Ad Space Available here

இனவாத நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் அறிவார்ந்த நகர்வு..அன்மைய நாட்களில் நாட்டின் அசாதாரண நிகழ்வுகள் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

முஸ்லிம்கள் நோக்கிய இனவாத அம்புகள் கனகட்சிதமாக ஏவப்பட்டு சில கணக்குகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. இக்கட்டுரை எழுதப்படும் தினத்திலிருந்து கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் நான்கு கடையெறிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தேறியுள்ளன.

இது தவிர கடந்த இரண்டு மாதத்திற்குள் மாத்திரம் முஸ்லிம்களின் பல கோடிகள் பெறுமதியான உடமைகள் இனவாதிகளின் தீயில் சாம்பளாகியுள்ளன. மேலும் அல்லாஹ்வின் மாளிகைகளில் ஒரு மாளிகையும் பெற்றோல் குண்டுவீச்சுக்கு இலக்காகியுள்ளது.

இன்னும் பிரபல கடும்போக்குவாதியான கலபொட அத்தே ஜானசார தேரர், அல்லாஹ்வை கொச்சைப் படுத்தியும், இஸ்லாத்தை அவமதித்தும், முஸ்லிம்களை தூசித்தும், அரசியல் வாதிகளை வசைபாடியும் தனது சட்டவிரோத செயல்களை ஒரு சர்வதிகாரியை போல் சர்வசாதரணமாக ஆங்காங்கே அரங்கேற்றி வந்திருந்தார். தவிர, தான் கைது செய்யப்பட்டால் "இலங்கையில் இரத்த ஆறு ஓடும்" "பலர் தீக்குளிப்பார்கள்" "முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவோம்" போன்ற வெறும் வாய்ச்சவடாலினால் நாட்டின் பலமான ஒட்டுமொத்த சட்டவொழுங்கும், பாதுகாப்பும் முடமாக்கப்பட்டு கைது, வெளி நாடு செல்லத் தடை, விஷேட பொலிஸ் குழு, தலைமறைவு என்று ஒரு நாடகமே மேடையேற்றப்பட்டுள்ளது. இந் நிலைமை நாட்டின் சாபக்கேடு என்றாலும் மிகையில்லை.

முன்னைய மஹிந்த ஆட்சியில் இதே இனவாதிகள், தாம் நினைத்தவாறு முஸ்லிம்களின் உயிரிலும், மானத்திலும், உடமையிலும்  கைவைத்த போதெல்லாம் அதனை அரசாங்கம் கைகட்டி வேடிக்கைப் பார்த்தது மட்டுமல்லாமல் அதற்கு பாலூட்டி செல்லப் பிள்ளையாக வளர்த்தனர். விளைவாக, தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் விரக்தியும் மிகப்பெரிய எதிர்ச்சக்தியாக வெளிப்பட்டு, மஹிந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. அதே போன்றே முஸ்லிம்களின் முதுகில் குத்தும் ஜனநாயக விரோதத்திற்கு நல்லாட்சி என்று சொல்லிக் கொள்ளும் நடப்பு ஆட்சியும் ஒத்திசைந்திருப்பதானது மிகவுமே கவலையான விடயமாகும்.

முஸ்லிம் சமூகம், குறுகிய காலத்திற்குள்ளேயே திரும்புகின்ற பக்கமெல்லாம் இனவாத நெருக்குவாரங்களை  சந்திக்கின்ற இவ்வேளையில், எமது சிந்தனா ரீதியான நகர்வுகள் எவ்வாறு அமைய வேண்டும்? என்பதை சமூகத்திற்கு அறிவூட்டுவது காலத்தின் அவசியமாக இருந்து கொண்டிருக்கிறது.

முதலாவது நாம் நமது ஈமானிய நெஞ்சுரத்தையும், வீரத்தையும் ஒருகாளும் இழந்து விடக் கூடாது. சகவாழ்வு, சமத்துவம், சௌஜன்யம் என்ற போர்வையில் நமது உயிரை விட பெறுமதியான கொள்கையை தாரைவார்த்து விட முடியாது. இத்தகைய அச்சுறுத்தலான சூழ்நிலைகளின் போது அதனை சிறிது தணிப்பதற்கு இஸ்லாத்தின் வரையரைகளையெல்லாம் மீறி, மாற்றுமதத்தில் நமது மார்க்கத்தை அடகு வைப்பது என்பது வடிகட்டிய கோழைத்தனமாகும்.

