Yahya

சவுதி - கத்தார் விவகாரமும் மனித மாமிசம் உண்ணுதலும்.


அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்(நளீமி)

சவுதிக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவில் விரிசலானது பொதுவாக சர்வதேச ரீதியிலும் குறிப்பாக இலங்கையிலும் மிகக் கவலையான ஒரு தாக்கத்தை முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

சவுதியையும் அது சார்பான உலமாக்களையும்  சிலர் நியாயப்படுதும் அதேவேளை கத்தாரையும்அதனை ஆதரிப்போரையும் தாறுமாறாக விமர்சிக்கிறார்கள்.அதேபோன்று கத்தாரையும் அது சார்பான  உலமாக்களையும்  சிலர் நியாயப்படுதும் அதேவேளை சவுதியையும் அதனை ஆதரிப்போரையும் தாறுமாறாக விமர்சிக்கிறார்கள்.

இஸ்லாம் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஆதரிக்கிறது மாட்டுமல்ல, அதனை ஊக்குவிக்கிறது.கண்மூடித்தனமான பின்ப்ற்றுதலை அது கடுமையாகச் சாடுகிறது.

ஆனால் விமர்சனங்களுக்கான எல்லைகள் உள்ளன.அவை கட்டாயமாக கவனிக்கப்பட வேண்டும்.

1.நாம் விமர்சிக்கும் மனிதரது அந்தஸ்தையும் அவரது கடந்த காலத்துப் பங்களிப்பையும் ஒருபோதும் நாம் மறந்து விடலாகாது.சுயநல உலகில் முஸ்லிம் சமூகத்தை தமது தோள்களில் சுமந்திருப்போரின் தொகை மிகக் குறைவாகும்.இப்படியான சூழ்நிலையில் இருக்கின்ற ஒருசிலரையும் ஓரம்கட்டி விட்டால் யார்தான் மிகுதியாத இருப்பார்கள்?அப்படியானவர்கள் எந்த இயக்கத்தை நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை நாம் விமர்சிக்க முன்னர் அவர்கள் செய்தது போன்ற பங்களிப்புக்களை நாம் செய்திருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும்.

கையில் ’ஸ்மார்ட் போன்’ உம் ஓய்வு நேரமும் கிடைத்து விட்டது என்பதற்காக பிறரை விமர்சிப்பதில் நேரத்தை செலவிடுவது எவ்வளவு பெரிய அநியாயம்?

எந்த மனிதனும் நூறு வீதம் தூய்மையானவனோ புனிதமானவனோ அல்லன்.அது ஆலிம்களுக்கும் சமூகக் காவலாளர்களுக்கும் பொருத்தமானதாகும். ‘குற்றம் பார்க்கில் சுத்தமில்லை’ என்பதற்கிணங்க எவரிலும் முழுமையை எதிர்பார்ப்பது தவறாகும்.படைப்புக்களில் மலக்குகளையும் நபிமார்களையும் தவிர மற்ற எவரும் தவறுக்கு உற்படுபவர்கள் தான்.அன்னப் பறவை போன்று ஒரு மனிதனது நல்ல பகுதிகளை எடுத்து கேட்ட பகுதிகளை நாம் விட்டு விடலாமே? விமர்சிக்கின்ற நாம் தவறே செய்யாதவர்களா என்பதை ஒரு தடவைக்கு பல தடவை சிந்திக்க வேண்டும்.

2.தற்போது உலாவரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது பெரும்பாலானவை இஸ்லாமிய வரம்புகளை அவை மீறி இருப்பதை அவதானிக்க முடிகிறது.ஒருவர் எப்போதோ செய்த தவறொன்றை இப்போது எடுதுக்கூறுவது,அவருக்குக்கும் அவரது ரப்புக்கும் இடையிலான அந்தத் தவறுக்காக அவர் அல்லாஹ்விடம்  மன்னிப்புக் கேட்டு தூய்மை அடைந்திருக்கலாம். அவரைப் பற்றி நாம் பேசி எமது தவறை பிறர் அம்பலப்படுத்தும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கிக் கொள்கிறோம்.

يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه، لا تغتابوا المسلمين، ولا تتَّبعوا عوْراتهم؛ فإنه مَن تتبَّع عورة أخيه المسلم، تتبَّع الله عورته، ومَن تتبَّع الله عورته، يفضحه ولو في جوف بيته صحيح الجامع: 7984

 நபி (ஸல்) கூறினார்கள்: ”நாவினால் ஈமான் கொண்டு அது எவரது உள்ளத்தில்  நுழையவில்லையோ அப்பாடிப்பாடாவர்களே முஸ்லிம்களைப் பற்றி புறம் பேசாதீர்கள்.அவர்களது அந்தரங்கங்களை தேடித் திரியாதீர்கள். ஏனெனில் யார் தனது சகோதர முஸ்லிமின் அந்தரங்கத்தை தேடித் திரிகிறாரோ அவரது அந்தரங்கத்தை அல்லாஹ் தேடுவான்.எவரது அந்தரங்கத்தை அல்லாஹ் தேடினானோ அவர் தனது தனது வீட்டின் மத்தியில் இருந்தாலும் அவரை அல்லாஹ் அம்ம்பலப்படுத்தி விடுவான்” (ஆதாரம் ஸஹீஹுல் ஜாமிஉ-7984)

மானத்தை பாதுகாப்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமையாக இருப்பது போல மானபங்கப்படுத்துவது பெரும்பாவமாகும்.

 1.في حجة الوداع قال رسول الله صلى الله عليه وسلم : "إن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام ، كحرمة يومكم هذا ، في شهركم هذا ، في بلدكم هذا" )متفق عليه

2. الذي جيء إلى النبي قد شرب خمراً, قال:
اضْرِبُوهُ، فقال أَبو هريرة: فَمِنَّا الضَّاربُ بيده، والضارب بِنَعْلِهِ، والضارِبُ بِثوبِه، فَلمَّا انصرَفَ, قال بعضُ القوم: أَخزَاك اللَّه, فقال رسول الله صلى الله عليه وسلم: لا تقولوا هكذا, تُعِينُوا عليه الشيطانَ  [أخرجه أبو داود في سننه)

3. وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا - الأحزاب: 58.

நாம் விமர்சிப்பவர்கள் சிலபோது பாவம்  செய்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு தூய்மையடந்திருக்கலாம்.ஆனால்,அவர்களைப் பற்றிப் பேசிப்பேசி எமது நன்மைகளை அவர்களுக்குக் கொடுத்து விட்டு அவர்களது பாவங்களை நாம் சுமக்கும் துர்ப்பாக்கியம் ஏற்படலாம்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள்ஓட்டாண்டி (வங்குரோத்துக்காரன்) யார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என வினவினார்கள்.

(அதற்கு தோழர்கள்) 'யாரிடம் திர்ஹமோ(பணமோ) சொத்துக்களோ இல்லையோ அவரே எம்மிடம் (எமது பார்வையில்) ஓட்டாண்டி' எனக் கூறினர்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள்: 'எனது சமூகத்தில் ஓட்டாண்டி யாரென்றால், தொழுகை, நோன்பு, ஸகாத்; ஆகியவற்றோடு  (அவற்றை நிறைவேற்றிய நன்மைகளோடு) ஒருவன் மறுமையில் வருவான்.அதேவேளை அவன் (அநியாயமாக) யாரையாவது திட்டியிருப்பான், யாரைப்; பற்றியாவது அவதூறு கூறியிருப்பான், ஒருவரின் சொத்தை (அநியாயமாக அபகரித்திருப்பான்,) புசித்திருப்பான், யாரையாவது (அநியாயமயாகக்) கொலை செய்திருப்பான், யாரையும் அடித்திருப்பான். எனவே, அவருக்கு சில, இவருக்கு சில என்று (இவன் செய்த நல்லமல்களின் நன்மைகளிலிருந்து இவனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு) வழங்கப்படும். இவன் பிறருக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளுக்காக இவனுக்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே இவனிடமிருந்த நன்மைகள் யாவும் தீர்ந்து விட்டால், (இவனால் பாதிக்கப்பட்ட)அவர்கவர்களின் பாவங்களிலிருந்து எடுக்கப்பட்டு இவன் மீது போடப்பட்டு பின்னர் இவன் நரகில் எறியப்படுவான். (ஆதாரம்: முஸ்லிம்)
.

