Kidny

Kidny

"இது பைத்தியங்கள் வாழும் தேசம்"


செத்துப்போனவர்களின் உடலை எரித்து சாம்பலை அஸ்தியாக கொண்டுபோய் கடலில் கரைப்பது போல,

கடைகளை எரித்து வருகின்ற சாம்பலை கொண்டு போய் இனவாத இரத்தத்தில் கரைத்து முஸ்லிம்களின் ஒவ்வொரு இழப்புக்களையும் கைகொட்டிச் சிரித்து கொண்டாடும் ஒரு கேடு கெட்ட அரக்கத்தனமான கலாசாரம் தான் நாட்டில் அப்பட்டமாக நடைபெறுகிறது.

ஏற்கனவே ஒத்திகை பார்த்து ஒப்பனைகள் செய்து துண்டு துண்டாக நடித்து வைக்கப்பட்ட ஒரு தொடர் நாடகமாய் நாளுக்கு நாள் குறித்து வைக்கப்பட்ட நேரத்தில் அச்சுப் பிசகாமல் அப்படியே நடந்து முடிகிறது அத்தனை கடையெரிப்புகளும் பள்ளிவாசல் தாக்குதல்களும்.

பல கற்பழிப்புகளை பொது வெளியில் செய்து விட்டு ஊரார் துரத்தும் போது  ஒரு ஆட்சிக்கதிரையையே தகர்த்தெறிந்து விட்டு   தப்பியோடிய ஒரு காமுகன்,

ஒரு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் கற்புகளை களமாட வந்து மீண்டும் ஓடி ஒழிவதையும் பொலிஸார் அவனை தேடி தேடி தெவிட்டிப்போகிற ஒரு காட்சியை க்ளைமெக்ஸ் ஆக கொண்ட ஒரு சுப்பர்ஹிட் ப்ளொக்பஸ்டர் திரைப்படம் தற்போது  திரையரங்குகளை  கலக்கிக்கொண்டிருக்கும் சமகாலத்திலேயே,

'கடைகள் எரிப்பு' என்கிற புதிய நாடகம் அரங்கேறியிருக்கிறது.

கடைகளுக்கு கொழுத்தும் கொடூரங்களை சீராக செய்து சீசீடீவி கெமராக்களில் செல்பி எடுத்துவிட்டு போகும் அந்த திருட்டுக் கும்பலை பிடிக்க திராணியில்லாமல்,

'காப்புறுதி பணங்களை மீட்கவே கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளுக்கு தீயிடுகிறார்கள்' என்றும் 'மின்சார ஒழுக்குகள் காரணமென்றும்' கூவித்திரியும் பாதுகாப்புத்துறையினரை பார்க்கின்ற போது,

படுக்கையை நனைத்த ஒரு சிறுவன் தன் தப்பை மறைக்க தலையணையை சாடுவது போலத்தான் இருக்கிறது.

இதுவல்ல எந்த ஆட்சி வந்தாலும் எமக்கு மீட்சியில்லை என்ற நம்பிக்கை மட்டும் குளத்துத் தாமரையாய் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து போகிறது.

நம்பிக்கையை நிஜப்படுத்தும் அத்தனை மேக்கப்புக்களையும் ஜனாபதியும் பிரதமரும் அரசாங்க சீல் பொறித்த அத்தனை தலைகளும் போட்டு கம்பீரமாய் இருக்கிறார்கள்.

'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....இருட்டினில் நீதி மறையட்டுமே... ' என்ற பாடல்  ஜனாதிபதி மாளிகையில் ஓங்கியொழிக்க ஜனாதிபதி ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்.

இருபத்தோறாம் நூற்றாண்டில் நீங்கள் செய்த மிகப்பெறும் தவறு என்ன என்று அடுத்த நூற்றாண்டு சந்ததியில் இருந்து நம் மக்களிடம் யாரும் கேட்டால்;

இந்த முஸ்லிம் அரசியலாளர்களை நம்பி நம்பி வெந்து போனது தான் என்று நிச்சயம் பதில் வரும்.

உரிமை, அபிலாஷை, சமூதாயம் என்றெல்லாம் மேடை அதிர பேசிவிட்டு,

அப்பமும் ப்ளேண்டியும் உண்டுவிட்டு ஆசனத்தில் அமர்ந்து, 'மீன் சந்தைக்குள் நுழைந்து காட்சிகளை கூத்துக்களாக அவதானிக்கிற' ஒரு சிறுவனை போல ஒரு பார்வையாளனாக இருந்துவிட்டு பறக்கிற ஒரு செயல் தான்,

"நவீன முஸ்லீம் அரசியல்" என்று புனையப்படிருக்கிறது.

அங்கு சமூகமும் இல்லை, பேரம் பேசுதலும்இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!

கடந்த காலங்களை ஒரு கையால் மறைத்து நம் அரசியலாளர்களை புனிதர்களாக பார்க்கிற போது,

அன்றைய ரிஷாத்தின் பாராளுமன்ற கர்ஜனை தான் கடைசியாக நிகழ்ந்த திருப்தி.

உண்மையில் என்னவொரு பேச்சு அது.

சிங்கள சபையில் சினங்கொண்டு சீறிப்பாய்ந்து உணர்வு ததும்ப பேசியது இத்துப்போன கட்சிப்பற்றை தூக்கியெறிந்து பார்த்தால் மெச்சாமல் இருக்க முடியாது.

அவரின் பேச்சில் முஸ்லிம் எம்பிக்கள் மத்தியில் அறவே ஒற்றுமையில்லை என்பது புரிந்தது.

ஆனால் ஒன்று, தனித்து நின்று எதையும் அங்கு தற்கால பிரச்சினைகளுக்கு தீர்வாக பெற முடியாது.

எல்லோரும் ஒத்துப்போனால் தான் ஒரு சொட்டு  நீரையாவது தாகத்திற்கு பெற்றுக்கொள்ளலாம்.

இப்படியே இவையெல்லாம் நடந்தேகொண்டிருக்குமானால்,

"இது பைத்தியங்கள் வாழும் தேசம்"
என்று சரித்திரம் தன் குறிப்பேட்டில் குறித்து வைக்கும்.

-சல்மான் லாபீர்-
"இது பைத்தியங்கள் வாழும் தேசம்" "இது பைத்தியங்கள் வாழும் தேசம்"  Reviewed by Madawala News on 6/09/2017 02:50:00 PM Rating: 5