Yahya

மேல் மாகாண பட்டதாரிகளின் அவல நிலை!!!


வர்த்தமானியில் குறிப்பிடப்படாத ஒரு விடயம் தொடர்பில் புதிய கோணத்தில் பிரச்சினை உருவாக்க பட்டு, தேசிய பாடசாலையைக்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்றும்   பெறுபேறுகள் நிராகரிக்கப்பட்டன.

அந்த அவலத்தை தொடர்ந்து கடந்த இரு வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளும் முகமாக நடந்த போட்டிப் பரீட்சை முடிவுகளில், தமக்கான வாய்ப்பை இழந்து, திண்டாடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்ற பட்டதாரிகளின் அவல நிலையே, என்னை இவ்வாக்கம் எழுதத் தூண்டியது.


இலங்கையில் மிகப் பெரிய போட்டி பரீட்சைகளில் ஒன்றான உயர் தரப் பரீட்சையில், மாவட்ட மட்டங்களில் முன்னிலை பெற்று, உயர் பெறுபேறுகள் பெற்று, பல்கலைக்கழக தெரிவினுள் உள்வாங்கப்பட்டவர்களே, இன்று வேலையில்லாப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் இப்பட்டதாரிகள்.

பல்கலைக்கழகத்திலும் உளவியல் மற்றும் பொருளியல் ரீதியான தடைகள் தாண்டி, தூர பிரதேச பல்கலைக்கழகங்களுக்கும் சென்று, 3, 4 வருடங்கள் கல்வியில் செலவிட்டது மட்டுமன்றி, அங்கும் ஆய்வுகள் செய்தல், 80% வரவினைப் பேணல் என பல இடர்பாடுகளை தாண்டி, தான் தம் பட்ட படிப்பை முடிக்கின்றனர்.

இருந்த போதிலும் ஒப்பீட்டடிப்படையி-ல் பட்டப்படிப்பை விட குறைந்த தகைமை கொண்ட, diploma, higher national டிப்ளமோ செய்தவர்கள் எவ்வித சிரமும் இன்றி, வேலை பெற்றுக்கொள்ளும் அதேவேளை, உயர்தர தகைமை மாத்திரம் கொண்டவர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளும் புதிய கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நடைமுறையில், உயர் வகுப்பில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள் கூட போட்டிப் பரீட்சையில் தட்டிவிடப் பட்டு, அடுத்த பரீட்சைக்கு அழைப்பு விடுக்கும் வரை வருடங்களை கடத்திக்கொண்டிருப்பது உண்மையில் பரிதாபத்துக்கு உரிய நிலைப்பாடே அன்றி வேறில்லை.

3
வருடங்களுக்கு முன்பு பரீட்சையில் தோல்வி கண்டு, மீண்டும் பரீட்சையில் தட்டிவிடப் பட்டு 'கறிக்குதவாத ஏட்டு சுரைக்காயாய் தம் பட்டப்படிப்பை வைத்துக் காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்ற
பட்டதாரிகளும் இதில் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.


நீண்ட இடைவெளிக்கு பின் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படுவதால், கல்விக்கும் தமக்குமான இடைவெளி அதிகரித்துள்ளமை, குடும்ப சுமைகள், குடும்ப பிரச்சினைகள், பிள்ளைகளின் கடமைகள் என காலம் செல்லச் செல்ல பொறுப்புகளும் கடமைகளும் குவிந்திருக்க, தம்மை பரீட்சைக்குத் தயார் படுத்திக் கொள்ளச் சிரம படுபவர்களே இங்கு ஏராளம்.
பட்டப்படிப்பைத் திறன்பட முடித்திருப்பினும், இப்பரீட்சையில் கோட்டை விட்டு அவலப்பட இத்தகைய காரணங்கள் பல அடுக்கிக்கொண்டே போகலாம்.

எனக்கு தெரிந்து ஒருவர், 3 வருடங்கள் காத்திருந்து தன்னை பரீட்சை எழுத தயார் படுத்தி கொண்டிருந்த போதிலும், பரீட்சை அன்று உண்டான திடீர் சுகவீனம் காரணமாக, பரீட்சை எழுதாது தன் எதிர்காலத்தையே தொலைத்து வருந்தி கொண்டிருக்கிறார். 17 வருடம் படித்தும் அதன் பலனை அனுபவிக்க ஒரு பரீட்சையை முட்டுக்கட்டையாய் வைத்து இருப்பது , உண்மையில் என்னை பொறுத்தவரையில் மிக பெரிய அநீதியாகவே படுகிறது.
முயன்று எடுத்த முதல் வகுப்புக்கும் பிரயோசனமோ மதிப்போ இல்லை . இப்போட்டி பரீட்சையில் தவறினால் எதிர்காலத்தையே தவற விட்ட நிலைப்பாட்டுக்கு ஆளாகின்றோம் என்பதே நடப்பில் உள்ள உண்மை.
போட்டி பரீட்சையில் எம்மை வெற்று பொம்மைகளாக்கும் இக்கலாசாரம் மாற வேண்டும் என்பதே எனது வாதமாகும்.