3.எமது நாட்டில் அதிகம் பேசவேண்டிய சிந்திக்க வேண்டிய பல விவகாரங்கள் இருக்கின்றன.நாம் சர்வதேச விவகாரங்களை அலசுவதால் அங்கு ஏதும் மாற்றங்கள் வரப் போவதில்லை.அவர்களுக்காக நாம் துஆச் செய்யலாம். ஒரே உடம்பு என்ற வகையில் அவர்களது விவகாரங்களில் கவனம் செலுத்துவது ஒரு முஸ்லிமின் கடமை என்பதும் சர்வதேச விவகாரங்கள் எமது நாட்டு நாட்டு நடப்புக்களைப் பாதிக்கும் என்பதும் பெரிய உண்மைகளாக இருந்தாலும் அவை எமது அக்கறைப் பரப்பில் எடுக்க வேண்டிய சரியான விகிதாசாரத்தை மறந்து விடவும் கூடாது.

4.நாம் எமது சமூகத்தின் காவலாளிகளை கீறிக் கிழிக்கும் போது அதனைப் பார்த்து எமது சர்வதேச மற்றும் தேசிய எதிரிகள் எக்காளமிட்டுச் சிரிக்கிறார்கள்.அவர்களால் செய்யமுடியாது போனதை நாமே செய்வதாக கூறி பேருவகை அடைகிறார்கள்.

5.விமர்சனக்களால் சமூகம் நாற்றமெடுத்துள்ளது.மிக அவசரமாக பேசி தீர்ர்க்க வேண்டிய விடயங்கள் தீர்வில்லாமல் மூட்டை கட்டப்பட்டு மூலையில் கிடக்கின்றன.விலை மதிக்க முடியாத நேரம் வீணடிக்கப்படுகிறது.முஸ்லிம் சமூகத்தின் பணம் ’மொபல் டேடா’வுக்காகவே அதிகம் செலவிடப்படுகிறதோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

6.உள்நாட்டுக்குள் இருக்கும் சில உலமாக்களைப் பற்றி சிலர் தமது அபிமானத்தை வெளிப்படுத்தி, போஸ்டுகளை இடும்போது அந்த உலமாக்களையும் அவர்களது போக்குகளையும் விரும்பாத வேறு சிலர் இடும் குறிப்புக்களும் மிகுந்த கவலையைத் தருகிறது.

இஸ்லாத்துக்கு சேவை செய்யப் போய்  இஸ்லாத்துக்கும் சமூகத்துக்கும் அவப்பெயரைதேடிக்கொடுப்பதோடு பின்னடைவையும்  ஏற்படுத்துவது முறையல்ல. தமது நன்மைகளை இழந்து பிறரது பாவங்களை சுமக்கும் நிலைக்கு வராமல் இருக்க வேண்டும்.அல்லாஹ் பாதுகாக்கட்டும்!குழிக்கப் போய் சேறு பூசிக்கோள்வது எப்படி நல்லாதாக அமையும்?

புறம்,பொய்,அபாண்டம்,தவறுகளை அம்பலப்ப்டுத்துவது,பணத்தை,நேரத்தை பொருத்தமற்ற விடயங்களுக்காக செலவிடுவது போன்ற தவறுகள் பாரதூரமான தவறுகளாக அமையும்.நோன்பு நாவுக்குத் தந்த கட்டுப்பாடுகளை பேணுவோம்!

எமது காலம் நேரங்களை மிகத்திட்டமிட்டு தூரநோக்கோடு சிந்த்தித்து அமைத்துக் கொள்ள அல்லாஹ் அருள் பாலிப்பானாக.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ  :  الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لَا يَظْلِمُهُ وَلَا يُسْلِمُهُ مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بِهَا كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ (صحيح مسلم)

Sheikh. S. H. M Faleel (Naleemi)
சவுதி - கத்தார் விவகாரமும் மனித மாமிசம் உண்ணுதலும். சவுதி - கத்தார் விவகாரமும்  மனித மாமிசம் உண்ணுதலும். Reviewed by Madawala News on 7/02/2017 05:03:00 PM Rating: 5