Yahya

முஸ்லீம் கூட்டமைப்பு Vs ஹக்கீம்


மர்ஹூம் அஸ்ரப் இவ்வுலகை விட்டுப் பிரியும் வரை முஸ்லீம்களின் உரிமைகளை வென்றெடுக்க போராடிய, உயிரோட்டமான ஒரு இயக்கமென்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மாத்திரமே என்பதை எமது சமூகம் உணரும் காலமிது எனலாம். கடந்த 17 வருட காலப்பகுதியில், ஹக்கீமின் தலைமைத்துவ பதவியாசையால் திட்டமிட்டு கட்சியின் உண்மைப் போராளிகள் வெளியேற்றப்பட்டு கூட்டுக் குடும்பமாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பல தனிக் குடும்பங்களாக அல்லது புதிய கட்சிகளாக பிளவடைந்து தங்களது அரசியல் குடியேற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறது.

ஹக்கீம் முஸ்லீம்களின் தேர்தல் வெற்றிகளை வியாபாரமாக்கியதாலும், காலத்துக்கு காலம் எமது சமூகம் பொய் வாக்குறுதிகளினால் ஏமாற்றப்படுவதாலும், மக்களின் குறைகளும், பிரச்சனைகளும் அதிகரித்த நிலையில் ஹக்கீமால் தீர்த்து வைக்க முடியாததாலும், தேர்தல் காலத்தில் மாத்திரம் கிழக்கிற்கு வந்து சும்மா பம்மாத்துக் காட்டி மக்களை ஏமாற்றிவிட்டு, சொத்துக்களைச் சேர்ப்பதிலும், ராஜபோக வாழ்க்கையிலும் காலத்தைக் கடத்தும் ஹக்கீமின் பலவீனமான பல முகங்கள் தினமும் வெளியே வந்து கொண்டிருப்பதால், ஹக்கீமின் வேஷங்கள் கலைகின்றதோடு, சாணக்கியம் என்கின்ற ஹக்கீம் “வெறும் புஸ் வானம்” என புரிந்து கொண்ட எமது பிரதேச முஸ்லீம்கள் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், முஸ்லீம் காங்கிரஸினை உருவாக்கிய அஸ்ரப் அணி என பல்வேறு கட்சிகளை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.


மர்ஹூம் அஷ்ரபை போல் தூர நோக்கு சிந்தனையில்லாத ஹக்கீமின் நிதானமில்லாத நடத்தையால் ஹக்கீமுக்கு எதிராக உருவான முஸ்லீம் கட்சிகள் வளர்ந்து இன்று முழுப் பலத்துடன் வலம் வந்து கொண்டிருப்பது அச்சுறுத்தலாக உள்ளதோடு, இதற்கு மேலாக ஹஸனலி, பசீர் சேகுதாவூத், அன்ஸில் போன்றோரின் பிரிவானது ஹக்கீமின் ஊனமுற்றுள்ள தலைமைத்துவத்துக்கு சிக்கலை உருவாக்கியுள்ளதுடன் இவர்களது கூட்டும் இம்முஸ்லிம் கூட்டமைப்பில் உள்ளடங்குவதால் ஹக்கீமுக்கு பாரிய அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் பெருக்கெடுத்துள்ளது எனலாம்.  

தமிழ் கூட்டமைப்பின் பலத்துக்கும், சக்திக்கும் இணையான ஒரு யுக்தியாக “முஸ்லீம் கூட்டமைப்பு” உருவெடுப்பதை ஹஸனலி, அதாவுல்லா, பஷீர் சேகுதாவூத், றிசாட் பதுர்தீன், அன்ஸில் போன்றோர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு கிடைக்கின்ற வரவேற்புகளும், ஹக்கீம் அணிக்கு கிடைக்கின்ற கல்லெறிகளும், டயர் எரிப்புக்களும், மக்களின் புறக்கணிப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன. 


கிழக்கு மாகாணசபைத் தேர்தலோ அல்லது பிரதேச சபைத் தேர்தலோ நடைபெறும் பட்சத்தில் பெரும் பான்மை கட்சிகளின் ஊடுருவலுடன் சேர்தலும், பேரம் பேசுதலும், கள நிலவரமும், காய் நகர்வுகளும், என பல்வேறு கோணங்களில் ஹக்கீம் தனது சித்து விளையாட்டுக்களுடன் திருகுதாளங்களை அடையாளப்படுத்தும் போது அதன் பலவீனங்களை முஸ்லீம் கூட்டமைப்புடன் ஒப்பிடுகையில் முந்திய காலங்களில் கஷ்டமில்லாது கிடைத்த பெரிய பலன்கள் இனி ஹக்கீமுக்கு கஷ்டப்பட்டாலும் கிடைக்காது என்ற முடிவினை தெளிவாக காட்டுகிறது எனலாம்.


