Ad Space Available here

வரண்டுபோன எமது ‘வசந்த நகரம்’ பண்டாரவளை.


(ஆதில் அலி சப்ரி)

பண்டாரவளை நகரம் வரலாற்றில் வசந்த நகரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. பண்டாரவளையைச் சூழவுள்ள பெரும்பாலான கிராமங்களின் பெயர்களும் நீர், ஓயா, நீரூற்று, ஆறு, கங்கை, வயல், நீர் வீழ்ச்சி போன்ற சிங்களப் பெயர்களாலானது.

கல்எக்க, ஹீல்ஓய, மகுலுதோவ,
தோவ,  அய்ஸ்பீல்ல, எல்லேஅராவ, உல்லேஅராவ, மஹஉல்பத என சிங்களத்தில் நீர் சார் பெயர்பெற்றுள்ள பண்டாரவளைப் பிரதேச கிராமங்கள் இன்று நீரின்றி காய்ந்து, வரண்டு,  போயுள்ளது. பச்சைப் பசேளென்ற புற்தரைகளிலும், மலையருவிகளிலும் வடிந்துவந்த குளிர் நீரூற்றுக்கள் இனி அங்கு இல்லை.

இன்று வசந்த நகரம், நில வெடிப்புக்குள்ளாகி, வீடுகள் உடைந்து, நீரற்று, மரங்கள் இறந்துபோய், பாடசாலைகள் மூடப்பட்டு கிணறுகள் வற்றி வரட்சி நகரமாக மாறியுள்ளது.

உமா ஓயா திட்டத்தால் பண்டாரவளை பகுதியின் 16 கிராம சேவையாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 3 கிராம சேவையாளர் பிரிவுகளும் இந்நிலை பாதிக்கும் அவதானமுள்ளது.

வெஹெரகலதென்ன, மகுல்எல்ல, எகொடகம, உடபெருவ, பம்பரகம, தந்திரிய, வடகமுவ, எத்தளபிடிய, பண்டாரவளை கிழக்கு, பிதுனுவெவ, மஹஉல்பத, வட கெபில்லேவல, கொடியாரெத, கிரிபருவ மற்றும் கொந்தேஹெல ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே இவ்வாறு அழிவுகளை எதிர்நோக்கியுள்ளன.

மேற்படி 16 கிராம சேவையாளர் பிரிவுகளில் 9495 குடும்பங்களைச்
 சேர்ந்த 30,320 மக்கள் 8547 வீடுகளில் வசித்து வருகின்றனர். மக்கள் குடியிருப்புக்கள் அல்லாத 883 கட்டடங்களும் உள்ளன. இதுவரையில் 2979 வீடுகள்
 சேதமடைந்துள்ளன. தினமும் சேதமடைந்துள்ள வீடுகளின் பட்டியலுக்கு புதிய வீடுகள் இணைந்தவண்ணமுள்ளன. 16 கிராம சேவகர் பிரிவுகளில் 3822 குடும்பங்களுக்கு குடிக்க, குளிக்க இருந்த 2051 கிணறுகளும், 54 நீரூற்றுக்களும் வற்றிப்போயுள்ளன.

இவை, பண்டாரவளையின் 16 கிராம சேவகர் பிரிவுகளில் கிராம சேவகர் மற்றும் சிவில் அமைப்புகள் வீடுவீடாக சென்று திரட்டிய தகவல்களாகும். தகவல் திரட்டப்படாத மேலும் பல கிராம சேவகர் பிரிவுகளும் எஞ்சியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையில் தெற்கு பகுதிகளில் குடிநீர் வசதிகள், தொழில் துறை நடவடிக்கைகள், நீர்பாசனத் திட்டங்கள் மற்றும் நீர் மின்சார சக்தியை உருவாக்கும் நோக்கில் இலங்கை- ஈரான் இணைந்து முன்னெடுத்துவரும் மிகப் பெரிய அபிவிருத்தி திட்டமே உமா ஓயா திட்டம்.


நீர்மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக 800 மீற்றர் ஆழம் வரை நிலம் தோண்டப்பட்டு, இலங்கை மின்சார சபையின் உற்பத்தி திறனை 120 மெகாவோல்ட்டாக அதிகரிப்பதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.
உமா ஓயா ஆற்றை புஹுல்பொல, தைராப எனும் இரண்டு இணைக்கட்டுகள் மூலம் குறுக்கிட்டு, 23 கிலோமீற்றர் நிலக்கீழ் சுரங்கங்களூடாக நீரை தென்கிழக்கு பகுதிக்கு கொண்டுசென்று, உலர் வலயங்களில் நீர்மின் உற்பத்தி செய்வதே நோக்கமாகும்.