அப்படி எந்தவொரு நிபந்தனையும் இஸ்லாத்தில் கிடையாது. எந்தச் சூழ்நிலையிலும் நமது நிரந்தர, தீர்க்கமான தீர்வாக இஸ்லாம்தான் நமக்கு இருக்க வேண்டும். இஸ்லாம் இனரீதியான நல்லிணக்கத்தை விரும்புகிறதே தவிர எந்த விதத்திலும் மத நல்லிணக்கத்தை ஆதரிக்கவில்லை. "மத நல்லிணக்கத்தை கொண்டுதான் சகவாழ்வு சாத்தியம்" என்பது போலியான கற்பிதமே தவிர அதில் அறவே உண்மையில்லை. இஸ்லாம் மார்க்கம் பிற இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு, மன்னிப்பு, பாராட்டு, அன்பளிப்பு, விருந்தளிப்பு என சகவாழ்வுக்கான பல வாசல்களை திறந்தே வைத்துள்ளது. இந்த நேர்த்தியான பக்கங்களைக் கொண்டே மார்க்க தலைமப் பீடங்கள் சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டுமே தவிர, கொள்கை வங்குரோத்து நிலைக்கு சமூகத்தை பலிக்கடாவாக்கக் கூடாது.

அடுத்து, இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஏகபோக பிரதிநிதிகளாக தங்களை அழைத்துக் கொண்டு, அமைச்சுப் பதவிகளுடன் பாரளுமன்றக் கதிரைகளை அலங்கரித்திருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இவ்விவகாரங்களில் அவர்களின் வகிபங்கு மெச்சத்தக்க வகையில் இல்லை என்பதே மக்களின் நேர்மையான விசனமாக இருக்கின்றது. "மக்கள் நலன்களே நமது இலக்கு" என்ற கோஷத்துடன் தேர்தல் காலங்களில் வலம் வந்தவர்கள், தேர்தலின் பிற்பாடு சலுகை அரசியலுக்குள் காணாமல் போயிருப்பதையே நிதர்சனம் நமக்கு தெளிவாக துலக்குகிறது. வெறுமனே கூடிக் கலைந்து அறிக்கையில் மாத்திரம் சமூக அக்கரையை பரைசாற்றுவது என்பது அறிவுப்பூர்வமானதல்ல.

சுருங்கக் கூறின் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அழுத்த அரசியலை தமது தாரக மந்திரமாக கொள்ளுதல் வேண்டும். கட்சி பேதங்கள் மறந்து ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும், பாரளுமன்ற மற்றும் மாகண சபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் கைக்கோர்த்து சமூக உரிமை கோஷத்தை அழுத்தமாக அரசாங்கத்திடம் பதிவு செய்தல் வேண்டும். அநீதிக்கு எதிரான முறையான  சட்ட நடவடிக்கைகளை நீதிமன்றங்களினூடாக முடுக்கி விட வேண்டும். சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான சகலவிதமான ஆவணப்படுத்தலையும், காட்சிப்படுத்தலையும் உடனுக்குடன் வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வயிலாக கொண்டு சேர்த்தல் வேண்டும்.

அடுத்து, சமூக வலைத்தளங்கள் மிகவுமே பயன்மிக்கவையாக இருக்கிறது. உடனுக்குடன் சம்பவங்களையும், பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து சமூகத்தை விழிப்புணர்வூட்டுவதற்கு மிகச்சிறந்த ஆயுதமாக அவை இருந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் கடும்போக்குவாதிகளால் முஸ்லிம்களின் உரிமைக்கான அச்சுறுத்தல்கள் நடந்தேரும் போதெல்லாம், பிரபல ஊடகங்கள் அவைகளை தணிக்கை செய்த போதும், உடனுக்குடன் கலநிலவரங்களுடன் செய்திகளை ஜனரஞ்சகப் படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பாக சமூகவலைத்தளங்களே இருந்தமை நாம் அறிந்த விடயமாகும்.