தேசிய காங்கிரஸினை நோக்கும் போது அன்று அதாவுல்லாவினால் ஆருடம் கூறப்பட்ட விடயங்கள் இன்று ஹக்கீம் அணியினால் கிழக்கு முஸ்லீம்களுக்கு ஏற்படுகின்ற பாதக நிலைமைகளை உண்மையென தெளிவு காணுகின்றது என்னும் கூற்றில் ஹக்கீமால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றோம் என்பது உறுதியாகின்றது. எதிர் காலத்தில் இக் கூட்டுக் கட்சிகளின் விட்டுக் கொடுப்புகளினால் இணைந்த “முஸ்லீம் கூட்டமைப்பு” நிச்சயமாக இப்பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மகிந்தவுடன் சேர்ந்து சகல தேர்தல்களிலும் அதாவுல்லா பயணித்திருந்தாலும், மைத்திரி அணியும் அதாவுல்லாவில் சொந்தம் கொள்ள முயற்சிப்பதாலும் முஸ்லீம் கூட்டமைப்பில் அதாவுல்லா இணைவதை தூரமாக்கி, வீழ்ச்சியடையச் செய்யும் என ஹக்கீமின் பார்வையில் சரி கண்டாலும், அதாவுல்லாவின் இந்த பாரிய விரிசலுக்கு ஹக்கீமே முழுக் காரணமென்பதுடன் அதாவுல்லா மர்ஹூம் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தவர் மட்டுமல்லாது அவர் இணைவது மர்ஹூம் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தவர்களுடனேயே என்பதனையும் ஹக்கீம் மறக்கக்கூடாது. 


எமது சமூகத்திலிருந்தும் ஹக்கீமை வெளியேற்றி, பிரதேசத்தை மீட்பதுடன், மக்களையும் தனது கொள்கையினையும் சமப்படுத்துவதோடு, ஹக்கீமுடன் பழைய கணக்கு வழக்குகளுக்கு மிகுதி இருப்பதால் அதை தீர்த்து வைப்பதற்கும் இதை விட ஒரு சந்தர்ப்பம் அதாவுல்லாவிற்கு நிச்சயமாக கிடைக்கப் போவதில்லை எனலாம்.


பல கட்டங்களைக் கொண்ட ஒழுக்காற்று விசாரணைகள் இன்னும் இடம் பெறாத நிலையில் முஸ்லீம் காங்கிரஸின் தவிசாளர் பதவியில் இருந்து மாத்திரமே தற்காலிகமாக பசீர் சேகுதாவூத் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.  


அதே போல் ஹஸனலியும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மாத்திரமே தடுக்கப்பட்டாலும், முஸ்லீம் காங்கிரஸினை உருவாக்கிய மகனாக ஹஸனலியே முஸ்லீம் காங்கிரஸாக காணப்படுவதால், முஸ்லீம் காங்கிரசின் முதுகெலும்புகளான ஹஸனலி, பஷீர் சேகுதாவூத், அன்ஸில் போன்ற ஏனையோரும் முஸ்லீம் காங்கிரஸ் அஸ்ரப் அணியாக முஸ்லீம் கூட்டமைப்பில் இணையும் போது இவர்களது தனிப்பட்ட வாக்குகளுடன், ஹக்கீமின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளாத முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளினது வாக்குகளும், முஸ்லீம் கூட்டமைப்பை ஏற்றுக் கொள்கின்ற கிழக்கு மண் வாசனையுள்ளவர்களது வாக்குகளும் இவர்களுக்கு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது .


முஸ்லீம் காங்கிரஸ் அஸ்ரப் அணி விடயத்தில் ஹக்கீம் மதில் மேல் பூனையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆரம்பத்தில் மஹிந்த அரசுடன் வலம் வந்திருந்தாலும், தற்காலத்தில் முஸ்லீம்களின் பல கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமைக்கு றிசாட் பதுர்தீன் முன்னுரிமை கொடுத்ததன் மூலமாக ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவளித்ததோடு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டிய தேவையும் ஏற்பட்டது. ரணிலுக்கும் தன்னுடன் றிசாட் பதுர்தீனை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தேவை அதிகமாக காணப்படுவதால், இம்முஸ்லிம் கூட்டுக்கு ரணிலின் தேவை தடையாகலாம் என ஹக்கீம் யோசித்தாலும் எமது சமூகத்தினதும், காலத்தினதும் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு மீண்டும் றிசாட் பதுர்தீனின் செயற்பாடுகளை தூண்டுவதால், முஸ்லீம் கூட்டமைப்பில் இணைய வேண்டிய அவசியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹக்கீமுடனான கணக்கு வழக்கு மீதிகள் சரிசெய்யப்படும் போது, கிழக்கை விட்டு ஹக்கீமை வெளியேற்ற சிறந்த தருணமாகவும் முஸ்லீம் கட்சிகளுடனான இக்கூட்டு குறித்து நிற்கின்றது.


நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் ரகுமான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் ஹக்கீம் அணியுடன் ஒன்றிணைந்து களமிறங்கி அதிக வாக்குகளைப் பெற்றும் நியாயமாக கிடைக்க வேண்டிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஹக்கீமால் கொடு படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு மறுக்கப்பட்டது. 


அதிகளவான மக்களின் ஆதரவையும், செல்வாக்கையும் பெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் முஸ்லீம் கூட்டமைப்பில் இணைவதால் நடைபெற இருக்கும் மாகாணசபைத் தேர்தலில் அல்லது பிரதேச சபைத் தேர்தலில் பல ஆசனங்களை கிழக்கில் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது. ரகுமானின் விடயத்தில் இன்னொரு முறை பேச முடியாத படி ஹக்கீம் உறவை சிதைத்து வைத்திருப்பது மீண்டும் இணைப்பினை ஏற்படுத்த தடையாக உள்ளது.

முஸ்லீம் காங்கிரஸில் பல முறை இணைந்தும் ஹக்கீமால் உதாசீனம் செய்யப்பட்ட ஹிஸ்புல்லாஹ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி ஹக்கீமுடன் இணையப் போவதில்லை, உண்மையிலேயே முஸ்லீம் காங்கிரஸுக்கு தலைமை வகிக்கக் கூடிய தகுதியினை தன்னகத்தே கொண்டுள்ள, முஸ்லிம்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்ட போது தைரியமாக குரல் கொடுத்த, சமூகத்தில் அக்கறையுள்ள ஹிஸ்புல்லாஹ் இம்முஸ்லிம் கூட்டமைப்புக்கு தனது முழு ஆதரவையும் வழங்கி ஒன்றிணைவது ஹிஸ்புல்லாவிற்கு நல்லதொரு ஆரம்பமும் வரவேற்கத்தக்கதும், பாராட்ட வேண்டிய விடயமுமாகும்.


மர்ஹூம் அஸ்ரப் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) இன்று அசாத் சாலியினால் பராமரிக்கப்படுகின்றது. இருந்தும் கிழக்கு மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி, கிழக்கு மக்களின் நியாயமான கோரிக்கையினை வென்றெடுக்க, நுஆ கட்சியின் மூலம் கிழக்கு மக்களுக்கு உதவிபுரிய, எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து சமூக ஒற்றுமையை வென்றெடுக்க முஸ்லீம் கூட்டமைப்பில் இணையும் ஆசாத் சாலியை இங்கு நினைவூட்டி பாராட்ட வேண்டியுள்ளது

இம்முறை நசீர் அஹமத் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக இருக்க, அடுத்த முறை தமிழ் கூட்டமைப்புக்கு முதலமைச்சரை வழங்குவது என தமிழ் கூட்டமைப்புடன் ஹக்கீம் அணி செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் கூட்டமைப்பிற்கே முதலமைச்சரை கொடுக்க வேண்டியுள்ளதால் முஸ்லீம் காங்கிரஸ் ஹக்கீம் அணிக்கு நாங்கள் வாக்களிப்பதால் முஸ்லீம் ஒருவர் முதலமைச்சராக வர வாய்ப்பில்லாத நிலையில் 'முஸ்லீம் கூட்டமைப்புக்கு அந்த வாய்ப்பு காணப்படுவதை கிழக்கு வாழ் முஸ்லீம்கள் இச்சந்தர்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  


ஹக்கீம் அணியில் இருந்து இன்னும் பலர் இக்கூட்டமைப்பில் இணைய இருப்பதோடு, தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர் அணி , பல அரசியல் கட்சிகள், பல சமூக அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், சமூக நலன் விரும்பிகள், புத்தி ஜீவிகள், மௌலவிமார்கள் என பல திசைகளில் இருந்தும் இம்முஸ்லிம் கூட்டமைப்பினை வலுப்படுத்தக் கூடிய வகையில் அனைவரும் கை கோர்த்து இம்முஸ்லிம் கூட்டமைப்பு கிழக்கினை ஆளவேண்டும் என்ற கோஷத்துடன் முன்வருவதால் இத்தருணத்தில் ஹக்கீமை கிழக்கிலிருந்து வெளியேற்றி, மர்ஹூம் அஷ்ரபின் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினையும், அதன் சொத்துக்களையும் காப்பாற்ற வேண்டுமென மிகவும் உறுதியாக உள்ளனர். எனவே கிழக்கு மக்கள் கிழக்கினை ஆள்வதற்கான காலம் கனிந்து வருகின்றது என்பதற்கு இதை ஒரு பொற்காலமாகக் கொள்ளலாம். 

முஸ்லீம் கூட்டமைப்பு Vs ஹக்கீம் முஸ்லீம் கூட்டமைப்பு Vs ஹக்கீம் Reviewed by Madawala News on 6/23/2017 04:57:00 PM Rating: 5