உமா ஓயா திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ ஆட்சிக் காலத்தின் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, அப்போது சபாநாயகராக இருந்த சமல் ராஜபக்ஷ அடிக்கல் நட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது. திட்டம் ஆரம்பிக்கப்படும்போது சுற்றுச் சூழல் பதிப்பு மதிப்பீட்டு அறிக்கையொன்று பெறப்பட்டிருக்கவில்லை. மக்கள் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து, மூன்று வருடங்களின் பின்னர் சுற்றுச் சூழல் பதிப்பு மதிப்பீட்டு அறிக்கையொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்ந்தனர். மக்கள் இதற்கெதிராக பல்நோக்கு அழிவுத் திட்டம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து ஆட்சியும் மாறியது.

நல்லாட்சி அரசாங்கத்திலும் மக்களுக்கு அழிவு தரும் திட்டத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்படவில்லை. மாறாக, திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றனர். அதற்கு காரணமாக, பாரிய நிதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை கைவிட முடியாதென்று நல்லாட்சியும் கைவிரித்தது. பதிலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களில் சேதமடைந்துள்ள வீடுகளுக்கு 160 மில்லியன்களும், சேதமடைந்துள்ள பயிர்நிலங்களுக்கு 300 மில்லியன்கள் வரையிலும் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. அது வெஹெரகலதென்ன 440, மகுல்எல்ல 455, எகொடகம 398, உடபெருவ 7 வீடுகளுக்கும் என்று மொத்தமாக 1300 வீடுகளுக்கே நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சில வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றி, வீட்டுக் கூலியாக மாதாந்தம் 15,000 வரையில் கொடுத்துவருகின்றனர்.

அழிவைக் கொண்டுவந்துள்ள உமா ஓய வேலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள, திட்டத்திற்கெதிராக போராடி வருகின்ற மக்கள் இத்திட்டத்தின் நிலக்கீழ் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சீர்செய்ய
வேண்டும், அழிவுகளுக்கு நியாயமான நட்டஈடு வழங்கப்பட வேண்டும், வாழ்க்கைத் தரம், விவசாய, தொழில் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதியை நிலைநாட்டல் போன்ற கோரிக்கைகளோடு, நாட்டுக்கு அழிவு தரம் இவ்வாறான
வேலைத் திட்டம் முழுமையாக இடைநிறுத்தப்பட
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.


உமா ஓயா திட்டத்தை உடன் இடைநிறுத்த முடியாவிடின், தற்காலிகமாக திட்டத்தை நிறுத்தி, உண்மையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுச் சூழல் பதிப்பு மதிப்பீட்டு அறிக்கையொன்று தயாரிக்கப்பட
வேண்டும்.

உமா ஓய திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பினர் தெரிவிப்பதாவது, நல்லாட்சி அரசாங்கத்துக்கு ராஜபக்ஷ குடும்பத்தினரின் சாப்பாட்டு கட்டணங்களை செலுத்தவேண்டியேற்பட்டது முதற்தடவை இதுவல்ல.

சைட்டம் பிரச்சினை, போர்ட் சிட்டி, வில்பத்து பிரச்சினை, பௌத்த பேரினவாதம் போன்றனவும் ராஜபக்ஷ கூட்டத்தின் தோற்றங்களாகும். ராஜபக்ஷக்கள் ஆரம்பித்து வைத்தவைகளின் பக்கவிளைவுகளை நல்லாட்சி அரசாங்கம் அனுபவித்து வருகின்றது.

தெற்கை வளப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா திட்டம் இன்று செழிப்பாக இருந்த வசந்த நகரத்தை வரண்ட நகரமாக்கியுள்ளது. மக்களின் வாழ்க்கை முற்றாக பாதித்துள்ளது. இன, மத, மொழி பேதமின்ற பாதிக்கப்பட்டவர்கள் போராடிவருகின்றனர். மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவேண்டும். உமா ஓயா திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி, மீளாய்வு செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்
றோம்.

--
Aadhil Ali Sabry
JOURNALIST
வரண்டுபோன எமது ‘வசந்த நகரம்’ பண்டாரவளை. வரண்டுபோன எமது  ‘வசந்த நகரம்’ பண்டாரவளை. Reviewed by Madawala News on 7/16/2017 01:31:00 PM Rating: 5