முயல்கின்றனர். இது கட்டாரின் இறையாண்மைக்கு எதிரானதாகும் என்றும் கட்டார் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரபுலகில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களின் பின்னணியில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பும், துருக்கி - கட்டார் கூட்டணியும் இருக்கின்றமையினாலேயே, இந்த வளைகுடா நாடுகளும், எகிப்தும் இணைந்து கட்டாரை தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக கட்டாரை தனிமைப்படுத்தும்போது, வேறு வழியில்லாமல், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு கட்டார் வழங்குவதாகச் சொல்லப்படும் ஒத்துழைப்பும் ஆதரவும் நிறுத்தப்படலாம் என்று இந்த நாடுகள் கனவு காண்கின்றன.

ஆனால், இந்த தனிமைப்படுத்தல் முயற்சியை கட்டார் வெற்றிகரமாக முறியடிக்க வேண்டும் என்ற பரவலான எதிர்பார்ப்பு மத்திய கிழக்கு மக்களின் சமூக வலைதள பதிவுகளைப் பார்க்கையில் தெரிகின்றது.

இதேவேளை, யெமனில் ஈரானின் ஆதரவுடன் இயங்குகின்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுகின்ற சவூதி அரேபியா தலைமையிலான இராணுவ கூட்டமைப்பில், இனிமேலும் கட்டாருக்கு எந்தவொரு வரவேற்பும் கிடையாது என்று, இந்த இராணுவக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளது. அத்தோடு, கட்டாரானது தமது எதிரிகளான ஹூதிகளுடன் இணைந்து செயற்படுவதானல், தாமும் கட்டாருடனான உறவை முறித்துக்கொள்வதாக சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள யெமனின் அரசாங்கமும அறிவித்துள்ளது.

சவூதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான உறவை முறித்துக் கொள்ளும் இந்த முடிவுக்கான உடனடிக் காரணம், சமீபத்தில் கட்டாரின் அரச செய்தி நிறுவனம் ஊடுருவப்பட்டு, வெளியிடப்பட்ட சில போலியான செய்திகளாகும் என்றும் நம்பப்படுகின்றது. கடந்த செவ்வாயன்று, கட்டாரின் அரச செய்தி நிறுவனம் ஊடுருவப்பட்டு, இந்த நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, உடனடியாக அறிக்கை வெளியிட்ட கட்டார் அரசு, அரச செய்தி நிறுவனம் ஊடுருவப்பட்டு, இந்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன என்று அறிவித்தது. ஆனால், இந்த நாடுகளோ, மீண்டும் மீண்டும் அந்தப் போலியான செய்திகளை மீள்ஒளிபரப்பு செய்து, மக்கள் மனதை மாற்ற முனைந்தன.

அரபுலகில் பலம்வாய்ந்த நாடாக விளங்கிய ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அடுத்த இலக்கு கட்டாராக இருக்குமோ என்ற அச்சம் அரபுலகில் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்க ஜானதிபதி டொனல்ட் டிரம்ப் சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்ட சில வாரங்களிலேயே, கட்டாருடனான இராஜதந்திர முறிவை சவூதியும் அதன் கூட்டாளிகளும் அறிவித்துள்ளமையானது, இந்த சந்தேகத்தை மீண்டுமொரு முறை வலுவுறச் செய்துள்ளது. எவ்வாறாயினும், கட்டார் இந்த சதிமுயற்சிகளை தாண்டிப் பயணிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

- அஸ்கர் தஸ்லிம் -
ஏன் கட்டாரை தனிமைப்படுத்தப் பார்க்கிறார்கள்? ஏன் கட்டாரை தனிமைப்படுத்தப் பார்க்கிறார்கள்? Reviewed by Madawala News on 6/05/2017 10:15:00 PM Rating: 5