 இதற்கு கடந்த அளுத்கமை கலவரம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வாறு சமூகவலைத்தளங்களின் நன்மைகளை நூற்றுக் கணக்காக பட்டியலிட்டாலும் அதன் தீமைகளும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது. இவ்வாறு தொடர்தேர்ச்சியாக நாளொரு கடையும் பொழுதொரு பள்ளிவாசலுமாக தாக்கப்படும் போது, சமூகம் அதை பார்த்து மனம் வெதும்பி கொந்தளிப்பான மனநிலைக்கு உந்தப்படுவதை தவிர்க்க முடியாது. இச்சந்தர்ப்பத்தை சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெறுமனே உணர்வுரீதியாகவும், பழிக்குப்பழி என்ற ரீதியிலும் திசை மாற்ற முயலுவதை அவதானிக்கலாம்.

விளைவு, ஆங்காங்கே சில இளைஞர் பட்டாளம் ஆயுதங்களுடன் களம் காண சந்தர்ப்பம் பார்த்திருப்பர். இதன் முடிவு, மிகவுமே பாரதூரமானது என்பதை, நாட்டில் கடந்த மூன்று தசாப்த கால யுத்த வரலாற்றின் எச்சங்களினூடாக  சற்று ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

அடுத்து நாம் அடிப்படையாக புரிந்து கொள்ள வேண்டியவொன்றுதான், ஆயுதத் தீர்வு. ஆம், எம்மை எதிரிகள் பலவந்தமாக ஆயுத முனையில் தாக்க வரும் போது தற்பாதுகாப்புக்காக தாக்குதல் நடத்துதல்; அல்லது எமது கண்ணெதிரே எமது உயிர்கள், உறவுகள், உடமைகள் காவு கொள்ளப்படுகின்ற போது அதனை முறியடிப்பதற்காக தாக்குதல் நடத்துதல் என்பவற்றிலே அது சாத்தியமாகும். கண்ணெதிரே ஊர் பள்ளிவாசல் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்ற போது, ஒவ்வொருவரும் வீட்டறைக்குள் தாழிட்டுக் கொண்டு அச்சத்தில் உறைந்து போவதல்ல சாமர்த்தியம். ஊரே திரண்டு அல்லாஹ்வின் மாளிகைக்காக போராட வேண்டும்.

 நமது உயிரை விட இறைவனின் ஆலயத்திற்கு கண்ணியம் உண்டு என்ற செய்தியை எதிரிகளின் மனதில் ஆழப் பதியவைக்க வேண்டும். எந்தவொரு நாட்டின் சட்டமும்  உயிர், உடமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது உரிய நேரத்தில் அதற்கான தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை கைகொள்வதை தடை செய்வது கிடையாது என்பதையும் மனதிற் கொள்ளுதல் வேண்டும்.

ஆக மொத்தம் எமது தலையாய ஆயுதமாக இறைவனிடத்தில் பிரார்திப்பதை தவிர வேறில்லை. பிரார்த்தனை எனும் ஆயுதத்தை எம் வாழ்வில் சதாவும் பற்றிப் பிடித்தல் வேண்டும். எது நடந்தாலும், எதை இழந்தாலும், ஏன் உயிரே போனாலும் இறை நம்பிக்கையில் கடுவளவேனும் ஆட்டம் காணக் கூடாது. முயற்சிகள் எம்மோடு இருக்கலாம் ஆனால் உதவிகள் என்பது வல்லோன் இறைவனிடத்திலிருந்தே வர வேண்டியிருக்கிறது என்பதை மனதிற் கொண்டு, இலங்கைத் திரு நாட்டில் பிரச்சினைகள் ஓய்ந்து, சுமூகமான சூழல் உறுவாகுவதற்கு இறைவனை இறைஞ்சிக் கொள்வோமாக!

-எம்.கெ. யாஸிர்-
இனவாத நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் அறிவார்ந்த நகர்வு.. இனவாத நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் அறிவார்ந்த நகர்வு.. Reviewed by Madawala News on 6/12/2017 12:17:00 PM Rating: 5