அது அவ்வாறு இருப்பினும், கடினமாக வந்த பரீட்சை மற்றும் நம்பிக்கை கொண்டு சென்ற வழிகாட்டல் வகுப்புகளில் வழங்கப்பட்ட தவறான வழிகாட்டலால் தோற்றுப் போனவர்களே இங்கு அதிகம். அது எம் தவறாக இருந்த போதிலும், எமக்கு உதவி தேவைப் பட்ட நிர்கதியான நிலையில் நாம் இருக்கிறோம்.

680 பேர் தோற்றியதில் வெறும் 130 பேர் மாத்திரமே பரீட்சையில் சித்தி அடைந்துள்ளனர். ஆனால் ஆசிரியர் வெற்றிடங்கள் அதனை விட 3 ,4 மடங்கு அதிகமாக உள்ளது. மீண்டும் பரீட்சை வைத்து, அதே சுழலுக்குள் எம்மை சிக்க வைக்காது எமக்கு நியாயமான ஒரு முடிவை பெற்றுத் தருமாறு அனைத்து பட்டதாரிகளின் சார்பிலும் ஒற்றைப் பிரதிநிதியாய் நின்று கேட்டுக்கொள்கிறேன்.

நாம் வெளி மாகாணங்களுக்குச் சென்று தொழில் செய்ய எத்தனிக்காத நிலையில், மேல் மாகாணத்தில் உள்ள வசதி வாய்ப்புகள் கருதி, இங்கு வேலை பெற்றுக்கொள்ள எத்தனிப்பவர்கள் அதிகம்.
அன்று நடந்த பரீட்சை எழுதியவர்களில் கணிசமான எண்ணிக்கை உடையவர்கள் வெளி மாகாணப் பட்டதாரிகள்.

3 வருட வாக்களிப்பு நிரலினை கவனித்ததில் கொண்டு இத்தகையவர்களை களைத்து விடுவதுடன் இன்னும் effective date இல்லாதவர்களையும் நீக்கினால், மேல் மாகாணப் பட்டதாரிகள் தமக்கான வாய்ப்பினை சரியான முறையில் அடைந்து கொள்ளக் கூடிய ஒரு சாத்தியப்பாடு காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் இத்தகைய ஒரு நிலைப்பாடே நிலவியதாகவும், பட்ட தாரிகளுடன் இணைந்து புத்தி ஜீவிகளும் அரசியல் தலைவர்களும் இணைந்து போராடி, பரீட்சையில் தட்டுப்பட்டவர்களும் கூட நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். அதேவேளை , வட மத்திய மாகாணத்தில் அந்த முயற்ச்சி வெற்றி கண்டு, பரீட்சைக்குத் தோற்றிய அனைவரும் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டனர்.
மத்திய மாகாணத்தில் வெற்றிடங்களைப் பொருந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை இருந்த படியால், நேர்முக பரீட்சை இன்றியே தமக்கான தொழில் வாய்ப்பினை அனைவரும் சுமுகமான அமைப்பில் பெற்றுக்கொண்டனர்.


அவ்வாறே மேல் மாகாணத்திலும் தமிழ் மொழி மூலம் குறைந்த அளவான பரீட்சார்த்திகளே தோற்றினர் என்பதுடன், மிகக் கணிசமான அளவான வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், மீண்டும் பரீட்சை வைக்காது, ஏனைய மாகாண நிலைப்பாட்டினை போல, பரீட்சைக்கு தோற்றிய அனைவரையும் நேர்முக பரீட்சைக்கு அழைப்பு விடுத்து, மேல் மாகாண பட்டதாரிகளுக்கு மாத்திரம் இவ்வாய்ப்பினை பெற்று தருமாறு கேட்டு கொள்கிறேன்.

எம் பிரச்சினையை சமூகத்தின் முன் கொண்டு வருவதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும். எனவே இதனை புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகள் மேல் மாகாண சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்து எங்கள் உரிமையைப் பெற்றுத் தருமாரு வினயாமாய் வேண்டிக் கொள்கிறேன்.

F. SURJA SHAREEF
Beruwala
(S.E.U.S.L)
மேல் மாகாண பட்டதாரிகளின் அவல நிலை!!! மேல் மாகாண பட்டதாரிகளின் அவல நிலை!!! Reviewed by Madawala News on 7/25/2017 05:02:00 PM Rating: 5